எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 29 April 2009

உண்ணாநிலை அறப்போராட்டத்தில் கலந்துகொள்வீர் !

உலகளவில் தனி ஈழ விடுதலை வேண்டி நமது உறவுகள் பல்வேறு வகையான போராட்டங்களை முன்னெடுத்துக்கொண்டிருக்கும் இவ் வேளையில் தமிழ்நாட்டில் உள்ள ஈழத்து உறவுகளும் தமது போராட்டங்களை முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர். இதன்படி எதிர்வரும் 30.04.2009 அன்று சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரில் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை திரு பழ. நெடுமாறன் அவர்களின் தலைமையில் பட்டினிப் போராட்டம் நடைபெற இருக்கின்றது. இதற்கு மேலும் வலு சேர்ப்பதற்காக வெளிநாட்டில் உள்ள நமது உறவுகள் இந்தியாவில் உள்ள தங்களது உறவினர்களுக்கு தொலைபேசியில் தொடர்புகொண்டு பெருமளவு அணிதிரண்டு ஒத்துழைப்பு வழங்குவதற்குமான செய்தியை பரிமாறி இப்போராட்டத்திற்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக்கொள்ளபடுகிறார்கள்.

Monday 27 April 2009

இறந்த தாயிடம் பாலருந்திய குழந்தை – ஈழத்தின் அவலம்!

ஈழத்தில் நடப்பவைகளை தினமும் தொலைக்காட்சியில் பார்த்துவிட்டு என்னால் ஒரு வேளை உணவு கூட அருந்துவது கடினமாய் இருக்கிறது என்றார் கவிஞர் தாமரை. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு நிம்மதியாக உண்பவன் உண்மையான தமிழனாக இருக்கமுடியாது என்றார் அவர். உண்மைதான். ஈழத்தில் நம் சொந்தங்கள் படும் இன்னல்களை பார்க்கும்போது நம்மால் இயல்பாக செயல்படவே முடியவில்லை. எந்நேரம் எந்த செய்தி வருமோ என்று மனம் கலங்கி நிற்கிறது. ஈழத்திலிருந்து தமிழர் புணர்வாழ்வு பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ள செய்தியை பாருங்கள். படிப்போரின் இதயத்தை உருக்கும் காட்சிகளில் இது சிறு துளிதான்! சிறிலங்காப் படையினரின் எறிகணை வீச்சில் தாய் இறந்து கிடப்பதை அறியாத குழந்தை அவரின் பால் குடித்துக்கொண்டிருக்கும் பரிதாபநிலையை என் கண்ணால் கண்டேன் என தமிழர் புனர்வாழ்வுக்கழக பணியாளர் தெய்வேந்திரன் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். தாக்குதல்களில் காயமடையும் மக்களை மருத்துவமனையில் பராமரிப்பில் ஈடுபடும் இவர் தெரிவிக்கையில் :
நாளாந்தம் எறிகணைத்தாக்குதல்களில் காயமடையும் மக்களை வாகனங்களில் இருந்து இறக்குவது முதற்கொண்டு பராமரிப்பது போன்ற பணிகளிலும் மற்றும் இறந்தவர்களை அடக்கம் செய்வது போன்ற பணிகளிலும் நான் ஈடுபட்டுவருகின்றேன். நான் பணிசெய்த நாட்களில் சிறிலங்கா அரசுப்படைகளின் கொடூரமான செயல்களை நேரி பார்த்து பேரதிர்ச்சியடைந்துவிட்டேன். என் பணிநாளில் ஒரு முப்பது வயது மதிக்கத்தக்க தாய், கணவன், பிள்ளை ஆகியோர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டனர். உடனே நாங்கள் அவர்களை இறக்கியவுடன் மருத்துவர்களால் அவர்கள் சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டனர். இருந்த போதிலும் அந்த தாய்க்கு பலத்த காயமாதலால் இரத்தம் போய்க்கொண்டிருந்தது. அந்நேரத்தில் குழந்தை அழவே குழந்தைக்கு அவர் பாலூட்டினார். பால் குடித்துக்கொண்டிருக்கும்போதே அத்தாய் இறந்துவிட்டார். இச்சம்பவம் இவரின் கணவருக்குத்தெரியாது. ஆனால் குழந்தை தொடர்ந்தும் பால் குடித்துக்கொண்டிருந்தது. இந்த பரிதாப சம்பவம் தன் மனதை உருகச்செய்துவிட்டது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
தான் உயிர்போகும் நேரத்திலும் தன் சேயின் பசிபோக்க போராடும் நம் சகோதரியை பாருங்கள் தமிழக மக்களே! இவர்களின் இந்த நிலைக்கு காரணம் நாம் கொடுத்த வரிப்பணத்தில் வாங்கிய ஆயுதங்கள்தான் மக்களே! ஐயகோ! நாம் வாழும் சமகாலத்திலா இந்த கொடுமை நடக்கவேண்டும்! நம் கண்ணெதிரே நடக்கும் இந்த கொடுமையை தடுத்து நிறுத்த கையாலாகமல் நாம் வாழும் வாழ்க்கை தேவையா? எம்மக்களை இந்த நிலைமைக்கு ஆளாக்கிய பேய் மனது படைத்த அரசியல்வாதிகளே! உங்களை காலம் மன்னிக்காது! இதற்கான விலையை நீங்கள் கொடுத்தே தீரவேண்டும். -------------------------------------------------------------------------------------- -------------------------------------------------------------------------------------- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.

Saturday 11 April 2009

ஈழம் - கேள்வி பதில் - பாகம்-இரண்டு

ஈழப்பிரச்சினையில் தமிழர்களுக்கு எதிரான நிலையை இந்திய அரசு எடுக்க வேண்டிய காரணமென்ன?
இந்தியா இன்று இத்தகைய நிலைப்பாட்டுக்கு முழுக்காரணம் ஆளும் காங்கிரசு அரசின் தலைவி சோனியாவும் அவரது அரசுக்கு முட்டு கொடுத்து நிற்கும் தமிழக சுயநல அரசியல்வாதிகளும்தான். ராசீவ் காந்திக் கொலையில் விடுதலைப்புலிகளுக்கு தொடர்பு இருப்பதாக எண்ணி அவர்களை பழிவாங்கும் பொருட்டு ஒட்டு மொத்த ஈழத் தமிழர்களையும் பழி வாங்கிக்கொண்டிருக்கிறது இந்திய அரசு. தமிழகத்தில் உள்ள ஆறு கோடித்தமிழர்களின் உணர்வையும் புறந்தள்ளிவிட்டு தனது சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக ஒரு தேசத்தையே அகிம்சைக்கு எதிராக திருப்பி விட்டிருக்கிறார் சோனியா காந்தி. அவரது இந்த தவறான முடிவை தட்டிக்கேட்க ஆண்மையுள்ள ஒரு தலைவரும் தமிழக காங்கிரசில் இல்லை. மத்திய காங்கிரசை தாங்கிப்பிடித்திருந்த கருணாநிதியும் இராமதாசும் தத்தம் சுயநலத்துக்காக தமிழக மக்களின் உணர்வுகளை அடகுவைத்துவிட்டார்கள் ஈழப்பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் கடைமையை செய்யவில்லை என்கிறீர்களா?
கண்டிப்பாக. தங்கள் கடைமை செய்யவில்லை என்பதைவிட தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகத்தை இழைத்துவிட்டார்கள் என்றே கூறலாம். இந்தக்கட்சிகள் ஈழப்பிரச்சினையை தங்கள் ஓட்டுப்பொறுக்கும் தந்திரத்திற்கு ஒரு கருவியாகவே பயன்படுத்த முயல்கின்றன. உண்மையில் தினந்தோறும் ராச பக்சே அரசால் கொல்லப்பட்டு வரும் ஆயிரக்கணக்கான தமிழர்களை காப்பாற்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையுமே இவர்கள் எடுக்கவில்லை. மத்திய அரசிலேயே அங்கம் வகித்துக்கொண்டு தங்களுடைய அரசுக்கே இவர்கள் கருணை மனு போட வேண்டிய அவசியம் என்ன? கட்டளையிட வேண்டியதுதானே? தங்கள் கட்டளையை ஏற்க மறுத்தால் அந்த அரசிலிருந்து வெளியேறுவதுதானே நியாயம்? அதைவிடுத்து தாயே! நாயே! என்று கெஞ்சவேண்டிய அவசியன் என்ன? யாரை ஏமாற்றுவதற்காக மனிதசங்கிலி உண்ணாவிரதம் ராசிநாமா பேரணி இவையெல்லாம்? ஒரு சீக்கியருக்கோ அல்லது மலையாளிகளுக்கோ இந்த நிலை ஏற்பட்டால் அவர்கள் எல்லாம் இப்படித்தான் நடந்துகொள்வார்களா? அவர்கள் வீரர்கள். தங்கள் இனத்தின் நன்மைக்காக தங்கள் பதவியை உயிரையும் துச்சம் என்று நினைப்பர்கள். தமிழக அர்சியல்வாதிகள் எட்டப்பன் பரம்பரையில் பிறந்தவர்கள். தங்களின் பதவி சுகத்துக்காக தமிழர்களின் பிணங்களின் மீது அரசியல் செய்யும் இவர்கள் பிணந்திண்ணி கழுகுகள். இவர்கள் நம்மை ஆள்வதால் நமக்குத்தான் அவமானம். விடுதலைப்புலிகள் இயக்கம் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட இயக்கம். அதை ஆதரிப்பது இந்திய இறையாண்மைக்கு எதிரானது இல்லையா?
நாங்கள் விடுதலைப்புலிகளை இந்தியாவில் தடை செய்ததே தவறு என்கிறோம். அந்த இயக்கத்தின் மீதான தடையை நீக்கவேண்டும் என்று எங்கள் அரசிடம் கோரிக்கை வைக்கிறோம். அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச்சொல்கிறோம். இது எப்படி இந்திய இறையாண்மைக்கு எதிரானதாகும்? இந்திய அரசு ஒரு தவறை செய்யும் போது அதை தட்டிக்கேட்கும் உரிமை அதன் குடிமக்களுக்கு இல்லையா? வெளிநாட்டில் பிறந்த ஒருவர் பின் வாசல் வழியாகப் புகுந்து ஒரு நாட்டின் பாதுகாப்பு சம்பந்தப்பட்ட விடயங்களில் முடிவெடுப்பது இந்திய இறையாண்மைக்கு ஊருவிளைவிக்க கூடியதா? அல்லது இந்த நாட்டின் பூர்வக்குடிகளான நாங்கள் எங்களின் நியாமான எண்ணங்களை வெளிப்படுத்துவது இந்திய இறையாண்மைக்கு ஊருவிளைக்கக்கூடியதா? சிந்தித்துப் பார்க்கவேண்டும். தமிழர்களின் வளர்ச்சியை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சக்திகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசுவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பது போன்ற ஒரு மாயயை உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக ஏற்பட்டிருக்கும் எழுச்சியை நேர்மையான முறையில் எதிர்கொள்ளமுடியாத காங்கிரசு அரசு இப்படி ஒரு அடக்கு முறையை கட்டவிழ்த்து விட்டிருக்கிறார்கள். ஆறுகோடி தமிழர்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துவதன் மூலம் ஆளும் காங்கிரசு அரசுதான் உண்மையில் இந்திய இறையாண்மைக்கும் ஒற்றுமைக்கும் ஊரு விளைவிக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளது. தமிழகத்தின் ஆட்சியமைப்பின் தலைப்பீடமான சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை காலில் போட்டு மிதித்ததின் மூலம் இந்திய கூட்டாட்சி முறையையே கேள்விக்குறியாதாக்கி இருக்கிறது இந்த காங்கிரசு அரசு. இப்படி நாட்டின் இறையாண்மையை முழுதாக குழிதோண்டி புடைத்தவர்கள் ஆளும் காங்கிரசுக்காரர்கள்தான். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக பேசுவர்கள் அல்ல. ஈழத்தில் இன்று ஏற்பட்டிருக்கின்ற அவலங்களுக்கு காங்கிரசும் அதன் தலைவியும்தான் காரணம் என்கிறீர்களா?
ஆமாம். ஈழத்தில் ஒன்றுமறியா பிஞ்சுக்குழந்தைகளையும் பெண்களையும் வயதானவர்களையும் கொன்று குவிக்கும் ராசபக்சேவின் கூட்டாளி இவர்கள்தான். இருபந்து ஐந்து ஆண்டுகளாக நடக்கும் போரில் விடுதலைபுலிகளின் ம…….. கூட பிடுங்க முடியாத சிங்கள அரசு இந்த அளவுக்கு கொடூரங்களை அச்சமின்றி நிறைவேற்றக்காரணம் இந்தியாவின் தற்போதய ஆதரவுதான். சோனியாகாந்தி தலைமையிலான இந்திய அரசு ஒரு மாபெரும் வரலாற்றுத் தவறை செய்துகொண்டுள்ளது. காலத்தின் முன்னால் அதற்கான பதிலை அவர்கள் கட்டாயம் கொடுக்கு வேண்டியிருக்கும். இந்த விடயத்தில் மட்டுமல்ல எல்லா விடயங்களிலும் தனது தவறான வழிநடத்துதல் மூலம் காங்கிரசை பாதாளத்தில் தள்ளிவிட்டார் சோனியா. நூற்றியைம்பது ஆண்டுகள் வரலாற்றை கொண்ட ஒரு கட்சியின் தலைப்பதவியை ஒரு வெளிநாட்டை சேர்ந்தவரிடம் ஒப்படைத்ததின் மூலம் தானே தனக்கு சவக்குழி வெட்டிக்கொண்டுள்ளது அந்த கட்சி. நாட்டுப்பற்றும் நாட்டின் இறையாண்மையை காக்கும் குணமும் ஒருவரின் ரத்தத்தில் இருக்கவேண்டும். இந்தியா எனும் மாபெரும் கூட்டரசை கட்ட நம் தலைவர்கள் செய்த தியாகத்தை பின் வாசல் வழியாக வந்தவர்கள் புரிந்துகொள்ள முடியாது. இன்று சோனியாவின் பின்னால் மக்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவராவது உண்டா? நினைத்து பாருங்கள். ராசிய சபா மூலமே பாரளுமன்றத்தில் நுழையும் ஒருவர்தான் பிரதமர். தன் சொந்த மாநிலத்திலேயே கட்சியை தொலைத்துவிட்ட பிரணாப்தான் பாதுகாப்பு அமைச்சர். ஆட்சிக்கு ஒரு கட்சிமாறும் சிதம்பரம் உள்துறை அமைச்சர். இப்படி தொண்டர்களுக்கு வெகு தூரத்தில் இருப்பவர்கள்தான் இவரின் பின்னால் இருப்பவர்கள். அதனால்தான் இவர்கள் அரசும் சாமானிய மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாத அவர்களின் உணர்வுகளுக்கு எதிராண அரசாக உள்ளது. ஆகவே தமிழக மக்கள் இந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசு கட்சியை முற்றிலுமாய் புறக்கணித்து அவர்களுக்கு தகுந்த பாடம் புகட்ட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இன்றைய நிலையில் ஈழப்பைரச்சினைத்தீர நீங்கள் முன்வைக்கும் கோரிக்கைகள் என்ன?
1. சிறீலங்காவில் உடனடி போர்நிறுத்தத்தை இந்தியா ராசபக்சேவுடன் சேர்ந்து அறிவிக்க வேண்டும். 2. சிறீலங்காவுக்கு இந்தியாவால் வழங்கப்பட்டுள்ள இரானுவ மற்றும் நிதியுதவிகள் திரும்ப பெறவேண்டும். 3. போரில் காயம்பட்ட அனவருக்கும் உரிய சிகிச்சை அளிக்க செஞ்சிலுவை சங்கம் மற்றும் ஐநா அமைப்புகள் மூலம் ஏற்பாடு செய்யவேண்டும் 4. தமிழர்கள் பகுதியிலிருந்து சிங்கள இராணுவம் வெளியேற வேண்டும் 5. தமிழர்கள் தங்கியுள்ள இடைத்தங்கல் முகாம்கள் அனைத்தையும் பன்னாட்டு நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரவேண்டும். 6. தமிழர்கள் பகுதியில் ஐநா கண்காணிப்பில் ஒரு முழு கருத்துக்கணிப்பை நடத்தி அவர்களின் விருப்பமான அரசியல் தீர்வை பெற வழிவகைச் செய்யவேண்டும். 7. தமிழர்களுக்காக தலைமையை தேர்ந்தெடுக்கும் பொறுப்பை அவர்களிடத்திலேயே விட்டுவிடவேண்டும் ( முற்றும்) ------------------------------------------------------------------------------------- உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.

Thursday 9 April 2009

ஈழம் – ஒரு கேள்வி பதில் – பாகம்-1

கருணாநிதி நிதியின் கேள்வியும் நானே பதிலும் நானே பாணியில் ஈழத்தமிழர் பிரச்சினை குறித்த நமது கேள்வி பதில்கள் இவை. பத்திரிக்கையாளர்களின் எடக்கு மடக்கு கேள்விகளை தவிர்ப்பதற்காகத்தான் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். ஆனால் நம்மையெல்லாம் மதித்து கேள்வி கேட்க ஆளே இல்லாததால் நாமும் அவரது பாணியை பின்பற்றியுள்ளோம்.
இலங்கை என்பது நமது இந்தியாவுக்கு ஒரு அண்டை நாடு. அண்டை நாட்டு உள்விவகார விடயங்களில் நம் நாடு ஒரு அளவுக்குத்தான் தலையிட முடியும் என்று கருணாநிதி கூறியுள்ளாரே? அது நியாயம்தானே?
இந்த ஞானோதயம் அவருக்கு இப்போது வந்திருப்பதில் எந்த நியாமும் இல்லை. மேலும் இவ்வாறு சொல்லி அவருக்கு உள்ள பொறுப்பை அவர் தட்டி கழிக்கிறார் அல்லது தான் தமிழினத்திற்கு அவர் செய்த துரோகத்தை மறைக்கிறார். இந்தியா ஒரு பொறுப்புள்ள அண்டை நாடாக மட்டும் நடந்து கொண்டிருந்தால் நாம் இந்தியாவை ஈழப்பிரச்சினையில் தலையிடச்சொல்லிக் கேட்பதில் நியாயம் இல்லை. மாறாக இனவெறி ராசபக்சே அரசின் கூட்டாளியாக இந்தியா நடந்துகொள்கிறது. ஈழத்தில் நடக்கும் போரை மறைமுகமாக நடத்துவது இந்தியாதான். எண்ணற்ற ஆயுதங்களையும் பல கோடி ரூபாய் நிதியுதவியையும் நூற்றுக்கணக்கான போர் வீரர்களையும் அனுப்பி போரை வழி நடத்துவதே இந்தியாதான். அதனால்தான் போர் நிறுத்தத்துக்கு இந்தியாவை அழுத்தம் கொடுக்கச்சொல்லி பல உலக நாடுகளும் கேட்கின்றன. அமரிக்காவும் அய்ரோப்பிய கூட்டமைப்பு நாடுகளும் தங்கள் அறிக்கைகளில் இந்தியா தலையிட்டு போர் நிறுத்தத்தை கொண்டுவரவேண்டும் என்று கூறியிருக்கின்றன. இதிலிருந்தே இந்த இன அழிப்பு போரில் இந்தியாவின் பங்கு வெட்ட வெளிச்சமாக தெரிகிறது. உலகத்துக்கே தெரிந்த இந்த விவரம் கருணாநிதிக்குத் தெரியாதா? நிலைமை இப்படியிருக்க யாரை ஏமாற்ற இந்த நாடகத்தை கருணாநிதி போடுகிறார்? தமிழின அழிப்பில் சோனியாவுக்கு எந்த அளவு பங்கு உள்ளதோ அதே அளவு பங்கு அவர்களுக்கு பல்லக்கு தூக்கிய கருணாநிதிக்கும் ராமதாசுக்கும் உள்ளது. தமிழின வரலாற்றில் இதற்கு அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.
ஈழத்தில் நடப்பது ஒரு பயங்கர வாதத்திற்கு எதிரான போர் என்று சிறீலங்கா கூறுகிறது. அந்த வகையில் ஒரு நட்பு நாட்டுக்கு இன்னொரு நட்பு நாடு உதவுவது முறைதானே?
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்று சொல்லி உண்மையில் ராசபக்சே அரசு ஒரு அப்பட்டமான இன அழிப்பை நடாத்தி வருகிறது. இது இந்தியா உட்பட எல்லா நாடுகளுக்கும் தெரியும். அது தெரிந்தேதான் இந்தியா அவர்களுக்கு உதவுகிறது. முதலில் உண்மையான பயங்கரவாதிகள் யார் என்பதை சர்வதேச சமூகம் உணர வேண்டும். தன் சொந்த இனத்தை காப்பாற்றுவதற்காக ஆயுதமேந்தி போராடும் போராளிகள் பயங்கரவாதிகளா அல்லது தன் சொந்த நாட்டு மக்களையே ரசாயன குண்டுகளை பொழிந்து கொல்லும் சிங்கள அரசு பயங்கரவாத அரசா? புலிகள் பயங்கரவாதிகள் என்றால் இந்திய அரசு அவர்களுக்கு ஏன் ஆயுத பயிற்சிகள் வழங்க வேண்டும். சமீபத்தில் கூட ஈழத்திலிருந்து வந்த பாடகி மாயா பேட்டியில் ஒரு கருத்தை சொன்னார். உண்மையில் போராளிகளை மட்டும் கொல்வதென்றால் அனைத்து வல்லமை பொருந்திய ஒரு நாட்டுக்கு இவ்வளவு நாட்கள் தேவையேயில்லை. ஆனால் போராளிகளை கொல்கிறோம் என்ற போர்வையில் ஒரு இனத்தை பூண்டோடு அழிக்கவே சிறீலங்கா அரசு திட்டமிட்டு சதிராடுகிறார்கள் என்றார். அதுதான் அப்பட்டமான உண்மை. விடுதலைப்புலிகள் வெறும் பயங்கரவாத இயக்கம் அல்ல. அது ஒரு மக்கள் ஆதரவு பெற்ற போராளி இயக்கம். மக்களோடு மக்களாக இணைந்த இயக்கம். அவர்களின் போராட்டத்தில் நேர்மையில்லை எனில் 30 வருடங்களாக மக்கள் ஆதரவோடு ஒரு மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்து செல்ல முடியாது. இன்றைய நிலையில் பயங்கரவாதம் என்ற சொல்லின் பயன்பாடே விவாதத்திற்கு உரியதாக உள்ளது. சிறுபான்மை மக்களை ஒடுக்குவதற்கு பெரும்பாண்மை இன ஆதிக்க சக்திகள் பயங்கரவாதம் என்ற பதத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துகின்றன என்பதுதான் கசப்பான உண்மை. நேற்று நேதாசியும் சேகுவாராவும் பிடல் காசுபரோவும் பயங்கரவாதிகளாக ஆதிக்க சக்திகளால் அடயாளம் காட்டப்பட்டார்கள். ஆனால் அவர்கள் மக்களால் மாவீரர்களாக கதாநாயகர்களாக ஆக்கப்பட்டார்கள். நேற்று பயங்கரவாதிகளாகவும் ஆயுதப்போராளிகளாகவும் அடையாளம் காணப்பட்ட மாவோயிசுடுகள்தான் இன்று நேபாளத்தில் ஆட்சியை அமைத்திருக்கிறார்கள். இதுதான் நாளைக்கும் நடக்கும்.
சிறீலங்கா என்பது ஏற்கனவே சின்னஞ்சிறிய நாடு. அதைப்பிரித்து இன்னொரு நாட்டை உருவாக்குவது எப்படி நியாயமாகும்?
இது மிகவும் குழந்தைத்தனமான வாதம். நாடு பெரியது என்றால் கேட்பவர்க்கெல்லாம் பிரித்து கொடுத்துவிடலாமா என்ன? இங்கு பிரச்சினை நாட்டின் விசாலம் குறித்தது அல்ல. பிரச்சினையே அதை ஆள்பவர்களின் மனதின் விசாலம் குறித்துதான். உண்மையில் ஆங்கிலேயர்கள் ஆள்வதற்கு முன் சிறீலங்கா மூன்று சிறு நாடுகளாகத்தான் இருந்தது. ஒன்றை சிங்களவர்களும் மற்றொன்றை பழங்குடியினரும் வடநாட்டை தமிழ் பூர்வக்குடிகளும் ஆண்டார்கள். ஆனால் ஆங்கிலேயர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காக அவற்றை இணைத்து ஒரே நாடாக ஆண்டார்கள். ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் செல்லும்போது மொத்தமாக சிங்களவர்களிடம் நாட்டை ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டார்கள். அப்போதும் கூட பிரச்சினை எழவில்லை. ஆனால் ஆங்கிலேயர் காலத்தில் கொடுக்கப்பட்ட சம உரிமை கூட சிங்களர் ஆட்சியில் ஒவ்வொன்றாக பறிக்கப்பட்டதால்தான் தமிழர்கள் தனிநாடு கேட்கும் நிலைக்கு வந்தார்கள். தங்களின் ஆதிக்க வெறியால் தமிழர்கள் தனிநாடு கேட்கவில்லை. தங்கள் குறைந்தபட்ச வாழவுரிமையை பாதுகாத்துக்கொள்ளவே தமிழர்கள் தனிநாடு கேட்கிறார்கள். சிங்கப்பூர் ஒரு நாடு கூட அல்ல ஒரு சிறிய நகரம். அவர்கள் தனியான நாடாகி சிறந்து விளங்கவில்லையா? கிழக்கு திமோர் இந்தோனேசியாவில் இருந்து பிரிந்து தனியான நாடாகவில்லையா? சின்னஞ்சிறிய கோசாவா தனி நாடாகவில்லையா? நாடு சிறியதென்றால் ஒரு நீண்ட வரலாறு கொண்ட ஒரு இனம் அடிமையாக இரண்டாம்தர குடிமக்களாகத்தான் வாழவேண்டுமா?
இந்தியாவில் கூடத்தான் காசுமீரிலும் நாகாலாந்திலும் போராளிகள் தனி நாடு கேட்கிறார்கள். சிறீலங்காவில் தமிழர்களுக்கு தனி நாடு கொடுப்பது நியாமென்றால் இவர்களின் கோரிக்கையும் நியாமானதுதானே?
மேலோட்டமாகப் பார்த்தால் இந்த கேள்வியில் நியாம் இருப்பதாக தோன்றும். இந்த கருத்தை சொல்லித்தான் பல அறிவு சீவிகள் நம்மை ஏமாற்றப் பார்க்கிறார்கள். ஆனால் அடிப்படையில் தனி ஈழக் கோரிக்கையை இந்தியாவில் எழுப்படும் தனி நாடு கோரிக்கைகளுடன் ஒப்பிடுவது முட்டாள்தனமானது. ஏனெனில் இந்தியாவின் அரசியல் அமைப்புச்சட்டமும் அதனால் நமக்கு வழங்கப்பட்டிருக்கும் உரிமைகளும் ஒவ்வொரு இந்திய குடிம்க்களுக்கும் சமமானது. இந்தியாவின் எந்த ஒரு குடிமகனும் இந்தியாவின் பிரதமராக ஆகமுடியும். எல்லா பெரும்பான்மை மொழிகளும் ஆட்சி மொழிகளாக உள்ளன. இந்திய அரசு எந்த மதத்தையும் சாராதது. ஆனால் சிறீலங்காவின் அரசியலைப்புப் சட்டப்படி தமிழன் குடியரசு தலைவராகவோ அல்லது பிரதம மந்திரியாகவோ ஆகவே முடியாது. தமிழர்கள் சிறீலங்காவின் அரசியலைப்புச்சட்டப்படி இரண்டாம் தர குடிமக்களாகவே அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். சிங்களர்களின் மதமான பவுத்தம்தான் அரசின் மதம். இந்தியாவில் ஒவ்வொரு இனத்தவரும் அவரவர் பகுதிகளில் சுதந்திரமாக அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடகிழக்குப்பகுதியில் அவர்களின் பெரும்பானமை குறைக்கும் பொருட்டு வலுக்கட்டாய சிங்கள குடியேற்றங்கள் நிகழ்த்தப்படுகின்றான. இப்படி தமிழர்களுக்கு எதிராக சிறீலங்கா இனவெறி அரசு செய்யும் ஏராளமான கொடுமைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். எல்லா விதத்திலும் ஈழத்தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே இரண்டாம் தர குடிமக்களாக அகதிகளாக ஆக்கப்பட்டுள்ளனர். அதை எதிர்த்துதான் அவர்கள் தனிநாடு கேட்கிறார்கள். காசுமீரிலும் நாகலாந்திலும் மக்களுக்கு என்ன உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன என்பதை இந்த கேள்வியை கேட்பவர்கள் சிந்தித்து பார்க்கவேண்டும்.
தமிழர்களுக்கு சம உரிமை மறுக்கப்பட்டால் அந்த உரிமைகளை திரும்ப கேட்பதுதானே நியாயம். தனி நாடு கேட்பதேன்?
ஆரம்பத்தில் தமிழர்கள் ஒரு அரசியலமைப்பாக தந்தை செல்வா அவர்களின் தலைமையில் சம உரிமைக்காக பல அறவழிப்போராட்டங்களை முன்னெடுத்தனர். கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தமிழர்களுக்கான அறவழிப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் சிங்கள அரசுகளோ இத்தகைய அறப்போராட்டங்களை ஆயுத பலத்தினால் அடக்கியது. எதிர்த்த தமிழர்கள் பல விதங்களிலும் இன்னலுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். பல சிங்கள ஆட்சியாளர்கள் பெயரளவில் தமிழர்களுடன் பல ஒப்பந்தங்களைப்போட்டு அவ்வப்போது நிலைமையை சரி கட்டினார்கள். ஆனால் இவ்விதமான ஒப்பந்தங்களில் குறிப்பிடப்பட்ட ஒரு சரத்துக்கூட இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்வில்லை. மாறாக மறைமுகமாக தமிழர்களின் போராட்டங்களை நீர்த்துப்போக செய்யும் வேலைகளில் இந்த அரசுகள் ஈடுபட்டன. தமிழ் தலைவர்களில் எட்டப்பன்களை தேர்ந்தெடுத்து அவர்களை நல்ல தலைவர்களுக்கு எதிராக ஏவுவது மற்றும் வலுக்கட்டாய சிங்கள குடியேற்றங்களை தமிழர் பகுதிகளில் உருவாக்கி அதன் மூலம் தமிழர் பகுதிகளில் அவர்களின் ஆளுமைகளை குறைக்கும் வேலைகள் போன்றவற்றில் இறங்கின. சுயாட்சி அதிகாரம் அதிகார பரவல் பெடரல் முறை என்று பல அரசியல் தீர்வுகளை தந்தை செல்வா முன்வைத்து பார்த்தார். சிங்களர்கள் இதில் எதையும் ஏற்பதாக இல்லை. பொறுத்து பொறுத்துப்பார்த்த தந்தை செல்வா இறுதியாக தனி ஈழம்தான் சிறீலங்கா பிரச்சினைக்கு ஒரே தீர்வு என்ற முடிவுக்கு வந்தார். இப்படித்தான் தனி ஈழ கோரிக்கை உருவானது. தனி ஈழம் கேட்டுப் அறவழியில் போராடிய தமிழர்களை சிங்கள இனவெறி அரசுகள் வன்முறையால் அடக்க ஆரம்பித்தன. ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். பெண்களும் சிறுமிகளும் பாலியல் வல்லுறவுகளுக்கு ஆளாக்கப்பட்டனர். பாதிக்கப்பட்ட தமிழர்கள் வேறுவழியின்றி ஆயுதம் ஏந்தி போராடும் நிலைக்கு தள்ளப்பட்டனர். ஆகவே தனி ஈழம் கேட்கும் நிலைக்கு தமிழர்கள் தள்ளப்பட்டதிற்கு சிங்களர்களின் இனவெறியே காரணம். மேலும் தனி ஈழம் என்பது விடுதலைப்புலிகளால்தான் முன் வைக்கப்படுகின்றது என்ற வாதமும் அரசியல் தீர்வுகளை தமிழர்கள் முன்வைக்கவில்லை என்ற வாதமும் முற்றிலும் பொய் என்பதை நாம் உணர வேண்டும். (கேள்வி பதில் தொடரும்) ------------------------------------------------------------------------------------ உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும்.