ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது. ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும் அனைத்து தளங்களிலும் விவாதங்கள் நடந்து ஓய்ந்துவிட்டன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இன்று தமிழ்ப் பரப்பை ஒரு மோசமான நோய் பீடித்துக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய். அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும் ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய். அதுவும் தனக்கு ஆதரவான கருத்தென்றால் அதை நடுநிலையானது என்றும் எதிரான கருத்தென்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கருதுவது மட்டும் அல்லாமல் அப்படி ஒரு தோற்றத்தை மற்றவருக்கும் உருவாக்குவது. முன்பு அரசியல்வாதிகளை மட்டும் பாதித்த இந்த நோய் இப்போது படித்தவர்கள், படிக்காதவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பொது மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் எது நடுநிலையானது எது அரசியல் சாயம் உள்ளது என்று இனங்கான முடியாத அளவுக்கு அனைவரும் குழம்ப்பிப்போய் உள்ளனர். வழக்கம் போல அரசியல்வாதிகள் இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர்.
தமிழைப் படி என்றால் ஆங்கிலம் தெரியாமல் இந்த நவீன உலகில் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். ஈழத்தமிழர்களின் அவலத்தை எழுதினால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரா என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் விடயத்தில் கருணாநிதி செய்தது சரியில்லை என்றால் செயலலிதா இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்கிறார்கள். யூதர்களை நாசிக்கள் கொன்றதை உலகின் பேரவலம் என்று விவரிக்கின்ற புத்தகங்கள் தமிழில் பல உண்டு. ஆனால் கூப்பிடும் தூரத்தில் நடந்த இனப்படு கொலையைப் பற்றி தினசரி செய்தித்தாள்கள் கூட எழுதவில்லை. இவையெல்லாம் இந்த நோய் பாதிப்பின் வெளிப்பாடுதான். தமிழைப்படி என்றால் ஆங்கிலம் படிக்காதே என்று பொருள்கொள்வதை நோயைத்தவிர வேறு என்ன என்று புரிந்து கொள்ளமுடியும்.
தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விவாதங்களுக்கும் இன்று இதே நிலைதான். இன்றைய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவையா என்றால், செம்மொழி ஆவதற்காக தமிழுக்கு உள்ள தகுதிகளையும், தமிழ் செம்மொழி அமைப்பின் செயல்பாடுகளையும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பெட்னா தமிழ் விழா கொண்டாடும் போது தமிழக அரசு செம்மொழி மாநாடு கொண்டாடக்கூடாதா? என்கிறார்கள். பெட்னாவையும் தமிழக அரசையும் ஒன்றென்று பார்க்கின்ற நிலையை நோயென்பதைத்தவிர வேறென்னவென்று சொல்லுவது.
திடீரென்று இரண்டாயிரத்துபத்தில்தான் தமிழ் செம்மொழி நிலையை அடைந்து விட்டது மாதிரி பேசுகிறார்கள். ஏதோ தமிழுக்கு செம்மொழி நிலையை கருணாநிதி மத்திய அரசிடம் போராடி வாங்கி தந்தது போன்று அவரை கொண்டாடுகின்றனர்.( அமைச்சர் பதவியை பேரம் பேசி வாங்குவது போல). உண்மையில் இவர்கள் சொன்னாலும் சொல்லாமல் போனாலும் கொண்டாடினாலும் கொண்டாடாமல் போனாலும் மத்திய அரசு அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காமல் போனாலும் தமிழ் செம்மொழிதான். தமிழின் செம்மொழித்தகுதியை யாரும் தட்டி பறிக்கவோ மறுக்கவோ முடியாது. மேலும் தமிழ் மொழியின் தன்மையை அங்கீகரிக்கும் தகுதி கூட வேறு எந்த மொழியை சார்ந்தவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.
இந்நிலையில் தமிழ் செம்மொழி ஆனதை யாருக்காக கொண்டாடுகிறோம். நமக்காகவா? அடுத்தவருக்காகவா? நமக்காக என்றால் அதைக்கொண்டாடும் தகுதி நமக்கு இருக்கிறதா? நமது சொந்த தாய் மொழியில் பேசுவதை அவமானமாக கருதுகின்ற நாம் நமது மொழியை செம்மொழி என்று கொண்டாடுவதற்கு தகுதியுள்ளவர்களா?
உண்மையில் நாம் யார்?
- தமது கையெழுத்தைக்கூட தமிழில் போடாதவர்கள்
- தமது குழந்தைக்கு தமிழில் பெயர் வைப்பதை அநாகரிமாக கருதுபவர்கள்
- தமது நிறுவனத்துக்கு கூட தமிழில் பெயர் வைக்காதவர்கள்
- வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதை கவுரமாக கருதுபவர்கள்
- தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் பெயரை தமிழிலும் எழுதும் வினோதப்பிறவிகள்
- கடன் வாங்கி படிக்கவைத்தாலும் ஆங்கில வழி பள்ளியில்தான் பிள்ளைகளை சேர்ப்பேன் என்று அலைபவர்கள்
இப்படிப்பட்ட நாம் தமிழைக்கொண்டாடுவதில் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா? இப்படி மாநாடு போட்டு கொண்டாடுவதால் மட்டும் தமிழை அடுத்தவர்கள் கற்க முன்வந்துவிடுவார்களா? நாமே நம் தாய் மொழியை அங்கீகரிக்காத போது மற்றவர்கள் அங்கீகரித்து என்ன பயன்? தமிழை கற்க வேண்டியவர்கள் நாமா? அடுத்தவர்களா?
மாநாட்டுக்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் வந்ததாம். அதனால் மக்களுக்கு தமிழ்ப்பற்று வளந்துவிட்டதாம். மக்கள் கூட்டம் எங்கு அதிகமாக இருந்தது? அறுதியிட்டு சொல்லுங்கள் ஆய்வரங்கத்திலா? உணவகத்திலா? தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சிக்குக்கூட ஐந்து லட்சம் பேர் வருகிறார்கள். கூட்டம் கூட்டுவதே பெருமையாகிவிடுமா?
கொண்டாடுபவர்கள்தான் பதில் சொல்லவேண்டும்!
பட உதவி : திரு. மு.நா (http://kirukkall.blogspot.com/2008/10/blog-post_29.html) - நன்றி!
17 comments:
விழாவுக்கான செலவை தமிழ்ப்பல்கலைக் கழக கட்டமைப்புக்கு பயன் படுத்தியிருக்கலாம். :(
ஐயா.....
நமது தாய் மொழியின் அடிப்படை இலக்கணம் குறித்தும், நமது தாய் மொழியின் அருமை குறித்து அறியாத மக்கள், நம்மிடையே உள்ள போது, இதை போன்ற மாநாடுகள் மற்றும் விழாக்கள் தாம், நம்மிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றன.
அரசியல் ஆதாயத்திற்காக, ஒரு சாரர் இதை போன்ற விடயங்களை செய்தாலும் கூட...... மறு புறம், நமது மக்களிடையே, நல்ல்லதோர் தாக்கத்தை ஏற்படுத்த இந்த மாநாடு முயற்சி செய்தது அல்லவா ? ....
நம்மில் எத்தனை பேருக்கு ஐயா சிவதம்பி போன்ற மொழி வல்லுனர்களை தெரியும்... உண்மையில் அவரை போன்ற பல அறிஞர் பெருமக்களை இந்த மாநாடு எனக்கு அறிமுகம் செய்தது......இந்த மாநாடு, மொத்தத்தில் ஒரு நல்ல முயற்சி என்றே நான் சொல்லுவேன்....
பத்மநாபன். அ
//தமிழைப்படி என்றால் ஆங்கிலம் படிக்காதே என்று பொருள்கொள்வதை நோயைத்தவிர வேறு என்ன என்று புரிந்து கொள்ளமுடியும். //
மிகவும் சரியான கருத்துக்கள்.
நியாயமான கோபம்... இதற்க்கு யாரும் பதில் சொல்ல மாட்டார்கள்...
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி வானம்பாடி ஐயா!
வருகைக்கு மிக்க நன்றி திரு.ராஜ்குமார் அய்யம்பெருமாள்!
நன்றி கே.ஆர்.பி. செந்தில் ஐயா! இது கோபம் கூட இல்லை. ஆற்றாமை என்றுதான் சொல்லவேண்டும்.
திரு பத்மநாபன் ஐயா!
உங்கள் கருத்துடன் நான் பெருமளவு வேறுபடுகிறேன். மேம்போக்காக பார்த்தால் உங்கள் கருத்து நியாயமானதே. ஆனால் ஆழ்ந்து பார்த்தால் இந்த மாநாட்டால் தமிழ் மொழிக்கு ஏற்ப்பட்ட நன்மைகளை விட இழப்புகளே அதிகம்.
1. உண்மையில் மாநாடு மக்களை சென்றடைந்த அளவுக்கு மொழி மக்களை சென்றடையவில்லை.ஏ.ஆர்.ரகுமானினின் மாநாட்டுப்பாடலை ரசித்த அளவுக்கு ஆய்வு கட்டுரைகளையோ பொதுக்கட்டுரைகளையோ யாரும் ரசிக்கவும் இல்லை. சிலாகிக்கவும் இல்லை. ”செம்மொழி மாநாடாம் பைவ் டேஸ் லீவு” என்கிறார்கள் பிள்ளைகள். இதுதான் இவர்கள் ஏற்படுத்திய விழிப்புணர்வு.
2. இந்த மாநாட்டுக்காக செலவிடப்பட்ட தொகையில் கால் பங்கு மட்டுமே மாநாட்டுக்காக செலவிடப்பட்டது. மீதித்தொகை கோவை மாநகரத்தின் உள் கட்டுமானத்துக்கே செலவு செய்யப்பட்டது.
3.மாநாடு ஒரு பொருட்காட்சி போன்று நடத்தப்பட்டதால் மொழியின் வளர்ச்சிக்கான ஆக்கப்பூர்வமான ஆய்வுக்கட்டுரைகளுக்கோ, நவீனப்படுத்தும் முயர்ச்சிகளுக்கோ முக்கியத்துவம் கிடைக்கவில்லை.
4. இது போன்ற மாநாடுகளில் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கு இட்டுச்செல்லும் வகையில் பல விதமான முக்கிய ஆய்வு முடிவுகள், ஆய்வுக்கட்டுரைகள், கருத்தாய்வுகள், கலந்துரைகள் இடம்பெறுவது வழக்கம். இதன் மூலம் மொழியின் அடுத்த கட்ட வளர்ச்சி உறுதி படுத்தப்படும். ஆனால் வெற்று கோழங்களும் அர்த்தமற்ற கொண்டாட்டங்களுமே மாநாட்டத்தை நிறைத்ததனால் ஆக்கப்பூர்வமான விடயங்கள் அடிபட்டு வெறும் விழிப்புணர்வு என்ற அளவில் நின்று போய்விட்டன.
கல் தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தக்குடிக்கு தன் சொந்த தாய் மொழியைப் பற்றி விழுப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய அவமானமான நிலையில் இருக்கும் நமக்கு இந்த வெற்றுக் கொண்ட்டாம் ஏன் என்பதுதான் என் கேள்வியே?
இதை நம்மைப்போன்றவர்கள் உணரவேண்டும் என்பதுதான் என் கருத்து.
ஐயா தமிழ்நாடன் அவர்களே,
வணக்கம்,
கடந்த சில இடுகைகளில் உங்களுக்கு அரசியல்வாதிகள் மீது இருந்த கோபம் கருத்து முக்கியமாக கலைஞரை சாடியது இதெல்லாம் பார்த்து நீங்கள் செல்வி.ஜெயலலிதா வின் ஆதரவாளர் என்று தான் நினைத்தேன் ஆனால் இந்த இடுகையை படித்த பின் தான் அது ஒரு விதமான நோய் என்பதையே புரிந்து கொண்டேன். இன்னும் இந்த நோயால் நிறைய பேர் பாதிக்கப்பட்டு அவதிபடுகிறார்கள் என்பதே உண்மை.
//'நமது சொந்த தாய் மொழியில் பேசுவதை அவமானமாக கருதுகின்ற நாம் நமது மொழியை செம்மொழி என்று கொண்டாடுவதற்கு தகுதியுள்ளவர்களா?
உண்மையில் நாம் யார்?'//
கண்டிப்பாக நமக்கு இது ஒரு கேவலம் தான்
இன்னும் நிறைய பேர் இப்படி தான் இருக்கிறோம்!!!
ஒரு சின்ன வேண்டுகோள்
கடந்த நவம்பர் மாதம் அமைச்சர் அழகிரி அவர்களுக்கு ஜகர்தா தமிழர்கள் கொடுத்த மனு என ஆனது அந்த இலங்கை தமிழர்கள் இப்பொழுது எங்கு இருகிறார்கள் ?
தயவு செய்து மனு கொடுத்த பின்பு என்ன ஆயிற்று என்பதை தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.
இனியவன்
அருண்
இனிய அருண் ஐயா!
உங்கள் கருத்துக்கு நன்றி!
அமைச்சர் அழகிரி அவர்களிடம் கொடுக்கப்பட்ட மனு மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏழைகளின் சொற்கள் என்று அம்பலத்தில் ஏறியிருக்கிறது இன்றைக்கு ஏறுவதற்கு?
கடைசியாக வந்த தகவல்களின் படி இந்தோனேசியாவில் அகப்பட்ட தமிழர்கள் ஐ.நா. அகதிகள் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் அவுசுரேலியாவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
இதேபோன்றதொரு சம்பவம் அண்மையில் மலேசியாவிலும் நிகழ்ந்தது. அங்குள்ள தமிழர்களின் தொடர்ச்சியான முன்னெடுப்பினால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு நார்வேவுக்கும் கனடாவுக்கும் அந்நாட்டு அரசுகளின் ஏற்பின் பேரில் அனுப்ப பட்டனர். தமிழினத்துக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற இரு நாடுகள் ஈழத்தமிழர்களை மனமுவந்து ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் தாய்தமிழகம் என்று சொல்லிக்கொள்கின்ற தமிழகமோ அவர்களின் அரசோ தமிழினத்தலைவர் என தனக்குத்தானே பட்டம் கட்டிக்கொள்பவர்களோ ஒப்புக்கு ஒரு அறிக்கை விடக்கூட திராணி இல்லாதவர்களாக இருக்கிறார்கள். இதுதான் நமக்கெல்லாம் பெரிய அவமானம்.
நல்ல பதிவு, படமும் அருமை, யாரு வரைந்தது??
///தோமா said...
நல்ல பதிவு, படமும் அருமை, யாரு வரைந்தது?///
பட உதவி: திரு. மு.நா ( http://kirukkall.blogspot.com/2008/10/blog-post_29.html)
கட்டுரையில் குறிப்பிடாததற்கு மன்னிக்கவும்.
//தமிழன் எனும் கோமாளி!//
தமிழன் எனும் கோமா நோயாளி! ன்னும் சொல்லலாம்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி கோவி. கண்ணன் ஐயா!
சிறந்த பதிவு!
“தமிழின் பெயரால் தமிழ்நாட்டு தமிழனை எப்படியெல்லாம் ஏமாற்றலாம்” என்று ஏதாவது ஒரு ஆய்வுக்கட்டுரை செம்மொழி மாநாட்டில் வெளியிட்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி திரு பிரபாகரன் ஐயா!
//தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சிக்குக்கூட ஐந்து லட்சம் பேர் வருகிறார்கள். கூட்டம் கூட்டுவதே பெருமையாகிவிடுமா? //
சபாஷ்!!! சரியான கேள்வி...!!
Post a Comment