எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday, 23 September 2008

என்றைக்குத்தான் உறைக்குமோ !!

இந்தோனேசியா என்றாலே இயற்கை பேரழிவுகளுக்கு குறைவு இல்லை. இங்கு இயற்கையின் சீற்றம் பல வழிகளிலும் வெளிப்பட்டு அவ்வப்போது பேரழிவுகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. இதில் மிகவும் சிக்கலான ஒரு நிகழ்வு சென்ற 2006 ஆம் ஆண்டு ஏற்பட்டது. கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள். ஆனால் இங்கோ கிணறு வெட்ட ஒரு பிரளயமே கிளம்பிவிட்டது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய தொழில் மாநகரம் சுரபயா. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அள்ள அள்ள குறையாத இயற்கை வளமும் இங்கு உண்டு. இந்நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளிகளில் பல இயற்கை எரி வாயு எடுக்கும் நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று லாப்பிண்டோ பிராண்டாஸ் எனும் நிறுவனம். இந்நிறுவனம் சிதார்ஜோ எனும் கிராமத்தில் தனது தொரொப்பன கிணறுகளை அமைத்திருந்தது. 2006 ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தியதி இத்தகைய கிணறு ஒன்று அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அக்கிணற்றிலிருந்து பொத பொதவென்று சேறும் சகதியும் வெளியேறத்தொடங்கியது. அடுத்து சில நிமிடங்களில் சுற்றியுள்ள பல கிணறுகளில் இருந்தும் இதே போன்று சேறும் சகதியும் வெளியேறத்தொடங்கியது. கட்டுங்கடங்காத வேகத்தில் வெளியேறிய இச்சகதியை கண்டு அனைவரும் பயந்து வெளியேறினார்கள். இவ்வாறு வெளியேற தொடங்கிய சகதி கொஞ்சம் கொஞ்சமாக அந்நிறுவனத்தையும் மேலும் சுற்றியுள்ள பல நிறுவனங்களையும் மூழ்கடித்துவிட்டது. இதனால் பெரும் பொருளிழப்பும் பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை இழப்பும் ஏற்பபட்டது. இயற்கையின் இக்கோரத்தண்டவம் இத்துடன் முடிந்துவிடவில்லை . படிப்படியாக இச்சகதியானது சுற்றியுள்ள 15-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களையும் மூழ்கடித்து அங்கு வாழ்ந்த மக்களை நிராதரவாய் விட்டுவிட்டது. மேலும் சகதியுடன் வெளிப்படுகின்ற கந்தக நெடி தாங்க முடியாமல் சுற்றியுள்ள இன்னும் பல கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆரம்பத்தில் 50,000 கன அடியாக இருந்த இந்த சகதி வெளியெற்றம் தற்போது ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்திருப்பதாய் சொல்லுகிறார்கள். இதில் மிகப்பெரிய செய்தி என்னவென்றால் இச்சகதி வெளியேற்றம் இன்னும் 10-15 ஆண்டுகள் தொடரும் என்பதுதான். இதுவரை வெளியேறிய சகதியாலேயே பல ஹெக்டேர் நிலப்பரப்பு மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் எவ்வளவு நிலப்பரப்பு இதனால் பாதிக்கபடுமோ என்று நினைக்கும் பொழுது தலையே சுற்றுகிறது. நமக்கே இப்படி என்றால் அங்கு வாழும் மக்களின் நிலையை நினைத்து பாருங்கள். இந்நிகழ்வுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிணறுகளை தோண்டிய போது சரியாண வரைமுறைகளை பின்பற்றாததே இப்பேரழிவுக்கு காரணம் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அருகில் இருக்கும் இன்னொறு பெரிய நகரமான யோக்யகர்த்தாவில் இந்நிகழ்வுக்கு இரண்டு நாளைக்கு முன் ஏற்ப்பட்ட பெரிய நில நடுக்கம்தான் இதற்கு காரணம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிடுகிறது. உலகின் பல மூலைகளிலும் இருந்து வந்த பல விஞ்ஞானிகளும் இந்நிகழ்வுக்கான சரியான காரணத்தையும் சகதி வெளியெற்றத்தை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளையும் கண்டுபிக்க முடியவில்லை. சில அலோசனைகளின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் உரிய பலனை தரவில்லை. இதனால் அரசும் செய்வதறியாது கைப்பிசைந்து நிற்கிறது. மேலும் ஒரு முயற்சியாக அருகில் உள்ள அணை ஒன்றில் இச்சகதியானது தேக்கிவைத்து மேலும் பரவாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அணை எத்தனை நாள் தாங்கும் என்று தெரியவில்லை. அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்!! இச்சம்பவம் நடந்து ஆறு மாதத்திற்கு பிறகு அதிபரின் அலுவலகம் இது தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் மேற்படி நிறுவனம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் படிப்படியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் தனியாக ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை மிகக்குறைவான அளவே நிவாரணம் கிடைத்துள்ளபடியால் பாதிக்கப்ப்ட்ட மக்கள் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் பொருமை இழந்தவர்களாய் மேற்படி அணையை உடைத்து விடுவதாய் மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். லாப்பிண்டோ நிறுவனம் இந்தோனேசிய முக்கிய அமைச்சர் ஒருவரின் குடும்பத்திற்கு சொந்தமானது. இதனால் அந்நிறுவனத்தின் மீதான அரசின் நடவடிக்கை சொல்லும்படியாக இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர். இவ்வளவிற்கும் பிறகு இவ்வழிவை தேசிய பேரழிவாக அறவிக்க அரசுக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தும் அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. அவ்வாறு அறிவித்தால் முழு இழப்பையும் ( தவறு செய்த நிறுவனத்திற்கும் சேர்த்து) அரசு ஏற்க வேண்டிவரும் என்பதே இதற்கான காரணம் என்கிறார்கள். ஆனால் பொறுப்பின்றி செயல்பட்ட தனியார் நிறுவனமும் இத்தகைய நிறுவனங்களை அனுமதித்த அரசுமே இவ்வழிவிற்கான முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது. எது எப்படியோ ஒரு சிலரின் பேராசையினால் அற்ப சுகங்களுக்காக தேவையற்ற துய்ப்புகளுக்காக இயற்கையை கதற கதற சீறழித்துவிடுகிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் அதற்கான முழுப்பலனையும் நாம்தான் அனுபவிக்க போகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். என்றைக்குத்தான் இது நமக்கு உறைக்க போகிறதோ!!

மாட்டிறைச்சி சாப்பிட்டாலும் குண்டாக மாட்டீர்கள்!! (இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 3)

உணவு பழக்கங்கள்: இந்தோனேசிய மக்கள் அசைவ உணவு வகைகளையே மக்கள் பெரிதும் உண்கிறார்கள். மேலும் அரிசி மற்றும் நூடுல்ஸ் வகைகளை அதிகம் உண்ணுகிறார்கள். பக்க உணவுகள் முதல் பிரதான உனவுகள் வரை அசைவம் இல்லாமல் ஒன்றுமே இல்லை. சைவம் மட்டும் உண்பவர்கள் பாடு திண்டாட்டம் தான். சாதாரண நொறுக்குத்தீனி வகையறாக் கூட அசைவம் கலக்காதது இல்லை. குறைந்தபட்சம் அசைவ வாசனையாவது கூட்டப்பட்டதாக இருக்கும். அதிலும் மாட்டிறைச்சியை மக்கள் விரும்பி உண்கிறார்க்ள். இங்கு மாட்டிறைச்சி ஆட்டிறைச்சியை விட விலை அதிகம். அதுவும் மாட்டிறைச்சியை ஆஸ்திரேலியாவிலிருந்து பெருமளவில் இறக்குமதி செய்கிறார்கள். இவ்வளவு அசைவ உணவு சாப்பிட்டும் அதுவும் மாட்டிறைச்சி சாப்பிட்டும் பெரும்பாலானவர்கள் அதுவும் பெண்கள் ஒல்லியாக அல்லது நல்ல வடிவான தேகம் கொண்டவர்களாகவே இருக்கிறார்கள். இங்கு வந்த புதுசில் இங்கு உள்ள மக்களை பார்த்து நான் மிகவும் வியைந்த விஷயம் இது. இதைப்பற்றி நம் மருத்துவர் ஒருவரிடமே கேட்டேன். அதற்கு அவர் இரு முக்கிய காரணங்களை பட்டியலிட்டார். ஒன்று அவர்களின் பாரம்பரிய ஜீன்கள். மற்றொன்று அவர்களின் நல்ல பாரம்பரிய உணவு பழக்கங்கள். உண்மைதான்! அவர்கள் நம்மை போன்று நூறு கிராம் இறைச்சிக்கு ஐநூறு கிராம் சோற்றை பாத்தி கட்டி உண்பதில்லை. இறைச்சியுடன் சிறிதளவே சோறு உன்கிறார்கள். மேலும் பச்சையாய் சில காய்கறிகளையும் சில நறுமன கீரை வகைகளையும் சேர்த்தே உண்கிறார்கள். உணவுக்கு முன்னும் பின்னும் பால் மற்றும் சீனி சேர்க்காத தேநீரை குடிக்கிறார்கள். மேலும் பசித்த பிறகே உண்ணும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறார்கள். அதனால் தான் அவர்களால் இவ்வாறு உடலை பேன முடிகிறது. ஆனால் இவர்களுக்கும் இப்போது பிரச்சினைகள் காத்திருக்கின்றன. எதனால்? இவ்வாறு ஒரு நாடு உருப்படுவதைக் கண்டால் அமெரிக்க நிறுவனங்களுக்கு பிடிக்குமா? அவர்களின் உலகமயமாக்கலை இங்கும் அவிழ்த்து விட்டு விட்டார்கள். மெக் டொனால்டு, கெண்டக்கி போன்ற அனைத்து அமரிக்க துரித உணவு நிருவனங்களும் இங்கு கடை விரித்து ஓகோ என்று கொடிகட்டி பறக்கவும் செய்கிறார்கள். பற்றா குறைக்கு பிட்சா ஹட் வேறு. விளைவை சொல்லவா வேண்டும்?? புதிய தலைமுறையினரிடம் ஒபேசிட்டி எனும் உடல் பருமன் பிரச்சினை பூதாகரமாக உருவெடுத்திருக்கிறது. நாடு எதுவாயினும் அவரவர்களின் பாரம்பரிய உணவும் பழக்க வழக்கங்களும்தான் சிறந்தவை என்று யாருமே அறிந்து கொள்வதில்லை. நாம் உட்பட !! இறுதியாக இந்தோனேசியா சம்பந்த்தப்பட்ட சில கொசுறு தகவல்களோடு இத்தொடரை முடிக்கிறேன். உலகையே மூக்கின் மேல் விரல் வைக்க வைத்த இரும்பு ஜாம்பவான் லட்சுமி மிட்டல் தனது முதல் இரும்பு தொழிற்சாலையை தொடங்கியது இந்தோனெசியாவில்தான். அதேபோல் தற்போது அமரிக்காவை கலக்கி கொண்டிருக்கும் அதிபர் வேட்பாளர் பாரக் ஒபாமா சிறு வயதில் வளர்ந்தது இங்கேதானாம். அவரின் மிகப்பிடித்தமான உணவு இந்தோனெசியாவின் “நாசி கோரங்” என்னும் பிரைடு ரைஸ் தானாம். இதை பேட்டி ஒன்றில் அவர் தெரிவித்து இருந்தார். வாழ்க இந்தோனேசியா!! பி.கு : இத்தொடரை நான் பல வழிகளில் தெரிந்து கொண்ட விவரங்களை கொண்டே எழுதியிருக்கிறேன். தவறுகள் இருப்பின் மன்னிக்கவும் சுட்டிக்காட்டவும் வேண்டுகிறேன். (முற்றும்)

Monday, 8 September 2008

தங்கச் சுரங்கம் குத்தகைக்கு !!

(இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 2)

இயற்கை வளமும் பொருளாதாரமும்

தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த நடாக இந்நாடு விளங்குகிறது. நிலக்கரி பெட்ரோல் தங்கம் ஆகியவை ஏராளமயாய் கிடைக்கின்றன. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற பாட்டு இந்தியாவுக்கு பொருந்துதோ இல்லையோ இந்தோனேசியாவுக்கு நன்கு பொருந்தும். ஆனால் அரசியல்வாதிகள் புண்ணியத்தில் இன்னும் மற்ற நாடுகளிடம் கையேந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பெட்ரோலைக்கூட சிங்கப்பூர் அனுப்பி சுத்திகரிப்பு செய்கிறார்கள். அரசியல்வாதிகளை கேட்டால் வியாபார ஒப்பந்தம் என்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து இயற்கை எரிவாயு வழங்க சீனாவுடன் அப்போது இருந்த சொற்ப விலையில் ஒப்பந்தம் போட்டுவிட்டு போய்விட்டார் அப்போதைய அதிபர் மேகாவதி. இப்போது சீனாவிடம் விலையை கூட்டிக்கொடுக்கவேண்டும் என்று மாறி மாறி கருணை மனு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்போதய அதிபரும் துணை அதிபரும். அவர்களும் முயற்சி செய்வதாய் பெரிய மனதுடன் ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கே போய் முட்டுவது என்று மக்கள் புலம்புகிறார்கள். ஆனாலும் தேர்தல் வந்தால் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுகிறார்கள். எதிர் வரும் தேர்தலில் அதே மேகாவதிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஆமாம் நம்புங்கள்! தேசங்கள் மாறலாம் ஆனால் மக்களின் போக்கு மாறுவதில்லை போலும்!

உலகிலேயே அதிக கார்கள் உள்ள நகரம் என்று இந்நாட்டின் தலைநகரமான ஜகார்த்தாவை சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. உலகின் அனைத்து பிரபலமான கார்களையும் சர்வ சாதாரணமாய் சாலையில் பார்க்கலாம். உலகின் விலையுயர்ந்த இரண்டு சக்கர வாகனமான ஹார்லி டேவிட்சன் வாகனங்களையும் நிறைய கான முடிகிறது. ஆனால் இந்நாட்டை ஏழை நாடு என்கிறார்கள். நம்புவது கடினம் என்றாலும் அதில் உண்மையும் இருக்கிறது. ஆம்! பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரியது. கிராமங்களில் வாழும் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி இன்னும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்து தொழில் துறைகளிலும் ஜப்பானியர்களும் சீன வம்சாவளியினரே கொடி கட்டிப்பறக்கிறார்கள். வாகனச் சந்தை இவ்வளவு பெரியது என்றாலும் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை தாங்கிய வாகனங்கள் ஒன்று கூட இல்லை. இவ்வளவு பெரிய சந்தையின் முழுப்பலனையும் ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும் மற்றும் அமரிக்கர்களும்தான் அனுபவிக்கிறார்கள். இம்மண்ணின் பூர்வக்குடிகள் இன்னும் உத்தியோக வர்க்கத்தினர்களாகவே இருக்கிறார்கள். மிகச்சில முன்னேறியவர்களும் அரசியல் பெரும்பான்மை உரிமையால் பதவிக்கு வந்து மேற்படி நாட்டினர்களுக்கு சலுகைகளை வாரித்தந்து அதில் வாரிச்சுரிட்டியவர்களேயன்றி தொழிளால் முன்னேறியவர்கள் அல்ல. இத்தகைய வேறுபாடுகள் சில சமயங்களில் பெரிய இன மோதல்களை உருவாக்கிவிடுகிறது. இது பொருளாதார உறுதிப்பாட்டையும் குலைத்துவிடுகிறது. கடந்த காலங்களில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிகளுக்கு பிறகு தற்பொழுது சற்று நிலையான பொருளாதார நிலை கானப்படுகிறது.

நம் தாத்தா காலத்தில் சொல்வார்களே பொன்னு விளைகிற பூமி என்று அதை நம்மூரில் இப்போது கான்பது அரிது. ஆனால் இங்கே இப்போதும் பார்க்கலாம். வருடத்தில் ஆறு மாத காலம் நல்ல மழையும் இருக்கிறது. ஆனால் அதில் விவசாயத்தைதான் கானமுடியவில்லை. இவ்வளவையும் வைத்துக் கொண்டு கவலையில்லாமல் அரிசியை தாய்லாந்திலிருந்தும் காய்கறிகளை ஆஸ்திரேலியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கேட்டால் அரிசி பயிர் செய்வது கடினமான வேலையாம். அதனால் எண்ணெய்ப்பனை வளர்க்கிறார்கள் பயோ டீசல் தயார்செய்ய! இதனால் டாலர்களில் வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள். எதிர்காலத்தில் தட்டில் டாலரை போட்டுச் சாப்பிட முடியுமா? என்றால் அதை அப்போது பார்க்கலாம் என்கிறார்கள்.

அதுவும் சரிதான்! ஏன் என்றால் தங்கத்தை வெட்டி எடுக்க சோம்பேரித்தனப்பட்டு முழுத் தங்க சுரங்களையும் அமரிக்கர்களிடம் நூறு வருட குத்தகைக்கு விட்ட அரசியல் தலைவர்களின் பின் வந்தவர்கள் அயிற்றே! ஆமாம் நம்புங்கள்! இந்தோனேசியாவின் மிகப்பெரிய தங்க சுரங்கம் குத்தகை என்ற பெயரில் அமெரிக்க நிறுவனத்தின் வசம் உள்ளது. இன்றும் அமரிக்கர்கள் வெட்டும் இந்த சுரங்கத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் ரானுவம் பாதுகாவல் வேலையும் செய்கிறது. சும்மாவா பின்னே? இரண்டு ஊதியம் கிடைக்கிறதே. அதிலும் அரசாங்க சம்பளத்தைவிட இவர்கள் தரும் சன்மானம் அதிகமாம். இதை நான் சொல்லவில்லை. அரசாங்கத்தின் கண் துடைப்பு விசாரணை கமிஷன் சொன்னது. இந்தியாவைப்போல் விசாரணை கமிஷன்கள் இங்கும் கண் துடைப்புக்குத்தான்.

(இன்னும் தொடரும்)