எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Sunday 6 February 2011

கேக்குறவன் கேணையனா இருந்தா............!


கடந்த சில மாதங்களாக எங்கும் ஸ்பெக்ட்ரம் எதிலும் ஸ்பெக்ட்ரம். இந்த பிரச்சினையை அலசாத சந்துபொந்துகள் இல்லை. இவைகளில் டீக்கடை பென்ச் பாணி அலசல்கள்தான் அதிகம். அதிலும் ஒரு லட்சத்தி எழுபத்தாறாயிரம் கோடின்னா எத்தனை சுழியம் போடனும்? ராசாவுக்கும் தேன்மொழிக்கும் இதுவாமே? அந்தம்மா ராடியா நம்ம ரத்தன் டாட்டாகிட்ட ஏதோ கோடுவேர்டுலலாம் பேசிச்சாமே? போன்ற நவரச கேள்விகள்தான் அதிகம். என்ன பன்னுறது எல்லாத்திலும் நமக்கு ஒரு கிக் தேவைப்படுது. சாதாரண மக்களாவது பரவாயில்லை. தன்னை பெரிய அறிவு ஜீவிகள்னு காட்டிக்கிற கூட்டம் பிடிச்சிகிட்டு தொங்கற விழயம் அதவிட காமெடி. அவங்களுக்கு தலைமை கணக்காயர் கொடுத்திருக்கிற 1,76,000 கோடி இழப்பு என்கிற கணக்கு லாஜிக்கா இல்லையாம். அவர் சொல்ற கணக்குப்படியான பங்குகளின் மதிப்பு எல்லாம் காகிதத்தில்தான் உள்ளதாம். பங்குகளை விற்று வீட்டுக்குள்ள நோட்டை அடிக்கி வைத்தால்தான் அது உண்மையான் மதிப்பு என்கிறார்கள். அப்படியென்றால் நாம் அவ்வப்போது உலக பணக்காரார்கள் வரிசைகள் பத்தி பேசறமே? அவங்கள்ளாம் பணத்தை நோட்டா அடுக்கி வங்கியிலா வச்சிறுக்காங்க? எல்லாம் அவர்களின் நிறுவன பங்குகளின் மதிப்பை கணக்கிட்டுத்தானே சொல்லப்படுது. அப்போது மட்டும் வாயை பொளந்துகிட்டு பார்க்கிறாங்க. அப்பவெல்லாம் இந்த அறிவு ஜீவித்தனம் எங்க போச்சுன்னு தெரியல. அதைவிட பெரிய கொடுமை தெரியுமா? இந்த உலக பணக்காரங்களுக்கெல்லாம் இருக்கிற சொத்து மதிப்ப விட வங்கிகளுக்கு இவங்க கொடுக்கவேண்டிய கடன்தான் அதிகம். சரி அதையெல்லாம் விடுங்க! 


இது எல்லாவிற்றையும்விட மிகக் கொடுமையான விஷயம் இந்த கருணாநிதியும் மன்மோகன்சிங்கும் சோனியாகாந்தியும் விடுகின்ற அறிக்கைகள். மலைமுழுங்கி மகாதேவன்கள் போல இவ்வளவு பணத்தையும் ஆட்டய போட்டதும் இல்லாம மக்களை வடிகட்டின முட்டாள்களாக நினைக்கின்ற இவர்களின் போக்குதான் நம் ரத்தத்தை கொதிக்கவைக்கிறது. கருணாநிதியின் அறிக்கைகளைப் பாருங்கள்.

இராசா இந்தத் (தொலைத் தொடர்புத்) துறை அமைச்சராகப் பொறுப்பேற்று செய்த குற்றம் என்ன என்று பார்த்தால், ஏழை. எளிய மக்களுக்கும் சேல்போனை கொண்டு சென்றதுதான்
”ராஜாவை பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.   வாழ்த்த கடமைப்பட்டிருக்கிறேன்”

கேக்குறவன் கேணையா இருந்தா எருமைக்கூட ஏரோப்பிளைன் ஓட்டுமாம். இப்படித்தான் இருக்கிறது கருணாநிதியின் அண்மைக்கால அறிக்கைகளை படிக்கும்போது.
ஒரு வாதத்திற்காவது கருணாநிதி சொல்வது போன்று இராசா குற்றமற்றவர் என்றே வைத்துக்கொள்வோம். அப்படியென்றால் இராசாவை கைது செய்வதை இவரால் ஏன் தடுக்கமுடியவில்லை? இராசாவை கைது செய்தது யார்? அமெரிக்காவின் புலனாய்வு பிரிவா? அல்லது பாகிஸ்தானின் புலனாய்வு பிரிவா? நீங்கள் பங்கேற்று ஆட்சிபுரியும் மத்திய அரசின் அங்கமான மத்திய புலனாய்வு பிரிவுதானே? அதுவும் நேற்று வழக்கு போட்டு இன்று கைது செய்தார்களா? இரண்டு ஆண்டுகால விசாரணைக்குப்பின் நீதிமன்றம் சாட்டையை சுழற்றியபின்தானே கைது செய்தார்கள்? உங்கள் கூற்றுப்படி நிரபராதியான ஒரு முன்னாள் அமைச்சரையே அநீதியிலிருந்து ஆட்சியாளர்களாகிய உங்களால் காக்கமுடியவில்லையென்றால் இந்த நிலையிலிருக்கும் அப்பாவி மக்களுக்கு என்ன கதி? அப்பழுக்கற்ற உங்கள் கட்சி அமைச்சரின்மீது நடவடிக்கை எடுப்பதை வேடிக்கை பார்க்கும் பிரதமரை நீங்கள் ஏன் கண்டிக்கவில்லை? அவர் சார்ந்த காங்கிரஸ் கட்சியுடன் ஏன் உறவை ஏன் முறித்துக்கொள்ளவில்லை? மீண்டும் கூட்டணிக்காக அவர்கள் காலில் ஏன் போய் விழுகிறீர்கள்? மன்மோகன் அரசு பதவியேற்றபோது உங்களுக்கு அமைச்சரவையில் வேண்டிய இடங்கள் கிடைக்கவேண்டும் என்பதற்காக டெல்லியை முடக்கிப்போட்ட நீங்கள் இப்போது ஏன் அதை செய்யவில்லை? 

இந்த மாதிரியான முட்டாள்தனமான அறிக்கைகளால் கருணாநிதி யாரையெல்லாம் கேவலப்படுத்துகிறார் தெரியுமா?
- மிகப்பெரிய இந்திய நாட்டின் அடிப்படை ஜனநாயகத்தையும் அதன் அடிப்படை சட்ட திட்டங்களையும்
- மத்திய புலனாய்வு துறையையும் அதன் செயல்பாடுகளையும்
- இந்த பிரச்சினையை விவாதித்த நாடாளுமன்றத்தையும் அதன் உறுப்பினர்களையும்
- கொஞ்சமாவது மனசாட்சியுடன் செயல்படும் பத்திரிக்கையாளர்களை
- இன்றும் ஜனநாயகத்திற்கு உயிர் இருக்கினறது மக்களை உணரவைத்துக்கொண்டிருக்கும் நீதிமன்றங்களையும் அதன் செயல்பாடுகளையும்
- இவற்றிற்கெல்லாம் மேலாக இவர்களை ஓட்டுப் போட்டு தெர்ந்தெடுத்த மக்களை

என்னை கேட்டால் இவரது அறிக்கைகளை வைத்தே இவர்மீது வழக்கு தொடர்ந்து இவரையும் உள்ளே தள்ளவேண்டும். அப்போதுதான் இந்த நாட்டில் இன்னும் கொஞ்சநஞ்சம் நீதி உயிர்ப்போடு உள்ளதாக அர்த்தம்.

‘‘நல்ல நிர்வாகத்தின் ஆணி வேரையே ஊழல் தாக்குகிறது’’
”நாட்டின் புகழை கெடுப்பதாக ஊழல் உள்ளது”
”சர்வதேச அளவில் நமது நாட்டின் புகழை கெடுப்பதாக ஊழல் உள்ளது”

இவைகள் ஏதோ என்னைப் போன்ற கையகலாத பிளாக்கர்கள் எழுதிய வரிகள் இல்லை. சாட்சாத் இந்திய திருநாட்டை கட்டி ஆளும் அனைத்து அதிகாரங்களும் கொண்ட ஒரு பிரதமரின் வார்த்தைகள். ஊழல்வாதிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்துக்கொண்டு, ஊழல்வாதிகளை அமைச்சர்களாக ஆக்கிகொண்டு, ஊழலுக்கு அமைச்சரவையை கூட்டி அனுமதி வழங்கிவிட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து இரண்டு ஆண்டுகளாகியும் திட்டமிட்டு ஊழல்வாதிகளின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்துவிட்டு, நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவிக்கும்வரை ஊழல் வழக்கில் சிபிஐய்யின் கைகளை கட்டிப்போட்டுவிட்டு மன்மோகன்சிங் இன்று இவ்வாறு விசனப்படுவது எந்த விதத்தில் நியாயம். ஊழலுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கவேண்டிய தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களே ஊழலுக்கு உறுதுணையாக இருந்துவிட்டு இப்போது வெட்டியாக மேடையில் முழங்குவது வெட்கக்கேடானது.  

மன்மோகன்சிங்கை விமர்சித்தால் பலருக்கும் கோபம் வருகிறது. அவரை மிஸ்டர் கிளின் என்கிறார்கள். ஆரம்பத்தில் அவரை ஏகத்துக்கும் விமர்சித்த சுப்பிரமணியம்சாமி கூட இப்போது அடக்கி வாசிக்கிறார். ஆனால் என்னை கேட்டால் கருணாநிதியைவிட சோனியாகாந்தியைவிட அதிக விமர்சனத்திற்குரியவர் மன்மோகன்சிங்தான். ஊழல்வாதிகளைவிட மோசமானவர்கள் அவர்களை அடைக்காக்கும் மன்மோகன்சிங் போன்ற மிஸ்டர் கிளின் பிம்பம் கொண்டவர்கள்தான். இவரைப்போன்றவர்களின் பொய்பிம்பங்களுக்குப் பின்னால்தான் சோனியாகாந்தி போன்ற ஊழல்பெருச்சாளிகள் ஓடி மறைந்துகொள்கின்றன. மன்மோகன்சிங் உண்மையில் உண்மையானவர் என்றால் நீதிமன்றம் தலையிடும் முன்னரே இந்த பிரச்சினையில் அவர் நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும். அப்படி அவர் நடவடிக்கை எடுப்பதை தலைமை தடுக்கும் பட்சத்தில் தனது பதவியை உதறி இருக்கவேண்டும். ஊழல் பெருச்சாளிகளை மக்களுக்கு அடையாளம் காட்டியிருக்கவேண்டும். அதையெல்லாம் செய்யாமல் வெட்டியாக மேடைகளில் முழங்கி சுயபச்சாதாபம் தேடிக்கொள்வது வெட்கக்கேடானது. வேடிக்கையானது.