நான் இங்கு வந்த நாட்களில் இந்த தேசத்தை பற்றி அறிய தமிழில் தேடிய போது ஒன்றுமே கிடைக்கவில்லை. அப்போதுதான் இப்படி ஒரு பதிவை எழுத தோன்றியது. நான் அறிந்தவற்றை உங்களுக்காக எழுதுகிறேன்.
நாடு
இந்தோனேசியா தென்கிழக்காசிய நாடுகளில் மிக முக்கியமான தீவு நாடு. இது பல தீவு கூட்டங்களை அடக்கிய அழகிய தேசம். ஜகார்த்தா மாநகரம் இந்நாட்டின் முக்கிய நகரமாகவும் தலை நகராகவும் விளங்குகிறது. சுரபயா, செமராங், சோலோ மற்றும் மேடான் ஆகியவை மற்ற பெரிய நகரங்களாக விளங்குகின்றன. பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் பாலித்தீவுகள் இந்நாட்டின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகின்றன. இதில் மிக சுவாரசியமான செய்தி இத்தீவுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்பதாகும். மேலும் இவர்களை பற்றிய பல விவரங்களை தனிப்பதிவில் கான்போம்.
மக்கள்
இந்நாட்டு மக்கள் மங்கோலிய சீன கலப்பின தோற்றத்தை கொண்டவர்களாக உள்ளனர். நிறமும் அவர்களை ஒத்தே காணப்படுகிறது. பழகுவதற்கு இனிமை ஆனவர்களகவும் அமைதியை விரும்பும் மென்மையான சுபாவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இசுலாமியர்கள் மிகப்பெரும்பான்மையாக மக்களாகவும் கிருத்துவம், பெளத்தம், இந்து சமயத்தவர்கள் மிகச்சிறுபான்மையினராகவும் வாழுகின்றனர். பல ஆசிய தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்த மக்களும் பெருமளவில் கானப்படுகிறார்கள். மேலும் மலேசியா மற்றும் சிங்கப்பூரை போல இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிற இந்தியர்கள் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மேடான் மாகாணத்தில் அதிக அளவில் வாழுகிறார்கள். வெற்றிகரமான பல தொழில் நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றன. இவைகள்தான் எங்களை போன்ற இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை கொடுத்து ஆதரிக்கின்றன.
மொழி
இந்தியாவை போன்றே இந்நாடும் பல இன பல மொழி கலாச்சாரத்தை கொண்டுள்ளது. ஆனாலும் ”பஹாசா இந்தோனேசியா” மொழி தேசிய மொழியாக பாவிக்கபட்டு எல்லோராலும் பெசப்படுகிறது. ஆட்சி மொழியாகவும் இம்மொழியே உள்ளது. இம்மொழி “மலாய்” மொழியை மிகவும் ஒத்ததாக உள்ளது. ஆங்கில எழுத்துருக்களே இம்மொழியையும் எழுத பயன்படுத்த படுகின்றன. சமஸ்கிருதம், தமிழ் முதலான இந்திய மொழிகளில் இருந்து பல சொற்கள் இம்மொழியில் அப்படியே கையாளப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் சீன மொழியை கற்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
கலாச்சாரம்
பெரும்பான்மை மதம் இசுலாம் ஆனாலும் மக்கள் பின்பற்றும் கலாச்சாரம் ராமாயண மகாபாரத பின்னனியை கொண்டதாக உள்ளது. பண்டிகைகள் மற்றும் திருமண விழாக்களின் போது இதை நாம் உணரமுடியும். திருமணத்தின் போது அணியும் உடைகள் நம் பழங்கால உடைகளை நினைவுறுத்துகின்றன. மக்கள் சமத்துவ சமுதாய கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். முக்கியமாக சாதி என்பதே இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து வேறு சமுதாய ஏற்றத்தாழ்வுகள் கானப்படுவதில்லை. தன்னுடைய வாழ்க்கை துணையை தாமே தேடிக்கொள்ளும் வழக்கமே இருக்கிறது. இந்தியாவை போன்றே இங்கும் கூட்டுக்குடும்பங்கள் அறிதாகி வருகின்றன. பெண்களுக்கான சுதந்திரம் பாராட்டும்படியாக இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவும் தொழில் துறையில் கோலோச்சுபவர்களாகவும் உள்ளனர். வளர்ச்சி பெற்ற நகரங்களில் மேற்கத்திய கலாச்சாரத் தாக்கம் பெருமளவில் கானப்படுகிறது. சில இடங்களில் பெண்களின் உடையலங்காரம் மேற்க்கத்திய நாடுகளை மிஞ்சும் படியாக உள்ளது.
(இன்னும் தொடரும்)