எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 30 September 2009

வரம் கொடு தேவதையே ! தொடர்பதிவு !

எல்லா வரமும் ஒன்றாய்!
ஒரு கோடை விடுமுறை நாளில் அம்மாவும் நானும் பரணையில் வெகுநாட்களாக தூங்கிக்கொண்டிருந்த நோட்டு புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் சுத்தம் செய்யலாம் என்று களத்தில் இறங்கினோம். அம்மா ஒரு துண்டு சீட்டைக்கூட விடமாட்டார்கள். எதையும் தூக்கித் தூரப்போட அம்மாவுக்கு மனசு வராது. அப்படியே சேர்த்து சேர்த்து அன்று வரை முழு பரணையும் வெறும் காகித மேடாக நிறைந்து கிடந்தது. எதையும் அப்படியே தூக்கி போடாது ஒவ்வொன்றையும் படித்துக் காட்டிய பிறகே அம்மா தூக்கிப்போட சம்மதித்தார்கள். அதுவும் அரைகுறை மனதோடு. அப்போது 1976 ஆம் ஆண்டு நாட்குறிப்பு ஒன்று கையில் கிடைத்து. அது என் பெரிய அக்காவுடையது. முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் சீவக சிந்தாமணி என்று எதை எதையோ எழுதியிருந்தது. இடையிடையே ஒன்று இரண்டு மூன்று என்று பட்டியலிட்டு எனது மற்ற அக்காக்கள் பெயருக்கு கீழே ஏதோ எழுதியிருந்தது. ஆர்வம் மேலிட மேலே படித்தேன். அது அவர்களுக்கான அன்றாட வேலைகள். அந்த வருடங்களில் அப்பாவுக்கு சுகமில்லாமல் போனதால் அடிக்கடி வைத்தியம் பார்க்க அம்மா அவரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு போய்விடுவார்களாம். அப்போதெல்லாம் எங்கள் பெரிய அக்காதான் எங்கள் ஐவரையும் பார்த்துகொள்ளுமாம் ஒரு வகுப்பு தலைவி மாதிரி. ஒவ்வொரு நாளும் யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்குறிப்பில் எழுதிவைக்கும். அதன்படிதான் எல்லோரும் நடக்கவேண்டுமாம். எல்லா அக்காவுக்கும் ஒவ்வொருநாளும் வேறு வேறு வேலைகள் எழுதியிருந்தது. ஆனால் ஒரு அக்காவுக்கு மட்டும் தினமும் ஒரே வேலை எழுதியிருந்தது இவ்வாறு.
”5. அம்பிகா – தம்பியை அழுவாமல் பார்த்துக்கொள்வது”
ஆம். அம்பிகா எனக்கு முன் பிறந்த சகோதரி. அம்பிகா அக்காவுக்கு என் மீது கொள்ளைப்பாசம். அதனால்தான் அதற்கு தினமும் என்னை பார்த்துக்கொள்ளும் வேலை. எனக்கும் அம்பிகா அக்காவைத்தான் ரொம்ப பிடிக்கும். என்ன செஞ்சாலும் திட்டாது. பள்ளியில் ஒரு சின்ன சாகலெட் கிடைத்தாலும் தம்பிக்காக எடுத்து வந்துவிடும். என் எல்லா அக்காக்களை விட அம்பிகா அக்கா தான் ரொம்ப அழகு. எங்கள் எல்லோரையும் விட சிவப்பு வேறு. நடிகை அம்பிகா போலவே லட்சணமாய் இருக்கும். இடது கன்னத்தில் மூக்குக்கு அருகில் பெரிய மச்சம் அழகாய் இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை ரெண்டுபேரும் ஒரே பள்ளிதான். அக்கா எப்போதும் என்னை பொத்தி பொத்தி பள்ளிக்கு கூட்டிப்போகும். ஒரே தம்பியாச்சே! அம்பிகா அக்காதான் எங்கள் வீட்டு சரோஜ்நாரயண்சாமி. ஒவ்வொரு நாளும் இரவில் அன்றைய செய்தி தாள்களை அக்காவை சத்தம்போட்டு வாசிக்கச்சொல்லி கேட்பது அப்பாவின் வழக்கம். எங்கள் வீட்டில் அப்பாவிடம் வக்கீல் மாதிரி ”லா பாயிண்ட்” பேசும் தைரியம் அம்பிகா அக்காவுக்கு மட்டுமே உண்டு. அம்பிகா அக்கா எப்போதுமே நேர்த்தியாக உடை உடுத்தும். எப்போதுமே சிரித்துக்கொண்டே வளையவரும். நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே நானும் அக்காவும் ஒன்றாய் போனால் பார்ப்பவர்கள் என்ன உன் அண்ணனா? என்பார்கள். அதனால் அதற்குப்பிறகு அக்கா போடுவதையெல்லாம் நிறுத்திவிட்டேன். வெறும் அம்பிகாதான். ஒரு வழியாக எல்லா அக்காவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கடைசி அம்பிகாதான். அதற்கும் நல்ல இடத்தில் பார்த்து முடித்து வைத்தார்கள். அதன் கல்யாணத்திற்கு பிறகு நான் வேலைக் காரணமாக கோவைக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அதனால் திருமணத்திற்கு பிறகு அம்பிகா அக்காவை நான் அதிகம் பார்க்க வாய்த்ததில்லை. திடீரென்று ஒரு நாள் அம்மா சொன்னார்கள் அம்பிகா குழந்தை பெற்றிருப்பதாய். ஆண் குழந்தை. எங்கள் வீட்டில் எல்லா அக்காவுக்கும் பெண் பிள்ளைகள்தான். இவள்தான் இறுதியாய் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். அம்பிகா அக்காவும் சந்தோசமாய் இருந்தாள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை பிரசவித்து மூன்று மாதங்கள் ஆகியும் அக்காவால் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. ஏதோ ஒரு நோய் அவளை உள்ளிருந்து படுத்திக்கொண்டிருந்தது. கேள்விப்பட்டு ஓடி வந்தேன். சென்னையில் எம் எம் சிக்கும் விஜயா மருத்துவமனைக்கும் அப்பலோ மருத்துவமனைக்குமாய் தூக்கிக்கொண்டு அலைந்தேன். யாராலேயும் அவளுக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோதோ வாயில் நுழைய முடியாத பெயரையெல்லாம் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதம் எங்களால் இயன்றவரை செலவு செய்து போராடினோம். கடவுளுக்கு எங்களுக்குமான போராட்டத்தில் இறுதியில் அம்பிகா அக்கா கடவுள் பக்கம் சாய்ந்துவிட்டாள். நான் முதன்முதலில் வாழ்க்கையில் வலி துக்கம் வெறுப்பு அவநம்பிக்கை இவை அனைத்தையும் ஒரு சேர உணர்ந்தது அப்போதுதான். இதோ ஓடிற்று பனிரெண்டு வருடங்கள். அம்மா அடிக்கடி கேட்பார்கள் ”எங்கே தம்பி அம்பிகா படம்? பெரிதாக்க சொன்னேனே?” என்று. ”உம் பார்க்கிறேன்” என்று சொல்வேனே தவிர இதுவரை செய்ததில்லை. அந்த அழகிய முகத்தை புகைப்படத்தில் மட்டும் பார்க்க எனக்கு மனவலிமை இல்லை. இதோ பா.ரா அனுப்பிய தேவதை என் வீட்டு வாசலில்! நான் கேட்க போகும் ஒரே வரம் ”எங்கள் வீட்டு தேவதையை திருப்பித்தா” என்றுதான்!
------------------------------------------------------------------------------------
இந்த தொடர்பதிவுக்கு அழைத்த அண்ணன்பா.ரா அவர்களுக்கு நன்றி! நான் தேவதைகளை அனுப்புவது மதிபாலா ,"[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]" , யாசவி ,சுப்பு - இவர்கள் வீட்டு வாசலுக்கு! .

Monday 28 September 2009

கல்லிலே கலைவண்ணம் கண்டான்!(இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 3)

பெருமாள் சன்னதி கோபுரம்
இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் மூன்றாம் பாகம். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1 , பகுதி 2 பெரம்பனான் கோயிலானது அது கட்டப்பட்ட போது பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டதால் தற்போது சில சதுர கிலோமீட்டர் அளவுக்கே எஞ்சியுள்ளது. இக்கோவிலின் சிறப்புகளாக முக்கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சிவன் சன்னதியில் சிவ பெருமானுக்கு மனித உருவில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் சொல்லாம்.
வெளிச்சுற்று கோவில்கள்
இந்த கோயில் மொத்தம் மூன்று பிரகாரங்கள் அல்லது அடுக்குகள் கொண்டது. முதல் பிரகாரம் மடப்பள்ளிகள், வேத பாடசாலைகள், ஞானிகள் தங்குமிடம் மற்றும் கோவில் நிர்வாகப்பகுதிகள் என பரந்து விரிந்திருந்தது. ஆனால் தற்போது முதல் பிரகாரம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களே எஞ்சியுள்ளன. இரண்டாம் பிரகாரம் மொத்தம் 246 கோவில்கள் கொண்டதாக இருந்தது. இதில் பெரும்பகுதி அழிந்து ஒரு சில கோயில்கள் மற்றுமே தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஒரு கோணம்
எனக்கு பிடித்த கோணத்தில்
மூன்றாவது பிரகாரமானது கோயிலின் மையப் பகுதியாகும். இந்தப்பகுதியில்தான் நாம் இப்போது பார்க்கும் எட்டு கோவில்கள் அமைந்துள்ளன். இந்த பகுதியின் மையமாக சிவன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவன் சன்னதியின் வடது திசையில் பெருமாள் சன்னதியும் தெற்குத் திசையில் பிரம்மாவின் சன்னதியும் அமைந்துள்ளது. இச்சன்னதிகளில் இம்மூவருக்கும் அழகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மூவர்களின் சன்னதிகளின் வாயில்களை நோக்கியபடி இவர்களின் வாகனங்களுக்கான கோவில்கள் அமைந்துள்ளன. சிவன் சன்னதிக்கு முன் அவரது வாகனமான நந்திக்கும், பெருமாள் சன்னதிக்கு முன் கருடனுக்கும் பிரம்மனின் சன்னதிக்கு முன் அன்னத்திற்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவரான சிவன் சன்னதியை ஒட்டி வலது புறம் அகத்திய மாமுனிக்கும் இடது புறம் மகிசாசுரமர்த்தினிக்கும் பின்புறம் வினாயகருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகிசாசுரமர்த்தினிதான் முன்பாகத்தில் நாம் சொன்ன “லோரோ ஜோங்கரங்” என்று அழைக்கப்படுகிறார். நாங்கள் இக்கோவிலுக்கு சென்றபோது சிவன் சன்னதியும் பிரம்மன் சன்னதியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த்து ஏமாற்றத்தை தந்தது. பல சன்னதிகளை தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்தது. கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தாலும் சன்னதிகளில் வழிபாடுகள் ஏதும் நடத்தப்படுவதாக தெரியவில்லை. சன்னதியில் உள்ள சிலைகளை நோக்கும் போது அதில் எண்ணை பூச்சு இருந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை.
வெளிச்சுவர் சிற்பங்கள்
மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றில் பஞ்ச பூதங்களுக்கும் ஒன்பது நட்சத்திரங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதியின் வெளிப்புற சுவர்களில் இராமாயண காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சன்னதியின் சுவர்களில் கிருட்டின அவதாரத்தின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சிவனுக்காக அற்பணிக்கப்பட்ட கோவிலில் சிவபெருமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் செதுக்கப்படாதது வியப்பை அளிக்கிறது, இக்கோவிலை அரசும் மக்களும் பராமரிக்கும் விதம் பாரட்டத் தக்கது. நமது நாட்டில் செய்வது போல் இங்கு யாரும் தங்கள் தெய்வீக காதலை சுவற்றில் கிறுக்கியோ செதுக்கியோ சுவற்றை நாறடிப்பதில்லை. கண்ட இடத்தில் வாய்க்கழிவுகளை துப்பி வைப்பதில்லை. நாமெல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
லோரோ ஜோங்கரங் (மகிசாசுரமர்த்தினி) மற்றும் வினாயகர் சிலைகள்
ஒருபுறம் இக்கோவிலின் பிரமாண்டமும் கலை நுனுக்கங்களும் நமக்கு வியப்பை அளிக்கிறது. மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதமான இந்த கோவில் சீரழிந்துவிட்டபோதும் அதை மீண்டும் மறுசீரமைப்பு செய்து நம்முன் நிறுத்தியுள்ள மனித உழைப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. இதைப் பார்த்தாவது நமது இந்திய மாநில அரசுகளும் மக்களும் அழியும் நிலையில் உள்ள நமது பல அரிய கோவில்களையும் புராதன சின்னங்களையும் காக்க முன்வரவேண்டும். இக்கோவிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது இங்கே குறிப்படத்தக்கது.
------இத்துடன் இத்தொடர் முற்றுபெறுகிறது -------

Friday 18 September 2009

அழகான ராட்சசியே! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 2)

இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் இரண்டாம் பாகம். முதல் பாகத்தை படிக்க இங்கே செல்லவுமபகுதி 1
மின்னொளியின் பின்புலத்துடன் பெரம்பனான்
முன்னொரு காலத்தில் இந்தோனேசியாவின் மத்திய சாவா தீவு பகுதியில் இரண்டு இந்து அரசுகள் இருந்தன. அதில் ஒன்று வளமான ”பெங்கிங்” என்னும் பேரரசு. இன்னொன்று பெங்கிங் பேரரசை ஒட்டிய ”கரத்தான் போக்கோ” எனும் பெயருடைய அரசு. பெங்கிங் பேரரசை தாமர் மாயோ எனும் அரசன் ஆண்டு வந்தான். இவன் மிகுந்த புத்திக்கூர்மையுடன் சகல கலைகளிலும் வல்லவனாக இருந்தான். இவனது அரசில் மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார்கள். இவனுக்கு ராடன் பாண்டுங் போண்டோவோசோ எனும் மகன் இருந்தான். அவனும் தந்தையை போலவே வீரமும் அறிவும் நிறைந்தவனாக மட்டுமல்லாமல் யோக கலைகளிலும் சிறந்து விளங்கினான். அவன் தான் கற்ற யோக கலையினால் தவம் பல இயற்றி பல வரங்களை பெற்றிருந்தான். அடுத்த அரசான கரத்தான் பொக்கோவை பிரபு போக்கோ என்ற அரக்கன் ஆண்டுவந்தான். அவன் ஆனவத்தின் முழு உருவாகவும் கொடுங்கோலனாகவும் இருந்தான். ஆனால் அவனுக்கு ஒரு அழகான மகள் இருந்தாள். அவள்தான் நம் கதையின் நாயகி இளவரசி லோரோ ஜொங்கரங். அழகின் மொத்த உருவமாக கான்போரை மயங்க வைக்கும் படியான உடல் வனப்புடன் மெல்லிய இடையுடன் அவள் இருந்தாள். அரக்கனின் மகள் என்றாலும் இவள் நல்ல குணம் கொண்டவளாகவும் அதே நேரம் தந்தையின் மீது அளவற்ற பாசம் கொண்டவளாகவும் இருந்தாள். பிரபு போக்கோவும் தன் மகள் மீது அதே அளவு பாசம் கொண்டிருந்தான். அரக்கனாயினும் அவனும் ஒரு தந்தைதானே. பிரபு போக்கோ அரசனுக்கு பதி கொப்போலோ எனும் மந்திரி இருந்தான். அவன் அலோசனையுடந்தான் பிரபு போக்கோ எதையும் செய்வான்.
இளவரசி லோரோ ஜோங்கரங்கை சித்தரிக்கும் காட்சி
பிரபு போக்கோவுக்கு தனது பக்கத்து பேரரசான பெங்கிங் மீது எப்போதுமே ஒரு கண்ணுண்டு. அந்த பேரரசை எப்படியாவது தனது ஆளுகைக்கு கீழ் கொண்டுவரமென்று அவன் ஆசைப்பட்டான். அதற்காக தனது மந்திரி பதியுடன் சேர்ந்து ஒரு திட்டம் தீட்டினான். அதன்படி போருக்கு தேவையான ஆயுதங்களையும் வீரர்களுக்கான உணவையும் மக்களிடம் இருந்து மிரட்டி பெற்று தயார் செய்தான். அதன் பிறகு சரியான நேரம் பார்த்து பெங்கிங் பேரரசை பெரும் படையுடன் சென்று தாக்கினான். மிகப்பெரிய பேரரசாயினும் பிரபு போக்கோவின் திட்டமிட்ட தாக்குதலால் பெங்கிங் பேரரசின் படை வீரர்கள் நிலை குலைந்து போயினர். பிரபு போக்கோ மேலும் மேலும் முன்னேறிக்கொண்டிருந்தான். பெங்கிங் மக்கள் பெருந்துயரத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில் மக்களை காப்பாற்ற தனது அருமை மகன் இளவரசன் பாண்டுங்கை போரில் இறக்கினான் அரசன் தாமர் மாயோ. போர்க்கலையில் வல்லவனான பாண்டுங் தனது முழு பலத்தையும் திரட்டி பிரபு போக்கோவுடன் மோதினான். போர் பல காலம் நீண்டது இறுதியில் தான் தவ வலிமையினால் பெற்ற அஸ்திரங்களை கொண்டு பிரபு போக்கோவை வீழ்த்திக்கொன்றான் இளவரசன் பாண்டுங். பிரபு போக்கோவின் மந்திரி பதி குப்போலோ போர்க்களத்தை விடு தப்பி ஓடினான். ஆனால் இளவரசன் பாண்டுங் அவனை விடாமல் துரத்திக்கொண்டு கரத்தான் பொக்கோவுக்கு வந்தான். தப்பியோடிய பதி போக்கோ நேராக இளவரசி லோரோ ஜோங்கரங்கிடம் வந்தான். போர்க்களத்தில் நிகழ்ந்தவற்றையும் அவளது தந்தை பெங்கிங் இளவரசன் பாண்டுங்கால் கொல்லப்பட்ட சேதியையும் சொன்னான். தன் தந்தை இறந்த செய்தி கேட்ட இளவரசி துடிதுடித்து போகிறாள். அரன்மனையில் இருந்தவர்கள் அவளுக்கு ஆறுதல் சொல்கின்றனர். அந்த நேரம் பார்த்து மந்திரி பதி கொப்போலோவை துரத்திக்கொண்டு வந்த இளவரசன் பாண்டுங் அவளின் அரன்மனைக்கு வருகிறான். வந்தவன் அங்கிருந்த இளவரசி லோரோ ஜோங்கிரங்கை கண்டு அவள் அழகில் சொக்கிப்போகிறான். தான் பல் பெண்களை சந்திதிருந்தாலும் இவளின் அழகு அவனை அவள் மீது காதல் கொள்ளச்செய்கிறது. அவள் யாரென்று பக்கத்தில் உள்ளோரிடம் விசாரிக்கிறான். அவள் தன்னால் கொல்லப்பட்ட அரசன் பிரபு போக்கோவின் மகள் என்று அறிந்து கொள்கிறான். அவள் தந்தையை கொன்றதற்கு பிராயச்சித்தமாக தான் அவளை திருமணம் செய்துகொள்ள முடிவு செய்து அவனுடைய விருப்பத்தை அவளிடத்தில் தெரிவிக்கிறான். இளவரசிக்கோ தன் தந்தையை கொன்ற ஒருவனை தன் மணாளனாக ஏற்றுக்கொள்ள மனமில்லை. ஆனால் அந்தக்கால நியதிப்படி தோற்றுப்போன மன்னர்களின் அனைத்து சொத்துக்களும் வெற்றிபெற்ற மன்னருக்கே சொந்தமாகும். அதன்படி பார்த்தால் இவள் இளவரசி ஏற்கனவே இளவரசன் பாண்டுங்க்குக்கு சொந்தமானவள் ஆகிறாள். அதனால் நேரடியாக மறுக்க முடியாத நிலையில் அவனது விருப்பத்துக்கு எப்படியவது தடை போடவேண்டும் என்று சிந்திக்கிறாள். இறுதியில் இளவரசன் பாண்டுங்கை திருமணம் செய்து கொள்ள இரண்டு நிபந்தனைகளை அவன் முன் வைக்கிறாள். அவை இரண்டையும் அவன் நிறைவேற்றினால் அவனை திருமணம் செய்துகொள்ள தான் சம்மதிப்பதாக ஒப்புக்கொடுக்கிறாள். அவற்றில் ஒன்று அவன் ஒரு உலகிலே இதுவரை இல்லாத ஆழமுள்ள பாதாள கிணறு ஒன்றை அமைக்க வேண்டும். மற்றொன்று ஒரே இரவில் ஆயிரம் கோயில்களை கட்டவேண்டும் என்பது, இளவரசனும் அவற்றை புன்முறுவலுடன் ஏற்றுக்கொள்கிறான்.
ராமாயணத்தில் அனுமன் இலங்கையை எரிக்கும் காட்சி
சவாலை ஏற்ற இளவரசன் பாண்டுங் தனது தவவலிமையினாலும் பூதகணங்களின் உதவியுடனும் பாதாள கிணற்றை அமைத்து முடிக்கிறான். தனது முதல் நிபந்தனை தோல்வியுற்றதை கண்ட இளவரசி ஒரு உபாயம் செய்கிறாள். தான் அமைத்த கிணற்றின் ஆழத்தை இளவரசன் உள்ளே இறங்கி நிரூபிக்க வேண்டும் என்கிறாள். அதை ஏற்றுக்கொண்ட இளவரசன் அதன் உள்ளே இறங்குகிறான். இந்த கணத்தை பயன்படுத்தி தனது மந்திரி பதி போக்கோ மூலம் அந்த கிணற்றை பெரிய பாறைகளை கொண்டு மூடச்செய்கிறாள். ஆனால் சகல கலைகளையும் கற்றுத்தேறிய பாண்டுங்குக்கு அதிலிருந்து மீண்டு வெளியே வருவது ஒன்றும் பெரிய விடயமாக இருக்கவில்லை. தன்னை தந்திரத்தால் வீழ்த்த நினைத்தவளின் மீது அவனுக்கு பெரும் கோபம் வருகிறது. ஆனாலும் அவளுடைய அழகு அவனை சாந்தப்படுத்திவிடுகிறது. தனது தந்திரத்தில் வீழாத இளவரசனைக் கண்டு அதிர்ச்சியுற்ற லோரோ ஜோங்கரங் சுதாரித்துக்கொண்டு தனது அடுத்த நிபந்தனையை நிறைவேற்ற சொல்கிறாள். புன்முறுவலுடன் அதையும் ஏற்றுக்கொண்ட இளவரசன் காரியத்தில் இறங்குகிறான். போரிலேயே தான் தவமிருந்து பெற்ற பல அஸ்திரங்களை இழந்துவிட்டதால் எஞ்சிய ஆற்றலைக்கொண்டு அவனது தவ வலிமையால் தேவ லோகத்திலிருந்து பூத கணங்களை வரவழைக்கிறான். அவர்களும் அன்று ஒருநாள் இரவு மட்டும் பொழுது புலரும் நேரம் வரை அவனுக்கு ஒத்துழைக்க ஒத்துக்கொள்கிறார்கள். அவர்களின் உதவியுடன் தனது பரிவாரங்களை கொண்டு கோவில்களை அமைக்க ஆரம்பிக்கிறான். இரவு முழுவதும் கோவில்கள் எழுப்ப படுகின்றன. 999 கொவில்கள் கட்டி முடிக்கப்பட்டு ஆயிரமாவது கோவில் துவங்கப்பட்ட நிலையில் இளவரசி இன்னொரு சூழ்ச்சி செய்கிறாள். தன் அரண்மனை பணிப்பெண்களை திரட்டி கிழக்கு திசையில் சென்று பெரிய தீயை மூட்ட சொல்கிறாள். மேலும் தனது மக்களை விடியலை நினைவுறுத்தும் பொருட்டு தங்கள் வீட்டு உரல்களில் அரிசியை குத்தச்சொல்கிறாள். அந்த காலத்தில் பொழுது புலரும் போது நெல் குத்தி அன்றைக்கான உணவை சமைப்பதுதான் அந்தப்பகுதி மக்களின் வழக்கமாம். இப்பகுதியில் இன்றும் கூட கைகுத்தல் சிகப்பரிசியில் வெல்லம் சேர்த்து தினுசு தினுசான பலகாரங்கள் செய்கிறார்கள். என்ன திடீர்ன்னு சாப்பாட்டு பக்கம் போய்விட்டோம்? சரி சரி கதைக்கு வருவோம்.
லோரோ ஜோங்கரங் கதை சாவா நாடகப்பாணியில்
கிழக்கு திசையில் வெளிச்சத்தையும் நெல் குத்தும் ஓசையையும் கேட்ட காக்கைகள் பொழுது புலர்ந்துவிட்டது என்று கருதி கரைய ஆரம்பிக்கின்றன. இதனை கண்ட பூத கணங்களும் பொழுது புலர்ந்துவிட்டதாக எண்ணி தமது வேலையை நிறுத்திவிட்டு இளவரசனிடம் வந்து தாங்கள் வானுலகம் திரும்ப வேண்டிய நேரம் வந்துவிட்டதால் மேற்கொண்டு தொடரமுடியாது என்று கூறி மறைந்துவிட்டனர். இதனால் இளவரசன் பாண்டுங் குழப்பமடைகிறான். இன்னும் போழுது புலரும் பொழுது நேரம் ஆகவில்லை என்று அவனது உள் மனது சொன்னது. ஆனாலும் இளவரசி லோரோ ஜோங்கரங்கை கூப்பிட்டு கோவில்களை எண்ணிப்பார்த்துக்கொள்ள சொல்கிறான். அவள் சரியாக 999 கோவில்களை எண்ணி முடிப்பதற்கும் உண்மையான பொழுது புலர்வதற்கும் சரியாக இருக்கிறது. தான் கேட்டதற்கு ஒரு கோவில் குறைவாக இருப்பதால் தான் இளவரசனை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று சொல்கிறாள் லோரோ ஜொங்கரங். அவளது சூழ்ச்சியால் தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த இளவரசன் பாண்டுங் கடுங்கோபம் கொள்கிறான். உனக்கு இன்னும் ஒரு கோவில்தானே வேண்டும்? அந்த கோவிலுக்கு நீயே மூலக்கல்லாக போய்விடு என்று இளவரசிக்கு சாபம் கொடுக்கிறான். அவளும் கற்சிலையாக மாறிவிடுகின்றாள்.. அந்த சிலைதான் இந்த பெரம்பனான் கோவிலின் ஒரு பகுதியில் துர்கையின் உருவமான மகிசாசுரமர்த்தினியாக வீற்றிருப்பதாக ஐதீகம், இதனால்தான் இந்த கோவில்கள் அனைத்தும் அடங்கிய பகுதி “சண்டி லோரோ ஜொங்கரங்” என்று அழைக்க படுவதாக இங்கிருப்பவர்கள் சொல்கிறார்கள். (சண்டி – கோவில் / லோரோ- மெல்லிய / ஜோங்கரங்- கன்னி) இங்கிருக்கும் இங்குள் கல்வெட்டு ஒன்றும் இக்கதையை கூறுகிறது. இக்கதை இன்னும் பல விதங்களில் இந்தப்பகுதி மக்களிடம் புழங்குகிறது. நான் சொன்னதுதான் சற்று எளிமையானது??!!. மேலும் இளவரசிக்கு உதவி செய்தபடியால் அந்த பகுதி பெண்களுக்கும் திருமணம் வாய்க்காமல் கடவது என்று சாபம் கொடுககப்பட்டதாகவும் சொல்கிறார்கள். அதனால் இக்கோவில் பகுதியில் காதல் செய்தால் காதல் நிறைவேறாது என்ற நம்பிக்கையும் இங்கு நிலவுகிறது. ஆனால் நாம் சென்றிருந்த போது நிறைய காதல் சோடிகளை பார்க்க முடிந்தது.( பயலுகள் புள்ளைங்கள கழட்டி விடுவதற்காகவே கூப்பிடு வந்திருப்பானுங்க என்று நினைக்கிறேன்)
சண்டி சேவு
இப்படி அறைகுறையாய் விடப்பட்ட ஆயிரமாவது கோவில் இந்த ஆலய வளகத்தில் உள்ளதாக வேறு ஒரு கோவிலை காட்டுகிறார்கள். அது “சண்டி சேவு” என்று அழைக்கப்படுகிறது. சாவா மொழியில் சண்டி என்றால் கோவில் என்றும் சேவு என்றால் ஆயிரம் என்றும் பொருள்படும். பிற்காலத்தில் வந்த புத்த மத அரசர்களால் இந்த ஆயிரமாவது கோவில் புத்த கோவிலாக மாற்றப்பட்டதாகவும் அதனால் “லோரோ ஜொங்கரங் சிலை” சிவன் சன்னிதிக்கு அருகில் தனி சன்னிதியில் பின்னாளில் மாற்றப்பட்டதாகவும் கதை சொல்கிறார்கள். கதை உண்மையோ இல்லையோ ஆனால் சுவாரசியமாக இருக்கிறது. இந்தக் கதையையும் ராமாயண மகாபாரத கதைகளையும் திறந்த வெளி மேடை நாடகங்களாக பாலி நாடகப்பாணியில் இக்கோயில் வளாகத்தில் நடத்துகிறார்கள். இக்கோவிலை பின்புலமாக கொண்டு ஒளி ஒலி காட்சிகளுடன் நடத்தப்படக்கூடிய இந்தக்காட்சிகள் சுற்றுலாப் பயணிகளை பரவசத்தில் ஆழ்த்துகின்றன. அழகான் பின் புல ஒளி அமைப்பில் இந்த கோவிலைக் கான்பதே அலாதியானது. இந்த முழு பதிவையும் இளவரசி கொடியிடை கன்னியின் கதையே அடைத்துக்கொண்டுவிட்டதால் இந்த கோவிலின் அமைப்பு பற்றிய செய்திகள் அடுத்த பதிவில் இடம்பெறும். கதையை சற்று சவ்வ்வ்வாக இழுத்திருந்தால் தயவு செய்து பொருத்தருள வேண்டும்! ஏனென்றால் நம் கதை சொல்லும் திறன் அவ்வளவுதான்! .

Wednesday 16 September 2009

கொடியிடை கன்னி! (இந்தோனேசிய கோவில்கள்-பாகம் 1)

பாலி நாட்டியப் பெண்
இந்தோனேசியா என்றால் தேவதைகளின் தேசம் என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அது உண்மையென்பதை இத்தேசத்தின் உட்பிரதேசங்களில் பயணப்பட்டபோது புரிந்தது. எங்கு பார்த்தாலும் கடலும் பசுமை போர்த்திய மலைகளும் பச்சை பசேலென்ற காடுகளும் நிறைந்த அழகிய தீவு தேசம் இது. சுமாராக முப்பது சதவீத காடுகளும் இயற்கை வளங்களும் பேராசைக்காரர்களால் அழிக்கப்பட்டுவிட்ட போதும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது இந்த தேசம்.
பச்சை தேசம்
ஒரு காலத்தில் முழுக்க முழுக்க இந்து சமயத்தை கொண்டிருந்த இந்த தேசம் இப்போது உலகத்தில் அதிக இசுலாம் மக்கள் தொகை கொண்ட தேசமாக மாறியிருக்கிறது. இப்போது இந்து சமயத்தை பின்பற்றுபர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டுமே. அதுவும் பெரும்பான்மையான இந்துக்கள் பாலித்தீவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பின்பற்றும் இந்து மதம் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து மதத்தில் இருந்து சற்றே வேறுபட்டது. அதைப்போல இந்நாட்டின் இசுலாம் மக்களின் கலாச்சாரமும் மற்ற நாடுகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. அதைப்பற்றியெல்ல்லாம் தனிப்பதிவில் சொன்னால்தான் நன்றாயிருக்கும். இப்போது இந்த பதிவின் கருவுக்கு வருவோம். இவ்வாறு இந்து சமயம் தழைத்தோங்கியிருந்த ஒரு தேசத்தில் அவர்களின் கலாச்சார சின்னங்களும், வழிபாட்டு தலங்களும் இல்லாமல் இருந்திருக்குமா? என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் பண்டைய மத்திய சாவாத்தீவில் கட்டப்பட்ட இன்றைக்கும் நம் புருவங்களை சற்றே உயரச்செய்கிற ஒரு இந்து கோயில் பற்றித்தான் இந்த பதிவில் சொல்லவிருக்கிறேன்.
பெரம்பனான் ஆலயத்தின் வெளித்தோற்றம்
உலகிலேயே பெரிய இந்துக்கோவில் கம்ப்பொடியாவில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்தான் என்பது நமக்கு தெரியும். காக்கும் கடவுளான விஷ்னுவுக்காக சூரியவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயில் பிற்பாடு வந்த பௌத்த மன்னர்களால் புத்த விகாரமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவாலயம் இன்றளவும் இந்தோனேசியாவின் சாவா தீவில் பெரம்பனான் என்ற இடத்தில் இருக்கிறது. . இந்த கோவில் இந்தோனேசியாவின் பெயர்பெற்ற சுற்றுலா தளமான யோக்கியகர்த்தா நகருக்கு அருகில் 15 கிமீ தொலைவில் உள்ளது. இக்கோயிலின் பெரும்பகுதி இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு அழிந்துவிட்டது. மீதமிருந்த எச்சங்களை அரும்பாடுபட்டு சீர்படுத்தி கோயிலின் முக்கிய பகுதிகளை மீட்டு அடுத்த சந்ததியிடம் சேர்த்திருக்கிறது இந்தோனேசிய அரசு. ஒரு இசுலாமிய அரசாக இருந்த போதும் தமது நாட்டின் கலைப்பொக்கிழங்களை அவை வேற்று மதத்தை சேர்ந்தவைகளாக இருந்த போதும் பாதுகாத்து உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தென்கிழக்காசியாவின் பிரபலமான் கிமீர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது எனபதற்கான போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் சாவா தீவின் மற்ற பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுக்களில் உள்ள குறிப்புகளை கொண்டு இக்கோயில் கிபி எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்காலப்பகுதிகளில் இந்த பகுதியில் இருந்த மாத்தாராம் பேரரசை ஆண்ட இந்து மன்னன் ராக்கை பிகாதன் என்பராலோ அல்லது சஞ்சய பேரரசை ஆண்ட இன்னொரு இந்து மன்னன் பாலிதுங் மகா சம்பு என்பவராலோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தெரிய வருகிறது. சாவா தீவில் கிடைத்திருக்கும் பல கல்வெட்டுகளிலும் இந்த கோவிலைப்பற்றி மிகச் சிறப்பாக பேசப்படுகிறது. ராக்கை பிகாத மன்னன் இறந்த பிறகு அவனது இறுதி ஊர்வத்தை சித்தரிக்கும் கல்வெட்டுகளிலும் அவன் கட்டிய இக்கோவிலைப்பற்றி சிறப்பாக தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாம் அக்காலகட்டத்தில் இக்கோயில் சிறந்து விளங்கியதை நமக்கு உணர்த்துகிறது. ஆனால் இக்கோயில் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த பேரரசுகள் வீழ்ச்சியை கண்டுவிட்டன. இதனால் இவர்களின் ஆட்சிகாலத்திற்கு பிறகு இக்கொவிலைச்சுற்றி வாழ்ந்த மக்கள் மற்ற இடங்களுக்கு பெயர்ந்திருக்கின்றனர். இதற்கு அங்கு ஏற்ப்பட்ட அடுத்தடுத்த இயற்கை பேரழிவுகள் கூட ஒரு காரணமாயிருக்கலாம் என அறியப்படுகிறது. அதற்கு பிறகு பல நூற்றாண்டுகள் இக்கோவில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்குள் மறைந்து இருந்திருக்கிறது.
புனரமைப்பு செய்வதற்கு முன் கோவிலின் நிலை
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இப்பகுதியில் காலடி எடுத்து வைத்தார்கள். 1733 ஆண்டு டச்சுக்காரர்களின் ஆட்சிகாலத்தில் இப்பகுதியை ஆராச்சி செய்ய வந்த சி ஏ லோன்ஸ் என்ற டச்சுக்காரர்தான் முற்றிலும் சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இக்கோவில் பகுதியை கண்டு பிடித்து உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு 1885 ஆம் ஆண்டு லைசர்மேன் என்பவர் இக்கோவிலை சீரமைக்க பல முயற்சிகள் மேற்கொண்டு இந்த இடத்தை சுத்தப்படுத்தினார். 1902 ஆம் ஆண்டு வாக்கில் புனரமைப்பு வேலைகள் வேன் எர்ப் என்பவரின் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையில் கோவிலின் பல பாகங்கள் மக்களால் விருப்பப்படி எடுத்து செல்லப்பட்டுவிட்டன. இருந்த போதிலும் இந்தோனேசிய அரசு மற்றும் யுனஸ்கோவின் அயராத முயற்சியினால் சீரமைக்கப்பட்ட முதல் பகுதி 1953 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அடுத்த பகுதி 1991 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகும் தொடந்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 2004 மற்றும் 2006 ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களினால் இக்கோயில் மீண்டும் பாதிக்கப்பட்டது.
கோவிலின் உள்பிரகாரங்கள்
மறுகட்டுமானம் அல்லது புணரமைப்பு செய்யப்பட்ட கோவிலாக இருந்தாலும் பாரப்பதற்கு அவ்வாறு தெரியவே இல்லை. புணரமைப்பு வேலைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்களின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். 75% பாகங்கள் கிடைத்த கோவில் பகுதிகளே சீரமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் கிடைக்காத கோவிலின் எஞ்சிய பகுதிகள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சிதறிக்கிடக்கின்றன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு நாம் பார்க்கும் இந்த கோவிலின் எஞ்சிய பகுதிகளே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்றால் இந்த கோவில் கட்டப்பட்டபோது எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கும் என்று கற்பனைக்கூட செய்து பார்க்க முடியவில்லை. அத்தனை அழகாக பிரமாண்டமாக இருக்கிறது இந்த கோவில். அதெல்லாம் சரி………. கோயில் பற்றிய இந்த பதிவுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உண்மையில் இது ஒரு சிவாலயமாக இருந்தாலும் இந்த கோவில் ”சண்டி லோரோ ஜோங்கரங்” என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. அதாவது சாவா மொழியில் ”மெல்லிய கன்னி” கோவில் என்று பொருள்படும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதைப்பற்றியும் இக்கோயிலின் வடிமைப்பு பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம். .