எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Monday 16 August 2010

ஆக்சுபோர்டு பட்டமும் ஆண்டியப்பன் கோவனமும் !

 

ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோயில் ஆண்டி என்று நம் ஊர்க்காட்டில் ஒரு பழமொழி சொல்வார்கள். இது யாருக்கு பொருந்துமோ இல்லையோ நம்ம ஊரு விவசாயிகளுக்கு நல்லாப் பொருந்தும். பாரட்லா படித்த நம் அரசியல்வாதிகளிடம் ஒலிவாங்கி கிடைத்துவிட்டால் போதும் ஒரு விசயத்தை மறக்காமல் கூவி விட்டுப் போவார்கள். அது விவசாயிகள் நம் நாட்டின் முதுகெலும்பு அவர்களின் முன்னேற்றத்துக்கு நாங்கள் ஆனதை செய்வோம் என்பதுதான். அது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் பட்ட பால பாடம். அதனால் அதை மறக்காமல் ஒவ்வொரு முறையும் கூவி விட்டு செல்வார்கள். அதன் பிறகு விவசாயிகளைப் பற்றி அவர்கள் மறந்தும் கூட நினைப்பதில்லை. இது அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்ட இரண்டாம் பாடம். ஆம்! விவசாயிகளை நினைத்தால் ஆட்சி நடத்த முடியாது என்பதுதான் அவர்களுக்கு சொல்லிக்கொடுக்கப் ப்ட்டிருக்கிறது. மாத்திக்கட்ட கோவனம் கூட இல்லாத விவசாயிக்கும் இவர்கள் பேச்சையெல்லாம் ஞாபகம் வைத்துக்கொள்ள நேரமோ திருப்பிக்கேட்க சக்தியோ இருப்பதில்லை.

      ஊரை அடித்து உலையில் போடும் ரிலையன்சு சகோதரருக்குள் சக்காளத்தி சண்டை என்றால் கூட பிரதமரே இருக்கின்ற எல்லா வேலையையும் போட்டுவிட்டு சமாதானம் பேச போய்விடுவார். காரணம் அவர்கள் சக்காளத்தி சண்டையினால் பங்கு சந்தை எனும் சூதாட்டம் படுத்துவிடுமாம். அதனால் நாட்டின் பொருளாதாரமே ஆடிப்போய்விடுமாம். ஆனால் ஊருக்கே உணவு தரும் விவசாயின் பிரச்சினைகளை எத்தனை மேடை போட்டுக்கத்தினாலும் கதறினாலும் அவரின் செவிட்டு காதுகளுக்கு அவை கேட்பதே இல்லை. நம் அரசியல் வாதிகளைப் பொறுத்தவரை விவசாயிகள் என்பவர்கள் ஒரு பிச்சைக்கார கூட்டம். இவர்கள் போடும் கடன் தள்ளுபடி மற்றும் மானியம் போன்ற பிச்சைகளை பொறுக்கிக்கொண்டு ஓட்டுப் போடும் கூட்டம். இது அவர்களுக்கு அமரிக்காவிலும் இங்கிலாந்திலும் அவர் படித்த பொருளாதாரம் சொல்லிக்கொடுத்த பாடம். நாட்டு உற்பத்தியில் இரண்டு சதவீதமே உள்ளத் தொழில் துறையினருக்கு பிரச்சினை என்றால் உடனே அம்பானியையும் ஆசீசு பிரேம்சீயையும் பக்கத்தில் உட்கார வைத்து கூட்டம் போடுவார் நம் பாரதப் பிரதமர். ஆனால் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியின் மூலாதாரமான விவசாயிகள் கூட்டம் கூட்டமாக தற்கொலை செய்து கொண்டால் கூட அவர்களின் பிரதிநிதிகளை கூப்பிட்டு பேச அவருக்கு தோன்றுவதே இல்லை. அவரைச் சொல்லிக் குற்றமில்லை. தேர்தல் வந்தால் செலவுக்கு இந்த பஞ்ச பரதேசிக் கூட்டமா பொட்டி கொடுக்கப் போகிறது. நம்ம நாட்டு அரசுகளும் அதன் மந்திரி பிரதானிகளும் விவசாயிகளுக்காகவும் விவசாய தொழிலாளர்களுக்காகவும் கொண்டுவரும் திட்டம் எதுவும் அவர்களுக்குப் முழுமையாகப் போய் சேருவதில்லை என்பது அவர்களுக்கே நன்குத் தெரியும். இத்திட்டங்களின் நோக்கமும் அது அல்ல. இத்திட்டங்கள் அனைத்தும் மேல் மட்டத் தலைவருக்கு கொடிபிடிக்கும் அடி மட்டத்தலைவர்கள் பணம் பார்க்க வேண்டி கொண்டுவரப்பட்டவை. ஆனால் இத்திட்டங்கள் தவறாமல் இவர்களின் ஆட்சியின் சாதனைப்பட்டியலில் இடம் பிடிக்கும். அதையும் நம்பி நாமும் வாக்களித்துவிட்டு வந்துவிடுவோம்.             அண்மையில் குறைந்தப்பட்ச வேலைத்திட்டம் என்ற திட்டம் நாடு முழுவதும் செயல் படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் ஊரகப்பகுதியிலுள்ள விவசாயக் கூலித் தொழிளாளர்களுக்கு ஒரு ஆண்டுக்கு குறைந்தப்பட்சம் 90 நாட்கள் நேரடி வேலை தருவதுதான். இதன் மூலம் ஊரக ஏரிகள் மற்றும் குளங்கள் தூர்வாரி சுத்தப் ப்டுத்தப்பட திட்டமிட்ப்பட்டன. இதில் பெரிய கொடுமை என்னவென்றால் ஏற்கனவே ஊரகப்பகுதிகளில் விவசாய பணிகளைச் செய்வதற்கு கூலித் தொழிளாளர்கள் கிடைக்காமல் விவசாயிகள் நொந்து நூலாகிக் கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இவர்கள் அவர்களுக்கு குறைந்த பட்ச வேலை கொடுக்கிறார்களாம். சரி வேலை கொடுத்தார்கள். கூலியை ஒழுங்காக கொடுத்தார்களா? நாளொன்றுக்கு அரசு நிர்ணயித்து வழங்கியது 80 ரூபாய். ஆனால் தொழிளாளர்களுக்கு வழங்கப்பட்டதோ இதில் பாதிதான். மீதியை இவர்களுக்கு வேலை கொடுத்த ஊராட்சித் தலைவர்களும் அரசு அதிகாரிகளும் தார்மீக உரிமையோடு பகிர்ந்து கொண்டார்கள். சரி கூலிதான் இப்படி வேலையாவது ஒழுங்காக நடந்ததா? ஒழுங்காக நடந்திருந்தால் ஒரு வார மழைக்கே நம் மக்கள் இந்த பாடு பட வேண்டியிருக்குமா?

           நம் ஆவர்டு பொருளாதார நிபுணர் முன்னாள் நிதி மந்திரி இந்நாள் உள்துறை ம்ந்திரி 60000 ஆயிரம் கோடி ரூபாய் விவசாயக்கடன் தள்ளுபடி அறிவித்தார். இதனால் உண்மையிலேயே சிரமப்படும் விவசாயிகள் பயனடைந்தார்களா என்று உங்களுக்கு தெரிந்தவர்களை கேட்டுப்பாருங்கள். உண்மை தெரிய வரும். இதில் அதிகம் பயனடைந்தவர்கள் விவசாயத்தைக் காட்டி வேறு தொழிலுக்கு கடன் வாங்கியர்கள்தான். கடன் தள்ளுபடி என்றால் திருப்பி கட்டியவன் கட்டாதவன் அனைவருக்கும் அல்லவா வழங்கியிருக்க வேண்டும். கடினப்பட்டு வாயை வயிற்றைக்கட்டி கடனை திருப்பிக் கட்டியவனுக்கு தள்ளுபடியில்லை. திருப்பிக்கட்டாமல் கல்தா கொடுத்தவனுக்குத்தான் தள்ளுபடி. இந்த கடன் தள்ளுபடியால் விவசாயி பயன் அடைந்தானோ இல்லையோ அவர்களுக்கு உண்மையிலேயே உதவியாக இருந்த கூட்டுறவு வங்கிகள்தான் திவால் ஆகிவிட்டன. இப்போதெல்லாம் நாட்டுடமையாக்கப்பட்ட வங்கிகளிடம் விவசாயிகள் கடன் கேட்டு சென்றால் மிகப் பெரிய கும்பிடு போடுகிறார்கள். இவர்களின் பொருளாதார நிபுணத்துவத்தின் லட்சனத்தைப் பார்த்தீர்களா?

         எல்லாம் சரி. மேலை நாட்டில் பொருளாதாரம் படித்து விட்டு நம்மை ஆண்டு கொண்டிருக்கும் இந்த பொருளாதார நிபுணர்களால் நம் விவசாயிகளுக்கு உதவிதான் செய்ய முடியவில்லை. உபத்திரவமாவது கொடுக்காமல் இருந்தால் தலையெழுத்தே என்று சகித்துக் கொள்ளலாம். ஆனால் இவர்கள் அவன் கட்டியிருக்கும் கந்தைக் கோவனத்தையும் அவிழ்க்கப்பார்க்கிறார்கள். அதைத்தான் நம்மால் பொருத்துக்கொள்ளவே முடியவில்லை. பெப்சி கோக் போன்ற அமரிக்க நிறுவனங்கள் மக்களின் உடல் நலத்தை முற்றிலும் கெடுக்கக்கூடிய பானங்களை சொற்ப செலவில் தயாரித்து கொள்ளை லாபத்திற்கு விற்கலாம். 100 ரூபாய்க்கு விற்கப்பட வேண்டிய சிமண்டை சிண்டிகேட் எனும் கூட்டு சேர்ந்து 300 ரூபாய்க்கு விற்று கூட்டுக் கொள்ளையடிக்கலாம். அதையெல்லாம் தட்டிக்கேட்க இந்த அரசுகளுக்கு யோக்கியதையில்லை. இது எல்லாம் நம் பொருளாதார சூரப்புலிகளின் சீழ் பிடித்த காமாலைக் கண்களுக்கு தெரியவே தெரியாது. அப்படியே மக்கள் கத்தி கதறி இவர்களின் செவிட்டு காதில் ஓதினாலும் மேற்படி சிண்டிகேட் கூட்டுக் கொள்ளையர்களிடம் விலையை குறைக்கச் சொல்லி மாறி மாறி கருணை மனு போடுவார்கள். கண்ணுக்கு கண்ணெதிரே நடக்கும் பொருளாதார அட்டூழியங்களை தடுக்க மகாகணம் பொருந்திய இவர்களுக்கு திராணி கிடையாது. ஆனால் நம் விவசாயிகளுக்கோ தான் இரத்த வேர்வை சிந்தி விளைவிக்கும் விவசாய விளைப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் உரிமை கிடையாது. இந்த சீழ் பிடித்து புரயோடிய அரசின் அதிகாரிகளும் இடைத்தரகர்களும்தான் விவசாயப்பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்கிறார்கள். இடையில் இருப்பவர்கள் எல்லாம் கொழுத்து பெருக்க உற்பத்தி செய்த விவசாயிக்கு மிஞ்சியது ஒட்டிய வயிரும் கந்தை கோவணமும்தான். என்னவோ இழவு! இவர்கள் விலையை நிர்ணயம் செய்து தொலையட்டும். அதில் ஒரு நியாயம் இருக்கவேண்டாமா? சென்ற வருடம் 40 ரூபாய்க்கு விற்ற ஒரு லிட்டர் பெட்ரோல் இந்த வருடம் 55 ரூபாய். ஆனால் சென்ற வருடம் ஒரு டன் கரும்புக்கு நிர்ணயிக்கப்பட்ட விலை 1036 ரூபாய். இந்த வருடம் 1050 ரூபாய். உற்பத்தி செலவு பல மடங்கு உயர்ந்துவிட்ட நிலையில் விற்பனை விலை இப்படி இருந்தால் விவசாயி எப்படி தாக்குப் பிடிக்கமுடியும்? மேலை நாடுகளில் பட்டம் பெற்ற நம் பொருளாதார சூரப்புலிகளுக்கு இந்த கணக்கு புரியாதா? கேட்டால் விவசாய இடு பொருட்களுக்கு மானியம் வழங்குவதால்தான் இப்படி என்கிறார்கள். சரி! மானியத்தை நேரடியாக விவசாயிகளுக்கு வழங்கினார்களா? அதுவும் இல்லை. ஆண்டு ஒன்றிற்கு உர மாணியமாக சுமார் 125000 கோடி அரசால் வழங்கப் படுகிறது. ஆனால் இது உரம் உற்பத்தி செய்யும் ஆலைகளுக்குத்தான் நேரடியாக வழங்கப்படுகிறது. அவர்களும் ஒன்றுக்கு இரண்டாக உற்பத்திக் கணக்கைக் காட்டி மாணியத்தை கொள்ளையடித்து விடுகிறார்கள். இப்படி ஏன் தலையை சுற்றி மூக்கை தொடவேண்டும்? நேரடியாக விசாயிகளுக்கு மாணியம் கொடுத்தால் என்ன? வேறு எதற்காக நம் மந்திரி பிரதானிகளின் பொட்டி வாங்கும் வேலையை எளிதாக்கத்தான்.

         பயிர் செய்ய ஆற்றில் நீரோ மழையோ இல்லை. நிலத்தடி நீரை எடுக்க மின்சாரமும் தட்டுப்பாடு. களையெடுக்க உழுதுப்போட ஆட்களும் இல்லை. நவீன இயந்திரங்களை வாங்கி விவசாயம் செய்ய வசதியும் இல்லை. இவற்றை எல்லாம் கடந்து தன் சொந்த உழைப்பில் விளைவித்தாலும் விளைப்பொருட்களுக்கு கட்டுப் படியாகும் விளையும் இல்லை. பார்த்தான் விவசாயி இந்த மண்ணையே நம்பியதால்தானே தனக்கு இந்த நிலைமை என்று தன் பிள்ளைகளை எப்பாடு பட்டாவது படிக்க வைத்து பட்டனத்துக்கு அனுப்பி விட்டான். இன்று இரண்டாம் தலைமுறை விவசாயிகளே நாட்டில் இல்லை. விவசாயத்தில் ஈடு பட்டிருக்கும் இந்த ஒரு தலைமுறையும் போய்விட்டால் அப்புறம் சிறு குறு விவசாயிகளை தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். நிலைமை இப்படியே போனால் பாரம்பரிய விவசாயம் எனும் தொழில் நம் நாட்டிலே இல்லாமலே போய்விடும். இதைப் பற்றியெல்லாம் பட்டனத்தில் வாழும் நம் துரைமார்களுக்கு கவலையில்லை. அரிசி மரத்தில் காய்க்குமா செடியில் விளையுமா என்பது கூட அவர்களுக்கு தெரிவதில்லை. ஏன் என்றால் இன்றுவரை அவர்களுக்கு தேவையானவை பணம் கொடுத்தால் கிடைக்கிறது. அப்படியிருக்கும் போது அது எங்கிருந்து வந்தால் அவர்களுக்கென்ன? அதை விளைவித்தவன் பட்டினியாகக் கிடந்தால் அவர்களுக்கென்ன?

           ஆனால் காலம் இவர்களை இப்படியே அனுபவிக்க விட்டுவிடாது. மனிதன் கற்றுக்கொள்ள விரும்பாத பாடங்களை அதுதான் அவனுக்கு கற்றுக் கொடுக்கும். சிறு வியாபாரிகள் சிறு தொழில்கள் என்று அனைத்தையும் வின்று விழுங்கிய டாடா பிர்லா ரிலையன்சு போன்ற ஆதிக்க சக்திகளும் பன்னாட்டு பன்னாடைகளும் இன்று சிறு குறு விவசாயிகளையும் விழுங்கக் காத்திருக்கின்றன. நாட்டின் முழு விவசாயமும் இவர்களின் கட்டுப்பாட்டுக்கு போகும் ஆபத்து காத்திருக்கிறது. இதை அறியும் பட்டினத்து துரைமார்கள் இன்னும் ஆனந்தப்படக்கூடும். ஏன் என்றால் ரிலையன்சு பிரசு கடையில் பொருட்கள் இன்னும் விலை குறைவாகக் கிடைக்கக்கூடும் என்று. ஆனால் அப்ப்டியெல்லாம் ஆனந்தப்பட விட்டுவிட மாட்டார்கள் நம் முதலாளிகள். அப்படி ஒரு நிலைமை வந்தால் அன்று அவர்கள் வைத்ததுதான் விலை. இன்று விவசாயப் பொருட்களுக்கு விலை நிர்ணயம் செய்யும் அரசு அன்று அவர்கள் போடும் ரொட்டித்துண்டுக்கு வாலாட்டிவிட்டு தேமே என்று போய்விடுவார்கள். ஆகவே நம் சிறு குறு விவசாயிகளை காக்கவேண்டியது நம் அவசரக்கடைமை. மனசாட்சி இருக்கும் அரசியல்வாதிகள் இதற்கு ஏதாவது செய்ய வேண்டும். பொதுமக்களும் இது குறித்து சிந்திக்க வேண்டும். நம் நாட்டுப் பொருளாதார சூரப்புலிகள் ஆக்சுபோர்டிலும் கேம்பிரிட்சிலும் படித்து விட்டு உலகப் பொருளாதார தேக்க நிலையை போக்க வழி சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிலர் வல்லரசு கணவு வேறு கண்டுகொண்டிருக்கிறார்கள். இவர்கள் இந்த படோபங்கள் அனைத்தையும் ஒரமாய் சுருட்டி வைத்துவிட்டு இந்த சிறு குறு விவசாயிகள் அறுகிப்பொவதை தடுத்து நாட்டின் அடுத்த வேளை கஞ்சிக்கு வழி செய்தால் தேவலாம். கூடிய விரைவில் இந்தியர்களுக்கு சந்திரனில் குடியிருக்க அடுக்ககம் கிடைக்கலாம். ஆனால் பூமியில் குடிப்பதற்கு கஞ்சிதான் கிடைக்கப்பொவதில்லை!

- இது ஒரு மீள்பதிவு