எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday, 27 November 2009

புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் !

தமிழ் மண்ணுக்கு உயிர் தந்த வேங்கைகளே நீங்கள் புதைக்கப்படவில்லை விதைக்கப்பட்டிருக்கிறீர்கள் எதிரிகள் நீங்கள் புதைக்கப்பட்ட தலத்தை அழித்திருக்கலாம் ஆனால் நீங்கள் எங்கள் மனங்களில் பதித்துவிட்ட தடத்தை அழிக்கமுடியாது நீங்கள் செந்நீர் சிந்தி வளப்படத்தியிருக்கிற எங்கள் தேசம் இன்று வரைபடத்தில் இல்லாமல் இருக்கலாம் ஆனால் மனதேசத்தில் இல்லாமல் இல்லை அது உங்கள் கனவு நாங்கள் மெய்ப்படுத்தப்போகும் நனவு! வணங்குகிறோம் இந்நாளில் உங்கள் பாதங்களை! போற்றுகிறோம் உங்கள் ஆத்ம தியாகத்தை! தமிழீழத் தாயகம் அது உலகத் தமிழர்களின் தாகம்! .

Friday, 20 November 2009

வணக்கம் தலிவரே!

நேத்து பேப்பர்ல நம்ம தமிழின தலிவரு மவுனமா அழுதுகிட்டே ஒரு அறிக்க கொடுத்திருந்தாரு. அத படிச்சதிலிருந்து நானும் மவுனமா அழுவவேண்டியதா போச்சுங்க. அவர நினைச்சு இல்லீங்க. நம்ம தமிழனோட தலையெழுத்த நினைச்சு. வெளியில தலைய காட்டவே முடியல. கூட்டாளிங்க எல்லா கன்னா பின்னான்னு சவுண்டு வேற வுடரானுவ. அதனால நம்ம தலிவருக்கெல்லம் கொஞ்சம் அடவைஸ் குடுக்கலாமுன்னு இருக்கேன். ஈழப்பிரச்சினைப் பத்தி நம்ம தலிவருங்க இனிமேல வாயத்தொறக்கமா இருக்கறதுதான் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். ஏன்னா இவங்கெல்லாம் அதப்பத்தி பேசி இனிமே நடக்கப்போறது ஒன்றும் இல்லை. இவங்க வாய பொத்திகினு இருந்தாலாவது குத்துயிரும் குல உயிருமா இருக்கிறவன் நிம்மதியாக செத்தாவது தொலைவான். இவங்களால டெல்லிக்காரனோட பீச்சாங்கை சுண்டு விரல கூட அசைக்க முடியாதுங்கறதுதான் உண்மை. சும்மா பிராண்டுனா இவங்க மெயின் பீசையே அவன் புடுங்கிடுவான். அதுமட்டுமில்ல டெல்லிக்காரன் பாச்சா எல்லாம் சிங்களன் கிட்ட இனிமே பலிக்காது. அவன் இங்கிஷ்காரனையே பீஸ் கட்டி டெரரிஸ்ட ஒடுக்கறத பத்தி அவங்கிட்ட பாடம் படிச்சிட்டுப் போன்னு சொல்லிகிட்டு இருக்கான். அப்ப நம்ம டர்பண் தலைக்கெல்லாம் என்ன நிலைமைன்னு நீங்களே புரிஞ்சுக்குங்க. அமெரிக்கா காரன் கிட்ட பல்லை இளிச்சிகிட்டு காலம் ஓட்டவேண்டிய நெலம டெல்லிக்காரனுக்கு. அமெரிக்காகாரன் என்னடான்னா சீனாக்காரன் கிட்ட பல்லைக் காட்டிக் காலத்தை ஓட்டிகிட்டி இருக்கான். இனிமே சீனாக்காரன் வைச்சதுதான் சட்டம். பாதி தமிழ்க்காரங்க இந்தியாவுல இருக்கறதால சீனாக்காரனும் நமக்கு ஹெல்ப் பண்ண மாட்டான். அதேப்போல நம்ம தமிழக சனங்களுக்கும் ஈழ்ப்பிரச்சினையில் பெருசா ஒன்னும் இண்டரஸ்ட் இல்லை. இதை நான் சொல்லலீங்க. போன எம்பி எலக்‌ஷன்லயே நாம இத நம்ம ரெண்டு கண்ணாலேயே பாத்துட்டோம். தமிழ் நாட்டுல அரசியல் பன்றதுக்கு ஈழப்பிரச்சினை மாதிரி ரிஸ்க்கான பிரச்சினையெல்லாம் இனிமே தேவையே இல்லை. ஒரு நாலாயிரங் கோடி பணமும் நாலு டெலிவிஷன் சேனல்களும் நாலு இலவச திட்டங்களும் இருந்தாலே போதும். இப்பல்லாம் இதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயமே இல்லை. தம்மாத்தூண்டு ஸ்டேட்டுக்கு ரெண்டு வருசம் சிஎம்மா இருந்தவனுக்கெல்லாம் சொந்தமா கப்பலுங்கரான் ப்ளைட்டுங்கறான். இவ்ளோ பெரிய ஸ்டேட்டுக்கு அஞ்சு முறை சிஎம்மா இருந்தவங்களுக்கெல்லாம் இதெல்லாம் கால் தூசு. அதுமட்டுமில்ல நம்ப ராசா மாதிரி ஆளுங்களுக்கெல்லாம் ஒரே பால்ல ஒரு லட்சம் கோடி ரன்னெல்லாம் அடிக்கத்தெரியும். இதெல்லாம் டெல்லிக்காரனுக்கு நல்லாவே தெரியும். அதனாலதான் அலட்டிக்க வேணாமய்யான்னு தலப்பாட அடிச்சிகிட்டான். ஆனால் நம்ம தலிவருதான் விவரமில்லாமல் உண்ணாவிரதம் வீராவேச உரை அப்படி இப்படி என்று உடம்பை கெடுத்துகிட்டாரு. ஒழுங்காக வேறு வேலைப்பார்த்திருந்தா அந்த பொம்பளைகிட்ட இருந்து இன்னும் இரண்டு தொகுதியையாவது எக்ஸ்ட்ராவா புடுங்கி இருக்கலாம். அனாவசியமா இப்ப பொன்னுக்கு காபினட் போயிடுச்சி. அதனாலதான் சொல்றேன் நம்ம தலிவருங்க எல்லோரும் இந்தப்பிரச்சினைய இனிமே கண்டுக்காம விட்டுட்டா ரொம்ப நல்லது. ஒரு வகையில அந்த மக்களுக்கு நாம செய்யுற பெரிய உதவி இது. அப்படியே ஏதாவது விளம்பரம் வேனுன்னா அது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்ல. ராமேஸ்வரத்துக்கோ கன்னியாகுமரிக்கோ போய் அகதி முகாம்ல ரெண்டு கிலோ இலவச அரிசியும் ஒரு காந்தித்தாதா நோட்டும் குடுத்து தள்ளி நின்னு போஸ் கொடுத்து ஒரு போட்டோ எடுத்துக்கிட்டா போதும். அதுவும் முடியலயா நம்ம எருமாவளவன் மாதிரி தலிவருங்கள கூட்டிப்போய் ராச பக்சேவுக்கு பட்டு வேட்டியும் அவன் பொண்டாட்டிக்கு பட்டுப்பொடவையும் போத்தி போட்டோ எடுத்துகிட்டாப் போச்சி. அத வச்சியே நம்ம உடன் பிறப்பு அமெரிக்காவுக்கு விடுதலை பெற்றுந்தந்த ஆபிரகாம் லிங்கனே அப்படீன்னு ஊரு புல்லா போஸ்டர் ஒட்டிடுவான். அப்புறம் என்ன அடுத்த எலக்‌ஷன்லேயும் நீங்கதான் சிஎம் (இருந்தீங்கன்னா). அதை விட்டுட்டு இப்படி மவுனமா அழுவுறேன் சத்தம்போட்டு அழுவுறேன் அப்படீன்னு பீலிங்ஸ் படமெல்லாம் எதுக்கு? அப்புறம் இத்தாலி அம்மாவுக்கு கோபம் வந்திடுச்சின்னா திரும்பவும் தாயே குல தெய்வமே அப்படின்னு இன்னொரு பீலிங்ஸ் படம் காட்டனும். இதெல்லாம் தேவையா? அதே மாதிரி ஒத்துமை அது இதுன்னு நாமெல்லாம் உளரக்கூடாது. நமக்கும் ஒத்துமைக்கும் ஒரு காத தூரம் இருக்கும்போது அடுத்தவங்ககிட்ட இந்த பிலிமெல்லாம் ஓட்டக்கூடாது. காவிரி பிரச்சினையில இருந்து பெரியார் அணை பிரச்சினை வரைக்கும் நம்ம தலிவருங்க காட்டுற ஒத்திமை பத்தி சனங்களுக்கு தெரியாதா? அட ஒரு நல்லவன் சாவுக்காவது தலிவருங்க எல்லாம் ஒன்னு சேந்து போயிருக்கமா? நாமப் போயி ஒத்துமையப் பத்திப் பேசினா அவனவன் வாயாலயா சிரிப்பான்? ஈழத்தில் சகோதர சண்டையை மூட்டி வுட்டதே சூனியக்கார ரா அமைப்புதான் என்று சட்டசபையில் நாமே சொல்லிட்டு இப்போது பழியை இளைச்சவன் மீது போட்டா நம்ம சாயம் வெளுத்தராது? நம்ம வீட்டுச் சகோதர சண்டையில அப்பாவி மக்கள் மூனு பேரை உயிரோடு எரிச்சதயெல்லாம் மறந்துட்டு ஈழத்து சகோதர சண்டையில் செத்தவனுக்கெல்லாம் நீலிக்கண்ணீர் விடப்படாது? அப்புறம் என்னைமாதிரி ஆளுக்கேல்லாம் அது மைண்ட்ல ரி எண்ட்ரி ஆகும். நரிக்கூட்டத்தையும் குரங்கு கூட்டத்தையும் ஒன்னா சேத்துகினு போராடியிருந்தால் சுதந்திரம் கிடைத்திருக்குமாம் தலிவரு சொல்றாரு. என்ன பன்றது இதயம் கணிந்து கண்கள் பனிக்கின்ற டெக்னிக்கெல்லாம் ஈழத்து ஆளுங்களுக்கு தெரியாதே. 2005 –ல தேடிவந்த சனநாயக தீர்வை காலால எட்டி உதச்சிட்டாங்களாம். இதையும் தலிவருதான் சொல்றாரு. நமக்குத்தெரியாம அப்படி என்ன தீர்வு வந்திருக்குமோ தெரியல. ஒருவேலை இவரு குடும்பத்துல தென்மாவட்டங்களையும் வடமாவட்டங்களையும் டிப்பார்ண்ட்மெண்ட கண்ட்ரோல்களையும் பிரிச்சிகிட்ட மாதிரி பிரபா குடும்பத்துக்கு வடக்கு மாகானத்தையும் கருணா குடும்பத்துக்கு கிழக்கு மாகானத்தையும் பிரிச்சிக்கோங்க அப்படின்னு சொல்லி இருப்பாங்களோ என்னவோ ? ஆனா நம்ம ஆளுக்குத்தான் விவரம் பத்தாது. நமக்கிருக்கிறது ஒரே பொண்டாட்டி மூனே புள்ளைங்க நமக்கெதுக்கு இதெல்லாம் அப்படீன்னு அருமையான வாய்ப்பை எட்டி உதைச்சிட்டிருப்பாருன்னு நினைக்கிறேன். புடிச்சிருந்தாருண்ணா ஆசியா பணக்காரங்க லிஸ்ட்டுல ஒரு பத்து பதினைஞ்சிலேயாவது வந்திருக்கலாம். கருணாவப் பாருங்க நம்ம தலிவரையே மிஞ்சி ஒரு நாட்டுக்கு ஒரு பொண்டாடின்னு காலத்தை ஜாலியா வாழ்ந்துகிட்டு இருக்காரு. போன ஒரு உயிருக்காக இன்னும் ஊள விடறாரு நம்ம தலிவரு. ஆனா முப்பதாயிரம் நாப்பாதயிரம்னு உயிர்விட்ட ஓலம் மட்டும் தலிவரு காதுல விழவே இல்லயே அது ஏன்னு தெரியல. இந்த நொண்டி சாக்கை சொல்லியே எத்தனை நாள் காலம் தள்ளுவாரோ தெரியல. அந்த சம்பவத்தில் தலிவருக்கு கூட பங்கு இருப்பதாய் இவங்க கூட்டாளிகளே போஸ்டர் கூட ஒட்டினாங்க. ஒரு அம்மாக்கூட ஜெயிலுக்கெல்லாம் போயி கண்ணீர்விட்டு துப்பறிஞ்சுது. ஆனா அதெல்லாம் இப்ப என்ன ஆச்சுன்னு தெரியல. அதுவும் போக அந்த ஒரு சாவுக்குப்பின்னாடி ஓராயிரம் கேள்வி இருந்துச்சாம். பல நாட்டு உளவு அமைப்புகள் இருந்ததா கூட பேசிகிட்டாங்க? அதுகெல்லாம் விடைக்கண்டுபிடிச்சிட்டாங்களான்னு தெரியல. ஒரு வேளை பதில் வெளியில் சொல்லும்படி இல்லையோ என்னவோ? ஒட்டு மொத்த தமிழ் நாட்டையே இவங்க குடுமபத்துக்குத்தான் பட்டா போட்டு கொடுத்தாச்சுன்னு கேள்விப்பட்டேன். அப்புறம் வேறெதுக்கு இன்னும் இப்படி மவுனமா அழுவுறாருன்னு தெரியல. பதினெட்டு கிலோ மீட்டர் தூரத்தில சனங்க தலையில குண்டப் போட்டப்பவே அந்த சத்தம் நம்ம காதுல விழலையே? இவரு மவுனமாக அழுவுறது மட்டும் நமக்கு எப்படிங்க கேக்கும்? வயசான காலத்துல எதுக்கு இதெல்லாம். உடம்புக்கு ஆகாதுன்னு சொல்லுங்க. இறுதிகட்ட போர்ல சண்டப்போட்டு செத்துப்போன பெண் புலிங்க உடல கற்பழிச்சி வெறியை தீர்த்துக்கிட்டானுங்களாம் சிங்களவனுங்க. அந்த அனிமல்சுக்கும் குத்துயிரும் குலயுருமா கிடக்கிற சனங்களோட பிரச்சினைகள பார்க்காம அதிலயும் நுன்னரசியல் பண்ணி இன்னும் லாபம் தேடுற உங்க தலிவருங்களுக்கும் என்ன பெரிய வித்தியாசமுன்னு கேக்குறான் நம்ம கூட்டாளி. என்ன சொல்றதுன்னு தெரியல எனக்கு. அது சரி அதெல்லாம் விடுங்க. நம்ம கலா அக்கா மானையும் மயிலையும் வச்சி கெமிஸ்ட்ரி பாடம் நடத்துறாங்களாம் அத போய் பார்ப்போம் முதல்ல. .

Friday, 13 November 2009

இசைக்கு உண்டா எல்லைக்கோடு?

கல்லூரியில் படிக்கும்போது என்று நினைக்கிறேன். ஒரு விடுமுறை நாளில் என் நண்பனை பார்க்க சென்னையில் இருந்து பெரம்பலூர் சென்றேன். அப்பொழுதெல்லாம் பாடல்கள் கேட்பது புத்தகங்கள் படிப்பது இதெல்லாம் மற்றவர்கள் வீட்டில்தான். அப்போது நமக்கு அந்த அளவுக்கு வசதி வாய்ப்பெல்லாம் இல்லை. நண்பன் சற்று வசதியான வீட்டில் பிறந்தவன். அதனால் அவனுக்கென்று தனியாக டேப் ரெகார்டர் எல்லாம் வைத்திருப்பான. ஆனால் ஒரெ ஒரு பிரச்சினை. நண்பன் கான்வெண்ட்டில் படித்தவன். அதனால் எப்போதும் மேற்கத்திய இசை தொகுப்புகள்தான் அவனிடம் அதிகம் இருக்கும். அதனால வேறு வழியின்றி நானும் அதையே கேட்பேன். அவற்றில் எனக்குத் தெரிந்த ஒரே இசைத்தொகுப்பு மைக்கேல் ஜாக்சனுடையதுதான். நண்பனும் ஜாக்சன் பாடல்களையே அதிகம் கேட்பான் (எல்லாம் ஒரு மாயை). ஆனால் வார்த்தைகள் புரியாததால் எல்லாம் எனக்கு கூச்சல் மாதிரியே தெரியும். பல நேரங்களில் ஜாக்சனின் தாளகதி நம்மை ஆடவைக்கும் ஆனால் வார்த்தைகள் புரியாது. ஒரு நாள் நண்பன் அவன் தந்தை வாங்கி வைத்திருந்த ஆங்கில இசைத்தொகுப்பு ஒன்றை ஓட விட்டான். அந்த பாடல்கள் நம்முடைய பழைய திரைப்பட பாடல்களில் மேற்கத்திய இசை சார்ந்த பாடல்கள் போலிருந்தன். என்னவோ தெரியவில்லை அந்த தொகுப்பில் இருந்த அத்தனை பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அதற்கு முக்கிய காரணம் அவற்றின் வார்த்தைகள் எனக்கு ஓரளவுக்கு புரிகிற மாதிரி இருந்ததுதான். அந்த பாடல்களை பாடியிருந்தவருடைய குரலும் மிகவும் வசீகரமாகவும் அதே சமயத்தில் எளிமையாகவும் இருந்தது. நம்ம இளையராசாவின் தென்பாண்டிச் சீமை பாடலைப்போல. அதன் பிறகு எனக்கு அந்த பாடல்களைக் கேட்கும் வாய்ப்பு வரவில்லை. வாழ்க்கையின் ஓட்டம் அவற்றையெல்லாம் தேடிப்போய் கேட்கும் அளவிற்கு நமக்கு அவகாசம் தரவில்லை. இந்த நிலையில் சில வருடங்களுக்கு முன்பு இசைஞானி இளையராசா இசையமைத்த மைக்கேல் மதன காமராஜன் படத்தின் பாடலகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். அதில் வரும் ஒரு பாட்டிற்கு பின்னனி இசையாக ஒரு மேற்கத்திய இசைக்கோவையை இசைஞானி பயன் படுத்தி இருப்பார். ரம்பம்பம் பாடல் என்று நினைக்கிறேன். அதைக் கேட்டவுடன் இதை நாம் எங்கோ கேட்டிருக்கிறோமே என்று எனக்கு பொறி தட்டியது. மீண்டும் ஒருமுறை கேட்டபோது அது நண்பன் வீட்டில் கேட்ட எனக்குப்பிடித்த அந்த இசைத்தொகுப்பின் பாடலில் வரும் பின்னிசையை ஒத்திருப்பதை உணர முடிந்தது. மீண்டும் அந்த இசை தொகுப்பை கேட்கவேண்டும் ஆவல் மிகுந்தது. நண்பனை அழைத்து அந்த தொகுப்பு அவனிடம் இன்னும் இருக்கிறதா என்று கேட்டேன். அதெல்லாம் பெருசுங்க கேக்கிறது என்கிட்ட இப்ப இல்லை என்று சொல்லிவிட்டான். அது முதல் இன்று வரை வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் அந்த இசைத்தொகுப்பை தேடுவேன். பாடியவர் பெயர் நாடு இசைத்தொகுப்பின் பெயர் இது எதுவும் தெரியாததால் அந்த பாடல்கள் எனக்குக் கிடைக்காமலேயே இருந்தது. அமெரிக்க கருப்பின நண்பர் ஒருவரை சந்திக்கும் போது கூட இது பற்றிக்கேட்டேன். ஹம் பண்ணியாவது காட்டச்சொன்னார். நானும் ஆர்வமாய் ஹம் பண்ணிக் காட்டினேன். ஆனால் மூன்றாம் பிறை கமல் போலாகிவிட்டது என் நிலைமை. இந்நிலையில் நேற்று ஓய்வான நேரத்தில் மீண்டும் இளையாராசாவின் அந்த பாடலைக் கேட்க நேர்ந்தது. இந்த முறை எப்படியாவது கண்டுபிடித்தே தீருவது என்ற் முடிவில் கூகிளாண்டவரின் உதவியை நாடினேன். என் நினைவில் நின்ற “ஏஞ்சலீனா” ஒரே ஒரு வார்த்தையை வைத்து அதைப்பாடியவரின் பெயரைக்கண்டு பிடித்தேன். ஆனால் பாடல்களை தரவிறக்க முடியவில்லை. அதன் பிறகு பாடகரின் பெயரை வைத்து யூடியூப்பில் மேய்ந்தபோது ஒரு வழியாக எல்லாப் பாடல்களையும் கண்டு பிடித்து விட்டேன் - பதினைந்து வருடங்கள் கழித்து. விஞ்ஞான வளர்ச்சிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும். நான் கண்டுபிடித்தப் சில பாடல்களை கீழே உங்களுக்கும் தந்துள்ளேன் கேட்டு விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள். அதற்கு முன் அந்த பாடல்களைப் படைத்த அந்த படைப்பாளியை குறித்து சில வார்த்தைகள்……. இந்தப் பாடல்களைப்பாடியவர் ஹாரி பிளபாண்டே என்ற அமெரிக்க கறுப்பின பாடகர். இவர் ஒரு பாடகர் மட்டுமில்லாமல் நடிகர் மற்றும் சமூக ஆர்வலர். அமெரிக்காவில் நிற வெறிக்கு எதிராக குரல் கொடுத்த கலைஞர்களில் முக்கியமானவர். இன்றும் அமெரிக்காவின் ஆதிக்க வெறியினை எதிர்ப்பவர். ஜார்ஜ் டபுள்யூ புஷ்ஷின் ஈராக படையெடுப்பை மும்முரமாக எதிர்த்தவர். இரட்டை கோபுரத்தை தகர்த்த தீவிரவாதிகளுக்கும் புஷ்ஷுக்கும் ஒன்றும் பெரிய வித்தியாசமில்லை என்று வாதிட்டவர். 82 வயதாகும் இவர் இப்போது இசைப்பணியில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவரது பாடலகள் பெரும்பாலும் நாட்டுப்புற இசை வகையை சார்ந்தவை. உழைக்கும் வர்க்கத்தினர் மத்தியில் புழங்கும் பாடல்களை அடிப்படையாக கொண்டவை. (இப்போது புரிந்திருக்குமே அவரது பாடலகள் ஏன் எனக்கு பிடித்தது என்று) இந்த பாடல்களை கேட்கும்போது பல பழைய தமிழ் திரைப்பட பாடல்களும் சந்திரபாபு பாடல்களும் நினைவில் வந்து செல்லும். பதிவின் நீளம் கருதி இதோடு முடித்துக்கொள்கிறேன். .

Friday, 6 November 2009

இந்தோனேசியாவில் சிக்கிக்கொண்டுள்ள தமிழர்களை காப்பாற்றக்க்கோரி அமைச்சர் மு.க. அழகிரியிடம் மனு!

மனுவை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்
இலங்கையின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் தப்பி வந்த சுமார் 300 தமிழர்கள் இந்தோனேசிய கடல் எல்லையில் சென்ற மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியை நீங்கள் அறிந்திருக்க கூடும். பல மாதங்கள் காடுகளிலும் கடலிலும் உயிரை பயணம் வைத்து அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியா கடல் எல்லையை தாண்டும் முன் அவர்கள் இந்தோனேசியா கப்பற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்களான அவர்கள் தங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு அரசியல் தஞ்சம் அளிக்கவேண்டும் என்று கோரினர். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் வழங்க அவுஸ்திரசு மறுத்தவிட்டது. அவர்களை தடுத்து வைத்துள்ள இந்தோனேசிய அரசும் அவர்களுக்கு தஞ்சம் வழங்க மறுத்துவிட்டது. ஐ.நா அமைப்புகளும் அவர்களை கைவிட்டு விட்டன. இந்த நிலையில் அந்த 266 பேரும் படகிலேயே கடந்த சில வாரகாலமாக காத்திருக்கின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென இந்தோனேசிய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களை திருப்பி அனுப்பினால் அவர்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கவலை உலகத்தமிழர்களை ஆட்கொண்டுள்ளது. பல தமிழ் அமைப்புகளும் அவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசு தஞ்சம் அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன. தாம் வாழும் நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இத்தகைய நிலை இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களின் மனங்களையும் பாதிக்கத்தவறவில்லை. ஆனால் பிழைப்புக்காக புலம்பெயர்ந்துள்ள நாட்டில் எந்த வித சட்ட உரிமைகளும் இல்லாத நிலையில் அவர்கள் கையை மட்டுமே பிசைய முடிந்தது. இந்நிலையில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க. அழகிரி அவர்கள் இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று வந்திருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்தோனேசியா வாழ் தமிழர்கள் அவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை அளித்தனர். இந்த பிரச்சினை குறித்த விவரங்களை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டபின் அவரும் தன்னால் இயன்றவரை உதவுவதாக உறுதி அளித்துள்ளார். இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்தியா எந்த அளவுக்கு தலையிட முடியும் என்ற கேள்வி இருந்த போதும், இந்தோனேசியாவும், அவுஸ்திரேலியாவும் கைவிட்டு விட்ட நமது சொந்தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல் தமிழகத்துக்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு தமிழக அரசு தாமாகவே முன்வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக உள்ளது. தமிழக அரசு நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நம்புகிறோம். பிழைக்க வந்த இடத்தில் இடைவிடாத வேலைப்பலுவின் இடையிலும் வார வேலை நாளான நேற்று பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து அமைச்சரை சந்தித்து சக தமிழனுக்காக குரல் கொடுத்த நமது சொந்தங்களை மனதார பாராட்டுகிறோம். தமிழன் என்ற உணர்வை நாடு கடந்து வந்தும் உயிர்ப்பித்து வைத்திருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நேரில் வந்தும், நேரில் வராமல் இந்த நிகழ்விற்கான முன்னெடுப்பை செய்தும் உதவிய பின்வரும் நமது சொந்தங்களை நாம் பாராட்ட கடைமைப்பட்டுள்ளோம். திரு. கமல கிருஷ்ணன், சகார்த்தா திரு. சந்திரசேகரன், சகார்த்தா திரு. மாணிக்கம், போகூர் திரு. ஆன்டோனியோ டியோபில், போகூர் திரு. யாசிர் முகம்மது, போகூர் திரு. அருண், சுகபூமி திரு. திருநாவுக்கரசு, சகார்த்தா திரு. பத்மநாபன், போகூர் திரு. பாலசுப்ரமணியன், பாண்டுங் திரு. ஜெகதீசன் , பாண்டுங் திரு. மகேஸ்வரன் , பாண்டுங் திரு. பிரபு , பாண்டுங் திரு. ரமேஷ் , பாண்டுங் திரு. சுரேஷ் , பாண்டுங் திரு. பத்மநாபன் , பாண்டுங் திருமதி. விஜய காந்தி, சகார்த்தா .