எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Thursday, 17 March 2011

காலம் தரும் வாய்ப்பு!


நினைத்தது நடந்தே விட்டது. ஜெயலலிதாவின் தமிழின விரோத கோர முகம் வெளியில் வந்துவிட்டது. திமுக காங்கிரசு குமிடிப்பிடி சண்டையின் முடிவுக்கு ஜெயலலிதா காத்திருந்த போதே பலருக்கு சந்தேகம் வலுத்தது. கம்யூனிஸ்ட்டுகளையும் மதிமுகவையும் காக்கவைத்த போதே வேதாளம் முருங்கை மரம் ஏறுவது புரிந்த்து. நேற்று இரவு அது சந்திக்கு வந்துவிட்டது. ஜெயலலிதா போன்றவர்களுக்கெல்லாம் இது கூடவே பிறந்த சாபம். அவர்கள் ஒரு போதும் நன்றி நினைப்பதில்லை. அவர்கள் வந்த வர்க்கம் அப்படி. ஆதிக்க வர்க்கம். உழைப்பவனின் ரத்தத்தை உறிஞ்சியே வாழம் வர்க்கம். நம்பியவனின் கழுத்தை அறுத்தே பழக்கம். நாமக்கூட அட மாறிட்டாங்களோன்னு கொஞ்ஞ்ஞ்ஞ்சசசம்..... ( நெசமாலுமே கொஞ்சம்தான்) நினைச்சோம். வழக்கம்போல வேதாளம் தன் புத்தியை காட்டிவிட்டது.

19 மாதம் உள்ளே போட்ட பிறகும் வைகோவுக்கு விளங்கவில்லை. எஸ்மா டெஸ்மான்னு போட்டபிறகும் தோழர்களுக்கு உரைக்கவில்லை. விஜயகாந்திற்கு வேறு வழியில்லை. தமிழினத்திற்கும்தான். இது அம்மாவின் தலையை இன்னும் இறுக்கிவிட்டது.

விஜயகாந்திற்கு 41 கொடுத்தவர் வைகோவுக்கு ஒரு 15 கொடுப்பதில் என்ன பெரிய சிரமம். அங்கேதான் அவருக்கு நெருடல். நாளைக்கே ஆட்சிக்கு வந்தால் ஈழம் தமிழன் என்று கத்தி கத்தியே இந்த ஆள் தலைவலியை கூட்டிவிடுவான். காங்கிரசோடு கைகோர்த்து தமிழன் கழுத்தை நெறிக்க முடியாதே. தான் ஆட்சிக்கு வந்தால் பேசுகின்றவன் எதிக்கட்சியாய் இருக்கக்கூடாது. இது எல்லாம் தலையில் முடியில்லாதவனின் யோசனையாய் இருக்கும் அம்மாவுக்கு.

வைகோ செய்த உறுப்படியான காரியம் இதுவரை வாயை திறக்காததே. காலம் இப்போதும் தகர்ந்து போகவில்லை. அது தமிழனுக்கு இன்னொரு பொன்னான வாய்ப்பை வழங்க காத்திருக்கிறது. விஜய காந்திற்கும் ஒதுக்கீட்டில் ஒன்னும் பிரகாசம் இல்லை. கம்யூனிஸ்ட்களுக்கும் அப்படியே. வைகோவுக்கு இல்லவே இல்லை (மானமாவது மிஞ்சியது). இப்போதாவது இவர்கள் கூட்டை உடைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். இவர்கள் சேர்ந்தால் தமிழின விரோதிகள் இல்லாத கூட்டணியாக அது இருக்கும். விஜயகாந்தும் கம்யூனிஸ்ட்டுகளும் ஈழம் விசயத்தில் பாரட்டப்படக்கூடியவர்கள் இல்லைதான். ஆனால் அவர்களிடத்தில் மனிதாபிமானவது இருக்கும். ஜெயலலிதாவையே பொறுத்துக்கொண்ட நமக்கு இவர்களை ஏற்றுக்கொள்வது ஒன்றும் பெரிய விடயமில்லை. ஈழ மக்கள் ஆதரவுக்கு இன உணர்வு தேவையில்லை மனிதாபிமானம் இருந்தால் போதும்.

நிதிகளிடம் சிக்கிக்கொண்டிருக்கும் சினிமா உலகத்திற்கும் கேப்டன் ஒரு நல்ல மாற்றுத்தேர்வு. ஜெவிடமும் கருணாநிதியிடமும் சிக்கி சீரழிந்து கொண்டிருக்கும் மக்களுக்கு இது ஒரு மாற்றைத்தரும். நடுநிலையாளர்களுக்கும் இது நல்ல வாய்ப்பைத் தரும். ஆட்சியை பிடிக்க முடியுமா என்பது பதில் சொல்ல சிரம்மான கேள்வி என்றாலும், இப்போது இருக்கும் நிலையிலிருந்து ஒரு படியாவது உயர்ந்த இடத்துக்கு இவர்களை இது இட்டுச்செல்லும். யார் கண்டார்? மக்கள் ஆட்சியையே கொடுக்கலாம். வெண்ணை திரண்டு வருகிறது. தாழியை போட்டு உடைக்காமல் இருந்தால் சரி!
பட உதவி : வினவு.காம். நன்றி தோழர்களுக்கு!
.