Tuesday, 23 September 2008
என்றைக்குத்தான் உறைக்குமோ !!
இந்தோனேசியா என்றாலே இயற்கை பேரழிவுகளுக்கு குறைவு இல்லை. இங்கு இயற்கையின் சீற்றம் பல வழிகளிலும் வெளிப்பட்டு அவ்வப்போது பேரழிவுகளை ஏற்படுத்திய வண்ணம் இருக்கிறது. இதில் மிகவும் சிக்கலான ஒரு நிகழ்வு சென்ற 2006 ஆம் ஆண்டு ஏற்பட்டது.
கிணறு வெட்ட பூதம் கிளம்பியது என்பார்கள். ஆனால் இங்கோ கிணறு வெட்ட ஒரு பிரளயமே கிளம்பிவிட்டது. இந்தோனேசியாவின் மிகப்பெரிய தொழில் மாநகரம் சுரபயா. இங்கு ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. அள்ள அள்ள குறையாத இயற்கை வளமும் இங்கு உண்டு. இந்நகரத்தை சுற்றியுள்ள பகுதிகளிகளில் பல இயற்கை எரி வாயு எடுக்கும் நிறுவங்கள் செயல்பட்டு வருகின்றன. அவற்றில் ஒன்று லாப்பிண்டோ பிராண்டாஸ் எனும் நிறுவனம். இந்நிறுவனம் சிதார்ஜோ எனும் கிராமத்தில் தனது தொரொப்பன கிணறுகளை அமைத்திருந்தது.
2006 ஆம் ஆண்டு மே மாதம் 29-ஆம் தியதி இத்தகைய கிணறு ஒன்று அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது திடீரென்று அக்கிணற்றிலிருந்து பொத பொதவென்று சேறும் சகதியும் வெளியேறத்தொடங்கியது. அடுத்து சில நிமிடங்களில் சுற்றியுள்ள பல கிணறுகளில் இருந்தும் இதே போன்று சேறும் சகதியும் வெளியேறத்தொடங்கியது. கட்டுங்கடங்காத வேகத்தில் வெளியேறிய இச்சகதியை கண்டு அனைவரும் பயந்து வெளியேறினார்கள். இவ்வாறு வெளியேற தொடங்கிய சகதி கொஞ்சம் கொஞ்சமாக அந்நிறுவனத்தையும் மேலும் சுற்றியுள்ள பல நிறுவனங்களையும் மூழ்கடித்துவிட்டது. இதனால் பெரும் பொருளிழப்பும் பல ஆயிரம் தொழிலாளர்களின் வேலை இழப்பும் ஏற்பபட்டது. இயற்கையின் இக்கோரத்தண்டவம் இத்துடன் முடிந்துவிடவில்லை . படிப்படியாக இச்சகதியானது சுற்றியுள்ள 15-க்கும் மேற்ப்பட்ட கிராமங்களையும் மூழ்கடித்து அங்கு வாழ்ந்த மக்களை நிராதரவாய் விட்டுவிட்டது. மேலும் சகதியுடன் வெளிப்படுகின்ற கந்தக நெடி தாங்க முடியாமல் சுற்றியுள்ள இன்னும் பல கிராமங்களை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஆரம்பத்தில் 50,000 கன அடியாக இருந்த இந்த சகதி வெளியெற்றம் தற்போது ஒரு லட்சம் கன அடியாக உயர்ந்திருப்பதாய் சொல்லுகிறார்கள். இதில் மிகப்பெரிய செய்தி என்னவென்றால் இச்சகதி வெளியேற்றம் இன்னும் 10-15 ஆண்டுகள் தொடரும் என்பதுதான். இதுவரை வெளியேறிய சகதியாலேயே பல ஹெக்டேர் நிலப்பரப்பு மூழ்கடிக்கப்பட்டுவிட்டது. இன்னும் எவ்வளவு நிலப்பரப்பு இதனால் பாதிக்கபடுமோ என்று நினைக்கும் பொழுது தலையே சுற்றுகிறது. நமக்கே இப்படி என்றால் அங்கு வாழும் மக்களின் நிலையை நினைத்து பாருங்கள்.
இந்நிகழ்வுக்கு பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. கிணறுகளை தோண்டிய போது சரியாண வரைமுறைகளை பின்பற்றாததே இப்பேரழிவுக்கு காரணம் என்று ஒரு சாரார் குற்றம் சாட்டுகிறார்கள். ஆனால் அருகில் இருக்கும் இன்னொறு பெரிய நகரமான யோக்யகர்த்தாவில் இந்நிகழ்வுக்கு இரண்டு நாளைக்கு முன் ஏற்ப்பட்ட பெரிய நில நடுக்கம்தான் இதற்கு காரணம் என்று சம்பந்தப்பட்ட நிறுவனம் வாதிடுகிறது. உலகின் பல மூலைகளிலும் இருந்து வந்த பல விஞ்ஞானிகளும் இந்நிகழ்வுக்கான சரியான காரணத்தையும் சகதி வெளியெற்றத்தை தடுத்து நிறுத்தும் வழிமுறைகளையும் கண்டுபிக்க முடியவில்லை. சில அலோசனைகளின் படி எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் உரிய பலனை தரவில்லை. இதனால் அரசும் செய்வதறியாது கைப்பிசைந்து நிற்கிறது. மேலும் ஒரு முயற்சியாக அருகில் உள்ள அணை ஒன்றில் இச்சகதியானது தேக்கிவைத்து மேலும் பரவாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த அணை எத்தனை நாள் தாங்கும் என்று தெரியவில்லை. அந்த பரம்பொருளுக்கே வெளிச்சம்!!
இச்சம்பவம் நடந்து ஆறு மாதத்திற்கு பிறகு அதிபரின் அலுவலகம் இது தொடர்பாக ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் மேற்படி நிறுவனம் பாதிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட அனைவருக்கும் படிப்படியாக இழப்பீடு அளிக்க வேண்டும் என்று கூறப்பட்டது. இதை கண்காணிக்கவும் செயல்படுத்தவும் தனியாக ஒரு அமைப்பும் உருவாக்கப்பட்டது. ஆனால் இதுவரை மிகக்குறைவான அளவே நிவாரணம் கிடைத்துள்ளபடியால் பாதிக்கப்ப்ட்ட மக்கள் பெரும் போராட்டத்தை நடத்திக்கொண்டு இருக்கிறார்கள். மேலும் பொருமை இழந்தவர்களாய் மேற்படி அணையை உடைத்து விடுவதாய் மிரட்டலும் விடுத்திருக்கிறார்கள். லாப்பிண்டோ நிறுவனம் இந்தோனேசிய முக்கிய அமைச்சர் ஒருவரின் குடும்பத்திற்கு சொந்தமானது. இதனால் அந்நிறுவனத்தின் மீதான அரசின் நடவடிக்கை சொல்லும்படியாக இல்லை என்று மக்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.
இவ்வளவிற்கும் பிறகு இவ்வழிவை தேசிய பேரழிவாக அறவிக்க அரசுக்கு பலரும் வேண்டுகோள் விடுத்தும் அரசு அதை ஏற்க மறுத்துவிட்டது. அவ்வாறு அறிவித்தால் முழு இழப்பையும் ( தவறு செய்த நிறுவனத்திற்கும் சேர்த்து) அரசு ஏற்க வேண்டிவரும் என்பதே இதற்கான காரணம் என்கிறார்கள். ஆனால் பொறுப்பின்றி செயல்பட்ட தனியார் நிறுவனமும் இத்தகைய நிறுவனங்களை அனுமதித்த அரசுமே இவ்வழிவிற்கான முழு பொறுப்பையும் ஏற்கவேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.
எது எப்படியோ ஒரு சிலரின் பேராசையினால் அற்ப சுகங்களுக்காக தேவையற்ற துய்ப்புகளுக்காக இயற்கையை கதற கதற சீறழித்துவிடுகிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் அதற்கான முழுப்பலனையும் நாம்தான் அனுபவிக்க போகிறோம் என்பதை மறந்து விடுகிறோம். என்றைக்குத்தான் இது நமக்கு உறைக்க போகிறதோ!!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
உங்கள் மேலான கருத்துக்களை பின்னூட்டமிடவும்.
இந்தப் பூலோக சுவர்க்கம் மனிதனின் பேராசையால் அழிவது வேதனையே;
நன்கு தொகுத்துள்ளீர்கள். நமது நாடுகள் போல் அங்கும் மந்தி(ரி)கள் ;ஊழல் பேர்வழிகள்
மிகப் பெரிய மழைக்காடுகளையே காலியாக்கி சுவிஸ் வங்கியில் போட்டு வைத்துள்ளார்கள்.
அதனால் இந்த அழகுப் பூமி...அழிவில் இருந்து தப்பும் என நம்ப மனம் மறுக்கிறது.
Post a Comment