எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday 27 November 2009

புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் !

தமிழ் மண்ணுக்கு உயிர் தந்த வேங்கைகளே நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் எதிரிகள் நீங்கள் புதைக்கப்பட்ட தலத்தை அழித்திருக்கலாம் ஆனால் நீங்கள் எங்கள் மனங்களில் பதித்துவிட்ட தடத்தை அழிக்கமுடியாது நீங்கள் செந்நீர் சிந்தி வளப்படத்தியிருக்கிற எங்கள் தேசம் இன்று வரைபடத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனதேசத்தில் இல்லாமல் இல்லை அது உங்கள் கனவு நாங்கள் மெய்ப்படுத்தப்போகும் நனவு! வணங்குகிறோம் இந்நாளில் உங்கள் பாதங்களை! போற்றுகிறோம் உங்கள் ஆத்ம தியாகத்தை! தமிழீழத் தாயகம் அது உலகத் தமிழர்களின் தாகம்! .

Friday 20 November 2009

வணக்கம் தலிவரே!

நேத்து பேப்பர்ல நம்ம தமிழின தலிவரு மவுனமா அழுதுகிட்டே ஒரு அறிக்க கொடுத்திருந்தாரு. அத படிச்சதிலிருந்து நானும் மவுனமா அழுவவேண்டியதா போச்சுங்க. அவர நினைச்சு இல்லீங்க. நம்ம தமிழனோட தலையெழுத்த நினைச்சு. வெளியில தலைய காட்டவே முடியல. கூட்டாளிங்க எல்லா கன்னா பின்னான்னு சவுண்டு வேற வுடரானுவ. அதனால நம்ம தலிவருக்கெல்லம் கொஞ்சம் அடவைஸ் குடுக்கலாமுன்னு இருக்கேன். ஈழப்பிரச்சினைப் பத்தி நம்ம தலிவருங்க இனிமேல வாயத்தொறக்கமா இருக்கறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இவங்கெல்லாம் அதப்பத்தி பேசி இனிமே நடக்கப்போறது ஒன்றும் இல்லை. இவங்க வாய பொத்திகினு இருந்தாலாவது குத்துயிரும் குல உயிருமா இருக்கிறவன் நிம்மதியாக செத்தாவது தொலைவான். இவங்களால டெல்லிக்காரனோட பீச்சாங்கை சுண்டு விரல கூட அசைக்க முடியாதுங்கறதுதான் உண்மை. சும்மா பிராண்டுனா இவங்க மெயின் பீசையே அவன் புடுங்கிடுவான். அதுமட்டுமில்ல டெல்லிக்காரன் பாச்சா எல்லாம் சிங்களன் கிட்ட இனிமே பலிக்காது. அவன் இங்கிஷ்காரனையே பீஸ் கட்டி டெரரிஸ்ட ஒடுக்கறத பத்தி அவங்கிட்ட பாடம் படிச்சிட்டுப் போன்னு சொல்லிகிட்டு இருக்கான். அப்ப நம்ம டர்பண் தலைக்கெல்லாம் என்ன நிலைமைன்னு நீங்களே புரிஞ்சுக்குங்க. அமெரிக்கா காரன் கிட்ட பல்லை இளிச்சிகிட்டு காலம் ஓட்டவேண்டிய நெலம டெல்லிக்காரனுக்கு. அமெரிக்காகாரன் என்னடான்னா சீனாக்காரன் கிட்ட பல்லைக் காட்டிக் காலத்தை ஓட்டிகிட்டி இருக்கான். இனிமே சீனாக்காரன் வைச்சதுதான் சட்டம். பாதி தமிழ்க்காரங்க இந்தியாவுல இருக்கறதால சீனாக்காரனும் நமக்கு ஹெல்ப் பண்ண மாட்டான். அதேப்போல நம்ம தமிழக சனங்களுக்கும் ஈழ்ப்பிரச்சினையில் பெருசா ஒன்னும் இண்டரஸ்ட் இல்லை. இதை நான் சொல்லலீங்க. போன எம்பி எலக்‌ஷன்லயே நாம இத நம்ம ரெண்டு கண்ணாலேயே பாத்துட்டோம். தமிழ் நாட்டுல அரசியல் பன்றதுக்கு ஈழப்பிரச்சினை மாதிரி ரிஸ்க்கான பிரச்சினையெல்லாம் இனிமே தேவையே இல்லை. ஒரு நாலாயிரங் கோடி பணமும் நாலு டெலிவிஷன் சேனல்களும் நாலு இலவச திட்டங்களும் இருந்தாலே போதும். இப்பல்லாம் இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. தம்மாத்தூண்டு ஸ்டேட்டுக்கு ரெண்டு வருசம் சிஎம்மா இருந்தவனுக்கெல்லாம் சொந்தமா கப்பலுங்கரான் ப்ளைட்டுங்கறான். இவ்ளோ பெரிய ஸ்டேட்டுக்கு அஞ்சு முறை சிஎம்மா இருந்தவங்களுக்கெல்லாம் இதெல்லாம் கால் தூசு. அதுமட்டுமில்ல நம்ப ராசா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரே பால்ல ஒரு லட்சம் கோடி ரன்னெல்லாம் அடிக்கத்தெரியும். இதெல்லாம் டெல்லிக்காரனுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அலட்டிக்க வேணாமய்யான்னு தலப்பாட அடிச்சிகிட்டான். ஆனால் நம்ம தலிவருதான் விவரமில்லாமல் உண்ணாவிரதம் வீராவேச உரை அப்படி இப்படி என்று உடம்பை கெடுத்துகிட்டாரு. ஒழுங்காக வேறு வேலைப்பார்த்திருந்தா அந்த பொம்பளைகிட்ட இருந்து இன்னும் இரண்டு தொகுதியையாவது எக்ஸ்ட்ராவா புடுங்கி இருக்கலாம். அனாவசியமா இப்ப பொன்னுக்கு காபினட் போயிடுச்சி. அதனாலதான் சொல்றேன் நம்ம தலிவருங்க எல்லோரும் இந்தப்பிரச்சினைய இனிமே கண்டுக்காம விட்டுட்டா ரொம்ப நல்லது. ஒரு வகையில அந்த மக்களுக்கு நாம செய்யுற பெரிய உதவி இது. அப்படியே ஏதாவது விளம்பரம் வேனுன்னா அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல. ராமேஸ்வரத்துக்கோ கன்னியாகுமரிக்கோ போய் அகதி முகாம்ல ரெண்டு கிலோ இலவச அரிசியும் ஒரு காந்தித்தாதா நோட்டும் குடுத்து தள்ளி நின்னு போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டா போதும். அதுவும் முடியலயா நம்ம எருமாவளவன் மாதிரி தலிவருங்கள கூட்டிப்போய் ராச பக்சேவுக்கு பட்டு வேட்டியும் அவன் பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவையும் போத்தி போட்டோ எடுத்துகிட்டாப் போச்சி. அத வச்சியே நம்ம உடன் பிறப்பு அமெரிக்காவுக்கு விடுதலை பெற்றுந்தந்த ஆபிரகாம் லிங்கனே அப்படீன்னு ஊரு புல்லா போஸ்டர் ஒட்டிடுவான். அப்புறம் என்ன அடுத்த எலக்‌ஷன்லேயும் நீங்கதான் சிஎம் (இருந்தீங்கன்னா). அதை விட்டுட்டு இப்படி மவுனமா அழுவுறேன் சத்தம்போட்டு அழுவுறேன் அப்படீன்னு பீலிங்ஸ் படமெல்லாம் எதுக்கு? அப்புறம் இத்தாலி அம்மாவுக்கு கோபம் வந்திடுச்சின்னா திரும்பவும் தாயே குல தெய்வமே அப்படின்னு இன்னொரு பீலிங்ஸ் படம் காட்டனும். இதெல்லாம் தேவையா? அதே மாதிரி ஒத்துமை அது இதுன்னு நாமெல்லாம் உளரக்கூடாது. நமக்கும் ஒத்துமைக்கும் ஒரு காத தூரம் இருக்கும்போது அடுத்தவங்ககிட்ட இந்த பிலிமெல்லாம் ஓட்டக்கூடாது. காவிரி பிரச்சினையில இருந்து பெரியார் அணை பிரச்சினை வரைக்கும் நம்ம தலிவருங்க காட்டுற ஒத்திமை பத்தி சனங்களுக்கு தெரியாதா? அட ஒரு நல்லவன் சாவுக்காவது தலிவருங்க எல்லாம் ஒன்னு சேந்து போயிருக்கமா? நாமப் போயி ஒத்துமையப் பத்திப் பேசினா அவனவன் வாயாலயா சிரிப்பான்? ஈழத்தில் சகோதர சண்டையை மூட்டி வுட்டதே சூனியக்கார ரா அமைப்புதான் என்று சட்டசபையில் நாமே சொல்லிட்டு இப்போது பழியை இளைச்சவன் மீது போட்டா நம்ம சாயம் வெளுத்தராது? நம்ம வீட்டுச் சகோதர சண்டையில அப்பாவி மக்கள் மூனு பேரை உயிரோடு எரிச்சதயெல்லாம் மறந்துட்டு ஈழத்து சகோதர சண்டையில் செத்தவனுக்கெல்லாம் நீலிக்கண்ணீர் விடப்படாது? அப்புறம் என்னைமாதிரி ஆளுக்கேல்லாம் அது மைண்ட்ல ரி எண்ட்ரி ஆகும். நரிக்கூட்டத்தையும் குரங்கு கூட்டத்தையும் ஒன்னா சேத்துகினு போராடியிருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமாம் தலிவரு சொல்றாரு. என்ன பன்றது இதயம் கணிந்து கண்கள் பனிக்கின்ற டெக்னிக்கெல்லாம் ஈழத்து ஆளுங்களுக்கு தெரியாதே. 2005 –ல தேடிவந்த சனநாயக தீர்வை காலால எட்டி உதச்சிட்டாங்களாம். இதையும் தலிவருதான் சொல்றாரு. நமக்குத்தெரியாம அப்படி என்ன தீர்வு வந்திருக்குமோ தெரியல. ஒருவேலை இவரு குடும்பத்துல தென்மாவட்டங்களையும் வடமாவட்டங்களையும் டிப்பார்ண்ட்மெண்ட கண்ட்ரோல்களையும் பிரிச்சிகிட்ட மாதிரி பிரபா குடும்பத்துக்கு வடக்கு மாகானத்தையும் கருணா குடும்பத்துக்கு கிழக்கு மாகானத்தையும் பிரிச்சிக்கோங்க அப்படின்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ ? ஆனா நம்ம ஆளுக்குத்தான் விவரம் பத்தாது. நமக்கிருக்கிறது ஒரே பொண்டாட்டி மூனே புள்ளைங்க நமக்கெதுக்கு இதெல்லாம் அப்படீன்னு அருமையான வாய்ப்பை எட்டி உதைச்சிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். புடிச்சிருந்தாருண்ணா ஆசியா பணக்காரங்க லிஸ்ட்டுல ஒரு பத்து பதினைஞ்சிலேயாவது வந்திருக்கலாம். கருணாவப் பாருங்க நம்ம தலிவரையே மிஞ்சி ஒரு நாட்டுக்கு ஒரு பொண்டாடின்னு காலத்தை ஜாலியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. போன ஒரு உயிருக்காக இன்னும் ஊள விடறாரு நம்ம தலிவரு. ஆனா முப்பதாயிரம் நாப்பாதயிரம்னு உயிர்விட்ட ஓலம் மட்டும் தலிவரு காதுல விழவே இல்லயே அது ஏன்னு தெரியல. இந்த நொண்டி சாக்கை சொல்லியே எத்தனை நாள் காலம் தள்ளுவாரோ தெரியல. அந்த சம்பவத்தில் தலிவருக்கு கூட பங்கு இருப்பதாய் இவங்க கூட்டாளிகளே போஸ்டர் கூட ஒட்டினாங்க. ஒரு அம்மாக்கூட ஜெயிலுக்கெல்லாம் போயி கண்ணீர்விட்டு துப்பறிஞ்சுது. ஆனா அதெல்லாம் இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல. அதுவும் போக அந்த ஒரு சாவுக்குப்பின்னாடி ஓராயிரம் கேள்வி இருந்துச்சாம். பல நாட்டு உளவு அமைப்புகள் இருந்ததா கூட பேசிகிட்டாங்க? அதுகெல்லாம் விடைக்கண்டுபிடிச்சிட்டாங்களான்னு தெரியல. ஒரு வேளை பதில் வெளியில் சொல்லும்படி இல்லையோ என்னவோ? ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே இவங்க குடுமபத்துக்குத்தான் பட்டா போட்டு கொடுத்தாச்சுன்னு கேள்விப்பட்டேன். அப்புறம் வேறெதுக்கு இன்னும் இப்படி மவுனமா அழுவுறாருன்னு தெரியல. பதினெட்டு கிலோ மீட்டர் தூரத்தில சனங்க தலையில குண்டப் போட்டப்பவே அந்த சத்தம் நம்ம காதுல விழலையே? இவரு மவுனமாக அழுவுறது மட்டும் நமக்கு எப்படிங்க கேக்கும்? வயசான காலத்துல எதுக்கு இதெல்லாம். உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுங்க. இறுதிகட்ட போர்ல சண்டப்போட்டு செத்துப்போன பெண் புலிங்க உடல கற்பழிச்சி வெறியை தீர்த்துக்கிட்டானுங்களாம் சிங்களவனுங்க. அந்த அனிமல்சுக்கும் குத்துயிரும் குலயுருமா கிடக்கிற சனங்களோட பிரச்சினைகள பார்க்காம அதிலயும் நுன்னரசியல் பண்ணி இன்னும் லாபம் தேடுற உங்க தலிவருங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசமுன்னு கேக்குறான் நம்ம கூட்டாளி. என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு. அது சரி அதெல்லாம் விடுங்க. நம்ம கலா அக்கா மானையும் மயிலையும் வச்சி கெமிஸ்ட்ரி பாடம் நடத்துறாங்களாம் அத போய் பார்ப்போம் முதல்ல. .

Friday 13 November 2009

இசைக்கு உண்டா எல்லைக்கோடு?

கல்லூரியில் படிக்கும்போது என்று நினைக்கிறேன். ஒரு விடுமுறை நாளில் என் நண்பனை பார்க்க சென்னையில் இருந்து பெரம்பலூர் சென்றேன். அப்பொழுதெல்லாம் பாடல்கள் கேட்பது புத்தகங்கள் படிப்பது இதெல்லாம் மற்றவர்கள் வீட்டில்தான். அப்போது நமக்கு அந்த அளவுக்கு வசதி வாய்ப்பெல்லாம் இல்லை. நண்பன் சற்று வசதியான வீட்டில் பிறந்தவன். அதனால் அவனுக்கென்று தனியாக டேப் ரெகார்டர் எல்லாம் வைத்திருப்பான. ஆனால் ஒரெ ஒரு பிரச்சினை. நண்பன் கான்வெண்ட்டில் படித்தவன். அதனால் எப்போதும் மேற்கத்திய இசை தொகுப்புகள்தான் அவனிடம் அதிகம் இருக்கும். அதனால வேறு வழியின்றி நானும் அதையே கேட்பேன். அவற்றில் எனக்குத் தெரிந்த ஒரே இசைத்தொகுப்பு மைக்கேல் ஜாக்சனுடையதுதான். நண்பனும் ஜாக்சன் பாடல்களையே அதிகம் கேட்பான் (எல்லாம் ஒரு மாயை). ஆனால் வார்த்தைகள் புரியாததால் எல்லாம் எனக்கு கூச்சல் மாதிரியே தெரியும். பல நேரங்களில் ஜாக்சனின் தாளகதி நம்மை ஆடவைக்கும் ஆனால் வார்த்தைகள் புரியாது. ஒரு நாள் நண்பன் அவன் தந்தை வாங்கி வைத்திருந்த ஆங்கில இசைத்தொகுப்பு ஒன்றை ஓட விட்டான். அந்த பாடல்கள் நம்முடைய பழைய திரைப்பட பாடல்களில் மேற்கத்திய இசை சார்ந்த பாடல்கள் போலிருந்தன். என்னவோ தெரியவில்லை அந்த தொகுப்பில் இருந்த அத்தனை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் வார்த்தைகள் எனக்கு ஓரளவுக்கு புரிகிற மாதிரி இருந்ததுதான். அந்த பாடல்களை பாடியிருந்தவருடைய குரலும் மிகவும் வசீகரமாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் இருந்தது. நம்ம இளையராசாவின் தென்பாண்டிச் சீமை பாடலைப்போல. அதன் பிறகு எனக்கு அந்த பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு வரவில்லை. வாழ்க்கையின் ஓட்டம் அவற்றையெல்லாம் தேடிப்போய் கேட்கும் அளவிற்கு நமக்கு அவகாசம் தரவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராசா இசையமைத்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பாடலகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் வரும் ஒரு பாட்டிற்கு பின்னனி இசையாக ஒரு மேற்கத்திய இசைக்கோவையை இசைஞானி பயன் படுத்தி இருப்பார். ரம்பம்பம் பாடல் என்று நினைக்கிறேன். அதைக் கேட்டவுடன் இதை நாம் எங்கோ கேட்டிருக்கிறோமே என்று எனக்கு பொறி தட்டியது. மீண்டும் ஒருமுறை கேட்டபோது அது நண்பன் வீட்டில் கேட்ட எனக்குப்பிடித்த அந்த இசைத்தொகுப்பின் பாடலில் வரும் பின்னிசையை ஒத்திருப்பதை உணர முடிந்தது. மீண்டும் அந்த இசை தொகுப்பை கேட்கவேண்டும் ஆவல் மிகுந்தது. நண்பனை அழைத்து அந்த தொகுப்பு அவனிடம் இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன். அதெல்லாம் பெருசுங்க கேக்கிறது என்கிட்ட இப்ப இல்லை என்று சொல்லிவிட்டான். அது முதல் இன்று வரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அந்த இசைத்தொகுப்பை தேடுவேன். பாடியவர் பெயர் நாடு இசைத்தொகுப்பின் பெயர் இது எதுவும் தெரியாததால் அந்த பாடல்கள் எனக்குக் கிடைக்காமலேயே இருந்தது. அமெரிக்க கருப்பின நண்பர் ஒருவரை சந்திக்கும் போது கூட இது பற்றிக்கேட்டேன். ஹம் பண்ணியாவது காட்டச்சொன்னார். நானும் ஆர்வமாய் ஹம் பண்ணிக் காட்டினேன். ஆனால் மூன்றாம் பிறை கமல் போலாகிவிட்டது என் நிலைமை. இந்நிலையில் நேற்று ஓய்வான நேரத்தில் மீண்டும் இளையாராசாவின் அந்த பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்த முறை எப்படியாவது கண்டுபிடித்தே தீருவது என்ற் முடிவில் கூகிளாண்டவரின் உதவியை நாடினேன். என் நினைவில் நின்ற “ஏஞ்சலீனா” ஒரே ஒரு வார்த்தையை வைத்து அதைப்பாடியவரின் பெயரைக்கண்டு பிடித்தேன். ஆனால் பாடல்களை தரவிறக்க முடியவில்லை. அதன் பிறகு பாடகரின் பெயரை வைத்து யூடியூப்பில் மேய்ந்தபோது ஒரு வழியாக எல்லாப் பாடல்களையும் கண்டு பிடித்து விட்டேன் - பதினைந்து வருடங்கள் கழித்து. விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கண்டுபிடித்தப் சில பாடல்களை கீழே உங்களுக்கும் தந்துள்ளேன் கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அதற்கு முன் அந்த பாடல்களைப் படைத்த அந்த படைப்பாளியை குறித்து சில வார்த்தைகள்……. இந்தப் பாடல்களைப்பாடியவர் ஹாரி பிளபாண்டே என்ற அமெரிக்க கறுப்பின பாடகர். இவர் ஒரு பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் சமூக ஆர்வலர். அமெரிக்காவில் நிற வெறிக்கு எதிராக குரல் கொடுத்த கலைஞர்களில் முக்கியமானவர். இன்றும் அமெரிக்காவின் ஆதிக்க வெறியினை எதிர்ப்பவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஈராக படையெடுப்பை மும்முரமாக எதிர்த்தவர். இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகளுக்கும் புஷ்ஷுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று வாதிட்டவர். 82 வயதாகும் இவர் இப்போது இசைப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவரது பாடலகள் பெரும்பாலும் நாட்டுப்புற இசை வகையை சார்ந்தவை. உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் புழங்கும் பாடல்களை அடிப்படையாக கொண்டவை. (இப்போது புரிந்திருக்குமே அவரது பாடலகள் ஏன் எனக்கு பிடித்தது என்று) இந்த பாடல்களை கேட்கும்போது பல பழைய தமிழ் திரைப்பட பாடல்களும் சந்திரபாபு பாடல்களும் நினைவில் வந்து செல்லும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துக்கொள்கிறேன். .

Friday 6 November 2009

இந்தோனேசியாவில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்களை காப்பாற்றக்க்கோரி அமைச்சர் மு.க. அழகிரியிடம் மனு!

மனுவை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்
இலங்கையின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் தப்பி வந்த சுமார் 300 தமிழர்கள் இந்தோனேசிய கடல் எல்லையில் சென்ற மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியை நீங்கள் அறிந்திருக்க கூடும். பல மாதங்கள் காடுகளிலும் கடலிலும் உயிரை பயணம் வைத்து அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியா கடல் எல்லையை தாண்டும் முன் அவர்கள் இந்தோனேசியா கப்பற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்களான அவர்கள் தங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு அரசியல் தஞ்சம் அளிக்கவேண்டும் என்று கோரினர். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் வழங்க அவுஸ்திரசு மறுத்தவிட்டது. அவர்களை தடுத்து வைத்துள்ள இந்தோனேசிய அரசும் அவர்களுக்கு தஞ்சம் வழங்க மறுத்துவிட்டது. ஐ.நா அமைப்புகளும் அவர்களை கைவிட்டு விட்டன. இந்த நிலையில் அந்த 266 பேரும் படகிலேயே கடந்த சில வாரகாலமாக காத்திருக்கின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென இந்தோனேசிய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களை திருப்பி அனுப்பினால் அவர்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கவலை உலகத்தமிழர்களை ஆட்கொண்டுள்ளது. பல தமிழ் அமைப்புகளும் அவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசு தஞ்சம் அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. தாம் வாழும் நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இத்தகைய நிலை இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களின் மனங்களையும் பாதிக்கத்தவறவில்லை. ஆனால் பிழைப்புக்காக புலம்பெயர்ந்துள்ள நாட்டில் எந்த வித சட்ட உரிமைகளும் இல்லாத நிலையில் அவர்கள் கையை மட்டுமே பிசைய முடிந்தது. இந்நிலையில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க. அழகிரி அவர்கள் இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று வந்திருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்தோனேசியா வாழ் தமிழர்கள் அவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை அளித்தனர். இந்த பிரச்சினை குறித்த விவரங்களை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டபின் அவரும் தன்னால் இயன்றவரை உதவுவதாக உறுதி அளித்துள்ளார். இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்தியா எந்த அளவுக்கு தலையிட முடியும் என்ற கேள்வி இருந்த போதும், இந்தோனேசியாவும், அவுஸ்திரேலியாவும் கைவிட்டு விட்ட நமது சொந்தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல் தமிழகத்துக்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு தமிழக அரசு தாமாகவே முன்வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக உள்ளது. தமிழக அரசு நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நம்புகிறோம். பிழைக்க வந்த இடத்தில் இடைவிடாத வேலைப்பலுவின் இடையிலும் வார வேலை நாளான நேற்று பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து அமைச்சரை சந்தித்து சக தமிழனுக்காக குரல் கொடுத்த நமது சொந்தங்களை மனதார பாராட்டுகிறோம். தமிழன் என்ற உணர்வை நாடு கடந்து வந்தும் உயிர்ப்பித்து வைத்திருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நேரில் வந்தும், நேரில் வராமல் இந்த நிகழ்விற்கான முன்னெடுப்பை செய்தும் உதவிய பின்வரும் நமது சொந்தங்களை நாம் பாராட்ட கடைமைப்பட்டுள்ளோம். திரு. கமல கிருஷ்ணன், சகார்த்தா திரு. சந்திரசேகரன், சகார்த்தா திரு. மாணிக்கம், போகூர் திரு. ஆன்டோனியோ டியோபில், போகூர் திரு. யாசிர் முகம்மது, போகூர் திரு. அருண், சுகபூமி திரு. திருநாவுக்கரசு, சகார்த்தா திரு. பத்மநாபன், போகூர் திரு. பாலசுப்ரமணியன், பாண்டுங் திரு. ஜெகதீசன் , பாண்டுங் திரு. மகேஸ்வரன் , பாண்டுங் திரு. பிரபு , பாண்டுங் திரு. ரமேஷ் , பாண்டுங் திரு. சுரேஷ் , பாண்டுங் திரு. பத்மநாபன் , பாண்டுங் திருமதி. விஜய காந்தி, சகார்த்தா .

Tuesday 27 October 2009

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! (ஒரு மீள் பதிவு)

கீழே உள்ள பதிவு பிப்ரவரி மாதத்தில் எழுதியது. ஆயிற்று 8 மாதங்கள். ஆனால் நம் சொந்தங்களின் நிலை மாறியதா? இன்றும் செத்துப்போன நம் சொந்தங்களின் புதைகுழியின் மேல் நின்று தமது கேவலமான அரசியலை நடத்திக்கொண்டிருகிறார்கள் நம் தமிழக கோமாளிகள். இரத்தக்காட்டேரிகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். பஞ்சமா பாதகனுக்கு பட்டாடை போர்த்தி அழகு பார்க்கிறார்கள் கோமாளி குஞ்சுகள். தமிழனின் இத்தகைய கேவலமான் இந்நிலைக்கு யார் காரணம். இந்நிலை என்று மாறும்?????
000000000000000000000000000000000000000000000000000000000000
அன்புத்தமிழ் நெஞ்சங்களே! நம்முடைய சொந்த தொப்புள் கொடி உறவுகள் ஒரு சில மைல் தூரத்தில் தினம் தினம் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். நமது சொந்த இனம் பூண்டோடு சிரீலங்கா அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ அந்த நாட்டுக்கு இறையாண்மையுள்ள நாடு என்ற பட்டத்தை அனுதினம் வழங்கி பெருமை படுத்திக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் அங்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை அறியாமல் சிரீலங்கா அரசுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அரசியல் செய்ய பல களங்கள் இருந்தும் கொஞ்சம் கூட பிரஞ்ஞையே இல்லாமல் தினம் செத்து மடிந்துகொண்டிருக்கிற நமது சொந்தங்களின் பிரேதங்களின் மீது அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதுபோல் ஒருமாயயை உருவாக்குகிறார்கள். இதோ நம் ஈழ சகோதரனின் கூக்குரலை இந்த பாட்டில் கேளுங்கள். தான் வாழ்வை இழந்து நின்றபோதும் தான் வளர்த்த குருவியின் நாயின் மீது அவர்களுக்கு இருக்கும் வாஞ்சை கூட இந்த சகோதர சகோதரிகளின் மேல் நமக்கு இல்லையே! ஐயகோ பேய் மனது படைத்தோரே நீர் மனதிறங்க மாட்டீரோ! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! வெடிவிழுந்து எரிந்த பனை கரை உடைந்து காயந்த குடம் கூரை சரிந்த எமது இல்லம் குருதி வடிந்த சிறு முற்றம் இரவை கிழித்த பெண்ணின் கதறல் ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே புதைய சம்மதமா? தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ! ஊஞ்சலாடிய முயலை நீந்திப்பழகிய வாவி எல்லை என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ முற்றம் தெளித்திட விடியல் வருமோ! யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழம் - நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது. நன்றிகள் : மக்கள் தொலைக்காட்சிக்கும் - பாடலை உணர்ச்சி பெருக்கோடு பாடிய கலைஞர்களுக்கும். .

Monday 26 October 2009

காடோ காடோ 02.09

அண்மைக் காலங்களில் இந்தோனேசிய ஊடகங்களில் அதுவம் மின்னனு ஊடகங்ளில் இரு பெண்களின் பெயர்கள் மிக பரபரப்பாக பேசப்பட்டன. அதுவும் வலைப்பக்கங்களில் இவர்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் விவாதிக்கப்பட்டன. அந்த செய்தி நாயகிகளில் ஒருவர் பிரித்தா முல்யாசாரி. இரு குழந்தைகளுக்குத் தாயான இவர் சகார்த்தாவின் புறநகர் பகுதியான தங்கரங்கில் வசிக்கிறார். இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்தான் இவரை இந்த அளவுக்கு பிரபலமாக(??!!) ஆக்கியது. பிரச்சனையிலும் மாட்டிவிட்டது! சிலமாதங்களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட டெங்கு காச்சலுக்கு சிகிச்சை பெற இங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றிற்குக்கு பிரித்தா சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் இவருக்கு அளிக்கப்பட்ட சேவை மிகவும் மோசமாக இருந்துள்ளது. பிரித்தா இதனால் கடும் அதிருப்தியும் மன உளைச்சலும் அடைந்துள்ளார். மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் தான் அங்கு நடத்தப்பட்ட விதம் குறித்து அவரால் மறக்க முடியவில்லை. ஆனால் அதை அப்படியே விட்டுவிட அவருக்கு மனம் வரவில்லை. தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த மருத்துவமனையில் தனக்கு ஏற்ப்பட்ட மோசமான அனுபவங்களை விவரித்து ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதை தான் உறுப்பினராக உள்ள ஒரு வலைக்குழுமம் மூலமாக அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பினார். அவரது ஆதங்கத்தில் உள்ள நியாத்தை உணர்ந்த உறுப்பினர்கள் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பியுள்ளனர். இதனால் பிரித்தாவின் மின்னஞ்சல் இந்தோனேசியா முழுவதும் பரவியது. இது குறித்த செய்திகள் பல பத்திரிக்கைகளிலும் வெளியாயின. பதிவர்கள் பலரும் இது குறித்து பல இடுகைகள் எழுதினர். இதனால் அந்த மருத்துவமனையின் பெயர் மக்கள் மத்தியில் மிக மோசமாகியது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்து பிரித்தா மீது மான நட்ட வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவருக்கு ஆறு வருட சிறை தண்டனையும் நட்ட ஈடாக ஒரு லட்சம் அமரிக்க டாலர்களும் விதித்து தீர்பளித்தது. இதைக்கண்ட பொதுமக்களும், பெண்கள் அமைப்பினர்களும் மின்னனு ஊடகத்தை சேர்ந்தவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர். நீதிமன்ற முடிவை எதிர்த்து மின்னனு ஊடகங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அவருக்கென்று தனி அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் கிட்டத்தட்ட முப்பது லட்சம் பேர் பிரித்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த அரசு அவரது சிறைத்தண்டனை வீட்டுக்காவலாக மாற்றும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. மேலும் அவருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க காரணமான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர்கள் செயல் பாடுகள் குறித்த கேளிவிகளும் பல சட்ட வல்லுனர்களால் எழுப்பட்டது. இதனால் சட்டத்துறையும் காவல்துறையும் ஒன்றையொன்று பரஸ்பரம் சந்திக்கு வந்து குற்றம்சாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட பிரித்தாவின் விடயம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய குடியரசு தலைவரின் முக்கிய போட்டியாளராக விளங்கிய முன்னாள் குடியரசு தலைவர் மேகாவதி கூட பிரித்தாவை வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். இவ்வளவுக்கு பிறகும் பிரித்தா தற்போதும் வீட்டுக்காவலில்தான் உள்ளார். விரைவில் அவர் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் பிரித்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தரப்பு நியாத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையிலும் இந்தோனேசிய வலைப்பதிவர் கூட்டமைப்பு ஒரு ஏற்பாட்டை செய்தது. ஆண்டுதோறும் நடைபெறும் “பெஸ்தா பிளாக்கர்” எனும் தேசிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பிரித்தாவை சிறப்பு பேச்சாளாராக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தது. அதன்படி கடந்த அக்டோபர் 24 ந்தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரித்தா கலந்து கொண்டார். தொடக்கம் முதல் தனக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்ப்பதில் வலைப்பதிவர்கள் முன்னிலை வகித்ததை அவர் தனது உரையில் குறிப்பிட்டார். வலைப்பதிவுகள் பொழுது போக்கு என்ற இலக்கினைத் தாண்டி சமூக அக்கறையுடனும் செயல்பட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
000000000000000000000000000000000000000000000000000000000
பிரித்தாவுக்கு அடுத்த படியாக இந்தோனேசிய ஊடகங்களில் அண்மைக்காலங்களில் அதிகம் அடிபடும் பெயர் மரியா கோசோவா சுருக்கமாக ”மியாபி”. சப்பானில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான விளம்பர அழகி இவர். மியாபி இந்த அளவுக்கு பிரபலமாகக் காரணம் அவர் நடித்துள்ள ஆபாச படங்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள மேக்சிமா பிச்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மியாபியை வைத்து ஒரு முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டது. இந்தோனேசிய வாலிபர் ஒருவர் மியாவி மீது மய்யல் கொண்டு அவரை இந்தோனேசியாவுக்கு கடத்தி வருவதையும் அதைத் தொடர்ந்து அவர்கள் இடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் நகைச்சுவையாக சொல்லும் படமாம் இது. இந்த படத்தின் பட பிடிப்புக்காக மியாபி சென்ற மாதம் இந்தோனேசியா வர இருந்தார். ஆனால் அவரது வருகையை எதிர்த்து சில அமைப்பினர் சகார்த்தாவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபாச படங்களில் நடித்த ஒருவர் இந்தோனேசியா வருவது இந்தோனேசிய மக்களின் ஒழுக்கத்தைப் பாதிக்கும் என்று வாதிட்டனர். அரசுக்கும் இது தொடர்பாக கடும் நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அரசு மியாபியின் புகல் உரிமைச் சீட்டை நிறுத்திவைத்தது. அரசின் இந்த முடிவு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்பினர் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளதைக் காரணமாக காட்டி அவர் இந்தோனேசியா வருவதை தடை செய்வது மனித உரிமை மீறல் என்று பலர் வாதிட்டனர். வழக்கம்போல் மின்னனு ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் மியாபி பிரச்சினை கண்ணாபிண்ணா என்று விவாதிக்கப்பட்டது. ஊடகத்துறை அமைச்சரே தலையிட்டு விளக்கம் தர வேண்டிய அளவுக்கு இந்த விடயம் போனது. விளைவு???? ஜப்பான் இளசுகளிடம் பிரபலமான “மியாபி” இப்போது இந்தோனேசியா இளசுகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் நடித்த ஆபாசப்படங்கள் இந்தோனேசியாவில் பெரிய அளவுக்கு விற்பனையாகின்றனவாம். தொலைபேசி செய்தால் போதும் நேரில் பட்டுவாடா என்ற அளவுக்கு இணையத்தில் கூவி கூவி விற்கிறார்கள். தொலைபேசியில் மியாவி படம், கணணித்திரையில் மியாபி படம் நோட்டுப்புத்தகங்களில் மியாபி படம் என்று எங்கு நோக்கினும் இளசுகள் மத்தியில் மியாபி நீக்கமற நிறைந்துவிட்டார். அவரை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் இதைத்தான் எதிர்ப்பார்த்தார்களா என்பது புரியவில்லை. சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுப்பது என்பது இப்படித்தானோ?
0000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசியாவின் கிழக்கு சாவா மாகாணத்தில் உள்ளது உங்காரன் என்னும் நகரம். இங்குள்ள ஒரு மத நிறுவனத்தின் தலைவர் புஜியோ சாயோ விடியாந்தோ சுருக்கமாக சேக் புஜி. நாற்பத்தி மூன்று வயதான புஜி பெரும்பணக்காரர். அவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவர் மூன்றாவதாக பனிரெண்டு வயது சிறுமி ஒருவரை அண்மையில் மணமுடித்துள்ளார். இது குறித்து செய்திகள் வெளியானதும் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அவர் மீது காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் காப்புரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கும் தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் இவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வாதாடிய புஜி தரப்பினர் இசுலாம் மதச்சட்டப்படி இத்திருமணம் செல்லும் என்றும் இதில் எந்த தவறும் இல்லையென்றும் வாதிடினர். ஆனால் இது நடப்பில் உள்ள குழந்தைகள் காப்புரிமை சட்டத்தின்படி தவறு என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் புஜி மீதான வழக்கு சரியான முறையில் தொடுக்கப்படவில்லை என்று கூறி புஜியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பார்த்த பல பொதுமக்களும் ஊடகங்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அரசு தரப்பும் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. பல பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்றத்தில் இருந்த புஜியின் இரு மனைவிகளும் ஆனந்தகண்ணீர் (????!!!!) விட்டது குறிப்பிடத்தக்கது. மியாபியின் வருகையை எதிர்த்த அமைப்பினர் புஜிக்கு ஆதரவான இந்த நீதி மன்ற தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவிலும் சரி இந்தோனேசியாவிலும் சரி நீதி மன்றங்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவது வாடிக்கையாகி வருகிறது. கைப்புன்னுக்கு கண்ணாடி வேண்டுமா? நீதிமன்றங்கள்தான் பதில் சொல்லவேண்டும். .

Monday 19 October 2009

காடோ காடோ!

நான் பார்த்து கேட்டு படித்து அறிந்து கொண்ட உள்ளூர் (இந்தோனேசிய) செய்திகளை ஒரு கலவையாக “காடோ காடோ” என்ற தலைப்பில் வாராவாரம் தரலாம் என்று இருக்கிறேன். காடோ காடோ என்பது இந்தோனேசியாவில் பிரபலமான் சைவ உணவு. கீரை, பல வகை காய்கறிகள், முளைகட்டிய பச்சை பயறு, தெம்பே ( சோயா), டோபு இவற்றையெல்லாம் மிதமாக வேகவைத்து நிலக்கடலை சாந்து சேர்த்து கலவையாக செய்யப்படும் ஒருவகை பக்க உணவு இது. ஏகப்பட்ட வேலைகளை ஒன்றாக எடுத்து போட்டுக்கொண்டு பேய் சொதப்பு சொதப்புவர்களிடம் ”என்ன காடோ காடோ பண்ணீட்டீங்களா?” என்று கேலியாக கேட்பது இங்குள்ளவர்களின் வழக்கம் (இந்த இடுகையை படித்துவிட்டு தயவு செய்து என்னை இப்படி கேட்டுவிடாதீர்கள்). இனி இந்த வார காடோ காடோ!
000000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசிய அரசு இந்த வருடம் முதல் அக்டோபர் 2ம் தேதியை “பத்திக்” நாளாக கொண்டாட முடிவு செய்திருக்கிறது. இதில் என்ன விசேடம் என்கிறீர்களா? இந்த அறிவிப்பை விடவும் இந்த அறிவிப்புக்குப் பின்னால இருக்கும் நுண்ணரசியல் சற்று சுவரசியமானது. இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் எல்லை பிரச்ச்னையில் ஆரம்பித்த குமிடிப்பிடி சண்டை இப்போது மற்ற தளங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்மைக் காலமாக இந்தோனேசியாவின் பாரம்பரிய கலைவடிவங்களை ஒன்றன்பின் ஒன்றாக மலேசியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தோனேசியாவில் மிகப்பிரபலமான “நாசி கோரங்” (பிரைடு ரைசு) என்னும் உணவுப்பொருளுக்கான காப்புரிமையை மலேசியா பெற்றுவிட்டது. இது இந்தோனேசிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ”பத்திக்” தொழிற்நுட்பத்தையும் மலேசியா சொந்தம் கொண்டாட இரு நாட்டுக்கும் இடையேயான உரசல் உச்சத்தை அடைந்தது. பத்திக்” என்பது மெழுகையும் சாயத்தையும் கொண்டு கைகளால் துணிகளில் அழகிய அச்சு வார்ப்புகளை உருவாக்கும் ஒரு கலை சார்ந்த தொழிற்நுட்பம். இந்தியாவில் கூட இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அழகிய வண்ணத்துணிகளை சென்னையிலும் ஈரோட்டிலும் தயாரிக்கிறார்கள். மலேசியா மற்றும் சிங்கப்பூர் விமான நிறுவனப் பணிப்பெண்கள் கூட இந்த வகை துணிகளால் செய்த சீருடைகளை அணிந்திருப்பதை காணலாம். அந்த அளவுக்கு இந்த பத்திக் வடிவமைப்புகள் இங்கு மிகவும் பிரசித்தம். நல்ல வேளையாக அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் இக்கலையை இந்தோனேசியாவின் பாராம்பரிய சொத்தாக யுனசுகோ அறிவித்துள்ளது. இது இந்தோனேசியாவின் கலை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையொட்டி பத்திக் எங்களுடையது என்று உலகக்கு பறைசாற்றும் விதமாகவும் “பத்திக்” துணிகளை பிரபல படுத்தும் விதமாகவும் இந்தோனேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அன்று ஒருநாள் இந்தோனேசியர்கள் அனைவரும் பத்திக்கினால் ஆன உடைகளையே அணிய வேண்டும் என்று இந்நாட்டின் குடியரசு தலைவரே விசெடமாக கேட்டுக்கொண்டிருந்ததால் மக்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். அன்று எங்கு நோக்கினும் பத்திக் மயமாக இருந்தது. உள்ளதை காப்பாத்திக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்க!
00000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசியர்கள் பொதுவாகவே அன்பானவர்கள். அவர்கள் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு (வயத்துக்கு கஞ்சி ஊத்தரவங்க மேல மரியாதை இல்லாமல் இருந்தா எப்படி??!!). ஆனால் போன வாரம் பிபிசியில் பார்த்த செய்தி ஒன்று என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அண்மையில் இங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்ப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலநடுக்கத்தால் இங்குள்ள படாங் என்ற பகுதி மிகுந்த சேதத்துக்கு உள்ளானது. பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளிலும் மண் சரிவிலும் உயிருடன் சிக்கிக்கொண்டார்கள். இப்பகுதி தலைநகர் சகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் வெளியில் இருந்து மீட்புக்குழுவினர் இப்பகுதியை அடைவதற்கு சற்று தாமதம் ஆனது. அதுவரையில் அங்கு உள்ளூரில் உள்ளவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட முசுலீம் அல்லாத சீன வம்சாவளியினருக்கு உதவ மறுத்துவிட்டார்களாம். அதையும் மீறி உதவ வேண்டுமெனில் முதலில் பணம் தர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்பகுதியில் முசுலீம் அல்லாத சீன வம்சாவளியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வசிக்கிறார்கள். சிறுபான்மையினராக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நிலையில் பல பெரிய வணிக நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இதனால் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பெரும்பான்மை மக்களுக்கு இவர்கள் மேல் ஒருவித காழ்ப்புணர்ச்சி நிலைவி உள்ளது. இது இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது. மனித இனம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை!
0000000000000000000000000000000000000000000000000
நாளை அக்டோபர் 20ம் தேதி இந்தோனேசியாவின் குடியரசு தலைவராக மீண்டும் பதவி ஏற்கிறார் திரு சுசிலோ பம்பாங் யுதயானோ சுருக்கமாக எஸ்.பி.ஒய். இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 60% மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார். இந்தோனேசியாவில் இரட்டை தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாகவும், குடியரசு தலைவர் தனியாகவும் நேரடியாக மக்களால் தெர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் எஸ்.பி.ஒய்யின் குடியரசுக்கட்சி 13% இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதனால் எஸ்.பி.ஒய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் அவர்களின் மிகத்தெளிவாக முடிவை தேர்தலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது தமது பகுதிகளில் சிறப்பான பணி புரிந்தவர்கள் யார் என்பதை பார்த்தும் அதே வேளை குடியரசுத்தலைவர் என்று வரும்போது யார் அதற்கு பொருத்தமானவர் என்பதைப்பார்த்தும் வாக்களித்துள்ளது பாராட்டத்தக்கது. முன்னாள் ரானுவ தளபதியான எஸ்.பி.ஒய் சற்று மென்மையான அனுகுமுறை கொண்டவர். அதே சமயம் நாட்டு வளர்ச்சிக்காக பல உறுதியான நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். ஊழலில் கொடிகட்டிப்பறந்த இந்தோனேசியாவில் அதற்கு முதலில் கடிவாளம் போட்டவர் எஸ்.பி.ஒய் ஆவார். ஊழல் முழுமையாக அகற்றப்படாவிட்டாலும் அதற்காக முதல் அடியை எடுத்துவைத்ததற்கு அவரை பாராட்டலாம். அண்மையில் இவர் கொண்டுவந்த பாலுணர்வு காட்சிகளை வெளியிடும் ஊடகங்களுக் எதிரான சட்டம் (ஆண்டி போர்னோ) பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியது, ஆனால் இறுதிவரை உறுதியாக இருந்து அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார். அதேபோல தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் மிக உறுதியான நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார். நீண்ட நாளாக தேடப்பட்டு வந்த பயங்கர தீவிரவாதி அண்மையில் சுட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவன்தான் பாலியிலும் சகார்த்தாவிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி. இன்றைய அரசியல் உலகில் தென்கிழக்காசியாவில் அதிகம் கவணிக்கப்படும் தலைவராக எஸ்.பி.ஒய் விளங்குகிறார். அண்மையில் நடைபெற்ற சி20 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இவர் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் இன்னொரு சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது முறை அறியணை ஏறும் எஸ்.பி.ஒய்யை வாழ்த்துவோம்! .

Saturday 10 October 2009

சேவை என்பது என்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வார்த்தைகளை அவற்றின் உண்மையான பொருளோடுதான் நாம் பயன்படுத்துகிறோமா என்ற ஐயம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. அதுவும் “சேவை” என்ற வார்த்தையை நம்முடைய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துவதை கானும் போது பல நேரங்களில் நமக்கு எரிச்சல்தான் வரும். குறிப்பாக நமது வங்கிகளுக்கு செல்லும் போது அவர்களின் சேவையை பார்த்து எனக்கு அந்த வார்த்தையின் உண்மையான பொருள் மீதே சந்தேகம் வந்துவிடும். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதில் ஆரம்பித்து வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்வரை நாம் சந்திக்கும் வங்கி பணியாளர்களின் உடல் மொழிகளும் வாய் மொழிகளும் நாம் அவர்களுக்கு வாடிக்கையாளரா அல்லது எதிரியா என்ற ஐயத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் அரசு வங்கிகள் என்றால் நிலைமை இன்னும் மோசம். வாசலில் காந்திமகானின் வாடிக்கையாளர் குறித்த பொன்மொழிகளை மட்டும் பெரியதாக பலைகையில் எழுதி வைப்பதோடு சரி. அந்த வார்த்தைகளை அங்கு உள்ள ஒரு பணியாளராவது அதன் உண்மையான பொருள்பட படித்திருப்பாரா என்பது சந்தேகமே. வங்கிக்கு செல்வது என்பது படித்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. அவர்களும் பழக்கம் இல்லாதாவர்களாக இருந்தால் கட்டாயம் சிரமப்பட வேண்டி இருக்கும். எதற்கு எடுத்தாலும் சிடுசிடுக்கும் பணியாளர்கள் ஆள் இருந்தாலும் சந்தித்து பேசவே முடியாத மேலாளர்கள் என்று எல்லோரும் ஏதோ வேற்றுகிரகத்துவாசிகள் போல் நடந்து கொள்வார்கள். எந்த படிவம் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது அதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதே பெரிய வேலையாக இருக்கும். “விசாரணைகள்” என்று இருக்கும் கவுண்டர்களில் எப்போது பணியாட்கள் இருப்பதில்லை. படிவங்களை நிரப்பும்போது ஏதும் தவறுகள் செய்துவிட்டால் அவ்வளவுதான் அவர்கள் படும் எரிச்சலுக்கு அளவிருக்காது. தாராளமயமாக்கல் தனியார்மயம் என்று வங்கித்துறை மாறினாலும் அவைகள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை. இவற்றையெல்லாம் பார்த்து எனக்கு வங்கிகளுக்கு போவதென்றாலே ஒவ்வாமை வந்துவிடும். நான் இந்தோனேசியா வந்த புதிதில் எனது பயன்பாட்டுக்காக இங்குள்ள வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருந்தது. மொழி தெரிந்த நம் ஊரிலேயே ஒரு வங்கி கணக்கு ஆரம்பிப்பது என்பது எத்தனை சிரமம் என்பது எனக்குத் தெரியும். மொழி தெரியாத இந்த ஊரில் எப்படி ஆரம்பிப்பது என்று அந்த வேலையை தள்ளிப்போட்டுகொண்டே வந்தேன். ஆனால் வேறு வழியின்றி இறுதியாக ஒருநாள் தேவையான ஆவணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் வங்கிக்கு சென்றேன். வாசலிலேயே பாதுகாவலர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் உள்ளே செல்ல எத்தனிக்க அவர் “வணக்கம் ஐயா. நான் உங்களுக்கு உதவலாமா” என்றார் அவரது மொழியில். எனக்கு புரிந்தாலும் பதில் சொல்லத்தெரியவில்லை. ”புதிதாக கணக்கு ஆரம்பிக்க வேண்டும்” என்றேன் ஆங்கிலத்தில். நான் சொன்னது அவருக்கு புரியவில்லை. நாங்கள் இருவரும் விழிப்பதை கண்ட அங்கிருந்த ஒரு அலுவலர் உடனடியாக எங்களிடம் வந்தார். அவரும் “வணக்கம் ஐயா. நான் உங்களுக்கு உதவலாமா” என்றார். நான் சொன்னேன். அவர் என்னை அங்கிருந்த ஒரு இயந்திரத்திடம் அழைத்து சென்றார். அது நமக்கான வரிசை எண்ணை அச்சிடும் இயந்திரம். அதில் ஒரு பொத்தானை அழுத்தினார். ஒரு சீட்டில் எனக்கான வரிசை எண் அச்சடித்து வந்தது. அதை எடுத்து எண் கையில் கொடுத்தார். என்னை அழைத்து சென்று வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் முன்னுள்ள வரிசையான இருக்கையில் அமரவைத்தார். உங்கள் எண் அழைக்கப்படும்போது செல்லுங்கள் என்றார். நான் மிக்க நன்றி என்றேன். அவர் புன்னகையுடன் முன்பக்கமாக் சிறிது குனிந்து அவரது வலது கையை மார்பில் வைத்து “நன்றி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார். நான் அங்கு நடப்பவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். ஒரு வயதான அம்மாள் தளர்வான நடையுடன் வந்தார். அவரிடமும் அந்த பாதுகாவலர் “ வணக்கம் அம்மா. நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார். அவர் தனக்கு வேண்டியதை சொல்ல அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு படிவங்கள் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றார். அவருக்கு தேவையான படிவத்தை எடுத்து கொடுத்து அதை நிரப்புவதற்காக போடப்பட்ட மேசை அருகில் அவரை நிறுத்திவிட்டு மீண்டும் வாசலுக்கு சென்றுவிட்டார். அவரும் அங்கிருக்கும் பேனாவால் அதை நிரப்பி எடுத்துக்கொண்டு காசாளர் முன் இருக்கும் வரிசையில் நின்றார். ஆனால் அவரால் தொடர்ந்து நிற்க முடியாமல் சிரமப்பட்டார். இதை கவணித்த ஒரு பணியாளர் விரைவாக அவரிடம் சென்று “வணக்கம் அம்மா. நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார். அவர் சொன்னவுடன் அவரை தனியாக அழைத்துக்கொண்டு அதே வரிசையில் முதலில் இருந்தவரிடம் “ வணக்கம் ஐயா. அம்மாவால் வரிசையில் நிற்க முடியவில்லை. அவரை உங்களுக்கு முன் செல்ல அனுமதிக்க முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்கவும்” என்று கேட்டார். அவரும் சம்மதிக்கவே அவரை நேரடியாக காசாளர் முன் நிறுத்திவிட்டு சென்றார். காசாளர் இருக்கையில் இருந்து எழுந்து” வணக்கம் அம்மா ! நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார் புன்னகையுடன். அம்மா படிவத்தை அவரிடம் கொடுத்தார். அதில் பல இடங்களை அந்த அம்மா நிரப்பாமல் இருந்தார்கள். அதைக்கண்ட அந்த காசாளர் அந்த விவரங்களை அம்மாவிடமே பொறுமையாக கேட்டு நிரப்பினார். அதன் பிறகு அதற்கான பணத்தை எடுத்துகொடுத்தார். வேலை முடிந்தவுடன் அந்த அம்மாள் கிளம்ப எத்தனித்த போது மீண்டும் அந்த காசாளர் “ நன்றி அம்மா. நான் வேறு உதவிகள் ஏதாவது செய்யவேண்டுமா?” என்றார். அதற்கு அந்த அம்மாள் “ நன்றியம்மா! போதும்மா” என்று சொல்லி கிளம்பினார். அவர் சிரமப்பட்டு நடந்து வருவதை பார்த்த அதே பாதுகாவலர் அவரிடம் வந்து அவரது கையை பிடித்து சென்று வெளியில் விட்டார். அதோடு நிற்கவில்லை. “நன்றியம்மா! மீண்டும் வாருங்கள்” என்று வேறு சொல்லிவிட்டு வந்து வாசலில் நின்று கொண்டார். அதற்குள் எனது வரிசை எண் அங்கிருந்த மின்னனு பலகையில் மின்னியது. நான் எழுந்து முதல் வாடிக்கையாளர் சேவை முகவரிடம் சென்றேன். நான் சென்றவுடன் அவர் எழுந்து கைகளை கூப்பியவாறு அதே “ வணக்கம் ஐயா ! நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு நான் வந்த வேலைப்பற்றி ஆங்கிலத்தில் சொன்னேன். அவருக்கு புரிந்தது ஆனால் மேற்கொண்டு என்னுடன் ஆங்கிலத்தில் கதைக்க அவரால் முடியவில்லை. நான் ஊருக்கு புதியவன் என்பதை புரிந்துகொண்ட அவர் சிரித்துக்கொண்டே “ மன்னிக்கவும். சிறிது நேரம் காத்திருக்க முடியுமா?” என்றார். நான் தலையாட்டினேன். அவர் உள்ளே சென்று அவரது மேற்பார்வையாளரை அழைத்து வந்தார். அவர் வந்து முன்னவருடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். அமர்ந்தவர் “ வணக்கம் ஐயா! உங்கள் புது கணக்கை ஆரம்பிக்க நான் உதவட்டுமா” என்றார் ஆங்கிலத்தில். நான் சரி என்றேன். அவர் அங்கிருந்த விண்ணப்பம் ஒன்றை எடுத்தார். அது அவர்கள் மொழியில் இருந்தது. ஒவ்வொரு விவரத்தையும் விரைவாக அதே சமயம் கொஞ்சம் கூட முக சுளிப்பு இல்லாமல் கேட்டு பூர்த்தி செய்துகொண்டார். அதில் எனக்கு தெரிய வேண்டிய விவரங்களை விளக்கினார். என்னை வேண்டிய இடங்களில் கையெழுத்திட சொன்னார். ஆவணங்களை கேட்டு பெற்றுக்கொண்டார். சடசடவென்று கண்ணியில் தட்டினார். ஒரு புது வங்கி புத்தகத்தை எடுத்தார். அங்கிருந்த அதற்கான அச்சேர்த்தியில் விவரங்களை அச்சடித்து எடுத்தார். என்னிடம் கொடுத்தார். அவ்வளவுதான் ஐந்தே நிமிடங்கள்தான் வேலை முடிந்தது. மீண்டும் எழுந்தார் கைகூப்பினார் “நன்றி ஐயா! உங்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படுகிறதா?” என்றார். நான்” இல்லை. நன்றி” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். அந்த பாதுகாவலர் என்னிடமும் “நன்றி ஐயா! மீண்டும் வாருங்கள்” என்றார். எனக்கு வியப்பு தாளவில்லை. அவர்கள் என்னை நடத்திய விதம் நான் ஏதோ ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்று வந்ததைப்போல இருந்தது. இத்தனைக்கும் அது ஒன்றும் மிகப்பெரிய கிளை இல்லை. அங்கு மொத்தம் பத்து ஊழியர்களே இருப்பார்கள். இந்த மாதிரியான வரவேற்பு ஒரு வெளிநாட்டுக்காரன் என்பதால் எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. அங்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர் ஏழை பணக்காரர் படித்தவர் படிக்காதவர் என எந்த வேறுபாடும் இன்றி இதே மாதிரியான வரவேற்பும் சேவையும் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல விவரம் தெரியாதவர்களாக இருந்தால் அவர்களுக்குத்தான் கூடுதல் கவனம் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை நமக்கு வணக்கம் சொல்லும் போதும் அதில் ஊழியர்கள் காட்டும் ஈடுபாடும் கண்ணியமும் அந்த வங்கி மீது எனக்கு இருந்த மரியாதையை பன்மடங்கு அதிகரித்து. ஏதோ சம்பிரதாயத்துக்காக அவர்கள் இந்த வார்த்தைகளை சொல்வதில்லை. அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கான உண்மை பொருளை அவர்கள் கண்களில் காணலாம். வாடிக்கையாளர் சேவை என்ற பதத்தின் உண்மையான பொருளை நான் இங்குதான் கண்டுகொண்டேன். இவ்வகையான் நடைமுறை வங்களில் மட்டுமன்றி வண்டிகள் நிறுத்துக் கட்டணம் வசூலிக்குமிடம் முதற்க் கொண்டு மருத்துவமனைகள் வரை எல்லா பொது இடங்களிலும் கடைபிடிக்கப் படுகிறது. எங்கு சென்றாலும் புன்னகையோடும் மரியாதையோடும் நடந்து கொள்கிறார்கள். காவல் துறையினர் கூட மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். பொது இடங்களில் ஒரு தடவை கூட காவலர்கள் லத்தியை சுழற்றியோ அநாகரீக வார்த்தைகளை பிரயோகித்தோ நான் பார்த்ததே இல்லை. நாகரீகத்தின் தொட்டில் என்று பெருமையாக சொல்லிக்க்கொள்கின்ற நமது நாட்டில் வாடிக்கையாளர்களை நாகரீகமாக நடத்தும் நிலை வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?!!! இந்த நாட்டு மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைப்பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம். ------------------------------------------------------------------------------------ உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும். .

Saturday 3 October 2009

ஆறு அது ஆழமில்லஅது! சேரும் கடலும் ஆழமில்ல!

சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடிக்க கடினப்பட்டு கண்களை திறந்தான் பீட்டர். இரவு உள்ளே போன அந்நிய அரக்கன் இன்னும் இறங்கவில்லை போலும், தலை வின்னென்று வலித்தது. நான்சி என்ன சொல்லப்போகிறாளோ என்ற கவலை வேறு தலைவலியை கூட்டியது. ”இதெல்லாம் மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கனும்” மனசாட்சி சொன்னது. சரி நடக்கிறது நடக்கட்டும் என்று நினைத்தவாறு சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறை சுத்தமாய் இருந்தது. மேசையை பார்த்தான். இரவு உடுத்தியிருந்த உடைகள் துவைக்கப்பட்டு இஸ்திரி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகள். ஒரு டம்ளரில் தண்ணீர். ஒன்றும் புரியாதவனாய் முதலில் தலைவலியாவது போகட்டும் என்று மாத்திரைகளை எடுக்கப்போனான். பக்கத்திலேயே ஒரு காகிதத்தில் சிறு குறிப்பு இருந்தது. பதறிப்போய் அதை எடுத்தான். படிக்க படிக்க கண்கள் விரிந்தன. “ ஹனி! வீட்டுக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது. அதனால் காலையிலே ஷாப்பிங் போகிறேன். டைனிங் டேபிளில் டிபன் வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கவும். சீக்கிரம் வந்துவிடுவேன். இப்படிக்கு நான்சி” அதிர்ச்சியானவனாய் தன்னை கிள்ளி பார்க்கிறான். ஆமாம் நிஜம்தான். இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்று ஐயப்பட்டவாறே எழுந்து அறையை விட்டு வெளியே வருகிறான். வீடு பளிச்சென்று இருக்கிறது. சாப்பாட்டு மேசையில் இருக்கும் பாத்திரத்தை திறந்து பார்க்கிறான். உள்ளே சுடச்சுட இட்லி. பக்கத்தில் சாம்பாரும் கட்டி சட்னி வேறு. ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம். அந்தப் பக்கம் சோபாவில் சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பார்த்துக்கொண்டிருக்கிறான் ஜான். பீட்டரின் ஒரே மகன். இவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான். சங்கடப்பட்டவனாய் “ஜான் என்ன நடக்குது இங்க? ஒன்னுமே புரிய மாட்டேங்குது. நேத்திக்கு நைட் என்ன ஆச்சு?” என்றான் பீட்டர் ஒன்றும் தெரியாதவன்போல். “நேத்தைக்கு நீங்க தண்ணி அடிச்சிட்டு நைட்டு மூனு மணிக்குதான் வீட்டுக்கு வந்தீங்க, வந்த வேகத்தில் நாளஞ்சு தட்ட வேற ஒடச்சீங்க. நிதானம் தெரியாம கதவுல முட்டி அப்படியே விழுந்துட்டீங்க. பாவம் அம்மாதான் எல்லாத்தையும் கிளின் பண்ணாங்க. உங்களையும் கஷ்டப்பட்டு கட்டிலில் தூக்கிப்போய் போட்டாங்க” என்றான் ஜான் கோபமாய். ”ஐயையோ அப்படியா?” என்றவன் அதெல்லாம் சரி இந்த கூத்துக்கு நான்சி என்னை ஒரு மாசத்துக்கு பட்டினி இல்ல போட்டிருப்பா? அதெப்படி சூடா இட்லி கட்டி சட்னி இதெல்லாம்? குழம்பியவாறே மெதுவாய் குளியல் அறைக்கு சென்றான். நேற்று இரவு நான்சி இவனது சட்டையை கழட்ட முயன்றபோது ”அய்யோ என்னை தனியா விடுங்கம்மா. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!” என்று திரும்ப திரும்ப உளறியது பீட்டருக்கு தெரிந்திருக்க நியாமில்லை. ”ஆறு அது ஆழமில்ல….. அது சேரும் கடலும் ஆழமில்ல… ஆழம் இது ஐயா ………………………………… இசையருவியில் பாடிக்கொண்டிருந்தார் இளையராஜா.
------------------------------------------------------------------
டிஸ்கி : இது நம்ப சொந்த சரக்கு இல்லை. மின்னஞ்சலில் நண்பர் கமல கிருஷ்ணன் ஆங்கிலத்தில் அனுப்பியதை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன் சிறிய மாறுதல்களோடு. நன்றி அவருக்கு! .

Wednesday 30 September 2009

வரம் கொடு தேவதையே ! தொடர்பதிவு !

எல்லா வரமும் ஒன்றாய்!
ஒரு கோடை விடுமுறை நாளில் அம்மாவும் நானும் பரணையில் வெகுநாட்களாக தூங்கிக்கொண்டிருந்த நோட்டு புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் சுத்தம் செய்யலாம் என்று களத்தில் இறங்கினோம். அம்மா ஒரு துண்டு சீட்டைக்கூட விடமாட்டார்கள். எதையும் தூக்கித் தூரப்போட அம்மாவுக்கு மனசு வராது. அப்படியே சேர்த்து சேர்த்து அன்று வரை முழு பரணையும் வெறும் காகித மேடாக நிறைந்து கிடந்தது. எதையும் அப்படியே தூக்கி போடாது ஒவ்வொன்றையும் படித்துக் காட்டிய பிறகே அம்மா தூக்கிப்போட சம்மதித்தார்கள். அதுவும் அரைகுறை மனதோடு. அப்போது 1976 ஆம் ஆண்டு நாட்குறிப்பு ஒன்று கையில் கிடைத்து. அது என் பெரிய அக்காவுடையது. முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் சீவக சிந்தாமணி என்று எதை எதையோ எழுதியிருந்தது. இடையிடையே ஒன்று இரண்டு மூன்று என்று பட்டியலிட்டு எனது மற்ற அக்காக்கள் பெயருக்கு கீழே ஏதோ எழுதியிருந்தது. ஆர்வம் மேலிட மேலே படித்தேன். அது அவர்களுக்கான அன்றாட வேலைகள். அந்த வருடங்களில் அப்பாவுக்கு சுகமில்லாமல் போனதால் அடிக்கடி வைத்தியம் பார்க்க அம்மா அவரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு போய்விடுவார்களாம். அப்போதெல்லாம் எங்கள் பெரிய அக்காதான் எங்கள் ஐவரையும் பார்த்துகொள்ளுமாம் ஒரு வகுப்பு தலைவி மாதிரி. ஒவ்வொரு நாளும் யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்குறிப்பில் எழுதிவைக்கும். அதன்படிதான் எல்லோரும் நடக்கவேண்டுமாம். எல்லா அக்காவுக்கும் ஒவ்வொருநாளும் வேறு வேறு வேலைகள் எழுதியிருந்தது. ஆனால் ஒரு அக்காவுக்கு மட்டும் தினமும் ஒரே வேலை எழுதியிருந்தது இவ்வாறு.
”5. அம்பிகா – தம்பியை அழுவாமல் பார்த்துக்கொள்வது”
ஆம். அம்பிகா எனக்கு முன் பிறந்த சகோதரி. அம்பிகா அக்காவுக்கு என் மீது கொள்ளைப்பாசம். அதனால்தான் அதற்கு தினமும் என்னை பார்த்துக்கொள்ளும் வேலை. எனக்கும் அம்பிகா அக்காவைத்தான் ரொம்ப பிடிக்கும். என்ன செஞ்சாலும் திட்டாது. பள்ளியில் ஒரு சின்ன சாகலெட் கிடைத்தாலும் தம்பிக்காக எடுத்து வந்துவிடும். என் எல்லா அக்காக்களை விட அம்பிகா அக்கா தான் ரொம்ப அழகு. எங்கள் எல்லோரையும் விட சிவப்பு வேறு. நடிகை அம்பிகா போலவே லட்சணமாய் இருக்கும். இடது கன்னத்தில் மூக்குக்கு அருகில் பெரிய மச்சம் அழகாய் இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை ரெண்டுபேரும் ஒரே பள்ளிதான். அக்கா எப்போதும் என்னை பொத்தி பொத்தி பள்ளிக்கு கூட்டிப்போகும். ஒரே தம்பியாச்சே! அம்பிகா அக்காதான் எங்கள் வீட்டு சரோஜ்நாரயண்சாமி. ஒவ்வொரு நாளும் இரவில் அன்றைய செய்தி தாள்களை அக்காவை சத்தம்போட்டு வாசிக்கச்சொல்லி கேட்பது அப்பாவின் வழக்கம். எங்கள் வீட்டில் அப்பாவிடம் வக்கீல் மாதிரி ”லா பாயிண்ட்” பேசும் தைரியம் அம்பிகா அக்காவுக்கு மட்டுமே உண்டு. அம்பிகா அக்கா எப்போதுமே நேர்த்தியாக உடை உடுத்தும். எப்போதுமே சிரித்துக்கொண்டே வளையவரும். நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே நானும் அக்காவும் ஒன்றாய் போனால் பார்ப்பவர்கள் என்ன உன் அண்ணனா? என்பார்கள். அதனால் அதற்குப்பிறகு அக்கா போடுவதையெல்லாம் நிறுத்திவிட்டேன். வெறும் அம்பிகாதான். ஒரு வழியாக எல்லா அக்காவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கடைசி அம்பிகாதான். அதற்கும் நல்ல இடத்தில் பார்த்து முடித்து வைத்தார்கள். அதன் கல்யாணத்திற்கு பிறகு நான் வேலைக் காரணமாக கோவைக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அதனால் திருமணத்திற்கு பிறகு அம்பிகா அக்காவை நான் அதிகம் பார்க்க வாய்த்ததில்லை. திடீரென்று ஒரு நாள் அம்மா சொன்னார்கள் அம்பிகா குழந்தை பெற்றிருப்பதாய். ஆண் குழந்தை. எங்கள் வீட்டில் எல்லா அக்காவுக்கும் பெண் பிள்ளைகள்தான். இவள்தான் இறுதியாய் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். அம்பிகா அக்காவும் சந்தோசமாய் இருந்தாள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை பிரசவித்து மூன்று மாதங்கள் ஆகியும் அக்காவால் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. ஏதோ ஒரு நோய் அவளை உள்ளிருந்து படுத்திக்கொண்டிருந்தது. கேள்விப்பட்டு ஓடி வந்தேன். சென்னையில் எம் எம் சிக்கும் விஜயா மருத்துவமனைக்கும் அப்பலோ மருத்துவமனைக்குமாய் தூக்கிக்கொண்டு அலைந்தேன். யாராலேயும் அவளுக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோதோ வாயில் நுழைய முடியாத பெயரையெல்லாம் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதம் எங்களால் இயன்றவரை செலவு செய்து போராடினோம். கடவுளுக்கு எங்களுக்குமான போராட்டத்தில் இறுதியில் அம்பிகா அக்கா கடவுள் பக்கம் சாய்ந்துவிட்டாள். நான் முதன்முதலில் வாழ்க்கையில் வலி துக்கம் வெறுப்பு அவநம்பிக்கை இவை அனைத்தையும் ஒரு சேர உணர்ந்தது அப்போதுதான். இதோ ஓடிற்று பனிரெண்டு வருடங்கள். அம்மா அடிக்கடி கேட்பார்கள் ”எங்கே தம்பி அம்பிகா படம்? பெரிதாக்க சொன்னேனே?” என்று. ”உம் பார்க்கிறேன்” என்று சொல்வேனே தவிர இதுவரை செய்ததில்லை. அந்த அழகிய முகத்தை புகைப்படத்தில் மட்டும் பார்க்க எனக்கு மனவலிமை இல்லை. இதோ பா.ரா அனுப்பிய தேவதை என் வீட்டு வாசலில்! நான் கேட்க போகும் ஒரே வரம் ”எங்கள் வீட்டு தேவதையை திருப்பித்தா” என்றுதான்!
------------------------------------------------------------------------------------
இந்த தொடர்பதிவுக்கு அழைத்த அண்ணன்பா.ரா அவர்களுக்கு நன்றி! நான் தேவதைகளை அனுப்புவது மதிபாலா ,"[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]" , யாசவி ,சுப்பு - இவர்கள் வீட்டு வாசலுக்கு! .

Monday 28 September 2009

கல்லிலே கலைவண்ணம் கண்டான்!(இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 3)

பெருமாள் சன்னதி கோபுரம்
இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் மூன்றாம் பாகம். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1 , பகுதி 2 பெரம்பனான் கோயிலானது அது கட்டப்பட்ட போது பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டதால் தற்போது சில சதுர கிலோமீட்டர் அளவுக்கே எஞ்சியுள்ளது. இக்கோவிலின் சிறப்புகளாக முக்கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சிவன் சன்னதியில் சிவ பெருமானுக்கு மனித உருவில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் சொல்லாம்.
வெளிச்சுற்று கோவில்கள்
இந்த கோயில் மொத்தம் மூன்று பிரகாரங்கள் அல்லது அடுக்குகள் கொண்டது. முதல் பிரகாரம் மடப்பள்ளிகள், வேத பாடசாலைகள், ஞானிகள் தங்குமிடம் மற்றும் கோவில் நிர்வாகப்பகுதிகள் என பரந்து விரிந்திருந்தது. ஆனால் தற்போது முதல் பிரகாரம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களே எஞ்சியுள்ளன. இரண்டாம் பிரகாரம் மொத்தம் 246 கோவில்கள் கொண்டதாக இருந்தது. இதில் பெரும்பகுதி அழிந்து ஒரு சில கோயில்கள் மற்றுமே தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஒரு கோணம்
எனக்கு பிடித்த கோணத்தில்
மூன்றாவது பிரகாரமானது கோயிலின் மையப் பகுதியாகும். இந்தப்பகுதியில்தான் நாம் இப்போது பார்க்கும் எட்டு கோவில்கள் அமைந்துள்ளன். இந்த பகுதியின் மையமாக சிவன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவன் சன்னதியின் வடது திசையில் பெருமாள் சன்னதியும் தெற்குத் திசையில் பிரம்மாவின் சன்னதியும் அமைந்துள்ளது. இச்சன்னதிகளில் இம்மூவருக்கும் அழகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மூவர்களின் சன்னதிகளின் வாயில்களை நோக்கியபடி இவர்களின் வாகனங்களுக்கான கோவில்கள் அமைந்துள்ளன. சிவன் சன்னதிக்கு முன் அவரது வாகனமான நந்திக்கும், பெருமாள் சன்னதிக்கு முன் கருடனுக்கும் பிரம்மனின் சன்னதிக்கு முன் அன்னத்திற்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவரான சிவன் சன்னதியை ஒட்டி வலது புறம் அகத்திய மாமுனிக்கும் இடது புறம் மகிசாசுரமர்த்தினிக்கும் பின்புறம் வினாயகருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகிசாசுரமர்த்தினிதான் முன்பாகத்தில் நாம் சொன்ன “லோரோ ஜோங்கரங்” என்று அழைக்கப்படுகிறார். நாங்கள் இக்கோவிலுக்கு சென்றபோது சிவன் சன்னதியும் பிரம்மன் சன்னதியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த்து ஏமாற்றத்தை தந்தது. பல சன்னதிகளை தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்தது. கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தாலும் சன்னதிகளில் வழிபாடுகள் ஏதும் நடத்தப்படுவதாக தெரியவில்லை. சன்னதியில் உள்ள சிலைகளை நோக்கும் போது அதில் எண்ணை பூச்சு இருந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை.
வெளிச்சுவர் சிற்பங்கள்
மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றில் பஞ்ச பூதங்களுக்கும் ஒன்பது நட்சத்திரங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதியின் வெளிப்புற சுவர்களில் இராமாயண காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சன்னதியின் சுவர்களில் கிருட்டின அவதாரத்தின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சிவனுக்காக அற்பணிக்கப்பட்ட கோவிலில் சிவபெருமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் செதுக்கப்படாதது வியப்பை அளிக்கிறது, இக்கோவிலை அரசும் மக்களும் பராமரிக்கும் விதம் பாரட்டத் தக்கது. நமது நாட்டில் செய்வது போல் இங்கு யாரும் தங்கள் தெய்வீக காதலை சுவற்றில் கிறுக்கியோ செதுக்கியோ சுவற்றை நாறடிப்பதில்லை. கண்ட இடத்தில் வாய்க்கழிவுகளை துப்பி வைப்பதில்லை. நாமெல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
லோரோ ஜோங்கரங் (மகிசாசுரமர்த்தினி) மற்றும் வினாயகர் சிலைகள்
ஒருபுறம் இக்கோவிலின் பிரமாண்டமும் கலை நுனுக்கங்களும் நமக்கு வியப்பை அளிக்கிறது. மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதமான இந்த கோவில் சீரழிந்துவிட்டபோதும் அதை மீண்டும் மறுசீரமைப்பு செய்து நம்முன் நிறுத்தியுள்ள மனித உழைப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. இதைப் பார்த்தாவது நமது இந்திய மாநில அரசுகளும் மக்களும் அழியும் நிலையில் உள்ள நமது பல அரிய கோவில்களையும் புராதன சின்னங்களையும் காக்க முன்வரவேண்டும். இக்கோவிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது இங்கே குறிப்படத்தக்கது.
------இத்துடன் இத்தொடர் முற்றுபெறுகிறது -------

Friday 18 September 2009

அழகான ராட்சசியே! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 2)

இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1
மின்னொளியின் பின்புலத்துடன் பெரம்பனான்
முன்னொரு காலத்தில் இந்தோனேசியாவின் மத்திய சாவா தீவு பகுதியில் இரண்டு இந்து அரசுகள் இருந்தன. அதில் ஒன்று வளமான ”பெங்கிங்” என்னும் பேரரசு. இன்னொன்று பெங்கிங் பேரரசை ஒட்டிய ”கரத்தான் போக்கோ” எனும் பெயருடைய அரசு. பெங்கிங் பேரரசை தாமர் மாயோ எனும் அரசன் ஆண்டு வந்தான். இவன் மிகுந்த புத்திக்கூர்மையுடன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்தான். இவனது அரசில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இவனுக்கு ராடன் பாண்டுங் போண்டோவோசோ எனும் மகன் இருந்தான். அவனும் தந்தையை போலவே வீரமும் அறிவும் நிறைந்தவனாக மட்டுமல்லாமல் யோக கலைகளிலும் சிறந்து விளங்கினான். அவன் தான் கற்ற யோக கலையினால் தவம் பல இயற்றி பல வரங்களை பெற்றிருந்தான். அடுத்த அரசான கரத்தான் பொக்கோவை பிரபு போக்கோ என்ற அரக்கன் ஆண்டுவந்தான். அவன் ஆனவத்தின் முழு உருவாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். ஆனால் அவனுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள்தான் நம் கதையின் நாயகி இளவரசி லோரோ ஜொங்கரங். அழகின் மொத்த உருவமாக கான்போரை மயங்க வைக்கும் படியான உடல் வனப்புடன் மெல்லிய இடையுடன் அவள் இருந்தாள். அரக்கனின் மகள் என்றாலும் இவள் நல்ல குணம் கொண்டவளாகவும் அதே நேரம் தந்தையின் மீது அளவற்ற பாசம் கொண்டவளாகவும் இருந்தாள். பிரபு போக்கோவும் தன் மகள் மீது அதே அளவு பாசம் கொண்டிருந்தான். அரக்கனாயினும் அவனும் ஒரு தந்தைதானே. பிரபு போக்கோ அரசனுக்கு பதி கொப்போலோ எனும் மந்திரி இருந்தான். அவன் அலோசனையுடந்தான் பிரபு போக்கோ எதையும் செய்வான்.
இளவரசி லோரோ ஜோங்கரங்கை சித்தரிக்கும் காட்சி
பிரபு போக்கோவுக்கு தனது பக்கத்து பேரரசான பெங்கிங் மீது எப்போதுமே ஒரு கண்ணுண்டு. அந்த பேரரசை எப்படியாவது தனது ஆளுகைக்கு கீழ் கொண்டுவரமென்று அவன் ஆசைப்பட்டான். அதற்காக தனது மந்திரி பதியுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கான உணவையும் மக்களிடம் இருந்து மிரட்டி பெற்று தயார் செய்தான். அதன் பிறகு சரியான நேரம் பார்த்து பெங்கிங் பேரரசை பெரும் படையுடன் சென்று தாக்கினான். மிகப்பெரிய பேரரசாயினும் பிரபு போக்கோவின் திட்டமிட்ட தாக்குதலால் பெங்கிங் பேரரசின் படை வீரர்கள் நிலை குலைந்து போயினர். பிரபு போக்கோ மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தான். பெங்கிங் மக்கள் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மக்களை காப்பாற்ற தனது அருமை மகன் இளவரசன் பாண்டுங்கை போரில் இறக்கினான் அரசன் தாமர் மாயோ. போர்க்கலையில் வல்லவனான பாண்டுங் தனது முழு பலத்தையும் திரட்டி பிரபு போக்கோவுடன் மோதினான். போர் பல காலம் நீண்டது இறுதியில் தான் தவ வலிமையினால் பெற்ற அஸ்திரங்களை கொண்டு பிரபு போக்கோவை வீழ்த்திக்கொன்றான் இளவரசன் பாண்டுங். பிரபு போக்கோவின் மந்திரி பதி குப்போலோ போர்க்களத்தை விடு தப்பி ஓடினான். ஆனால் இளவரசன் பாண்டுங் அவனை விடாமல் துரத்திக்கொண்டு கரத்தான் பொக்கோவுக்கு வந்தான். தப்பியோடிய பதி போக்கோ நேராக இளவரசி லோரோ ஜோங்கரங்கிடம் வந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றையும் அவளது தந்தை பெங்கிங் இளவரசன் பாண்டுங்கால் கொல்லப்பட்ட சேதியையும் சொன்னான். தன் தந்தை இறந்த செய்தி கேட்ட இளவரசி துடிதுடித்து போகிறாள். அரன்மனையில் இருந்தவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்கின்றனர். அந்த நேரம் பார்த்து மந்திரி பதி கொப்போலோவை துரத்திக்கொண்டு வந்த இளவரசன் பாண்டுங் அவளின் அரன்மனைக்கு வருகிறான். வந்தவன் அங்கிருந்த இளவரசி லோரோ ஜோங்கிரங்கை கண்டு அவள் அழகில் சொக்கிப்போகிறான். தான் பல் பெண்களை சந்திதிருந்தாலும் இவளின் அழகு அவனை அவள் மீது காதல் கொள்ளச்செய்கிறது. அவள் யாரென்று பக்கத்தில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அவள் தன்னால் கொல்லப்பட்ட அரசன் பிரபு போக்கோவின் மகள் என்று அறிந்து கொள்கிறான். அவள் தந்தையை கொன்றதற்கு பிராயச்சித்தமாக தான் அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அவனுடைய விருப்பத்தை அவளிடத்தில் தெரிவிக்கிறான். இளவரசிக்கோ தன் தந்தையை கொன்ற ஒருவனை தன் மணாளனாக ஏற்றுக்கொள்ள மனமில்லை. ஆனால் அந்தக்கால நியதிப்படி தோற்றுப்போன மன்னர்களின் அனைத்து சொத்துக்களும் வெற்றிபெற்ற மன்னருக்கே சொந்தமாகும். அதன்படி பார்த்தால் இவள் இளவரசி ஏற்கனவே இளவரசன் பாண்டுங்க்குக்கு சொந்தமானவள் ஆகிறாள். அதனால் நேரடியாக மறுக்க முடியாத நிலையில் அவனது விருப்பத்துக்கு எப்படியவது தடை போடவேண்டும் என்று சிந்திக்கிறாள். இறுதியில் இளவரசன் பாண்டுங்கை திருமணம் செய்து கொள்ள இரண்டு நிபந்தனைகளை அவன் முன் வைக்கிறாள். அவை இரண்டையும் அவன் நிறைவேற்றினால் அவனை திருமணம் செய்துகொள்ள தான் சம்மதிப்பதாக ஒப்புக்கொடுக்கிறாள். அவற்றில் ஒன்று அவன் ஒரு உலகிலே இதுவரை இல்லாத ஆழமுள்ள பாதாள கிணறு ஒன்றை அமைக்க வேண்டும். மற்றொன்று ஒரே இரவில் ஆயிரம் கோயில்களை கட்டவேண்டும் என்பது, இளவரசனும் அவற்றை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறான்.
ராமாயணத்தில் அனுமன் இலங்கையை எரிக்கும் காட்சி
சவாலை ஏற்ற இளவரசன் பாண்டுங் தனது தவவலிமையினாலும் பூதகணங்களின் உதவியுடனும் பாதாள கிணற்றை அமைத்து முடிக்கிறான். தனது முதல் நிபந்தனை தோல்வியுற்றதை கண்ட இளவரசி ஒரு உபாயம் செய்கிறாள். தான் அமைத்த கிணற்றின் ஆழத்தை இளவரசன் உள்ளே இறங்கி நிரூபிக்க வேண்டும் என்கிறாள். அதை ஏற்றுக்கொண்ட இளவரசன் அதன் உள்ளே இறங்குகிறான். இந்த கணத்தை பயன்படுத்தி தனது மந்திரி பதி போக்கோ மூலம் அந்த கிணற்றை பெரிய பாறைகளை கொண்டு மூடச்செய்கிறாள். ஆனால் சகல கலைகளையும் கற்றுத்தேறிய பாண்டுங்குக்கு அதிலிருந்து மீண்டு வெளியே வருவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்கவில்லை. தன்னை தந்திரத்தால் வீழ்த்த நினைத்தவளின் மீது அவனுக்கு பெரும் கோபம் வருகிறது. ஆனாலும் அவளுடைய அழகு அவனை சாந்தப்படுத்திவிடுகிறது. தனது தந்திரத்தில் வீழாத இளவரசனைக் கண்டு அதிர்ச்சியுற்ற லோரோ ஜோங்கரங் சுதாரித்துக்கொண்டு தனது அடுத்த நிபந்தனையை நிறைவேற்ற சொல்கிறாள். புன்முறுவலுடன் அதையும் ஏற்றுக்கொண்ட இளவரசன் காரியத்தில் இறங்குகிறான். போரிலேயே தான் தவமிருந்து பெற்ற பல அஸ்திரங்களை இழந்துவிட்டதால் எஞ்சிய ஆற்றலைக்கொண்டு அவனது தவ வலிமையால் தேவ லோகத்திலிருந்து பூத கணங்களை வரவழைக்கிறான். அவர்களும் அன்று ஒருநாள் இரவு மட்டும் பொழுது புலரும் நேரம் வரை அவனுக்கு ஒத்துழைக்க ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உதவியுடன் தனது பரிவாரங்களை கொண்டு கோவில்களை அமைக்க ஆரம்பிக்கிறான். இரவு முழுவதும் கோவில்கள் எழுப்ப படுகின்றன. 999 கொவில்கள் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரமாவது கோவில் துவங்கப்பட்ட நிலையில் இளவரசி இன்னொரு சூழ்ச்சி செய்கிறாள். தன் அரண்மனை பணிப்பெண்களை திரட்டி கிழக்கு திசையில் சென்று பெரிய தீயை மூட்ட சொல்கிறாள். மேலும் தனது மக்களை விடியலை நினைவுறுத்தும் பொருட்டு தங்கள் வீட்டு உரல்களில் அரிசியை குத்தச்சொல்கிறாள். அந்த காலத்தில் பொழுது புலரும் போது நெல் குத்தி அன்றைக்கான உணவை சமைப்பதுதான் அந்தப்பகுதி மக்களின் வழக்கமாம். இப்பகுதியில் இன்றும் கூட கைகுத்தல் சிகப்பரிசியில் வெல்லம் சேர்த்து தினுசு தினுசான பலகாரங்கள் செய்கிறார்கள். என்ன திடீர்ன்னு சாப்பாட்டு பக்கம் போய்விட்டோம்? சரி சரி கதைக்கு வருவோம்.
லோரோ ஜோங்கரங் கதை சாவா நாடகப்பாணியில்
கிழக்கு திசையில் வெளிச்சத்தையும் நெல் குத்தும் ஓசையையும் கேட்ட காக்கைகள் பொழுது புலர்ந்துவிட்டது என்று கருதி கரைய ஆரம்பிக்கின்றன. இதனை கண்ட பூத கணங்களும் பொழுது புலர்ந்துவிட்டதாக எண்ணி தமது வேலையை நிறுத்திவிட்டு இளவரசனிடம் வந்து தாங்கள் வானுலகம் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதால் மேற்கொண்டு தொடரமுடியாது என்று கூறி மறைந்துவிட்டனர். இதனால் இளவரசன் பாண்டுங் குழப்பமடைகிறான். இன்னும் போழுது புலரும் பொழுது நேரம் ஆகவில்லை என்று அவனது உள் மனது சொன்னது. ஆனாலும் இளவரசி லோரோ ஜோங்கரங்கை கூப்பிட்டு கோவில்களை எண்ணிப்பார்த்துக்கொள்ள சொல்கிறான். அவள் சரியாக 999 கோவில்களை எண்ணி முடிப்பதற்கும் உண்மையான பொழுது புலர்வதற்கும் சரியாக இருக்கிறது. தான் கேட்டதற்கு ஒரு கோவில் குறைவாக இருப்பதால் தான் இளவரசனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்கிறாள் லோரோ ஜொங்கரங். அவளது சூழ்ச்சியால் தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த இளவரசன் பாண்டுங் கடுங்கோபம் கொள்கிறான். உனக்கு இன்னும் ஒரு கோவில்தானே வேண்டும்? அந்த கோவிலுக்கு நீயே மூலக்கல்லாக போய்விடு என்று இளவரசிக்கு சாபம் கொடுக்கிறான். அவளும் கற்சிலையாக மாறிவிடுகின்றாள்.. அந்த சிலைதான் இந்த பெரம்பனான் கோவிலின் ஒரு பகுதியில் துர்கையின் உருவமான மகிசாசுரமர்த்தினியாக வீற்றிருப்பதாக ஐதீகம், இதனால்தான் இந்த கோவில்கள் அனைத்தும் அடங்கிய பகுதி “சண்டி லோரோ ஜொங்கரங்” என்று அழைக்க படுவதாக இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். (சண்டி – கோவில் / லோரோ- மெல்லிய / ஜோங்கரங்- கன்னி) இங்கிருக்கும் இங்குள் கல்வெட்டு ஒன்றும் இக்கதையை கூறுகிறது. இக்கதை இன்னும் பல விதங்களில் இந்தப்பகுதி மக்களிடம் புழங்குகிறது. நான் சொன்னதுதான் சற்று எளிமையானது??!!. மேலும் இளவரசிக்கு உதவி செய்தபடியால் அந்த பகுதி பெண்களுக்கும் திருமணம் வாய்க்காமல் கடவது என்று சாபம் கொடுககப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் இக்கோவில் பகுதியில் காதல் செய்தால் காதல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஆனால் நாம் சென்றிருந்த போது நிறைய காதல் சோடிகளை பார்க்க முடிந்தது.( பயலுகள் புள்ளைங்கள கழட்டி விடுவதற்காகவே கூப்பிடு வந்திருப்பானுங்க என்று நினைக்கிறேன்)
சண்டி சேவு
இப்படி அறைகுறையாய் விடப்பட்ட ஆயிரமாவது கோவில் இந்த ஆலய வளகத்தில் உள்ளதாக வேறு ஒரு கோவிலை காட்டுகிறார்கள். அது “சண்டி சேவு” என்று அழைக்கப்படுகிறது. சாவா மொழியில் சண்டி என்றால் கோவில் என்றும் சேவு என்றால் ஆயிரம் என்றும் பொருள்படும். பிற்காலத்தில் வந்த புத்த மத அரசர்களால் இந்த ஆயிரமாவது கோவில் புத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் அதனால் “லோரோ ஜொங்கரங் சிலை” சிவன் சன்னிதிக்கு அருகில் தனி சன்னிதியில் பின்னாளில் மாற்றப்பட்டதாகவும் கதை சொல்கிறார்கள். கதை உண்மையோ இல்லையோ ஆனால் சுவாரசியமாக இருக்கிறது. இந்தக் கதையையும் ராமாயண மகாபாரத கதைகளையும் திறந்த வெளி மேடை நாடகங்களாக பாலி நாடகப்பாணியில் இக்கோயில் வளாகத்தில் நடத்துகிறார்கள். இக்கோவிலை பின்புலமாக கொண்டு ஒளி ஒலி காட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய இந்தக்காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. அழகான் பின் புல ஒளி அமைப்பில் இந்த கோவிலைக் கான்பதே அலாதியானது. இந்த முழு பதிவையும் இளவரசி கொடியிடை கன்னியின் கதையே அடைத்துக்கொண்டுவிட்டதால் இந்த கோவிலின் அமைப்பு பற்றிய செய்திகள் அடுத்த பதிவில் இடம்பெறும். கதையை சற்று சவ்வ்வ்வாக இழுத்திருந்தால் தயவு செய்து பொருத்தருள வேண்டும்! ஏனென்றால் நம் கதை சொல்லும் திறன் அவ்வளவுதான்! .

Wednesday 16 September 2009

கொடியிடை கன்னி! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 1)

பாலி நாட்டியப் பெண்
இந்தோனேசியா என்றால் தேவதைகளின் தேசம் என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அது உண்மையென்பதை இத்தேசத்தின் உட்பிரதேசங்களில் பயணப்பட்டபோது புரிந்தது. எங்கு பார்த்தாலும் கடலும் பசுமை போர்த்திய மலைகளும் பச்சை பசேலென்ற காடுகளும் நிறைந்த அழகிய தீவு தேசம் இது. சுமாராக முப்பது சதவீத காடுகளும் இயற்கை வளங்களும் பேராசைக்காரர்களால் அழிக்கப்பட்டுவிட்ட போதும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது இந்த தேசம்.
பச்சை தேசம்
ஒரு காலத்தில் முழுக்க முழுக்க இந்து சமயத்தை கொண்டிருந்த இந்த தேசம் இப்போது உலகத்தில் அதிக இசுலாம் மக்கள் தொகை கொண்ட தேசமாக மாறியிருக்கிறது. இப்போது இந்து சமயத்தை பின்பற்றுபர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டுமே. அதுவும் பெரும்பான்மையான இந்துக்கள் பாலித்தீவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பின்பற்றும் இந்து மதம் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து மதத்தில் இருந்து சற்றே வேறுபட்டது. அதைப்போல இந்நாட்டின் இசுலாம் மக்களின் கலாச்சாரமும் மற்ற நாடுகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. அதைப்பற்றியெல்ல்லாம் தனிப்பதிவில் சொன்னால்தான் நன்றாயிருக்கும். இப்போது இந்த பதிவின் கருவுக்கு வருவோம். இவ்வாறு இந்து சமயம் தழைத்தோங்கியிருந்த ஒரு தேசத்தில் அவர்களின் கலாச்சார சின்னங்களும், வழிபாட்டு தலங்களும் இல்லாமல் இருந்திருக்குமா? என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் பண்டைய மத்திய சாவாத்தீவில் கட்டப்பட்ட இன்றைக்கும் நம் புருவங்களை சற்றே உயரச்செய்கிற ஒரு இந்து கோயில் பற்றித்தான் இந்த பதிவில் சொல்லவிருக்கிறேன்.
பெரம்பனான் ஆலயத்தின் வெளித்தோற்றம்
உலகிலேயே பெரிய இந்துக்கோவில் கம்ப்பொடியாவில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்தான் என்பது நமக்கு தெரியும். காக்கும் கடவுளான விஷ்னுவுக்காக சூரியவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயில் பிற்பாடு வந்த பௌத்த மன்னர்களால் புத்த விகாரமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவாலயம் இன்றளவும் இந்தோனேசியாவின் சாவா தீவில் பெரம்பனான் என்ற இடத்தில் இருக்கிறது. . இந்த கோவில் இந்தோனேசியாவின் பெயர்பெற்ற சுற்றுலா தளமான யோக்கியகர்த்தா நகருக்கு அருகில் 15 கிமீ தொலைவில் உள்ளது. இக்கோயிலின் பெரும்பகுதி இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு அழிந்துவிட்டது. மீதமிருந்த எச்சங்களை அரும்பாடுபட்டு சீர்படுத்தி கோயிலின் முக்கிய பகுதிகளை மீட்டு அடுத்த சந்ததியிடம் சேர்த்திருக்கிறது இந்தோனேசிய அரசு. ஒரு இசுலாமிய அரசாக இருந்த போதும் தமது நாட்டின் கலைப்பொக்கிழங்களை அவை வேற்று மதத்தை சேர்ந்தவைகளாக இருந்த போதும் பாதுகாத்து உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தென்கிழக்காசியாவின் பிரபலமான் கிமீர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது எனபதற்கான போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் சாவா தீவின் மற்ற பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுக்களில் உள்ள குறிப்புகளை கொண்டு இக்கோயில் கிபி எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்காலப்பகுதிகளில் இந்த பகுதியில் இருந்த மாத்தாராம் பேரரசை ஆண்ட இந்து மன்னன் ராக்கை பிகாதன் என்பராலோ அல்லது சஞ்சய பேரரசை ஆண்ட இன்னொரு இந்து மன்னன் பாலிதுங் மகா சம்பு என்பவராலோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தெரிய வருகிறது. சாவா தீவில் கிடைத்திருக்கும் பல கல்வெட்டுகளிலும் இந்த கோவிலைப்பற்றி மிகச் சிறப்பாக பேசப்படுகிறது. ராக்கை பிகாத மன்னன் இறந்த பிறகு அவனது இறுதி ஊர்வத்தை சித்தரிக்கும் கல்வெட்டுகளிலும் அவன் கட்டிய இக்கோவிலைப்பற்றி சிறப்பாக தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாம் அக்காலகட்டத்தில் இக்கோயில் சிறந்து விளங்கியதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இக்கோயில் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த பேரரசுகள் வீழ்ச்சியை கண்டுவிட்டன. இதனால் இவர்களின் ஆட்சிகாலத்திற்கு பிறகு இக்கொவிலைச்சுற்றி வாழ்ந்த மக்கள் மற்ற இடங்களுக்கு பெயர்ந்திருக்கின்றனர். இதற்கு அங்கு ஏற்ப்பட்ட அடுத்தடுத்த இயற்கை பேரழிவுகள் கூட ஒரு காரணமாயிருக்கலாம் என அறியப்படுகிறது. அதற்கு பிறகு பல நூற்றாண்டுகள் இக்கோவில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்குள் மறைந்து இருந்திருக்கிறது.
புனரமைப்பு செய்வதற்கு முன் கோவிலின் நிலை
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இப்பகுதியில் காலடி எடுத்து வைத்தார்கள். 1733 ஆண்டு டச்சுக்காரர்களின் ஆட்சிகாலத்தில் இப்பகுதியை ஆராச்சி செய்ய வந்த சி ஏ லோன்ஸ் என்ற டச்சுக்காரர்தான் முற்றிலும் சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இக்கோவில் பகுதியை கண்டு பிடித்து உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு 1885 ஆம் ஆண்டு லைசர்மேன் என்பவர் இக்கோவிலை சீரமைக்க பல முயற்சிகள் மேற்கொண்டு இந்த இடத்தை சுத்தப்படுத்தினார். 1902 ஆம் ஆண்டு வாக்கில் புனரமைப்பு வேலைகள் வேன் எர்ப் என்பவரின் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையில் கோவிலின் பல பாகங்கள் மக்களால் விருப்பப்படி எடுத்து செல்லப்பட்டுவிட்டன. இருந்த போதிலும் இந்தோனேசிய அரசு மற்றும் யுனஸ்கோவின் அயராத முயற்சியினால் சீரமைக்கப்பட்ட முதல் பகுதி 1953 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அடுத்த பகுதி 1991 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகும் தொடந்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 2004 மற்றும் 2006 ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களினால் இக்கோயில் மீண்டும் பாதிக்கப்பட்டது.
கோவிலின் உள்பிரகாரங்கள்
மறுகட்டுமானம் அல்லது புணரமைப்பு செய்யப்பட்ட கோவிலாக இருந்தாலும் பாரப்பதற்கு அவ்வாறு தெரியவே இல்லை. புணரமைப்பு வேலைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்களின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். 75% பாகங்கள் கிடைத்த கோவில் பகுதிகளே சீரமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் கிடைக்காத கோவிலின் எஞ்சிய பகுதிகள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சிதறிக்கிடக்கின்றன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு நாம் பார்க்கும் இந்த கோவிலின் எஞ்சிய பகுதிகளே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்றால் இந்த கோவில் கட்டப்பட்டபோது எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கும் என்று கற்பனைக்கூட செய்து பார்க்க முடியவில்லை. அத்தனை அழகாக பிரமாண்டமாக இருக்கிறது இந்த கோவில். அதெல்லாம் சரி………. கோயில் பற்றிய இந்த பதிவுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உண்மையில் இது ஒரு சிவாலயமாக இருந்தாலும் இந்த கோவில் ”சண்டி லோரோ ஜோங்கரங்” என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. அதாவது சாவா மொழியில் ”மெல்லிய கன்னி” கோவில் என்று பொருள்படும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதைப்பற்றியும் இக்கோயிலின் வடிமைப்பு பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம். .

Monday 31 August 2009

மௌனத்தின் பயங்கரம்!

தமிழர்களின் இன்றைய மவுனம் என்னை மிகுந்த அச்சத்திற்கு உள்ளாக்குகிறது. நான் இங்கே தமிழர்கள் என்று விளிப்பது நம் தாய் தமிழகத்தின் ஆறுகோடி மக்களைத்தான். அவர்களை ஆளும் அல்லது ஆண்ட அரசியல்வாதிகளை அல்ல. இத்தகையோரின் மௌனத்தையோ எழுச்சியையோ நாம் பொருட்படுத்தவேக் கூடாது என்பது கடந்தகாலம் நமக்கு கற்றுக் கொடுத்த பாடம். ஆனால் உலகத்திலேயே மிகுந்த குடும்ப பிணைப்பும் மனிதமும் கொண்ட நம் தமிழினம் இப்படி உணர்ச்சியற்ற கட்டைகளாக மாறிப்போனதை நினைத்து உண்மையில் பெரும் அச்சமாக உள்ளது. போனவாரம் சேனல் 4 ஒரு கானொளிப்பதிவை வெளியிட்டார்கள். இளகிய மனது படைத்தோர் கானக்கூட அஞ்சக்கூடிய ஒரு பதிவு அது. இலங்கை முகாமிலிருந்த கடத்தி செல்லப்படும் தமிழ் இளைஞர்களை சித்திரவதை செய்து, நிர்வாணமாக்கி, மைதானமொன்றில் கண்களையும், கைகளையும் கட்டிவிட்டு இலங்கை இராணுவம் சுட்டுக்கொல்லும் கொடூரக்காட்சி இது. காண்போரை கலங்கவைக்கும் இந்த கானொளிப்பதிவை கண்ட அன்றிரவு என்னால் தூங்கவே முடியவில்லை. இத்தகைய காட்டுமிராண்டித்தனம் ஏதோ பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் நிகழவில்லை. தமிழகத்திலிருந்து ஒரு சில மைல் தொலைவிலேயே நிகழ்ந்துள்ளது. ஆனால் பெருவாரியான தமிழக மக்களிடமிருந்தோ அல்லது ஊடகங்களிடமிருந்தோ இது குறித்த கண்டனமோ எதிர்ப்போ கானப்படவில்லை. சாருக்கான் அமரிக்காவில் குடியேற்ற அதிகாரிகளால் தடுத்துவைக்கப்பட்ட நிகழ்வையும் அதனால் சல்மான்கான் அமரிக்க பயணத்தை கைவிட்டதையும் தலைப்பு செய்திகளில் வெளியிட்டு தன் நாட்டுப்பற்றை பறைச்சாற்றிக்கொண்ட நமது தமிழக ஊடகங்கள் இந்நிகழ்வை கண்டுகொள்ளவே இல்லை. இந்த ஒரு நிகழ்வு குறித்து மாத்திரமல்ல மே மாதம் 18 ம் தேதிக்கு சற்று முன்பும் அதற்கு பிறகும் வன்னிப்பகுதியிலே சிங்கள படையினரால் அறங்கேற்றப்பட்ட கொடுமையான நிகழ்வுகள் குறித்தும் யாரும் இன்றுவரை வாய்திறக்கவில்லை. கிட்டத்தட்ட மூன்று லட்சம் தமிழ் மக்கள் ஒரு சிறு நிலப்பரப்பில் மின்சார வேலிகளுக்கிடையில் மூன்றுமாத காலமாக அடைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு நிகழ்ந்துகொண்டிருக்கிற நிகழப்போகிற பயங்கரம் குறித்து அச்சப்பட்டு ஈனக்குரலில் அவர்கள் எழுப்பும் குரல் நம் காதுகளை எட்டாதது வியப்பை தருகிறது. இது குறித்து சிறிய பிரஞ்ஞையே யாருக்கும் இல்லாதது ஏன் என்று தெரியவில்லை. இப்படி நிகழ்வது முதல்தடவையல்ல. எண்பதுகளில் தமிழீழத்தில் போராட்டம் வெடித்தது முதல் இன்று வரை சிங்களர்கள் இது போன்ற பல அட்டூழியங்களை நிகழ்த்திக்கொண்டே இருக்கிறார்கள். விடுதலைப்புலிகளை ஒடுக்குகிறோம் என்று சொல்லி இலங்கை பேரினவாத அரசு ஒரு திட்டமிட்ட இன அழிப்பை செய்கிறது அதற்கு என் காந்தி கண்ட தேசம் துணை போகக்கூடாது என்று கத்தினோம் கதறினோம். ஆனால் காந்தி பேரைச்சொல்லியே ஐம்பது வருடமாய் இந்தியாவை கொள்ளையடிக்கும் கும்பலின் காதுகளில் எங்கள் குரல் விழவில்லை. அதே போல அவர்களுக்கு பல்லக்கு தூக்கும் தமிழக கட்சிகளின் காதுகளிலும் அது விழவில்லை. ஆனால் மனசாட்சியுள்ள நம் தமிழக மக்களும் அவர்கள் கொடுத்த இலவசங்களால் செவிடாகிப்போனதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை. தேர்தலில்தான் இப்படி என்றால் தேர்தலுக்குப்பிறகும் தன் சொந்த இனம் இப்படி அநியமாக அழிக்கப்படுவதை நம் தமிழகம் கண்டும் கானாமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. விடுதலைப்புலிகள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுவிட்டார்கள் என்று கொண்டாடி மகிழ்ந்தவர்கள் இன்னும் ஏன் தமிழர்களை இப்படி கொட்டடியில் அடைத்து வைக்கவேண்டும். ஐம்பது சதவீத ஈழத்தமிழினம் ஏற்கனவே அழிக்கப்பட்டுவிட்டது. மீதமுள்ளோரையும் வாழத்தகுதியற்ற நடைப்பினமாக மாற்றவேண்டும் என்பதுதான் அவர்களின் குறிக்கோள். இதற்கு தெரிந்தோ தெரியாமலோ தாய் தமிழர்களாகிய நாம் உதவியாக இருக்கிறோம் என்பதை ஏன் தமிழக மக்கள் உணர மறுக்கிறார்கள் என்பது புரியவில்லை. நமக்கும் நாளை இப்படி ஒரு நிலை வராது என்பது என்ன நிச்சயம்? தன்னை மனித குல காப்பாளர்களாக காட்டிக்கொள்லும் உலக நாடுகள் மற்றும் ஐக்கியநாடுகள்சபை போன்ற சர்வதேச அமைப்புகள் எல்லாம் அதிகார வர்க்கத்தின் எடுபிடிகள்தான் என்பதை இலங்கை விவகாரத்தில் அவர்களின் நடவடிக்கைகள் வெட்ட வெளிச்சமாக்கிவிட்டன. இந்த அமைப்புகள் போடும் சட்டதிட்டமெல்லாம் ஏழை நாடுகளை அதிகார நாடுகள் ஒடுக்கி வைப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மை இப்போது தெளிவாகி இருக்கிறது. காந்தி கண்ட தேசமென்றும் அகிம்சையை உலகத்துக்கு போதித்தவர்கள் என்றும் வேசம் போடும் போலி கதர்சட்டைகளின் கோரமுகம் இன்று வெட்ட வெளிச்சமாய் தெரிகிறது. ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் நமது சொந்த தமிழினம் காட்டும் இந்த மௌனத்தின் பயங்கரம்தான் எனக்கு புரியவில்லை. ஒரு வேளை வடக்கத்தியர்கள் புரிந்து கொண்ட அளவிற்கு நாம் நம்மினத்தை புரிந்து கொள்ளவில்லையோ? .

Wednesday 19 August 2009

எச்1என்1 நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிகள்!

எச்1என்1 காய்ச்சல் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக மருத்துவர் ஒருவர் அறியத்தந்துள்ள எளிய வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். இப்போது பரவலாக பலரும் முக கவசம் அணிவதால் மட்டும் இத்தொற்றை தவிர்க்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது நடப்பிலுள்ள பச்சை மற்றும் நீல நிற முக கவசங்களால் இக்கிருமிகளை தடுத்துவிட முடியாது. ஏனெனில் இத்தகைய கவசங்கள் 0.3µ அளவுள்ள கிருமிகளை மட்டுமே தடுக்க முடியும். அதுவும் 95% கிருமிகள் மட்டுமே தடுக்க முடியும். ஆனால் எச்1என்1 கிருமியோ 0.1µ அளவே உள்ளது. ஆகவே முகமூடிகளை கொண்டு இக்கிருமிகளை தடுத்து நிறுத்த நினைப்பது கொசுவலையைக்கொண்டு மழையை தடுப்பது போலாகும். இதனால் முகமூடிகளுடன் சேர்த்து மற்ற வழிமுறைகளையும் கடைபிடிப்பது அவசியமாகிறது. வீட்டில் உபயோகப்படுத்தும் வெள்ளை நிற கைக்குட்டைகளையே முகமூடிகளாக உபயோகப்படுத்துவது இன்னும் சிறந்தது. எச்1என்1 காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் தாமிபுலு மாத்திரைகள் கூட இந்த கிருமிகளை அழிப்பதில்லை. அவை மேலும் பல்கி பெருகுவதைத்தான் தடை செய்கின்றன. இவ்வாறு அவைகள் பல்கி பெருகுவதை தடை செய்வதால் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் (இரு வாரங்கள்) இந்த கிருமிகள் தாமாக ஆயுள் முடிந்து அழிந்துவிடுகின்றன. ஆகவே இக்கிருமிகளை அறவே தவிர்ப்பதற்கு தடுப்பூசிகள் ஒன்றே வழி. ஆனால் தடுப்பூசிகள் புழக்கத்தில் வரும்வரை உரிய வழிமுறைகளை கொண்டு நம்மை காத்துக்கொள்வது அவசியம். 1. கைகளை அடிக்கடி நல்ல சோப்பு கொண்டு கழுவுங்கள். 2. பொது இடங்களுக்கோ அல்லது வெளியில் செல்லும் போதோ அவசியமில்லாமல் கைகளை உபயோகித்து இடங்களை தொட வேண்டாம். 3. கைகளை முகத்தருகே கொண்டு செல்வதை அடியோடு தவிர்க்க வேண்டும். அப்படியே கொண்டு சென்றால் நன்கு கை கழுவிய பிறகே கொண்டு செல்ல வேண்டும். 4. ஒவ்வொரு முறை வெளியே சென்று வரும்போது கைகளை நன்கு கழுவிவிட்டு வரவும். 5. உப்பு கலந்த சுடு தண்ணீரில் குறைந்தது நாளுக்கு இருமுறை வாய் கொப்பளிக்கலாம். உப்பு தண்ணீரை நம்பாதவர்கள் லிஸ்டரின் உபயோகிக்கலாம். எச்1என்1 தொற்று ஏற்படும்போது கிருமியானது நாசி மற்றும் தொண்டைப்பகுதிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தங்கி இருந்து பல்கிப்பெருகும். அதன் பின் தான் முழுமையான நோய் அறிகுறிகள் தோன்றும். இவ்வாறு உப்புத்தண்ணீரில் வாய்க்கொப்பளிக்கும்போது இக்கிருமிகள் பல்கிப்பெருகுவது தடுக்கப்படும். இதனால் நோய் தாக்கியவரின் உடலில் தாமிபுலு மருந்துகள் செய்யும் வேலையை ஆரோக்கியமானவரின் உடம்பில் இந்த உப்புத்தண்ணீர் செய்கிறது. ஆகவே உப்புத்தண்ணீரில் வாய்க்கொப்பளிப்பதை சாதாரணமாக எண்ணவேண்டாம். 6. இதேபோல உப்பு கலந்த சுடு தண்ணீரில் குறைந்தது நாளுக்கு ஒரு முறையாவது நாசிகளை சுத்தப்படுத்தலாம். 7. ஜல நேத்தி வகை யோகாசனம் தெரிந்தவர்கள் அவற்றை செய்து நாசிகளை சுத்தப்படுத்திக்கொள்ளலாம். அல்லது நாளுக்கு இருமுறை அழுத்தி மூக்குகளை சிந்தியபிறகு உப்பு கலந்த சுடு தண்ணீரில் நனைத்த பஞ்சினால் நாசிகளை சுத்தப்படுத்தலாம். இது கிருமி எண்ணிக்கைகளை வெகுவாக குறைக்கும். 8. வைட்டமின் சி செறிந்த பழங்களையும் உணவுகளையும் அதிக அளவில் உண்டு இயற்கையான எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தலாம். வைட்டமின் சி மாத்திரைகளை நேரடியாக எடுத்துக்கொள்பர்கள் அதில் சிங்க் கலந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும் 9. மேலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுடு தண்ணீரை குடிப்பது நல்லது. இது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதற்கு ஈடான பலனைத்தரும். சுடு நீரைக்குடிக்கும்போது தொற்றுக்கிருமிகள் தொண்டையிலிருந்து வயிற்றுக்கு அடித்துகொண்டு போகப்படுகின்றன. இரைப்பையில் இக்கிருமிகள் வளரமுடியாததால் மாண்டுபோகின்றன. மருத்துவமனைகளில் சென்று அவதிப்படுவதைவிட வீட்டிலேயே இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி நோய்த்தொற்றை தவிர்க்கலாம். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதாலும் சாம்பிராணி போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதாலும் இந்த நோய்த்தொற்றை தவிக்க முடியும் என்று பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறியுள்ளார்.

Friday 14 August 2009

நல்ல உள்ளங்களே உதவுங்கள்!

படத்தில் இருக்கும் நண்பர் திரு செந்தில்நாதன் அவர்கள் சிங்கையில் பணிபுரிந்துகொண்டிருந்தார். அவருக்கு இருதயத்தில் ஏற்ப்பட்டபாதிப்பால் இருதய மாற்று அறுவை சிகிழ்ச்சைக்காக சிங்கை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அதற்கு மிகப்பெரியத்தொகை செலவாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அதற்காக அவரது மனைவி சகோதரி சாந்தி அவர்களும் நண்பர்களும் நல்ல உள்ளம் கொண்ட அனைவரின் உதவியையும் பிரார்த்தனைகளையும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள். இது குறித்த அவரது நண்பர் திரு கே வி ராசா அவர்களின் பதிவு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்காணும் அன்பர்கள் அவர்களுக்கு தங்களால் இயன்ற உதவியை செய்யவேண்டும் என்று வேண்டிக்கேட்டுக்கொள்கிறேன். திரு கே.வி.ராசா அவர்களின் பதிவு பின்வருமாறு, சக பதிவர் திரு. செந்தில் நாதன் (வலைப்பதிவில் சிங்கை நாதன்) கடந்த 2005ம் ஆண்டு முதல் இதய நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார். இப்பொழுது மிகவும் கவலைக்கிடமான நிலையில் இருக்கும் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய சிங்கப்பூர் டாலரில் 100,000 வரையில் தேவைப்படும் என்று எங்களது கல்லூரி மடல்குழுவுக்கு மின்னஞ்சல் எனது வேறொரு நண்பர் மூலமாக வந்திருக்கிறது. ஓரிவரின் தனிப்பட்ட உதவி கண்டிப்பாக போதாதென்பதால் சக பதிவர்களான உங்களிடமும் நண்பன் செந்தில்நாதனுக்காகவும் அவரது குடும்பத்தினருக்காகவும் மடிப்பிச்சை கேட்கிறேன். செந்திலுக்கு உதவ நினைப்பவர்கள் கீழ்கண்ட அக்கவுண்ட்டுகளுக்கு தங்களால் இயன்ற பணத்தை அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன். ICICI Account Details Account Number: 612801076559 Name: M.KARUNANITHI Branch: Tanjore Singapore Account Details Account Number: 130-42549-6 Name: Muthaiyan Karunanithi Bank: DBS - POSB Savings பணத்தை அனுப்புபவர்கள் Transaction Remarksல் “To Senthilnathan" என குறிப்பிடும்படியும் கேட்டுக்கொள்கிறேன். இந்தப் பதிவைப் படிக்கும் சக பதிவுலக நண்பர்களும் முடிந்தால் உங்களது பதிவிலும் சிங்கை நாதனுக்கு உதவுமாறு பிற பதிவர்களை அழைக்கக் கேட்டுக்கொள்கிறேன். மேலதிக விபரம் வேண்டுபவர்கள் குசும்பனையோ(சரவணன்) அல்லது நண்பர் கருணாநிதியையோ தொடர்புகொள்ளலாம். அமீரகத்தில் ஒருங்கிணைப்பவர்கள் ஆசிப் மீரான் (அண்ணாச்சி) + 97150 6550245 குசும்பன்செல்பேசி எண்: +97150 2664131 சிங்கப்பூரில் ஒருங்கிணைப்பவர்கள் கருணாநிதி செல்பேசி எண்: +65 93856261 சகோதரி சாந்தி செந்தில்நாதன் அவரது கல்லூரி நண்பர்களுக்கு அனுப்பிய மடலையும் இந்தப் பதிவோடு இணைத்துள்ளேன். Hi Friends, This is santhi from our Computer Science & Engineering ( VMKV98) group.I am currently in singapore.My husband Mr.Senthil nathan is also a software engineer working in singapore.Now he has got admitted into the singapore general hospital for his present serious heart condition in the National Heart centre.He is suffering from IDCM.His heart needs to be transplanted asap.To make him live up to getting the correct donor heart he has to get implanted with VAD(ventricular assist device).At this moment he cannot travel to india to get any treatments over there.Here doctors estimate about 100000 SGD indian money value approx(33 Lakhs).Our savings n all getting used for his present frequent admissions in to the hospital and his previous pacemaker and CRTD etc.He was diagnosed with this heart problem on 2005 and from that time he is on medications.We have a girl baby of about 5 years old.I m helpless in this situation and i request all of u to pray for me and help me in this critical situation.Thanks for understanding my situation.I dont have much words to explain my sufferings.I dont have any other way thats y i m composing this mail.I am sad about that i m sharing my worries with our batchmates.I expect all ur prayers at this moment. Thanks Regards, Santhi Senthil Nathan.