எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday, 28 July 2010

THE CAN DO LEADERSHIP - புத்தக வி்மர்சனம்பொதுவாகவே வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களுக்கு தமிழ் நாட்டு நடப்புகள் தெரிந்த அளவுக்கு உள்ளூர் நடப்புகள் பற்றி தெரிவதில்லை. அதற்கு முதல் காரணம் மொழி. இரண்டாவது காரணம் ஆர்வமின்மை. குறிப்பாக இந்தோனேசியாவில் மருந்துக்கு கூட ஒரு ஆங்கில தொலைக்காட்சி இல்லை. இருக்கின்ற ஒரே ஒரு ஆங்கில தினசரியைப் படித்துதான் கொஞ்ச நஞ்சம் செய்திகளை தெரிந்து கொள்ள முடியும். அதுவும் இந்த தினசரியின் நடுநிலைமை நம்ம தினமலரை மிஞ்சிவிடும். காசுமீருக்கு போகாமலேயே காசுமீர் பிரச்சினைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அதற்கு வேறு இங்குள்ள இந்தியர்களும் பாக்கிசுதானியர்களும் அடித்துக்கொள்வார்கள். இதல்லாம் நமக்கு ஒத்துவராது என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரமீடியா புத்தகக்கடையில் ஐக்கியம் ஆகிவிடுவேன். இறக்குமதியான சரக்கு என்பதால் பெரும்பாலான ஆங்கிலப்புத்தகங்களின் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும். உள்ளூர் ஆங்கில பதிப்புகள் கிடைப்பது அபூர்வம். இதனால் மணி கணக்கில் கடையையோ நோண்டிக்கொண்டிருப்பது வழக்கம்.

SBY இந்தோனேசியாவில் என்னை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி. அவரைப் பற்றி அவ்வப்போது படித்திருக்கிறேன் என்றாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. இப்போது திரு. SBY அவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்.

 SBY   என்கின்ற சுசிலோ பம்பாங் யூதயோனோ – இந்தோனேசியாவின் நடப்பு அதிபர். இந்தோனேசியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். அதற்கு முன் அதிபர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடித் தேர்ந்தெடுக்கும் முறையே இருந்தது. 2004 ம் ஆண்டு முதல் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 2009-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரானுவத்தில் கலோனல் பதவியை வகித்த இவர் பின்னர் முன்னால் அதிபர் மேகாவதி சுகர்னோ புத்திரி அமைச்சரவையில் ஒருங்கிணைப்பு அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு மேகாவதியின் கட்சியிலிருந்து வெளியேறி தனது “சனநாயக கட்சி”யை ( Partai Democratic) ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் அதிபர் பதவியை பிடித்தார்.  

THE CAN DO LEADERSHIP – Inspiring stories from SBY Presidency என்ற இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் அதிபரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான் திரு. தினோ பாத்தி சலால். பல வருடங்கள் வெளிநாடுகளில் தூதரகப்பணி ஆற்றியவர். சிறந்த பேச்சாளர். மேலாண்மை குறித்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். இந்தோனெசிய கல்வியாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். யூதயோனோ அவர்களின் முதல் ஆட்சிகாலம் முடியும் தருவாயில் எழுதப்பட்ட புத்தகம் இது.

இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்திருக்கிறார்கள். தெளிவான எளிய ஆங்கில நடையில் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலாண்மை சம்பந்தமான புத்தகமோ என்ற ஐயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகம் முழுக்க முழுக்க யூதோனோ அவர்களின் ஆளுமைப்பற்றியும் அவரது ஆட்சி குறித்துமே விவரிக்கப்படுவதால் ஒரு சுய சரிதை படிக்கின்ற உணர்வே ஏற்ப்படுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆசிரியரின் எழுத்துநடை தோய்வில்லாமல் விறுவிறுப்பாக  செல்கிறது. இடையிடையே சுவையான பல சம்பவங்களை சேர்த்துள்ளதால் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் செல்கிறது. 435 பக்கங்கள் கொண்ட முழு புத்தகத்தையும் ஒரே வாரத்தில் முடித்துவிட்டேன்.

இந்தோனேசிய போன்ற ரெண்டாம்கெட்டான் நாட்டுக்கு ஒருவர் அதிபராக இருப்பது எத்தனை சிரமம் என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். அதே போன்று நாடுகள் மாறினாலும் அரசியல்வாதிகளின் குனங்கள் மட்டும் மாறுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். தினமும் அதிபரின் பெயரில் செய்தித்தாள்களில் அறிக்கைகளை பார்க்கிறோம். தொலைக்காட்சிகளில் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது பிற நாட்டு தலைவர்களை சந்திப்பதையோ பார்க்கிறோம். இது போன்ற அன்றாட சமாச்சாரங்களுக்கு கூட அதிபர் எவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது என்பதை அறிய வரும்போது அவர் மீது ஒரு வித அனுதாபம்தான் மிஞ்சுகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி அமைச்சரவையை கட்டிகாப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆசிரியருக்கு வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் சர்வதேச அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த அவரது கருத்துக்களையும் ஆங்காங்கே பகிர்ந்து கொள்கிறார். ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும் அமரிக்கா போன்ற வல்லரசுகளுடனும் அவர்களுக்கு முற்றிலும் எதிர்திசையில் இருக்கும் ஈரான் பாலத்தீனம் போன்ற நாடுகளுடனும் உறவுகளை சமன் செய்ய வேண்டிய நிலையையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். உள்நாட்டு பிரிவினைவாத பிரச்சினைகள் குறித்தும் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்தும் நன்கு அலசியிருப்பதால் நம்மைப்போன்ற புதியவர்களுக்கு நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் சமா இசுலாமிய போன்ற தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தியது குறித்த தகவல்கள் இல்லாதது ஏனோ தெரியவில்லை.

ஆச்சே பகுதி சுனாமியால் பாதிக்கப்பட்டபோது யூதயானோ ஆற்றிய பணிகள் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். புத்தகத்தின் பெயரை “Inspiring Stories from SBY Presidency” என்று மட்டும் வைத்திருக்கலாம். “THE CAN DO LEADERSHIP” என்று சொல்லும் போது மேலாண்மை அல்லது சுய முன்னேற்றம் குறித்த புத்தகமோ என்று பலர் ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதிபருக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதால் அவரது ஆதரவு பிரச்சாரத்திற்காக எழுதப்பட்டது என்ற வாதம் பரவலாக இருக்கிறது. ஆனால் நம்மை போன்ற புதியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய குறையாக தெரியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துக்களே அதிகம் இருக்கின்றன. இந்தோனேசியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் படிக்கவேண்டிய  புத்தகம் இது என்பது எனது கருத்து. அதேபோல இந்தோனேசிய அரசியல் குறித்து அறிய விரும்பும் எவரும் படிக்கவேண்டிய புத்தகமிது. 

.

Saturday, 24 July 2010

ரத்தம் கொதிக்கிறதா?!!

ழக்கமாக எனக்கு கவிதைகளை படிக்கும் பழக்கம் இல்லை. அவற்றை புரிந்துகொள்ளும் அளவுக்கு நமக்கு ஞானம் இல்லை என்பதுதான் அதற்கான முதற்காரணம். ஆனாலும் சில கவிதைகள் முதல்தடவை படிக்கும்போதே மனதில் நின்றுவிடும். அவ்வாறான கவிதைகளுள் ஒன்றுதான் கீழே உள்ளது

சீமான்களை தூக்கிலிடு!

காட்டிக் கொடுக்கூட்டிக் கொடு
கொலை செய் கொள்ளையடி
அதிகாரத்தைக் கைப்பற்று – இதுதான்
அரசியல் அறிச்சுவடி


மக்களை மந்தை களாக்கு
மாண்பு மிகுக்களை மாமாக்களாக்கு
பட்டியில் அடை – மக்களாட்சி
இதுவென்று முரசுகொட்டு

பட்டியிலடைத்த மந்தைகள் கேட்கா
தனைத்தையும் இலவசமாகக் கொடு
தவணையில் கொடு – பிச்சையென்றுரைத்தால்
கொடையென்று சொல்

அன்பு அகிம்சையென்று பசப்பு
பண்பைப் பேணென்றுரைத்து மக்களை
அடித்து அடக்கு – அதுதான்
சட்ட ஒழுங்கென்றுரை

உழைக்கும் மக்களை ஊதாரிகளாக்கு
மதுவாறு ஓடவிட்டு காமக்கிழத்திகளை
வீடுதோரும் ஆடவிடு – பொற்கால
ஆட்சியென்பது இதுவே

நிலமும் நீரும் காற்றும்
ஆகாயமும் பொதுவென்றுரை முன்னேற்றம்
வேண்டுமென கூவு – தரகுக்கூலிக்காக
மாற்றானுக்கு அனைத்தையும் விற்றுவிடு

அந்தப்புரத்தை அதிகார மையமாக்கு
காமத்தின் கழிவில் முளைத்த
காளான் களனைத்தையும் – பட்டத்துக்
குரியவர்களென்று பறைசாற்று

உன் சிம்மாசனத்திற்கு ஆசைப்படும்
வாரிசுகளுக்கு போட்டி வை
மோதவிடு! மோதிவிடு! – பலிகடாவாக்கு
தொண்டனை மட்டும்

போதாதென்றால் காளான்களனைத்தையும் களமிறக்கு
அவர்களுக்குள் மோதட்டும்! மோதட்டும்!
மோதிக்கொண்டே இருக்கட்டும்! – மன்னன் நீதான்
கட்டையில் போகும்வரை


குடும்பத்தை எட்டுத்திக்கும்அனுப்பு கிடைத்ததைச்சுருட்டு
பொதுவுடமை பேசுவோரை பொல்லாப்பாக்கு – பொதுவுடமையின்
குறியீடென் குடும்பமென்றுரை

எதிரியோடு மண்டை நாட்டோடும்
அன்புப் பாராட்டு கேட்டதனைத்தும்
கொடுத்துதவு மகிழ்வோடு – “இறையாண்மை“
இருவருக்கும் இன்றியமையாதது

உன்குடி மக்களை கொன்றொழித்தாலும்
எதிரியோடு கொஞ்சிக் குலாவு
விருந்துண் குதூகலி – அவன்வீசும்
எலும்புத்துண்டை கவ்வு

மெதுவாகக்கடி! நீகடிக்கு மெலும்பு
மானமுள்ள மறவனின் குறுத்
தெலும்பாக இருந்தாலும் – அதுவுமுன்னை
கொல்லும் எச்சரிக்கை!

எச்சரிக்கை! எச்சரிக்கை! செய்கின்றேன்
இனமானம் மொழிமானம் தன்மானமென்று
மக்களை பேசவிடாதே – அத்தனையும்
நீயே பேசு

நல்வித்துக்கள் நாட்டில் அங்கொன்றும்
இங்கொன்றும் வளரத்தான் செய்யும்
அவைகளைகண்டு அஞ்சாதே – அணைத்துப்பார்
இல்லையெனில் அழித்துவிடு

இனமானம் பேசும்நெடு மாறன்களை
நாடுகடத்து சீறும்சீமான்களை தூக்கிலிடு
முழங்கும்நா வைகோடாரிக் – காம்பால்
குத்தி நசுக்கு

மறவன் நீயேகதியென சரணடைந்தால்
விட்டுவைக்காதை அப்போதே கடித்துக்குதறு
குருதிக்கவிச்சை குமட்டினால் – இரண்டுநாழிகை
எதுவுமுண்ணாமல் கடற்கரையில்கிட

பாலகரின் குருதியுனக்கு போதையேற்றும்
அந்தப்புரத்தில் புலவர்கூட்டத்தை பாடவிடு
நடனமாதரை யுன்போதை – தெளியும்வரை
ஆடையவிழ்த்து ஆடவிடு

மானங் கெட்டவர்களே நாட்டில்
நடமாடமுடியு மென்பதை உலகுக்குணர்த்து
கொண்டாடு! கொண்டாடு!

தலைவனென்று கொண்டாடு!

எழுதியவர் திரு. சீ.பிரபாகரன் ( http://seeprabagaran.blogspot.com/2010/07/blog-post.html)

..

Tuesday, 20 July 2010

தமிழனும் யூதனும்!


”எப்பேர்பட்ட வனத்துல போய் மேஞ்சாலும், இனத்துல போயிதான் அடையனும்” இந்த வாசகத்தை நீங்கள் படித்திருக்கலாம். இது அண்ணன் பழமைபேசி அவர்களின் இடுகையில் இருக்கும் வாசகம். இதை விளக்க அவர் ஒரு கதையையும் சொல்லியிருப்பார். இந்த வாசகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டுமானால் நீங்கள் சிறிது நாட்களாவது தமிழகத்தை விட்டு வெளியில் வந்து வாழவேண்டும்.

இந்த அண்ட சராசரத்தில் வாழும் ஒரு உயிர் அமீபாவிலிருந்து ஆறறிவு மனிதன் வரை வாழ்க்கை போராட்டத்தில் பங்கேற்பதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அது தன்னை இந்த உலகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை. அதாவது தனது அடையாளத்தை காத்துக்கொள்வது. சுயத்தை இழக்காமல் இருப்பது. ஆங்கிலத்தில் ”அயிடண்டிட்டி” என்று சொல்வார்கள். ஆனால் மனித இனத்தில் மட்டும் இன்று இந்த அடிப்படை விடயம் தகர்ந்து கொண்டு வருகிறது. தாராளமயமாக்கல், உலகச்சந்தை என்றெல்லாம் வந்த பிறகு ஒரு தனிப்பட்ட மொழி, இனம், நாடு சார்ந்த ஒரு சமுதாயம் சாத்தியம்தானா? என்ற கேள்வி இன்று நம் எல்லோருடைய மனத்திலும் இருக்கிறது. இது ஒரு ஆபத்தான நிலை என்பதை நாம் உணரவில்லை. நீங்கள் ஆழ்ந்து பார்த்தால் இந்த தாரளமயமாக்கல் என்பது கீழை நாட்டுமக்களின் சுயத்தை அழித்து மேலை நாட்டு பழக்கவழக்கங்களை அவர்களிடம் வளர்த்து அவர்களை தங்களின் பொருளாதார அடிமைகளாக மாற்றுவதுதானே தவிர கீழை கலாச்சாரத்தை மேற்குலத்துக்கு கொண்டு செல்வதல்ல. நீங்கள்தான் “சட்டி” அணியவேண்டுமே தவிர அவன் கோவனம் அணியப்போவதில்லை. அது தெரியாமல் நாமும் தாரளமயமாக்கலால் சர்வதேச சமத்துவ சமுதாயம் அமையப்பொகிறது என்று மயக்கம் கொண்டு அலைகின்றோம்.

இந்த நிலை நமது தமிழ் சமுதாயத்தையும் விட்டுவைக்கவில்லை. இன்று தமிழ் தமிழினம் தமிழர்கள் தமிழ் கலாச்சாரம் என்று பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் பழமைவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் நினைக்கின்ற போக்கு அதிகரித்து வருகிறது. சக தமிழனை தன் இனம் என்று பெருமையாக பார்க்கின்ற நிலை இன்று இல்லை. நான் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசிய இலங்கை போன்ற நாடுகளில் பெருமளவு சுற்றியிருக்கிறேன். இந்த எல்லா நாடுகளிலும் இரு விதமான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு சாரார் அந்தந்த நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள். இவர்கள் 18-19ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வந்து குடியேறியவர்கள். மற்றவர்கள் தமிழ் நாட்டிலிருந்து அங்கு பணி நிமித்தமாக வந்து வாழும் தமிழர்கள். ஆனால் ஒரே நாட்டில் வாழும் இந்த இரு தமிழர்களிடையே இடையே ஒரு விதமான் இடைவெளி இருப்பதை வெளிப்படையாக காணலாம். பெரும்பாலும் இந்த இரு சாராரும் ஒருவருக்கொருவர் கலப்பு கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் இரு சாராருக்குமே மற்றவர் மீது ஒருவித அவநம்பிக்கை உண்டு. சில இடங்களில் இருவருக்குமே தனித்தனியாக கோவில்கள் கூட உண்டு. அதேபோல அமெரிக்காவையோ கனடாவையோ எடுத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் பெரும்பாலும் கலப்பது இல்லை. தாய்த்தமிழகத்திலோ இதைவிட மோசமான ஒரு நிலைமை. நமக்கு சில கிலோமீட்டர் தொலைவில் தம் இனம் பூண்டோடு அழிக்கப்படும் நிலையைக்கூட ஒரு பார்வையாளர்கள் போல கண்டும் காணாமல் இருக்கின்ற நிலை. 

ஆனால் இந்த வேறுபாடுகளை அந்தந்த நாடுகளில் எல்லாம் வாழுகின்ற பிற இந்திய இனத்தினர்களிடம் குறிப்பாக சீக்கியர்கள் அல்லது சிந்திக்களிடம்  கானமுடிவதில்லை. அவர்கள் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒற்றுமையோடு வாழ்கின்றனர். அப்படியானால் நம்மினத்துக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நன்கு சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு காரணம்தான் விளங்கக்கூடும். அது தன் சுயத்தை இழந்த நிலை. அதாவது தனது இனத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அறியாமல் இருப்பது. அல்லது அவை தாழ்வானவை என்கின்ற தவறான மனப்பான்மை கொண்டிருப்பது. இதனால் இளம் தலைமுறையினரிடம் நமது கலாச்சாரம் குறித்த புரிதலோ மொழி குறித்த பெருமிதமோ இல்லை. இதனால் நம் தமிழினம் இருந்தும் இல்லாத இனமாக மாறிக்கொண்டு வருகிறது. நம் இனம் பூண்டோடு அழிவது தடுக்கப்படவேண்டுமென்றால் தமிழர்களின் இந்த மனநிலை மாறவேண்டும்.

எனக்கு யூதர்களை கானும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். அவர்கள் மேல் இருக்கும் பல குற்றச்சாட்டுகளுக்கு அப்பாலும் அவர்களின் இனப்பற்று என்னை சிந்திக்கவைக்கும் இன்று உலகில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய மதங்களின் தாய் வீடான யூத இனம் பல நூற்றாண்டுகள் இந்த உலகில் இருப்பையே தொலைத்துவிட்டிருந்தது. நாட்டை இழந்து மொழியை இழந்து மக்களை இழந்து யூத இனம் என்ற ஒன்று இருந்ததற்கான் தடயங்களே இல்லாமல் இருந்தது. உலக வரலாற்றிலேயே அதிக அளவுக்கு கொடுமைக்க்கு உள்ளாக்கப்பட்ட இனம் யூத இனம்தான். ஒரு காலத்தில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். ஆனால் இன்று ஒரு பீனிக்சு பறவை போன்று சாம்பலில் இருந்து எழுந்து சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறது யூத இனம். உலகில் உள்ள மொழிகளில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் ஒரே வகையில் பாவிக்கப்படும் மொழி யூதர்களின் ஈப்ரு மொழி மட்டுமே.  இட்லர் காலகட்டத்தில் செர்மனியில் ஒரு யூதர் மாட்டிக்கொண்டால் அவரை யூதர் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரே ஒரு கேள்விதான் கேட்பார்களாம். நீ ஒரு யூதனா? என்பதுதான் அது. தான் யூதனில்லை என்று பொய் சொன்னால் தன் உயிர் பிழைக்கும் என்ற நிலையிலும் ஒரு போதும் தான் யூதன் என்பதை விட்டுக்கொடுக்க அவர்கள் முன்வர மாட்டர்களாம். அவர்களின் இந்த இனப்பற்றுதான் யூதர்களை இன்று  வெற்றி பெற்ற சமூகமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இனம் மலை போன்ற தடைகளில் இருந்து மீண்டு வந்ததில் வியப்பேதும் இல்லைதானே? தமிழினம் இவர்களிடம் இருந்தவது பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.  தன் சுயம் என்பது தன் உயிரைவிட மேலானது என்று உணரவேண்டும்.

Monday, 12 July 2010

தமிழன் எனும் கோமாளி!


ஒரு வழியாக தமிழ் செம்மொழி மாநாடு நிறைவடைந்து விட்டது. ஆதரித்தும் எதிர்த்தும் விமர்சித்தும் அனைத்து தளங்களிலும் விவாதங்கள் நடந்து ஓய்ந்துவிட்டன. இவற்றையெல்லாம் பார்க்கும்போது இன்று தமிழ்ப் பரப்பை ஒரு மோசமான நோய் பீடித்துக்கொண்டுள்ளதை அறிய முடிகிறது. அது மிகப்பெரிய கருத்து பிறழ்வு நோய். அதாவது எந்த ஒரு பொருள் குறித்தும் ஒருவர் வெளியிடும் கருத்தை அதற்கென்று ஒரு அரசியல் சாயம் பூசியே பார்க்கும் நோய். அதுவும் தனக்கு ஆதரவான கருத்தென்றால் அதை நடுநிலையானது என்றும் எதிரான கருத்தென்றால் அது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்றும் கருதுவது மட்டும் அல்லாமல் அப்படி ஒரு தோற்றத்தை மற்றவருக்கும் உருவாக்குவது. முன்பு அரசியல்வாதிகளை மட்டும் பாதித்த இந்த நோய் இப்போது படித்தவர்கள், படிக்காதவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் உள்பட பொது மக்களையும் விட்டு வைக்கவில்லை. இதனால் எது நடுநிலையானது எது அரசியல் சாயம் உள்ளது என்று இனங்கான முடியாத அளவுக்கு அனைவரும் குழம்ப்பிப்போய் உள்ளனர். வழக்கம் போல அரசியல்வாதிகள் இந்த குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கின்றனர். 

தமிழைப் படி என்றால் ஆங்கிலம் தெரியாமல் இந்த நவீன உலகில் என்ன செய்ய முடியும் என்கிறார்கள். ஈழத்தமிழர்களின் அவலத்தை எழுதினால் விடுதலைப்புலிகளின் ஆதரவாளரா என்கிறார்கள். ஈழத்தமிழர்கள் விடயத்தில் கருணாநிதி செய்தது சரியில்லை என்றால் செயலலிதா இருந்தால் நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்கிறார்கள். யூதர்களை நாசிக்கள் கொன்றதை உலகின் பேரவலம் என்று விவரிக்கின்ற புத்தகங்கள் தமிழில் பல உண்டு. ஆனால் கூப்பிடும் தூரத்தில் நடந்த இனப்படு கொலையைப் பற்றி தினசரி செய்தித்தாள்கள் கூட எழுதவில்லை. இவையெல்லாம் இந்த நோய் பாதிப்பின் வெளிப்பாடுதான். தமிழைப்படி என்றால் ஆங்கிலம் படிக்காதே என்று பொருள்கொள்வதை நோயைத்தவிர வேறு என்ன என்று புரிந்து கொள்ளமுடியும்.   

தமிழ் செம்மொழி மாநாடு குறித்த விவாதங்களுக்கும் இன்று இதே நிலைதான். இன்றைய சூழ்நிலையில் இந்த மாநாடு தேவையா என்றால், செம்மொழி ஆவதற்காக தமிழுக்கு உள்ள தகுதிகளையும், தமிழ் செம்மொழி அமைப்பின் செயல்பாடுகளையும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பெட்னா தமிழ் விழா கொண்டாடும் போது தமிழக அரசு செம்மொழி மாநாடு கொண்டாடக்கூடாதா? என்கிறார்கள். பெட்னாவையும் தமிழக அரசையும் ஒன்றென்று பார்க்கின்ற நிலையை நோயென்பதைத்தவிர வேறென்னவென்று சொல்லுவது.

திடீரென்று இரண்டாயிரத்துபத்தில்தான் தமிழ் செம்மொழி நிலையை அடைந்து விட்டது மாதிரி பேசுகிறார்கள். ஏதோ தமிழுக்கு செம்மொழி நிலையை கருணாநிதி மத்திய அரசிடம் போராடி வாங்கி தந்தது போன்று அவரை கொண்டாடுகின்றனர்.( அமைச்சர் பதவியை பேரம் பேசி வாங்குவது போல). உண்மையில் இவர்கள் சொன்னாலும் சொல்லாமல் போனாலும் கொண்டாடினாலும் கொண்டாடாமல் போனாலும் மத்திய அரசு அங்கீகரித்தாலும் அங்கீகரிக்காமல் போனாலும் தமிழ் செம்மொழிதான். தமிழின் செம்மொழித்தகுதியை யாரும் தட்டி பறிக்கவோ மறுக்கவோ முடியாது. மேலும் தமிழ் மொழியின் தன்மையை அங்கீகரிக்கும் தகுதி கூட வேறு எந்த மொழியை சார்ந்தவருக்கும் இல்லை என்பதுதான் உண்மை.

இந்நிலையில் தமிழ் செம்மொழி ஆனதை யாருக்காக கொண்டாடுகிறோம். நமக்காகவா? அடுத்தவருக்காகவா? நமக்காக என்றால் அதைக்கொண்டாடும் தகுதி நமக்கு இருக்கிறதா? நமது சொந்த தாய் மொழியில் பேசுவதை அவமானமாக கருதுகின்ற நாம் நமது மொழியை செம்மொழி என்று கொண்டாடுவதற்கு தகுதியுள்ளவர்களா?
உண்மையில் நாம் யார்?
-         தமது கையெழுத்தைக்கூட தமிழில் போடாதவர்கள்
-         தமது குழந்தைக்கு தமிழில் பெயர் வைப்பதை அநாகரிமாக கருதுபவர்கள்
-         தமது நிறுவனத்துக்கு கூட தமிழில் பெயர் வைக்காதவர்கள்
-         வீட்டில் ஆங்கிலத்தில் பேசுவதை கவுரமாக கருதுபவர்கள்
-         தலைப்பெழுத்தை ஆங்கிலத்திலும் பெயரை தமிழிலும் எழுதும் வினோதப்பிறவிகள்
-         கடன் வாங்கி படிக்கவைத்தாலும் ஆங்கில வழி பள்ளியில்தான் பிள்ளைகளை சேர்ப்பேன் என்று அலைபவர்கள்
இப்படிப்பட்ட நாம் தமிழைக்கொண்டாடுவதில் ஏதேனும் பொருத்தம் இருக்கிறதா? இப்படி மாநாடு போட்டு கொண்டாடுவதால் மட்டும் தமிழை அடுத்தவர்கள் கற்க முன்வந்துவிடுவார்களா? நாமே நம் தாய் மொழியை அங்கீகரிக்காத போது மற்றவர்கள் அங்கீகரித்து என்ன பயன்? தமிழை கற்க வேண்டியவர்கள் நாமா? அடுத்தவர்களா?

மாநாட்டுக்கு பெருந்திரளான மக்கள் கூட்டம் வந்ததாம். அதனால் மக்களுக்கு தமிழ்ப்பற்று வளந்துவிட்டதாம். மக்கள் கூட்டம் எங்கு அதிகமாக இருந்தது? அறுதியிட்டு சொல்லுங்கள் ஆய்வரங்கத்திலா? உணவகத்திலா? தீவுத்திடல் சுற்றுலா பொருட்காட்சிக்குக்கூட ஐந்து லட்சம் பேர் வருகிறார்கள். கூட்டம் கூட்டுவதே பெருமையாகிவிடுமா?

கொண்டாடுபவர்கள்தான் பதில் சொல்லவேண்டும்!பட உதவி : திரு. மு.நா (http://kirukkall.blogspot.com/2008/10/blog-post_29.html) - நன்றி!