எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Showing posts with label இந்தோனேசியா. Show all posts
Showing posts with label இந்தோனேசியா. Show all posts

Wednesday, 28 July 2010

THE CAN DO LEADERSHIP - புத்தக வி்மர்சனம்



பொதுவாகவே வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களுக்கு தமிழ் நாட்டு நடப்புகள் தெரிந்த அளவுக்கு உள்ளூர் நடப்புகள் பற்றி தெரிவதில்லை. அதற்கு முதல் காரணம் மொழி. இரண்டாவது காரணம் ஆர்வமின்மை. குறிப்பாக இந்தோனேசியாவில் மருந்துக்கு கூட ஒரு ஆங்கில தொலைக்காட்சி இல்லை. இருக்கின்ற ஒரே ஒரு ஆங்கில தினசரியைப் படித்துதான் கொஞ்ச நஞ்சம் செய்திகளை தெரிந்து கொள்ள முடியும். அதுவும் இந்த தினசரியின் நடுநிலைமை நம்ம தினமலரை மிஞ்சிவிடும். காசுமீருக்கு போகாமலேயே காசுமீர் பிரச்சினைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அதற்கு வேறு இங்குள்ள இந்தியர்களும் பாக்கிசுதானியர்களும் அடித்துக்கொள்வார்கள். இதல்லாம் நமக்கு ஒத்துவராது என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரமீடியா புத்தகக்கடையில் ஐக்கியம் ஆகிவிடுவேன். இறக்குமதியான சரக்கு என்பதால் பெரும்பாலான ஆங்கிலப்புத்தகங்களின் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும். உள்ளூர் ஆங்கில பதிப்புகள் கிடைப்பது அபூர்வம். இதனால் மணி கணக்கில் கடையையோ நோண்டிக்கொண்டிருப்பது வழக்கம்.

SBY இந்தோனேசியாவில் என்னை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி. அவரைப் பற்றி அவ்வப்போது படித்திருக்கிறேன் என்றாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. இப்போது திரு. SBY அவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்.

 SBY   என்கின்ற சுசிலோ பம்பாங் யூதயோனோ – இந்தோனேசியாவின் நடப்பு அதிபர். இந்தோனேசியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். அதற்கு முன் அதிபர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடித் தேர்ந்தெடுக்கும் முறையே இருந்தது. 2004 ம் ஆண்டு முதல் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 2009-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரானுவத்தில் கலோனல் பதவியை வகித்த இவர் பின்னர் முன்னால் அதிபர் மேகாவதி சுகர்னோ புத்திரி அமைச்சரவையில் ஒருங்கிணைப்பு அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு மேகாவதியின் கட்சியிலிருந்து வெளியேறி தனது “சனநாயக கட்சி”யை ( Partai Democratic) ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் அதிபர் பதவியை பிடித்தார்.  

THE CAN DO LEADERSHIP – Inspiring stories from SBY Presidency என்ற இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் அதிபரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான் திரு. தினோ பாத்தி சலால். பல வருடங்கள் வெளிநாடுகளில் தூதரகப்பணி ஆற்றியவர். சிறந்த பேச்சாளர். மேலாண்மை குறித்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். இந்தோனெசிய கல்வியாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். யூதயோனோ அவர்களின் முதல் ஆட்சிகாலம் முடியும் தருவாயில் எழுதப்பட்ட புத்தகம் இது.

இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்திருக்கிறார்கள். தெளிவான எளிய ஆங்கில நடையில் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலாண்மை சம்பந்தமான புத்தகமோ என்ற ஐயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகம் முழுக்க முழுக்க யூதோனோ அவர்களின் ஆளுமைப்பற்றியும் அவரது ஆட்சி குறித்துமே விவரிக்கப்படுவதால் ஒரு சுய சரிதை படிக்கின்ற உணர்வே ஏற்ப்படுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆசிரியரின் எழுத்துநடை தோய்வில்லாமல் விறுவிறுப்பாக  செல்கிறது. இடையிடையே சுவையான பல சம்பவங்களை சேர்த்துள்ளதால் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் செல்கிறது. 435 பக்கங்கள் கொண்ட முழு புத்தகத்தையும் ஒரே வாரத்தில் முடித்துவிட்டேன்.

இந்தோனேசிய போன்ற ரெண்டாம்கெட்டான் நாட்டுக்கு ஒருவர் அதிபராக இருப்பது எத்தனை சிரமம் என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். அதே போன்று நாடுகள் மாறினாலும் அரசியல்வாதிகளின் குனங்கள் மட்டும் மாறுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். தினமும் அதிபரின் பெயரில் செய்தித்தாள்களில் அறிக்கைகளை பார்க்கிறோம். தொலைக்காட்சிகளில் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது பிற நாட்டு தலைவர்களை சந்திப்பதையோ பார்க்கிறோம். இது போன்ற அன்றாட சமாச்சாரங்களுக்கு கூட அதிபர் எவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது என்பதை அறிய வரும்போது அவர் மீது ஒரு வித அனுதாபம்தான் மிஞ்சுகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி அமைச்சரவையை கட்டிகாப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆசிரியருக்கு வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் சர்வதேச அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த அவரது கருத்துக்களையும் ஆங்காங்கே பகிர்ந்து கொள்கிறார். ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும் அமரிக்கா போன்ற வல்லரசுகளுடனும் அவர்களுக்கு முற்றிலும் எதிர்திசையில் இருக்கும் ஈரான் பாலத்தீனம் போன்ற நாடுகளுடனும் உறவுகளை சமன் செய்ய வேண்டிய நிலையையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். உள்நாட்டு பிரிவினைவாத பிரச்சினைகள் குறித்தும் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்தும் நன்கு அலசியிருப்பதால் நம்மைப்போன்ற புதியவர்களுக்கு நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் சமா இசுலாமிய போன்ற தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தியது குறித்த தகவல்கள் இல்லாதது ஏனோ தெரியவில்லை.

ஆச்சே பகுதி சுனாமியால் பாதிக்கப்பட்டபோது யூதயானோ ஆற்றிய பணிகள் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். புத்தகத்தின் பெயரை “Inspiring Stories from SBY Presidency” என்று மட்டும் வைத்திருக்கலாம். “THE CAN DO LEADERSHIP” என்று சொல்லும் போது மேலாண்மை அல்லது சுய முன்னேற்றம் குறித்த புத்தகமோ என்று பலர் ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதிபருக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதால் அவரது ஆதரவு பிரச்சாரத்திற்காக எழுதப்பட்டது என்ற வாதம் பரவலாக இருக்கிறது. ஆனால் நம்மை போன்ற புதியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய குறையாக தெரியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துக்களே அதிகம் இருக்கின்றன. இந்தோனேசியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் படிக்கவேண்டிய  புத்தகம் இது என்பது எனது கருத்து. அதேபோல இந்தோனேசிய அரசியல் குறித்து அறிய விரும்பும் எவரும் படிக்கவேண்டிய புத்தகமிது. 

.

Friday, 6 November 2009

இந்தோனேசியாவில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்களை காப்பாற்றக்க்கோரி அமைச்சர் மு.க. அழகிரியிடம் மனு!

மனுவை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்
இலங்கையின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் தப்பி வந்த சுமார் 300 தமிழர்கள் இந்தோனேசிய கடல் எல்லையில் சென்ற மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியை நீங்கள் அறிந்திருக்க கூடும். பல மாதங்கள் காடுகளிலும் கடலிலும் உயிரை பயணம் வைத்து அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியா கடல் எல்லையை தாண்டும் முன் அவர்கள் இந்தோனேசியா கப்பற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்களான அவர்கள் தங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு அரசியல் தஞ்சம் அளிக்கவேண்டும் என்று கோரினர். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் வழங்க அவுஸ்திரசு மறுத்தவிட்டது. அவர்களை தடுத்து வைத்துள்ள இந்தோனேசிய அரசும் அவர்களுக்கு தஞ்சம் வழங்க மறுத்துவிட்டது. ஐ.நா அமைப்புகளும் அவர்களை கைவிட்டு விட்டன. இந்த நிலையில் அந்த 266 பேரும் படகிலேயே கடந்த சில வாரகாலமாக காத்திருக்கின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென இந்தோனேசிய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களை திருப்பி அனுப்பினால் அவர்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கவலை உலகத்தமிழர்களை ஆட்கொண்டுள்ளது. பல தமிழ் அமைப்புகளும் அவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசு தஞ்சம் அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. தாம் வாழும் நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இத்தகைய நிலை இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களின் மனங்களையும் பாதிக்கத்தவறவில்லை. ஆனால் பிழைப்புக்காக புலம்பெயர்ந்துள்ள நாட்டில் எந்த வித சட்ட உரிமைகளும் இல்லாத நிலையில் அவர்கள் கையை மட்டுமே பிசைய முடிந்தது. இந்நிலையில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க. அழகிரி அவர்கள் இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று வந்திருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்தோனேசியா வாழ் தமிழர்கள் அவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை அளித்தனர். இந்த பிரச்சினை குறித்த விவரங்களை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டபின் அவரும் தன்னால் இயன்றவரை உதவுவதாக உறுதி அளித்துள்ளார். இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்தியா எந்த அளவுக்கு தலையிட முடியும் என்ற கேள்வி இருந்த போதும், இந்தோனேசியாவும், அவுஸ்திரேலியாவும் கைவிட்டு விட்ட நமது சொந்தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல் தமிழகத்துக்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு தமிழக அரசு தாமாகவே முன்வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக உள்ளது. தமிழக அரசு நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நம்புகிறோம். பிழைக்க வந்த இடத்தில் இடைவிடாத வேலைப்பலுவின் இடையிலும் வார வேலை நாளான நேற்று பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து அமைச்சரை சந்தித்து சக தமிழனுக்காக குரல் கொடுத்த நமது சொந்தங்களை மனதார பாராட்டுகிறோம். தமிழன் என்ற உணர்வை நாடு கடந்து வந்தும் உயிர்ப்பித்து வைத்திருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நேரில் வந்தும், நேரில் வராமல் இந்த நிகழ்விற்கான முன்னெடுப்பை செய்தும் உதவிய பின்வரும் நமது சொந்தங்களை நாம் பாராட்ட கடைமைப்பட்டுள்ளோம். திரு. கமல கிருஷ்ணன், சகார்த்தா திரு. சந்திரசேகரன், சகார்த்தா திரு. மாணிக்கம், போகூர் திரு. ஆன்டோனியோ டியோபில், போகூர் திரு. யாசிர் முகம்மது, போகூர் திரு. அருண், சுகபூமி திரு. திருநாவுக்கரசு, சகார்த்தா திரு. பத்மநாபன், போகூர் திரு. பாலசுப்ரமணியன், பாண்டுங் திரு. ஜெகதீசன் , பாண்டுங் திரு. மகேஸ்வரன் , பாண்டுங் திரு. பிரபு , பாண்டுங் திரு. ரமேஷ் , பாண்டுங் திரு. சுரேஷ் , பாண்டுங் திரு. பத்மநாபன் , பாண்டுங் திருமதி. விஜய காந்தி, சகார்த்தா .

Monday, 28 September 2009

கல்லிலே கலைவண்ணம் கண்டான்!(இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 3)

பெருமாள் சன்னதி கோபுரம்
இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் மூன்றாம் பாகம். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1 , பகுதி 2 பெரம்பனான் கோயிலானது அது கட்டப்பட்ட போது பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டதால் தற்போது சில சதுர கிலோமீட்டர் அளவுக்கே எஞ்சியுள்ளது. இக்கோவிலின் சிறப்புகளாக முக்கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சிவன் சன்னதியில் சிவ பெருமானுக்கு மனித உருவில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் சொல்லாம்.
வெளிச்சுற்று கோவில்கள்
இந்த கோயில் மொத்தம் மூன்று பிரகாரங்கள் அல்லது அடுக்குகள் கொண்டது. முதல் பிரகாரம் மடப்பள்ளிகள், வேத பாடசாலைகள், ஞானிகள் தங்குமிடம் மற்றும் கோவில் நிர்வாகப்பகுதிகள் என பரந்து விரிந்திருந்தது. ஆனால் தற்போது முதல் பிரகாரம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களே எஞ்சியுள்ளன. இரண்டாம் பிரகாரம் மொத்தம் 246 கோவில்கள் கொண்டதாக இருந்தது. இதில் பெரும்பகுதி அழிந்து ஒரு சில கோயில்கள் மற்றுமே தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஒரு கோணம்
எனக்கு பிடித்த கோணத்தில்
மூன்றாவது பிரகாரமானது கோயிலின் மையப் பகுதியாகும். இந்தப்பகுதியில்தான் நாம் இப்போது பார்க்கும் எட்டு கோவில்கள் அமைந்துள்ளன். இந்த பகுதியின் மையமாக சிவன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவன் சன்னதியின் வடது திசையில் பெருமாள் சன்னதியும் தெற்குத் திசையில் பிரம்மாவின் சன்னதியும் அமைந்துள்ளது. இச்சன்னதிகளில் இம்மூவருக்கும் அழகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மூவர்களின் சன்னதிகளின் வாயில்களை நோக்கியபடி இவர்களின் வாகனங்களுக்கான கோவில்கள் அமைந்துள்ளன. சிவன் சன்னதிக்கு முன் அவரது வாகனமான நந்திக்கும், பெருமாள் சன்னதிக்கு முன் கருடனுக்கும் பிரம்மனின் சன்னதிக்கு முன் அன்னத்திற்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவரான சிவன் சன்னதியை ஒட்டி வலது புறம் அகத்திய மாமுனிக்கும் இடது புறம் மகிசாசுரமர்த்தினிக்கும் பின்புறம் வினாயகருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகிசாசுரமர்த்தினிதான் முன்பாகத்தில் நாம் சொன்ன “லோரோ ஜோங்கரங்” என்று அழைக்கப்படுகிறார். நாங்கள் இக்கோவிலுக்கு சென்றபோது சிவன் சன்னதியும் பிரம்மன் சன்னதியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த்து ஏமாற்றத்தை தந்தது. பல சன்னதிகளை தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்தது. கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தாலும் சன்னதிகளில் வழிபாடுகள் ஏதும் நடத்தப்படுவதாக தெரியவில்லை. சன்னதியில் உள்ள சிலைகளை நோக்கும் போது அதில் எண்ணை பூச்சு இருந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை.
வெளிச்சுவர் சிற்பங்கள்
மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றில் பஞ்ச பூதங்களுக்கும் ஒன்பது நட்சத்திரங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதியின் வெளிப்புற சுவர்களில் இராமாயண காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சன்னதியின் சுவர்களில் கிருட்டின அவதாரத்தின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சிவனுக்காக அற்பணிக்கப்பட்ட கோவிலில் சிவபெருமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் செதுக்கப்படாதது வியப்பை அளிக்கிறது, இக்கோவிலை அரசும் மக்களும் பராமரிக்கும் விதம் பாரட்டத் தக்கது. நமது நாட்டில் செய்வது போல் இங்கு யாரும் தங்கள் தெய்வீக காதலை சுவற்றில் கிறுக்கியோ செதுக்கியோ சுவற்றை நாறடிப்பதில்லை. கண்ட இடத்தில் வாய்க்கழிவுகளை துப்பி வைப்பதில்லை. நாமெல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
லோரோ ஜோங்கரங் (மகிசாசுரமர்த்தினி) மற்றும் வினாயகர் சிலைகள்
ஒருபுறம் இக்கோவிலின் பிரமாண்டமும் கலை நுனுக்கங்களும் நமக்கு வியப்பை அளிக்கிறது. மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதமான இந்த கோவில் சீரழிந்துவிட்டபோதும் அதை மீண்டும் மறுசீரமைப்பு செய்து நம்முன் நிறுத்தியுள்ள மனித உழைப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. இதைப் பார்த்தாவது நமது இந்திய மாநில அரசுகளும் மக்களும் அழியும் நிலையில் உள்ள நமது பல அரிய கோவில்களையும் புராதன சின்னங்களையும் காக்க முன்வரவேண்டும். இக்கோவிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது இங்கே குறிப்படத்தக்கது.
------இத்துடன் இத்தொடர் முற்றுபெறுகிறது -------

Friday, 18 September 2009

அழகான ராட்சசியே! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 2)

இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1
மின்னொளியின் பின்புலத்துடன் பெரம்பனான்
முன்னொரு காலத்தில் இந்தோனேசியாவின் மத்திய சாவா தீவு பகுதியில் இரண்டு இந்து அரசுகள் இருந்தன. அதில் ஒன்று வளமான ”பெங்கிங்” என்னும் பேரரசு. இன்னொன்று பெங்கிங் பேரரசை ஒட்டிய ”கரத்தான் போக்கோ” எனும் பெயருடைய அரசு. பெங்கிங் பேரரசை தாமர் மாயோ எனும் அரசன் ஆண்டு வந்தான். இவன் மிகுந்த புத்திக்கூர்மையுடன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்தான். இவனது அரசில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இவனுக்கு ராடன் பாண்டுங் போண்டோவோசோ எனும் மகன் இருந்தான். அவனும் தந்தையை போலவே வீரமும் அறிவும் நிறைந்தவனாக மட்டுமல்லாமல் யோக கலைகளிலும் சிறந்து விளங்கினான். அவன் தான் கற்ற யோக கலையினால் தவம் பல இயற்றி பல வரங்களை பெற்றிருந்தான். அடுத்த அரசான கரத்தான் பொக்கோவை பிரபு போக்கோ என்ற அரக்கன் ஆண்டுவந்தான். அவன் ஆனவத்தின் முழு உருவாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். ஆனால் அவனுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள்தான் நம் கதையின் நாயகி இளவரசி லோரோ ஜொங்கரங். அழகின் மொத்த உருவமாக கான்போரை மயங்க வைக்கும் படியான உடல் வனப்புடன் மெல்லிய இடையுடன் அவள் இருந்தாள். அரக்கனின் மகள் என்றாலும் இவள் நல்ல குணம் கொண்டவளாகவும் அதே நேரம் தந்தையின் மீது அளவற்ற பாசம் கொண்டவளாகவும் இருந்தாள். பிரபு போக்கோவும் தன் மகள் மீது அதே அளவு பாசம் கொண்டிருந்தான். அரக்கனாயினும் அவனும் ஒரு தந்தைதானே. பிரபு போக்கோ அரசனுக்கு பதி கொப்போலோ எனும் மந்திரி இருந்தான். அவன் அலோசனையுடந்தான் பிரபு போக்கோ எதையும் செய்வான்.
இளவரசி லோரோ ஜோங்கரங்கை சித்தரிக்கும் காட்சி
பிரபு போக்கோவுக்கு தனது பக்கத்து பேரரசான பெங்கிங் மீது எப்போதுமே ஒரு கண்ணுண்டு. அந்த பேரரசை எப்படியாவது தனது ஆளுகைக்கு கீழ் கொண்டுவரமென்று அவன் ஆசைப்பட்டான். அதற்காக தனது மந்திரி பதியுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கான உணவையும் மக்களிடம் இருந்து மிரட்டி பெற்று தயார் செய்தான். அதன் பிறகு சரியான நேரம் பார்த்து பெங்கிங் பேரரசை பெரும் படையுடன் சென்று தாக்கினான். மிகப்பெரிய பேரரசாயினும் பிரபு போக்கோவின் திட்டமிட்ட தாக்குதலால் பெங்கிங் பேரரசின் படை வீரர்கள் நிலை குலைந்து போயினர். பிரபு போக்கோ மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தான். பெங்கிங் மக்கள் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மக்களை காப்பாற்ற தனது அருமை மகன் இளவரசன் பாண்டுங்கை போரில் இறக்கினான் அரசன் தாமர் மாயோ. போர்க்கலையில் வல்லவனான பாண்டுங் தனது முழு பலத்தையும் திரட்டி பிரபு போக்கோவுடன் மோதினான். போர் பல காலம் நீண்டது இறுதியில் தான் தவ வலிமையினால் பெற்ற அஸ்திரங்களை கொண்டு பிரபு போக்கோவை வீழ்த்திக்கொன்றான் இளவரசன் பாண்டுங். பிரபு போக்கோவின் மந்திரி பதி குப்போலோ போர்க்களத்தை விடு தப்பி ஓடினான். ஆனால் இளவரசன் பாண்டுங் அவனை விடாமல் துரத்திக்கொண்டு கரத்தான் பொக்கோவுக்கு வந்தான். தப்பியோடிய பதி போக்கோ நேராக இளவரசி லோரோ ஜோங்கரங்கிடம் வந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றையும் அவளது தந்தை பெங்கிங் இளவரசன் பாண்டுங்கால் கொல்லப்பட்ட சேதியையும் சொன்னான். தன் தந்தை இறந்த செய்தி கேட்ட இளவரசி துடிதுடித்து போகிறாள். அரன்மனையில் இருந்தவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்கின்றனர். அந்த நேரம் பார்த்து மந்திரி பதி கொப்போலோவை துரத்திக்கொண்டு வந்த இளவரசன் பாண்டுங் அவளின் அரன்மனைக்கு வருகிறான். வந்தவன் அங்கிருந்த இளவரசி லோரோ ஜோங்கிரங்கை கண்டு அவள் அழகில் சொக்கிப்போகிறான். தான் பல் பெண்களை சந்திதிருந்தாலும் இவளின் அழகு அவனை அவள் மீது காதல் கொள்ளச்செய்கிறது. அவள் யாரென்று பக்கத்தில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அவள் தன்னால் கொல்லப்பட்ட அரசன் பிரபு போக்கோவின் மகள் என்று அறிந்து கொள்கிறான். அவள் தந்தையை கொன்றதற்கு பிராயச்சித்தமாக தான் அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அவனுடைய விருப்பத்தை அவளிடத்தில் தெரிவிக்கிறான். இளவரசிக்கோ தன் தந்தையை கொன்ற ஒருவனை தன் மணாளனாக ஏற்றுக்கொள்ள மனமில்லை. ஆனால் அந்தக்கால நியதிப்படி தோற்றுப்போன மன்னர்களின் அனைத்து சொத்துக்களும் வெற்றிபெற்ற மன்னருக்கே சொந்தமாகும். அதன்படி பார்த்தால் இவள் இளவரசி ஏற்கனவே இளவரசன் பாண்டுங்க்குக்கு சொந்தமானவள் ஆகிறாள். அதனால் நேரடியாக மறுக்க முடியாத நிலையில் அவனது விருப்பத்துக்கு எப்படியவது தடை போடவேண்டும் என்று சிந்திக்கிறாள். இறுதியில் இளவரசன் பாண்டுங்கை திருமணம் செய்து கொள்ள இரண்டு நிபந்தனைகளை அவன் முன் வைக்கிறாள். அவை இரண்டையும் அவன் நிறைவேற்றினால் அவனை திருமணம் செய்துகொள்ள தான் சம்மதிப்பதாக ஒப்புக்கொடுக்கிறாள். அவற்றில் ஒன்று அவன் ஒரு உலகிலே இதுவரை இல்லாத ஆழமுள்ள பாதாள கிணறு ஒன்றை அமைக்க வேண்டும். மற்றொன்று ஒரே இரவில் ஆயிரம் கோயில்களை கட்டவேண்டும் என்பது, இளவரசனும் அவற்றை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறான்.
ராமாயணத்தில் அனுமன் இலங்கையை எரிக்கும் காட்சி
சவாலை ஏற்ற இளவரசன் பாண்டுங் தனது தவவலிமையினாலும் பூதகணங்களின் உதவியுடனும் பாதாள கிணற்றை அமைத்து முடிக்கிறான். தனது முதல் நிபந்தனை தோல்வியுற்றதை கண்ட இளவரசி ஒரு உபாயம் செய்கிறாள். தான் அமைத்த கிணற்றின் ஆழத்தை இளவரசன் உள்ளே இறங்கி நிரூபிக்க வேண்டும் என்கிறாள். அதை ஏற்றுக்கொண்ட இளவரசன் அதன் உள்ளே இறங்குகிறான். இந்த கணத்தை பயன்படுத்தி தனது மந்திரி பதி போக்கோ மூலம் அந்த கிணற்றை பெரிய பாறைகளை கொண்டு மூடச்செய்கிறாள். ஆனால் சகல கலைகளையும் கற்றுத்தேறிய பாண்டுங்குக்கு அதிலிருந்து மீண்டு வெளியே வருவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்கவில்லை. தன்னை தந்திரத்தால் வீழ்த்த நினைத்தவளின் மீது அவனுக்கு பெரும் கோபம் வருகிறது. ஆனாலும் அவளுடைய அழகு அவனை சாந்தப்படுத்திவிடுகிறது. தனது தந்திரத்தில் வீழாத இளவரசனைக் கண்டு அதிர்ச்சியுற்ற லோரோ ஜோங்கரங் சுதாரித்துக்கொண்டு தனது அடுத்த நிபந்தனையை நிறைவேற்ற சொல்கிறாள். புன்முறுவலுடன் அதையும் ஏற்றுக்கொண்ட இளவரசன் காரியத்தில் இறங்குகிறான். போரிலேயே தான் தவமிருந்து பெற்ற பல அஸ்திரங்களை இழந்துவிட்டதால் எஞ்சிய ஆற்றலைக்கொண்டு அவனது தவ வலிமையால் தேவ லோகத்திலிருந்து பூத கணங்களை வரவழைக்கிறான். அவர்களும் அன்று ஒருநாள் இரவு மட்டும் பொழுது புலரும் நேரம் வரை அவனுக்கு ஒத்துழைக்க ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உதவியுடன் தனது பரிவாரங்களை கொண்டு கோவில்களை அமைக்க ஆரம்பிக்கிறான். இரவு முழுவதும் கோவில்கள் எழுப்ப படுகின்றன. 999 கொவில்கள் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரமாவது கோவில் துவங்கப்பட்ட நிலையில் இளவரசி இன்னொரு சூழ்ச்சி செய்கிறாள். தன் அரண்மனை பணிப்பெண்களை திரட்டி கிழக்கு திசையில் சென்று பெரிய தீயை மூட்ட சொல்கிறாள். மேலும் தனது மக்களை விடியலை நினைவுறுத்தும் பொருட்டு தங்கள் வீட்டு உரல்களில் அரிசியை குத்தச்சொல்கிறாள். அந்த காலத்தில் பொழுது புலரும் போது நெல் குத்தி அன்றைக்கான உணவை சமைப்பதுதான் அந்தப்பகுதி மக்களின் வழக்கமாம். இப்பகுதியில் இன்றும் கூட கைகுத்தல் சிகப்பரிசியில் வெல்லம் சேர்த்து தினுசு தினுசான பலகாரங்கள் செய்கிறார்கள். என்ன திடீர்ன்னு சாப்பாட்டு பக்கம் போய்விட்டோம்? சரி சரி கதைக்கு வருவோம்.
லோரோ ஜோங்கரங் கதை சாவா நாடகப்பாணியில்
கிழக்கு திசையில் வெளிச்சத்தையும் நெல் குத்தும் ஓசையையும் கேட்ட காக்கைகள் பொழுது புலர்ந்துவிட்டது என்று கருதி கரைய ஆரம்பிக்கின்றன. இதனை கண்ட பூத கணங்களும் பொழுது புலர்ந்துவிட்டதாக எண்ணி தமது வேலையை நிறுத்திவிட்டு இளவரசனிடம் வந்து தாங்கள் வானுலகம் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதால் மேற்கொண்டு தொடரமுடியாது என்று கூறி மறைந்துவிட்டனர். இதனால் இளவரசன் பாண்டுங் குழப்பமடைகிறான். இன்னும் போழுது புலரும் பொழுது நேரம் ஆகவில்லை என்று அவனது உள் மனது சொன்னது. ஆனாலும் இளவரசி லோரோ ஜோங்கரங்கை கூப்பிட்டு கோவில்களை எண்ணிப்பார்த்துக்கொள்ள சொல்கிறான். அவள் சரியாக 999 கோவில்களை எண்ணி முடிப்பதற்கும் உண்மையான பொழுது புலர்வதற்கும் சரியாக இருக்கிறது. தான் கேட்டதற்கு ஒரு கோவில் குறைவாக இருப்பதால் தான் இளவரசனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்கிறாள் லோரோ ஜொங்கரங். அவளது சூழ்ச்சியால் தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த இளவரசன் பாண்டுங் கடுங்கோபம் கொள்கிறான். உனக்கு இன்னும் ஒரு கோவில்தானே வேண்டும்? அந்த கோவிலுக்கு நீயே மூலக்கல்லாக போய்விடு என்று இளவரசிக்கு சாபம் கொடுக்கிறான். அவளும் கற்சிலையாக மாறிவிடுகின்றாள்.. அந்த சிலைதான் இந்த பெரம்பனான் கோவிலின் ஒரு பகுதியில் துர்கையின் உருவமான மகிசாசுரமர்த்தினியாக வீற்றிருப்பதாக ஐதீகம், இதனால்தான் இந்த கோவில்கள் அனைத்தும் அடங்கிய பகுதி “சண்டி லோரோ ஜொங்கரங்” என்று அழைக்க படுவதாக இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். (சண்டி – கோவில் / லோரோ- மெல்லிய / ஜோங்கரங்- கன்னி) இங்கிருக்கும் இங்குள் கல்வெட்டு ஒன்றும் இக்கதையை கூறுகிறது. இக்கதை இன்னும் பல விதங்களில் இந்தப்பகுதி மக்களிடம் புழங்குகிறது. நான் சொன்னதுதான் சற்று எளிமையானது??!!. மேலும் இளவரசிக்கு உதவி செய்தபடியால் அந்த பகுதி பெண்களுக்கும் திருமணம் வாய்க்காமல் கடவது என்று சாபம் கொடுககப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் இக்கோவில் பகுதியில் காதல் செய்தால் காதல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஆனால் நாம் சென்றிருந்த போது நிறைய காதல் சோடிகளை பார்க்க முடிந்தது.( பயலுகள் புள்ளைங்கள கழட்டி விடுவதற்காகவே கூப்பிடு வந்திருப்பானுங்க என்று நினைக்கிறேன்)
சண்டி சேவு
இப்படி அறைகுறையாய் விடப்பட்ட ஆயிரமாவது கோவில் இந்த ஆலய வளகத்தில் உள்ளதாக வேறு ஒரு கோவிலை காட்டுகிறார்கள். அது “சண்டி சேவு” என்று அழைக்கப்படுகிறது. சாவா மொழியில் சண்டி என்றால் கோவில் என்றும் சேவு என்றால் ஆயிரம் என்றும் பொருள்படும். பிற்காலத்தில் வந்த புத்த மத அரசர்களால் இந்த ஆயிரமாவது கோவில் புத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் அதனால் “லோரோ ஜொங்கரங் சிலை” சிவன் சன்னிதிக்கு அருகில் தனி சன்னிதியில் பின்னாளில் மாற்றப்பட்டதாகவும் கதை சொல்கிறார்கள். கதை உண்மையோ இல்லையோ ஆனால் சுவாரசியமாக இருக்கிறது. இந்தக் கதையையும் ராமாயண மகாபாரத கதைகளையும் திறந்த வெளி மேடை நாடகங்களாக பாலி நாடகப்பாணியில் இக்கோயில் வளாகத்தில் நடத்துகிறார்கள். இக்கோவிலை பின்புலமாக கொண்டு ஒளி ஒலி காட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய இந்தக்காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. அழகான் பின் புல ஒளி அமைப்பில் இந்த கோவிலைக் கான்பதே அலாதியானது. இந்த முழு பதிவையும் இளவரசி கொடியிடை கன்னியின் கதையே அடைத்துக்கொண்டுவிட்டதால் இந்த கோவிலின் அமைப்பு பற்றிய செய்திகள் அடுத்த பதிவில் இடம்பெறும். கதையை சற்று சவ்வ்வ்வாக இழுத்திருந்தால் தயவு செய்து பொருத்தருள வேண்டும்! ஏனென்றால் நம் கதை சொல்லும் திறன் அவ்வளவுதான்! .

Wednesday, 16 September 2009

கொடியிடை கன்னி! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 1)

பாலி நாட்டியப் பெண்
இந்தோனேசியா என்றால் தேவதைகளின் தேசம் என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அது உண்மையென்பதை இத்தேசத்தின் உட்பிரதேசங்களில் பயணப்பட்டபோது புரிந்தது. எங்கு பார்த்தாலும் கடலும் பசுமை போர்த்திய மலைகளும் பச்சை பசேலென்ற காடுகளும் நிறைந்த அழகிய தீவு தேசம் இது. சுமாராக முப்பது சதவீத காடுகளும் இயற்கை வளங்களும் பேராசைக்காரர்களால் அழிக்கப்பட்டுவிட்ட போதும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது இந்த தேசம்.
பச்சை தேசம்
ஒரு காலத்தில் முழுக்க முழுக்க இந்து சமயத்தை கொண்டிருந்த இந்த தேசம் இப்போது உலகத்தில் அதிக இசுலாம் மக்கள் தொகை கொண்ட தேசமாக மாறியிருக்கிறது. இப்போது இந்து சமயத்தை பின்பற்றுபர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டுமே. அதுவும் பெரும்பான்மையான இந்துக்கள் பாலித்தீவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பின்பற்றும் இந்து மதம் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து மதத்தில் இருந்து சற்றே வேறுபட்டது. அதைப்போல இந்நாட்டின் இசுலாம் மக்களின் கலாச்சாரமும் மற்ற நாடுகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. அதைப்பற்றியெல்ல்லாம் தனிப்பதிவில் சொன்னால்தான் நன்றாயிருக்கும். இப்போது இந்த பதிவின் கருவுக்கு வருவோம். இவ்வாறு இந்து சமயம் தழைத்தோங்கியிருந்த ஒரு தேசத்தில் அவர்களின் கலாச்சார சின்னங்களும், வழிபாட்டு தலங்களும் இல்லாமல் இருந்திருக்குமா? என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் பண்டைய மத்திய சாவாத்தீவில் கட்டப்பட்ட இன்றைக்கும் நம் புருவங்களை சற்றே உயரச்செய்கிற ஒரு இந்து கோயில் பற்றித்தான் இந்த பதிவில் சொல்லவிருக்கிறேன்.
பெரம்பனான் ஆலயத்தின் வெளித்தோற்றம்
உலகிலேயே பெரிய இந்துக்கோவில் கம்ப்பொடியாவில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்தான் என்பது நமக்கு தெரியும். காக்கும் கடவுளான விஷ்னுவுக்காக சூரியவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயில் பிற்பாடு வந்த பௌத்த மன்னர்களால் புத்த விகாரமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவாலயம் இன்றளவும் இந்தோனேசியாவின் சாவா தீவில் பெரம்பனான் என்ற இடத்தில் இருக்கிறது. . இந்த கோவில் இந்தோனேசியாவின் பெயர்பெற்ற சுற்றுலா தளமான யோக்கியகர்த்தா நகருக்கு அருகில் 15 கிமீ தொலைவில் உள்ளது. இக்கோயிலின் பெரும்பகுதி இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு அழிந்துவிட்டது. மீதமிருந்த எச்சங்களை அரும்பாடுபட்டு சீர்படுத்தி கோயிலின் முக்கிய பகுதிகளை மீட்டு அடுத்த சந்ததியிடம் சேர்த்திருக்கிறது இந்தோனேசிய அரசு. ஒரு இசுலாமிய அரசாக இருந்த போதும் தமது நாட்டின் கலைப்பொக்கிழங்களை அவை வேற்று மதத்தை சேர்ந்தவைகளாக இருந்த போதும் பாதுகாத்து உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தென்கிழக்காசியாவின் பிரபலமான் கிமீர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது எனபதற்கான போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் சாவா தீவின் மற்ற பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுக்களில் உள்ள குறிப்புகளை கொண்டு இக்கோயில் கிபி எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்காலப்பகுதிகளில் இந்த பகுதியில் இருந்த மாத்தாராம் பேரரசை ஆண்ட இந்து மன்னன் ராக்கை பிகாதன் என்பராலோ அல்லது சஞ்சய பேரரசை ஆண்ட இன்னொரு இந்து மன்னன் பாலிதுங் மகா சம்பு என்பவராலோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தெரிய வருகிறது. சாவா தீவில் கிடைத்திருக்கும் பல கல்வெட்டுகளிலும் இந்த கோவிலைப்பற்றி மிகச் சிறப்பாக பேசப்படுகிறது. ராக்கை பிகாத மன்னன் இறந்த பிறகு அவனது இறுதி ஊர்வத்தை சித்தரிக்கும் கல்வெட்டுகளிலும் அவன் கட்டிய இக்கோவிலைப்பற்றி சிறப்பாக தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாம் அக்காலகட்டத்தில் இக்கோயில் சிறந்து விளங்கியதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இக்கோயில் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த பேரரசுகள் வீழ்ச்சியை கண்டுவிட்டன. இதனால் இவர்களின் ஆட்சிகாலத்திற்கு பிறகு இக்கொவிலைச்சுற்றி வாழ்ந்த மக்கள் மற்ற இடங்களுக்கு பெயர்ந்திருக்கின்றனர். இதற்கு அங்கு ஏற்ப்பட்ட அடுத்தடுத்த இயற்கை பேரழிவுகள் கூட ஒரு காரணமாயிருக்கலாம் என அறியப்படுகிறது. அதற்கு பிறகு பல நூற்றாண்டுகள் இக்கோவில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்குள் மறைந்து இருந்திருக்கிறது.
புனரமைப்பு செய்வதற்கு முன் கோவிலின் நிலை
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இப்பகுதியில் காலடி எடுத்து வைத்தார்கள். 1733 ஆண்டு டச்சுக்காரர்களின் ஆட்சிகாலத்தில் இப்பகுதியை ஆராச்சி செய்ய வந்த சி ஏ லோன்ஸ் என்ற டச்சுக்காரர்தான் முற்றிலும் சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இக்கோவில் பகுதியை கண்டு பிடித்து உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு 1885 ஆம் ஆண்டு லைசர்மேன் என்பவர் இக்கோவிலை சீரமைக்க பல முயற்சிகள் மேற்கொண்டு இந்த இடத்தை சுத்தப்படுத்தினார். 1902 ஆம் ஆண்டு வாக்கில் புனரமைப்பு வேலைகள் வேன் எர்ப் என்பவரின் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையில் கோவிலின் பல பாகங்கள் மக்களால் விருப்பப்படி எடுத்து செல்லப்பட்டுவிட்டன. இருந்த போதிலும் இந்தோனேசிய அரசு மற்றும் யுனஸ்கோவின் அயராத முயற்சியினால் சீரமைக்கப்பட்ட முதல் பகுதி 1953 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அடுத்த பகுதி 1991 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகும் தொடந்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 2004 மற்றும் 2006 ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களினால் இக்கோயில் மீண்டும் பாதிக்கப்பட்டது.
கோவிலின் உள்பிரகாரங்கள்
மறுகட்டுமானம் அல்லது புணரமைப்பு செய்யப்பட்ட கோவிலாக இருந்தாலும் பாரப்பதற்கு அவ்வாறு தெரியவே இல்லை. புணரமைப்பு வேலைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்களின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். 75% பாகங்கள் கிடைத்த கோவில் பகுதிகளே சீரமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் கிடைக்காத கோவிலின் எஞ்சிய பகுதிகள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சிதறிக்கிடக்கின்றன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு நாம் பார்க்கும் இந்த கோவிலின் எஞ்சிய பகுதிகளே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்றால் இந்த கோவில் கட்டப்பட்டபோது எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கும் என்று கற்பனைக்கூட செய்து பார்க்க முடியவில்லை. அத்தனை அழகாக பிரமாண்டமாக இருக்கிறது இந்த கோவில். அதெல்லாம் சரி………. கோயில் பற்றிய இந்த பதிவுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உண்மையில் இது ஒரு சிவாலயமாக இருந்தாலும் இந்த கோவில் ”சண்டி லோரோ ஜோங்கரங்” என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. அதாவது சாவா மொழியில் ”மெல்லிய கன்னி” கோவில் என்று பொருள்படும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதைப்பற்றியும் இக்கோயிலின் வடிமைப்பு பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம். .

Saturday, 4 October 2008

முகத்தில் கரியை பூசிக்கொள்ளாதீர்கள் !

நாங்கள் இங்கு வந்தபுதிதில் பல இந்தோனேசிய நடைமுறைகள் எங்களுக்கு சரிவர புரியவில்லை. அதனால் இந்நாட்டை பற்றிய எங்களுடைய மதீப்பீடுகள் சற்று குறைவாகவே இருந்தது. இதன் காரணமாக நம் நாட்டைப்பற்றி உள்ளூர் தமிழர்களிடம் சற்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருந்தோம். எதற்கெடுத்தாலும் இந்தியாவில் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் இங்கு இது சரியில்லை அது சரியில்லை என்று எதையாவது பற்றி குறை சொல்லிக்கொண்டிருந்தோம். ஆனால் ஒரு நாள் எங்கள் முகத்தில் சரியாக கரியை பூசிக்கொள்ள போகிறோம் என்று நாங்கள் உணர்ந்திருக்கவில்லை! இங்கேயே பிறந்து வளர்ந்த ஒவ்வொரு தமிழருக்கும் ஒரு முறையாவது ஊருக்கு சென்று கால் வைக்கவேண்டும் என்ற ஆசை இருக்கும். ஊர் என்றாலே அவர்களின் பாவிப்பில் அது தமிழகத்தை குறிக்கும். அவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தாலும் தமிழ்நாட்டை இன்றும் ”ஊர்” என்றுதான் அழைப்பார்கள். அதாவது தமிழ்நாட்டை இன்றும் அவர்கள் சொந்த ஊர் என்றே பாவிக்கிறார்கள். எங்களையும் ஊர் ஆட்கள் குறிப்பிடுகிறார்கள். ஆனால் நம்ம ஆள் இரண்டு மாதம் அமரிக்காவிற்கு பயிற்ச்சிக்கு சென்று திரும்பினாலே தமிழ்நாட்டை பார்க்கிற பார்வையே வேறு மாதிரியாக இருக்கும். சரி சரி விசயத்திற்கு வருகிறேன். இவ்வாறு நாம் பாடிய சுய புராணங்களை நம்பிய ஒரு இந்தோனேசிய தமிழர் சமீபத்தில் மிகுந்த ஆர்வத்துடன் தமிழகம் சென்று திரும்பியிருந்தார். அவருடன் வழக்கம்போல அலாவிக்கொண்டிருந்தோம். சற்று ஏமாற்றம் மேலோங்கிய தொனியில் அவர் கேட்ட கேள்விகள்தான் எங்கள் முகத்தில் கரியை பூச வைத்தது. அவை, 1. நம்மூரில் ஏன் பாதையிலேயே மலம் ஜலம் கழிக்கிறார்கள்? புகையிலையை ஏன் துப்பிவைக்கிறார்கள்? இந்நிலை கிராமங்களில் என்றால் கூட பொறுத்துக்கொள்ளலாம். சென்னை மாநகரிலேயே இவ்வாறு இருப்பதை ஏன் யாரும் கண்டுகொள்வதில்லை? 2. அவசியமே இல்லாமல் ஏன் ஹாரனை பயன்படுத்துகிறார்கள்? நோயாளிகளையும் குழந்தைகளையும் இது பாதிக்காதா? 3. சாலைகள் ஏன் இவ்வளவு மோசமாக உள்ளன? நீங்கள் எல்லாம் ஒழுங்காக வரி கட்டுவதில்லையா? 4. விமான நிலையங்கள், வங்கிகள், அரசு அலுவலகங்கள் போன்ற இடங்களில் ஏன் அலுவலர்கள் எல்லோரும் கடு கடுவென்று முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறார்கள்? இங்கெல்லாம் ஏன் தமிழில் பேசினால் கண்டுகொள்ள மாட்டேன்கிறார்கள்? ஆங்கிலம் படிக்காதவர்கள் மற்றும் அதிகம் படிக்காதவர்கள் இங்கெல்லாம் செல்லக்கூடாதா? 5. கோயில்களில் ஏன் சிறப்பு தரிசன கட்டணம் வாங்குகிறார்கள்? உடல் ஊனமுற்றோர்களுக்கு வயதானவர்களுக்கு சிறப்பு வழி இல்லை. ஆனால் நல்லா இருப்பவர்களுக்கு பணம் கொடுத்தால் ஏன் சிறப்பு வழி? 6. கோயில்களில் ஏன் நமக்கு புரியாத மொழியிலேயே எல்லாம் செய்கிறார்கள்? ஏன் பிரசாதங்களை கையில் படாமல் தூக்கியெறிகிறார்கள்? தொட்டு கொடுத்தால் அது கெட்டுப்போகுமா? 7. கல்வியிலும் மருத்துவத்திலும் சிறந்து விளங்குவதாக பீற்றிக்கொள்ளும் நீங்கள் இதையெல்லாம் ஏன் கண்டுகொள்வதில்லை? இப்போதெல்லாம் நம் நாட்டைப்பற்றி நாங்கள் அதிகம் பேசுவதில்லை. படங்கள் மேலே- துர்கா கோயிலில் தீ மிதிக்க ஆயத்தமாகும் பக்தர்கள். கீழே– ஜகார்த்தாவை அடுத்த தங்கரங்கில் உள்ள துர்கா கோயில் விமானம்.

Monday, 8 September 2008

தங்கச் சுரங்கம் குத்தகைக்கு !!

(இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 2)

இயற்கை வளமும் பொருளாதாரமும்

தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த நடாக இந்நாடு விளங்குகிறது. நிலக்கரி பெட்ரோல் தங்கம் ஆகியவை ஏராளமயாய் கிடைக்கின்றன. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற பாட்டு இந்தியாவுக்கு பொருந்துதோ இல்லையோ இந்தோனேசியாவுக்கு நன்கு பொருந்தும். ஆனால் அரசியல்வாதிகள் புண்ணியத்தில் இன்னும் மற்ற நாடுகளிடம் கையேந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பெட்ரோலைக்கூட சிங்கப்பூர் அனுப்பி சுத்திகரிப்பு செய்கிறார்கள். அரசியல்வாதிகளை கேட்டால் வியாபார ஒப்பந்தம் என்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து இயற்கை எரிவாயு வழங்க சீனாவுடன் அப்போது இருந்த சொற்ப விலையில் ஒப்பந்தம் போட்டுவிட்டு போய்விட்டார் அப்போதைய அதிபர் மேகாவதி. இப்போது சீனாவிடம் விலையை கூட்டிக்கொடுக்கவேண்டும் என்று மாறி மாறி கருணை மனு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்போதய அதிபரும் துணை அதிபரும். அவர்களும் முயற்சி செய்வதாய் பெரிய மனதுடன் ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கே போய் முட்டுவது என்று மக்கள் புலம்புகிறார்கள். ஆனாலும் தேர்தல் வந்தால் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுகிறார்கள். எதிர் வரும் தேர்தலில் அதே மேகாவதிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஆமாம் நம்புங்கள்! தேசங்கள் மாறலாம் ஆனால் மக்களின் போக்கு மாறுவதில்லை போலும்!

உலகிலேயே அதிக கார்கள் உள்ள நகரம் என்று இந்நாட்டின் தலைநகரமான ஜகார்த்தாவை சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. உலகின் அனைத்து பிரபலமான கார்களையும் சர்வ சாதாரணமாய் சாலையில் பார்க்கலாம். உலகின் விலையுயர்ந்த இரண்டு சக்கர வாகனமான ஹார்லி டேவிட்சன் வாகனங்களையும் நிறைய கான முடிகிறது. ஆனால் இந்நாட்டை ஏழை நாடு என்கிறார்கள். நம்புவது கடினம் என்றாலும் அதில் உண்மையும் இருக்கிறது. ஆம்! பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரியது. கிராமங்களில் வாழும் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி இன்னும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்து தொழில் துறைகளிலும் ஜப்பானியர்களும் சீன வம்சாவளியினரே கொடி கட்டிப்பறக்கிறார்கள். வாகனச் சந்தை இவ்வளவு பெரியது என்றாலும் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை தாங்கிய வாகனங்கள் ஒன்று கூட இல்லை. இவ்வளவு பெரிய சந்தையின் முழுப்பலனையும் ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும் மற்றும் அமரிக்கர்களும்தான் அனுபவிக்கிறார்கள். இம்மண்ணின் பூர்வக்குடிகள் இன்னும் உத்தியோக வர்க்கத்தினர்களாகவே இருக்கிறார்கள். மிகச்சில முன்னேறியவர்களும் அரசியல் பெரும்பான்மை உரிமையால் பதவிக்கு வந்து மேற்படி நாட்டினர்களுக்கு சலுகைகளை வாரித்தந்து அதில் வாரிச்சுரிட்டியவர்களேயன்றி தொழிளால் முன்னேறியவர்கள் அல்ல. இத்தகைய வேறுபாடுகள் சில சமயங்களில் பெரிய இன மோதல்களை உருவாக்கிவிடுகிறது. இது பொருளாதார உறுதிப்பாட்டையும் குலைத்துவிடுகிறது. கடந்த காலங்களில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிகளுக்கு பிறகு தற்பொழுது சற்று நிலையான பொருளாதார நிலை கானப்படுகிறது.

நம் தாத்தா காலத்தில் சொல்வார்களே பொன்னு விளைகிற பூமி என்று அதை நம்மூரில் இப்போது கான்பது அரிது. ஆனால் இங்கே இப்போதும் பார்க்கலாம். வருடத்தில் ஆறு மாத காலம் நல்ல மழையும் இருக்கிறது. ஆனால் அதில் விவசாயத்தைதான் கானமுடியவில்லை. இவ்வளவையும் வைத்துக் கொண்டு கவலையில்லாமல் அரிசியை தாய்லாந்திலிருந்தும் காய்கறிகளை ஆஸ்திரேலியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கேட்டால் அரிசி பயிர் செய்வது கடினமான வேலையாம். அதனால் எண்ணெய்ப்பனை வளர்க்கிறார்கள் பயோ டீசல் தயார்செய்ய! இதனால் டாலர்களில் வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள். எதிர்காலத்தில் தட்டில் டாலரை போட்டுச் சாப்பிட முடியுமா? என்றால் அதை அப்போது பார்க்கலாம் என்கிறார்கள்.

அதுவும் சரிதான்! ஏன் என்றால் தங்கத்தை வெட்டி எடுக்க சோம்பேரித்தனப்பட்டு முழுத் தங்க சுரங்களையும் அமரிக்கர்களிடம் நூறு வருட குத்தகைக்கு விட்ட அரசியல் தலைவர்களின் பின் வந்தவர்கள் அயிற்றே! ஆமாம் நம்புங்கள்! இந்தோனேசியாவின் மிகப்பெரிய தங்க சுரங்கம் குத்தகை என்ற பெயரில் அமெரிக்க நிறுவனத்தின் வசம் உள்ளது. இன்றும் அமரிக்கர்கள் வெட்டும் இந்த சுரங்கத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் ரானுவம் பாதுகாவல் வேலையும் செய்கிறது. சும்மாவா பின்னே? இரண்டு ஊதியம் கிடைக்கிறதே. அதிலும் அரசாங்க சம்பளத்தைவிட இவர்கள் தரும் சன்மானம் அதிகமாம். இதை நான் சொல்லவில்லை. அரசாங்கத்தின் கண் துடைப்பு விசாரணை கமிஷன் சொன்னது. இந்தியாவைப்போல் விசாரணை கமிஷன்கள் இங்கும் கண் துடைப்புக்குத்தான்.

(இன்னும் தொடரும்)

Friday, 22 August 2008

இந்தோனேசியா – ஒரு அறிமுகம் – பகுதி-1

நான் இங்கு வந்த நாட்களில் இந்த தேசத்தை பற்றி அறிய தமிழில் தேடிய போது ஒன்றுமே கிடைக்கவில்லை. அப்போதுதான் இப்படி ஒரு பதிவை எழுத தோன்றியது. நான் அறிந்தவற்றை உங்களுக்காக எழுதுகிறேன். நாடு இந்தோனேசியா தென்கிழக்காசிய நாடுகளில் மிக முக்கியமான தீவு நாடு. இது பல தீவு கூட்டங்களை அடக்கிய அழகிய தேசம். ஜகார்த்தா மாநகரம் இந்நாட்டின் முக்கிய நகரமாகவும் தலை நகராகவும் விளங்குகிறது. சுரபயா, செமராங், சோலோ மற்றும் மேடான் ஆகியவை மற்ற பெரிய நகரங்களாக விளங்குகின்றன. பூலோக சொர்க்கம் என்று அழைக்கப்படும் பாலித்தீவுகள் இந்நாட்டின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்குகின்றன. இதில் மிக சுவாரசியமான செய்தி இத்தீவுகளில் வாழும் பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்பதாகும். மேலும் இவர்களை பற்றிய பல விவரங்களை தனிப்பதிவில் கான்போம். மக்கள் இந்நாட்டு மக்கள் மங்கோலிய சீன கலப்பின தோற்றத்தை கொண்டவர்களாக உள்ளனர். நிறமும் அவர்களை ஒத்தே காணப்படுகிறது. பழகுவதற்கு இனிமை ஆனவர்களகவும் அமைதியை விரும்பும் மென்மையான சுபாவம் கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். இசுலாமியர்கள் மிகப்பெரும்பான்மையாக மக்களாகவும் கிருத்துவம், பெளத்தம், இந்து சமயத்தவர்கள் மிகச்சிறுபான்மையினராகவும் வாழுகின்றனர். பல ஆசிய தேசங்களில் இருந்து புலம்பெயர்ந்த மக்களும் பெருமளவில் கானப்படுகிறார்கள். மேலும் மலேசியா மற்றும் சிங்கப்பூரை போல இங்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மற்றும் பிற இந்தியர்கள் இந்த நாட்டு குடியுரிமை பெற்றவர்களாக சில நூற்றாண்டுகளாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் மேடான் மாகாணத்தில் அதிக அளவில் வாழுகிறார்கள். வெற்றிகரமான பல தொழில் நிறுவனங்கள் இவர்களுக்கு சொந்தமானதாக இருக்கின்றன. இவைகள்தான் எங்களை போன்ற இந்திய தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு வேலை கொடுத்து ஆதரிக்கின்றன. மொழி இந்தியாவை போன்றே இந்நாடும் பல இன பல மொழி கலாச்சாரத்தை கொண்டுள்ளது. ஆனாலும் ”பஹாசா இந்தோனேசியா” மொழி தேசிய மொழியாக பாவிக்கபட்டு எல்லோராலும் பெசப்படுகிறது. ஆட்சி மொழியாகவும் இம்மொழியே உள்ளது. இம்மொழி “மலாய்” மொழியை மிகவும் ஒத்ததாக உள்ளது. ஆங்கில எழுத்துருக்களே இம்மொழியையும் எழுத பயன்படுத்த படுகின்றன. சமஸ்கிருதம், தமிழ் முதலான இந்திய மொழிகளில் இருந்து பல சொற்கள் இம்மொழியில் அப்படியே கையாளப்படுகின்றன. ஆங்கிலம் மற்றும் சீன மொழியை கற்பதிலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். கலாச்சாரம் பெரும்பான்மை மதம் இசுலாம் ஆனாலும் மக்கள் பின்பற்றும் கலாச்சாரம் ராமாயண மகாபாரத பின்னனியை கொண்டதாக உள்ளது. பண்டிகைகள் மற்றும் திருமண விழாக்களின் போது இதை நாம் உணரமுடியும். திருமணத்தின் போது அணியும் உடைகள் நம் பழங்கால உடைகளை நினைவுறுத்துகின்றன. மக்கள் சமத்துவ சமுதாய கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். முக்கியமாக சாதி என்பதே இல்லை. பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை தவிர்த்து வேறு சமுதாய ஏற்றத்தாழ்வுகள் கானப்படுவதில்லை. தன்னுடைய வாழ்க்கை துணையை தாமே தேடிக்கொள்ளும் வழக்கமே இருக்கிறது. இந்தியாவை போன்றே இங்கும் கூட்டுக்குடும்பங்கள் அறிதாகி வருகின்றன. பெண்களுக்கான சுதந்திரம் பாராட்டும்படியாக இருக்கிறது. பெரும்பான்மையான பெண்கள் வேலைக்கு செல்பவர்களாகவும் தொழில் துறையில் கோலோச்சுபவர்களாகவும் உள்ளனர். வளர்ச்சி பெற்ற நகரங்களில் மேற்கத்திய கலாச்சாரத் தாக்கம் பெருமளவில் கானப்படுகிறது. சில இடங்களில் பெண்களின் உடையலங்காரம் மேற்க்கத்திய நாடுகளை மிஞ்சும் படியாக உள்ளது.

(இன்னும் தொடரும்)