எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Thursday, 29 January 2009

கருணாநிதி புடவைக் கட்டிக்கொள்ளலாம்?

நம் அரசியல்வாதிகளை நினைத்தால் வயிறு பற்றி எரிகிறது. சிங்கள மிருகம் சரத பொன்சேகா தமிழக அரசியல்வாதிகளை கோமாளிகள் என்று சொன்னபோது இவர்கள் கொதித்தெழுந்தார்கள். அவனாவது வாயால்தான் சொன்னான். ஆனால் மத்தியில் ஆட்சி செய்யும் மானங்கெட்ட காங்கிரசு அரசோ இவர்களை கோமாலிகளைவிட கேவலமான கேனையனாக்கிவிட்டார்கள். ஆனால் நம்மவர்களுக்கு அது உரைத்ததாக தெரியவில்லை. உரைக்கவும் உரைக்காது. அவர்கள் போட்ட எலும்பு துண்டை நக்கியே வளர்த்த உடலாயிற்றே. கருணாநிதியும் சட்டசபையில் பிராணாப் இலங்கைக்கு புறப்பட்டுவிட்டதாக அறிவித்து முழக்கமிட்ட அன்பழகனும் அதற்கு மேசைகளைத்தட்டி ஆரவாரம் செய்த ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் வேட்டிக்குப் பதில் புடவைக் கட்டிக்கொள்ளலாம். இவர்கள் யாரை முட்டாளாக்குகிறார்கள் என்று தெரியவில்லை. இல்லை ஒட்டுமொத்த தமிழினமும் காதில் பூச்சுற்றிக்கொண்டு திரிகிறார்கள் என்று நினைக்கிறார்களா? பிரணாப் ராசபக்சேவுடன் விருந்துசாப்பிட்டுவரத்தான் இவர்கள் டெல்லிக்குப் பறந்து சென்று மனு கொடுத்துவிட்டு வந்தார்களா? அதுவும் எங்கள் வரிப்பணத்தில்! நாம் கொடுத்த வரிப்பணத்தில் சப்ளை செய்த ஆயுதங்களால்தான் நம் சகோதரிகளின் தாலி அறுக்கிறான் சிங்களவன். இந்தியாவின் இறையாண்மையென்று எதையோ சொல்லி எங்களை ஏமாற்றும் துரோகிகளே! எங்களிடம் இருந்து பெற்ற வரிப்பணத்தைக்கொண்டே எங்களின் சொந்தங்களை கருவறுக்க உதவுவதுதான் காந்தி கண்ட தேசத்தின் இறையாண்மையா? மானங்கெட்டத்தமிழனே சிந்திக்கமாட்டாயா? தங்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிக்கும் ஒரு நாட்டில் வாழும் தமிழன் தன்னை இந்தியன் என்று எப்படி மனமார இனங்காட்டிக்கொள்வது? திபத்திற்கும் வங்காளதேசத்திற்கும் ஒரு கொள்கை எங்கள் தமிழனத்திற்கு ஒரு கொள்கையா? நீங்கள் பிரித்துக்கொடுத்த வங்கதேசத்தில் இருந்துதானே அனுதினம் தீவிரவாதி எங்களுக்கு குண்டுவைக்கிறான். உங்களின் ஏகாதிபத்திய ஆசையால் போர்களில் எங்கள் சொந்தங்கள் உயிர்விட்டதற்கு நீங்கள் தானே காரணம். இப்படி எங்களின் பல ஆயிரம் உயிர்களை அழித்த நீங்கள் இங்கு போய்விட்ட ஒரு உயிருக்காக ஓலமிட்டு எங்கள் இனத்தையே அழிக்க நினைக்கிறீர்களே? உங்களின் தவறான முடிவால் அழிந்துபோன எங்களின் ஆயிரக் கணக்கான உயிர்களுக்கு யார் பதில் சொல்லப்போகிறீர்கள்? நாங்கள் என்ன உங்களை விடுதலைப்புலிகளுக்கு ஆயுதமா தரச்சொன்னோம். அங்கே போரைத்தானே நிறுத்தச்சொன்னோம். போர் என்ற பெயரில் ஒரு இனத்தையே அழித்துக் கொண்டிருக்கிறான் சிங்களவன். எங்களின் ஏதுமறியா குழந்தைகளும் சிறுவரும் பெண்களும் கொல்லப்படுகிறார்கள். புலிகளின் நிலைகளை வேவு பார்த்துச்சொல்கிற உங்கள் விமானங்களின் கண்களுக்கு அப்பாவி மக்கள் கூண்டோடு கொள்ளப்படுவது மட்டும் தெரியவில்லையா? ஐநா வும் சர்வதேச சமூகமும் கண்டிக்கிற போது நீங்கள் மட்டும் விருந்துக்கு போய் கொட்டிக்கொள்கிறீர்களே? நீங்களெல்லாம் மனிதர்களா? இன்னும் இவர்களின் அரசுகளில் ஒட்டிக்கொண்டு இன்னும் சில்லரைகளை பொறுக்கிக்கொண்டிருக்கும் தமிழ் மந்திரி அவதானிகளே! உங்களின் உடம்பில் ஒடுவது என்ன? விடுதலைப்புலிகள் ஆயுதங்களை போட்டுச் சரணடைந்தால் பிரச்சினைத்தீரும் என்று கூறும் செயலலிதாவே! ஏன் நீங்கள் இதையே சிங்களவனைப் பார்த்து சொல்லக்கூடாது? விடுதலைப்புலிகளுக்காக சிங்களவர்கள் அப்பாவி பொதுமக்களை கொள்வதை நீங்கள் நியாயப்படுத்துகிறீர்களா? தமிழினத்தின் அழிவைப்பற்றி உங்களுக்கென்ன கவலை. அவனதான் நீங்கள் ஏறி மிதித்தாலும் உங்கள் கால்களில் விழுந்துகிடக்கிறானே. தன் இனத்தை அழிக்கும் சிங்களவனுடன் கைகோர்க்கும் அரக்கிகளையும் அம்மா என்று அழைத்து கொண்டாடும் மானங்கெட்ட இனம் தமிழினமே! உன்னை யார் காப்பாற்றுவது? காட்டிக்கொடுத்த கருணாவுக்கு மூன்று பக்கம் ஒதுக்கும் பத்திரிக்கைகளே! எங்கள் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டபோது மட்டும் வாயை இறுக்கி மூடிக்கொள்கிறீர்களே! ஏன்? உங்களின் மேலாதிக்க வெறி இன்னும் அடங்கவில்லையா? எம்மக்கள் போடும் பிச்சைக் காசிலே கொழுத்த நீங்கள் சாப்பிட்ட இலையிலேயே மலம் கழிக்கிறீர்களே? உணர்வுள்ள தமிழர்களே ! இனியாவது விழித்தெழுங்கள்! இந்த மானங்கெட்ட அரசியல்வாதிகளை புறந்தள்ளுங்கள். நம்மால் இயன்ற அளவுக்கு நம் எதிர்ப்பை சர்வதேச சமூகத்திற்கு தெரிவியுங்கள். தமிழினத் துரோகிகளை உலகுக்கு வெளிச்சமிட்டுக்காட்டுங்கள்.

Tuesday, 27 January 2009

சுதானமா இருங்கப்பு !

பொருளாதார நெருக்கடி வந்தாலும் வந்தது பெரிய நிறுவனம் சின்ன நிறுவனம் என்று வித்தியாசமில்லாமல் வேலை பார்ப்பவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கி நிலைமை எக்குத் தப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த கோதாவில் என் நண்பர்கள் சிலர் வேலையை இழக்கவேண்டி வந்துவிட்டது. இவ்வாறு வேலையிழந்த எனது நண்பர் ஒருவர் ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தின் மூலம் உலகின் முன்னனி நிறுவனம் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த இணையத்தளம் இந்தியாவில் மிகப்பிரபலமான ஒன்று. சிறிது நாட்களில் அந்நிறுவனத்திலிருந்து ஒரு வினாப்பட்டியலைக் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விரைவாக பதிலளிக்கும்படி கேட்டிருந்தார்கள். நண்பரும் அடித்து பிடித்து பதில் தயார் செய்து அனுப்பினார். ஒரு வாரத்திற்கு பிறகு இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதாவது முதற் கட்ட தேர்வை நண்பர் கடந்துவிட்டதாகவும் அடுத்த கட்டத்தேர்வு நேரிலோ அல்லது தொலைபேசியிலோ நடைபெறும் என்றும் அதற்கு தயாராக இருக்கும்படியாகவும் தெரிவித்திருந்தார்கள். அடுத்து சில நாட்களில் லண்டனில் இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து அழைப்பதாகச் சொல்லி ஒரு துரை பேசினார். அப்புறம் தசு புசு என்று கேள்வி கேட்டு பின்னினார். நம் நன்பரும் அவரால் முடிந்தவரை பதில் சொல்லி அசத்தினார். துரை அவர் பதிலில் திருப்தி அடைந்ததாகவும் விரைவில் பதில் தருவதாகச் சொல்லி துண்டித்தார். நண்பனும் என்னிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டான். நானும் அவனை பார்த்து பெருமூச்சு விட்டேன். அப்புறம் சில நாட்களுக்கு பதிலே இல்லை. அதற்குள் நண்பர் இங்கேயே ஒரு நிறுவனத்தில் படாத பாடுபட்டு வேலை வாங்கிவிட்டார். இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் அவருக்கு அந்நிறுவனத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நன்பர் அந்த குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டதாகவும் அதற்கான கடிதத்தின் மென்படிமத்தையும் இணைத்திருந்தார்கள். அசல் படிமம் விரைவில் அவரின் அவரின் ஒப்புதலுக்குப்பின் அனுப்பப்படும் என்று எழுதியிருந்தார்கள். நண்பருக்கு கையும் புரியவில்லை காலும் புரியவில்லை. பிரயத்தனப்பட்டு வங்கிய வேலையை விட்டுவிடலாமா அல்லது புதியதாய் கிடைத்திருக்கும் இந்த வேலையை எடுத்துக்கொள்ளவேண்டாமா என்று ஒரே குழப்பம். இந்த வேலை லண்டனில் இருப்பதோ சகார்த்தாவில். அவருக்கு மேற்குப் பக்கத்திய வாய்ப்பை நழுவவிட விருப்பம் இல்லை. இறுதியாக என்னிடம் வந்தார். நான் அவரிடம் ஒவ்வொரு விபரத்தையும் பொறுமையாக கேட்டேன். சில விடயங்கள் சற்று எங்கோ இடிப்பதுபோல் உணர்ந்தேன். அவரிடம் பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டு அவருக்கு வந்த மின்னஞ்சல்களை ஆராய்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. முதல் காரணம் அந்த மின்னஞ்சல்கள் வந்த முகவரி அந்த நிறுவனத்திற்கு உரியதல்ல. இரண்டாவது அந்த கடிதம் தெரிவித்த சில விடயங்கள் அபத்தமானவை. நண்பருக்கு இவற்றை விளக்கி சொல்லிவிட்டு இருக்கும் வேலையை உருப்படியாக பார்க்கச்சொன்னேன். இருந்தாலும் அடுத்தது என்ன நடக்கிறது என்று பார்க்க அந்த வேலையை ஏற்றுக்கொள்வதாக சொல்லி பதில் அனுப்பச் சொன்னேன். அடுத்து வந்த மின்னஞ்சல் இவர்களின் சதியை வெளிச்சமிட்டுக்காட்டியது. அது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சட்ட அலோசகரிடமிருந்து அனுப்பபட்டிருந்தது. அதாவது அக்குறிப்பிட்ட நிறுவனம் விசாவை ஏற்பாடு செய்யச்சொல்லி இவர்களுக்கு கோப்புகளை அனுப்பி இருப்பதாகவும் அதற்காக ஏற்பாடுகளை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதற்கான செலவை முன்கூட்டியே அனுப்பவேண்டும் என்றும் விமான சீட்டை வேலை தரும் நிறுவனம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் வந்த முகவரியும் முதல் மின்னஞ்சல் வந்த முகவரியும் ஒன்றுதான். இதிலிருந்தே இது ஒரு ஏமாற்றுவேலை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும். அதுவும் பணத்தை அவர்கள் சொல்லும் உள்ளூர் வங்கி கணக்கில் செலுத்தவேண்டுமாம். என்ன பித்தலாட்டம் பாருங்கள். மேலும் பலவிதங்களில் ஆராய்ந்து இது முழுக்க ஏமாற்றுவேலை என்று அறிந்து கொண்டோம். முதல் வேலையாக அனைத்து தகவல்களையும் உண்மையான நிறுவனத்துக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கச்சொன்னோம். கடிதங்களைப் பார்த்தால் அச்சு அசலாக இருக்கிறது ( இங்கே இணைத்துள்ளேன்). இதை நம்பி இருக்கும் வேலையை விட்டிருந்தால் நண்பரின் நிலைமை பரிதாபமாக போயிருக்கும். நல்ல வேலை நாங்கள் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டோம். இதுவரை பரிசு விழுந்திருக்கிறது, கேட்பாரற்ற வங்கி பணம் இருக்கிறது என்று ஏமாற்றியவர்கள் இப்போது வேலை தேடுபவர்களை குறிவைத்திருக்கிறார்கள் போலும். இன்னும் எந்தந்த ரூபத்தில் வருவார்களோ! சுதானமா இருங்கப்பு!