எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday 18 September 2009

அழகான ராட்சசியே! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 2)

இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1
மின்னொளியின் பின்புலத்துடன் பெரம்பனான்
முன்னொரு காலத்தில் இந்தோனேசியாவின் மத்திய சாவா தீவு பகுதியில் இரண்டு இந்து அரசுகள் இருந்தன. அதில் ஒன்று வளமான ”பெங்கிங்” என்னும் பேரரசு. இன்னொன்று பெங்கிங் பேரரசை ஒட்டிய ”கரத்தான் போக்கோ” எனும் பெயருடைய அரசு. பெங்கிங் பேரரசை தாமர் மாயோ எனும் அரசன் ஆண்டு வந்தான். இவன் மிகுந்த புத்திக்கூர்மையுடன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்தான். இவனது அரசில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இவனுக்கு ராடன் பாண்டுங் போண்டோவோசோ எனும் மகன் இருந்தான். அவனும் தந்தையை போலவே வீரமும் அறிவும் நிறைந்தவனாக மட்டுமல்லாமல் யோக கலைகளிலும் சிறந்து விளங்கினான். அவன் தான் கற்ற யோக கலையினால் தவம் பல இயற்றி பல வரங்களை பெற்றிருந்தான். அடுத்த அரசான கரத்தான் பொக்கோவை பிரபு போக்கோ என்ற அரக்கன் ஆண்டுவந்தான். அவன் ஆனவத்தின் முழு உருவாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். ஆனால் அவனுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள்தான் நம் கதையின் நாயகி இளவரசி லோரோ ஜொங்கரங். அழகின் மொத்த உருவமாக கான்போரை மயங்க வைக்கும் படியான உடல் வனப்புடன் மெல்லிய இடையுடன் அவள் இருந்தாள். அரக்கனின் மகள் என்றாலும் இவள் நல்ல குணம் கொண்டவளாகவும் அதே நேரம் தந்தையின் மீது அளவற்ற பாசம் கொண்டவளாகவும் இருந்தாள். பிரபு போக்கோவும் தன் மகள் மீது அதே அளவு பாசம் கொண்டிருந்தான். அரக்கனாயினும் அவனும் ஒரு தந்தைதானே. பிரபு போக்கோ அரசனுக்கு பதி கொப்போலோ எனும் மந்திரி இருந்தான். அவன் அலோசனையுடந்தான் பிரபு போக்கோ எதையும் செய்வான்.
இளவரசி லோரோ ஜோங்கரங்கை சித்தரிக்கும் காட்சி
பிரபு போக்கோவுக்கு தனது பக்கத்து பேரரசான பெங்கிங் மீது எப்போதுமே ஒரு கண்ணுண்டு. அந்த பேரரசை எப்படியாவது தனது ஆளுகைக்கு கீழ் கொண்டுவரமென்று அவன் ஆசைப்பட்டான். அதற்காக தனது மந்திரி பதியுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கான உணவையும் மக்களிடம் இருந்து மிரட்டி பெற்று தயார் செய்தான். அதன் பிறகு சரியான நேரம் பார்த்து பெங்கிங் பேரரசை பெரும் படையுடன் சென்று தாக்கினான். மிகப்பெரிய பேரரசாயினும் பிரபு போக்கோவின் திட்டமிட்ட தாக்குதலால் பெங்கிங் பேரரசின் படை வீரர்கள் நிலை குலைந்து போயினர். பிரபு போக்கோ மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தான். பெங்கிங் மக்கள் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மக்களை காப்பாற்ற தனது அருமை மகன் இளவரசன் பாண்டுங்கை போரில் இறக்கினான் அரசன் தாமர் மாயோ. போர்க்கலையில் வல்லவனான பாண்டுங் தனது முழு பலத்தையும் திரட்டி பிரபு போக்கோவுடன் மோதினான். போர் பல காலம் நீண்டது இறுதியில் தான் தவ வலிமையினால் பெற்ற அஸ்திரங்களை கொண்டு பிரபு போக்கோவை வீழ்த்திக்கொன்றான் இளவரசன் பாண்டுங். பிரபு போக்கோவின் மந்திரி பதி குப்போலோ போர்க்களத்தை விடு தப்பி ஓடினான். ஆனால் இளவரசன் பாண்டுங் அவனை விடாமல் துரத்திக்கொண்டு கரத்தான் பொக்கோவுக்கு வந்தான். தப்பியோடிய பதி போக்கோ நேராக இளவரசி லோரோ ஜோங்கரங்கிடம் வந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றையும் அவளது தந்தை பெங்கிங் இளவரசன் பாண்டுங்கால் கொல்லப்பட்ட சேதியையும் சொன்னான். தன் தந்தை இறந்த செய்தி கேட்ட இளவரசி துடிதுடித்து போகிறாள். அரன்மனையில் இருந்தவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்கின்றனர். அந்த நேரம் பார்த்து மந்திரி பதி கொப்போலோவை துரத்திக்கொண்டு வந்த இளவரசன் பாண்டுங் அவளின் அரன்மனைக்கு வருகிறான். வந்தவன் அங்கிருந்த இளவரசி லோரோ ஜோங்கிரங்கை கண்டு அவள் அழகில் சொக்கிப்போகிறான். தான் பல் பெண்களை சந்திதிருந்தாலும் இவளின் அழகு அவனை அவள் மீது காதல் கொள்ளச்செய்கிறது. அவள் யாரென்று பக்கத்தில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அவள் தன்னால் கொல்லப்பட்ட அரசன் பிரபு போக்கோவின் மகள் என்று அறிந்து கொள்கிறான். அவள் தந்தையை கொன்றதற்கு பிராயச்சித்தமாக தான் அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அவனுடைய விருப்பத்தை அவளிடத்தில் தெரிவிக்கிறான். இளவரசிக்கோ தன் தந்தையை கொன்ற ஒருவனை தன் மணாளனாக ஏற்றுக்கொள்ள மனமில்லை. ஆனால் அந்தக்கால நியதிப்படி தோற்றுப்போன மன்னர்களின் அனைத்து சொத்துக்களும் வெற்றிபெற்ற மன்னருக்கே சொந்தமாகும். அதன்படி பார்த்தால் இவள் இளவரசி ஏற்கனவே இளவரசன் பாண்டுங்க்குக்கு சொந்தமானவள் ஆகிறாள். அதனால் நேரடியாக மறுக்க முடியாத நிலையில் அவனது விருப்பத்துக்கு எப்படியவது தடை போடவேண்டும் என்று சிந்திக்கிறாள். இறுதியில் இளவரசன் பாண்டுங்கை திருமணம் செய்து கொள்ள இரண்டு நிபந்தனைகளை அவன் முன் வைக்கிறாள். அவை இரண்டையும் அவன் நிறைவேற்றினால் அவனை திருமணம் செய்துகொள்ள தான் சம்மதிப்பதாக ஒப்புக்கொடுக்கிறாள். அவற்றில் ஒன்று அவன் ஒரு உலகிலே இதுவரை இல்லாத ஆழமுள்ள பாதாள கிணறு ஒன்றை அமைக்க வேண்டும். மற்றொன்று ஒரே இரவில் ஆயிரம் கோயில்களை கட்டவேண்டும் என்பது, இளவரசனும் அவற்றை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறான்.
ராமாயணத்தில் அனுமன் இலங்கையை எரிக்கும் காட்சி
சவாலை ஏற்ற இளவரசன் பாண்டுங் தனது தவவலிமையினாலும் பூதகணங்களின் உதவியுடனும் பாதாள கிணற்றை அமைத்து முடிக்கிறான். தனது முதல் நிபந்தனை தோல்வியுற்றதை கண்ட இளவரசி ஒரு உபாயம் செய்கிறாள். தான் அமைத்த கிணற்றின் ஆழத்தை இளவரசன் உள்ளே இறங்கி நிரூபிக்க வேண்டும் என்கிறாள். அதை ஏற்றுக்கொண்ட இளவரசன் அதன் உள்ளே இறங்குகிறான். இந்த கணத்தை பயன்படுத்தி தனது மந்திரி பதி போக்கோ மூலம் அந்த கிணற்றை பெரிய பாறைகளை கொண்டு மூடச்செய்கிறாள். ஆனால் சகல கலைகளையும் கற்றுத்தேறிய பாண்டுங்குக்கு அதிலிருந்து மீண்டு வெளியே வருவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்கவில்லை. தன்னை தந்திரத்தால் வீழ்த்த நினைத்தவளின் மீது அவனுக்கு பெரும் கோபம் வருகிறது. ஆனாலும் அவளுடைய அழகு அவனை சாந்தப்படுத்திவிடுகிறது. தனது தந்திரத்தில் வீழாத இளவரசனைக் கண்டு அதிர்ச்சியுற்ற லோரோ ஜோங்கரங் சுதாரித்துக்கொண்டு தனது அடுத்த நிபந்தனையை நிறைவேற்ற சொல்கிறாள். புன்முறுவலுடன் அதையும் ஏற்றுக்கொண்ட இளவரசன் காரியத்தில் இறங்குகிறான். போரிலேயே தான் தவமிருந்து பெற்ற பல அஸ்திரங்களை இழந்துவிட்டதால் எஞ்சிய ஆற்றலைக்கொண்டு அவனது தவ வலிமையால் தேவ லோகத்திலிருந்து பூத கணங்களை வரவழைக்கிறான். அவர்களும் அன்று ஒருநாள் இரவு மட்டும் பொழுது புலரும் நேரம் வரை அவனுக்கு ஒத்துழைக்க ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உதவியுடன் தனது பரிவாரங்களை கொண்டு கோவில்களை அமைக்க ஆரம்பிக்கிறான். இரவு முழுவதும் கோவில்கள் எழுப்ப படுகின்றன. 999 கொவில்கள் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரமாவது கோவில் துவங்கப்பட்ட நிலையில் இளவரசி இன்னொரு சூழ்ச்சி செய்கிறாள். தன் அரண்மனை பணிப்பெண்களை திரட்டி கிழக்கு திசையில் சென்று பெரிய தீயை மூட்ட சொல்கிறாள். மேலும் தனது மக்களை விடியலை நினைவுறுத்தும் பொருட்டு தங்கள் வீட்டு உரல்களில் அரிசியை குத்தச்சொல்கிறாள். அந்த காலத்தில் பொழுது புலரும் போது நெல் குத்தி அன்றைக்கான உணவை சமைப்பதுதான் அந்தப்பகுதி மக்களின் வழக்கமாம். இப்பகுதியில் இன்றும் கூட கைகுத்தல் சிகப்பரிசியில் வெல்லம் சேர்த்து தினுசு தினுசான பலகாரங்கள் செய்கிறார்கள். என்ன திடீர்ன்னு சாப்பாட்டு பக்கம் போய்விட்டோம்? சரி சரி கதைக்கு வருவோம்.
லோரோ ஜோங்கரங் கதை சாவா நாடகப்பாணியில்
கிழக்கு திசையில் வெளிச்சத்தையும் நெல் குத்தும் ஓசையையும் கேட்ட காக்கைகள் பொழுது புலர்ந்துவிட்டது என்று கருதி கரைய ஆரம்பிக்கின்றன. இதனை கண்ட பூத கணங்களும் பொழுது புலர்ந்துவிட்டதாக எண்ணி தமது வேலையை நிறுத்திவிட்டு இளவரசனிடம் வந்து தாங்கள் வானுலகம் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதால் மேற்கொண்டு தொடரமுடியாது என்று கூறி மறைந்துவிட்டனர். இதனால் இளவரசன் பாண்டுங் குழப்பமடைகிறான். இன்னும் போழுது புலரும் பொழுது நேரம் ஆகவில்லை என்று அவனது உள் மனது சொன்னது. ஆனாலும் இளவரசி லோரோ ஜோங்கரங்கை கூப்பிட்டு கோவில்களை எண்ணிப்பார்த்துக்கொள்ள சொல்கிறான். அவள் சரியாக 999 கோவில்களை எண்ணி முடிப்பதற்கும் உண்மையான பொழுது புலர்வதற்கும் சரியாக இருக்கிறது. தான் கேட்டதற்கு ஒரு கோவில் குறைவாக இருப்பதால் தான் இளவரசனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்கிறாள் லோரோ ஜொங்கரங். அவளது சூழ்ச்சியால் தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த இளவரசன் பாண்டுங் கடுங்கோபம் கொள்கிறான். உனக்கு இன்னும் ஒரு கோவில்தானே வேண்டும்? அந்த கோவிலுக்கு நீயே மூலக்கல்லாக போய்விடு என்று இளவரசிக்கு சாபம் கொடுக்கிறான். அவளும் கற்சிலையாக மாறிவிடுகின்றாள்.. அந்த சிலைதான் இந்த பெரம்பனான் கோவிலின் ஒரு பகுதியில் துர்கையின் உருவமான மகிசாசுரமர்த்தினியாக வீற்றிருப்பதாக ஐதீகம், இதனால்தான் இந்த கோவில்கள் அனைத்தும் அடங்கிய பகுதி “சண்டி லோரோ ஜொங்கரங்” என்று அழைக்க படுவதாக இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். (சண்டி – கோவில் / லோரோ- மெல்லிய / ஜோங்கரங்- கன்னி) இங்கிருக்கும் இங்குள் கல்வெட்டு ஒன்றும் இக்கதையை கூறுகிறது. இக்கதை இன்னும் பல விதங்களில் இந்தப்பகுதி மக்களிடம் புழங்குகிறது. நான் சொன்னதுதான் சற்று எளிமையானது??!!. மேலும் இளவரசிக்கு உதவி செய்தபடியால் அந்த பகுதி பெண்களுக்கும் திருமணம் வாய்க்காமல் கடவது என்று சாபம் கொடுககப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் இக்கோவில் பகுதியில் காதல் செய்தால் காதல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஆனால் நாம் சென்றிருந்த போது நிறைய காதல் சோடிகளை பார்க்க முடிந்தது.( பயலுகள் புள்ளைங்கள கழட்டி விடுவதற்காகவே கூப்பிடு வந்திருப்பானுங்க என்று நினைக்கிறேன்)
சண்டி சேவு
இப்படி அறைகுறையாய் விடப்பட்ட ஆயிரமாவது கோவில் இந்த ஆலய வளகத்தில் உள்ளதாக வேறு ஒரு கோவிலை காட்டுகிறார்கள். அது “சண்டி சேவு” என்று அழைக்கப்படுகிறது. சாவா மொழியில் சண்டி என்றால் கோவில் என்றும் சேவு என்றால் ஆயிரம் என்றும் பொருள்படும். பிற்காலத்தில் வந்த புத்த மத அரசர்களால் இந்த ஆயிரமாவது கோவில் புத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் அதனால் “லோரோ ஜொங்கரங் சிலை” சிவன் சன்னிதிக்கு அருகில் தனி சன்னிதியில் பின்னாளில் மாற்றப்பட்டதாகவும் கதை சொல்கிறார்கள். கதை உண்மையோ இல்லையோ ஆனால் சுவாரசியமாக இருக்கிறது. இந்தக் கதையையும் ராமாயண மகாபாரத கதைகளையும் திறந்த வெளி மேடை நாடகங்களாக பாலி நாடகப்பாணியில் இக்கோயில் வளாகத்தில் நடத்துகிறார்கள். இக்கோவிலை பின்புலமாக கொண்டு ஒளி ஒலி காட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய இந்தக்காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. அழகான் பின் புல ஒளி அமைப்பில் இந்த கோவிலைக் கான்பதே அலாதியானது. இந்த முழு பதிவையும் இளவரசி கொடியிடை கன்னியின் கதையே அடைத்துக்கொண்டுவிட்டதால் இந்த கோவிலின் அமைப்பு பற்றிய செய்திகள் அடுத்த பதிவில் இடம்பெறும். கதையை சற்று சவ்வ்வ்வாக இழுத்திருந்தால் தயவு செய்து பொருத்தருள வேண்டும்! ஏனென்றால் நம் கதை சொல்லும் திறன் அவ்வளவுதான்! .

9 comments:

கவிக்கிழவன் said...

அர்த்தமுள்ள ! அழகான வார்த்தைகள்!

தமிழ் நாடன் said...

மிக்க நன்றி யாதவன்!

யாசவி said...

hi jakarta nanban,

nice info.

r u in jakarta?

may I'll visit over there next month

தமிழ் நாடன் said...

சகார்த்தாவுல தான் இருக்கேன். தாராளமா வாங்க!

மின்னஞ்சல் அனுப்புங்க- jakartananban@gamil.com

Manjari said...

Wonderful Temple. Very Beautiful Thanks for sharing.

சாந்தி நேசக்கரம் said...

நல்லதொரு பதிவு. தகவல்களை எமக்காய் தந்தமைக்கு. தொடர்ந்து எழுதுங்கள்.

சாந்தி

தமிழ் நாடன் said...

நன்றி மஞ்சரி !
நன்றி சாந்தி !

பா.ராஜாராம் said...

அருமையான பகிர்வு தமிழ் நாடன்.இந்த பெயரும்கூட! உங்களை ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன்.நேரம் வாய்க்கிறபோது தளம் வாங்களேன்.நன்றி!

தமிழ் நாடன் said...

நன்றி பா.ரா. உங்கள் தளத்தில் சந்திக்கிறேன்.