எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday, 28 November 2008

ஐயாம் கோயிங் டூ சுடுகாடு - தமிழ்

சில நாட்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்த் தாத்தா திரு நன்னன் அவர்களின் தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அய்யா அவர்கள் சொன்னக்கருத்து ஒன்றை கேட்டபோது சுருக்கென்று முள் தைப்பது போன்று உணர்ந்தேன். தன் சொந்த மொழியை சிதைப்பதில் தமிழனுக்கு நிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றார். இது எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் கண நேரம் சிந்தித்தாலே உங்களுக்கு புலப்படும். உலகத்தில் உள்ள எந்த ஒரு இனமும் தன் மொழியில் பிறன் மொழியை கலந்து பேசுவதில்லை. ஒன்று தன் மொழியில் பேசுவார்கள் அல்லது பிறன் மொழியில் பேசுவார்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து வாந்தி எடுப்பது போல் யாரும் பேசுவதில்லை.

 தவிர்க்க முடியாது சில சமயங்களில் பிற மொழியில் உள்ள சில வார்த்தைகளை கையாளும் போது கூட அவற்றை தன் மொழியின் ஒளியமைப்பிற்கு ஏற்ப மாற்றி கொள்வார்கள். ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களின் வேர் சொற்கள் இலத்தின் மொழியில் உள்ளவை. அதற்காக அவற்றை அவர்கள் அப்படியே பயன் ப்டுத்துவது இல்லை. பக்கத்திலிருக்கும் புதுச்சேரியை எட்டிப்பார்த்தால் இது உங்களுக்குத் தெரியவரும். இங்கே வந்த பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை பாண்டிச்சேரி என்றும் உருளையன்பேட்டை என்பதை ஒர்லயன்பெட் என்றும் தன் வாயில் நுழைந்தவாறுத்தான் பேசினார்கள் எழுதினார்கள். தமிழை ”டமில்” என்றுதான் ஆங்கிலேயர்கள் எழுதினார்கள். அய்யோ ”ழ்” க்கு இணையான ஆங்கில எழுத்து இல்லையே அதனால் ”ழ்” ழை அப்படியே ஆங்கிலத்துக்கு தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றா நினைத்தார்கள். இல்லையே! நாம்தான் சற்றுக்கூட கூச்ச நாச்சமே இல்லாமல் செத்துவிட்ட மொழிகளில் இருந்து கூட எழுத்துக்களை பொறுக்கி தமிழில் சேர்த்து தமிழை சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம். 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலம் உலகையாளும் போது 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியைக்கொண்டு நம்மால் இயல்பாக பேசக்கூடமுடியாதா?

மேலும் இந்த மொழிக்கொலையை சீரழிப்பை செய்வதில் முன்னனியில் இருப்பவர்கள் தாய்த்தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆகிய நாம்தான். ஈழத்தமிழர்களோ அல்ல பிற நாடுகளில் குடியேறிய பழந்தமிழர்களோ இந்த தவறை செய்வதில்லை. இந்தோனேசியாவில் வாழும் பூர்வீகத்தமிழர்களில் பெரும்பாலோனோர் தமிழை மறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் பலர் கூடியமட்டில் இல்லங்களில் தமிழை பேசுகின்றனர். அவர்களின் குழந்தைகள் பெற்றோரை அம்மா, அப்பா என்றுதான் விளிக்கிறார்கள். மம்மி டாடி என்று ஒரு போதும் அழைக்க கண்டதில்லை.அவர்களின் வீட்டுக்குச் சென்றால் முதலில் அவர்கள் கேட்பது என்ன தண்ணி குடிக்கிறிங்க? காபித்தண்ணியா டீத்தண்ணியா என்பதுதான். என்ன டிரிங்க் வேனும் என்று கேட்டதே இல்லை. அரிசி சோற்றை சோறு என்றுதான் சொல்வார்களெ தவிர சாதம் என்றுச்சொல்லி நான் கேட்டதே இல்லை. கோழிக்கறி என்று சொல்வார்களே தவிர சிக்கன் கறி என்று சொல்லுவதில்லை.

 இந்த நாட்டில் பேசும் மலையக மொழி தமிழை விட பல ஆயிரம் ஆண்டுகள் பிந்தியதுதான். தமிழைப்பொன்று ஆழமான் இலக்கண வரம்போ சொல் வளமோ இல்லாத மொழிதான். அவ்வளவு ஏன்? சொந்த எழுத்துருக்கூட இல்லாமல் ஆங்கில எழுத்துருக்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் கூட தம் மொழியின் ஊடே மற்ற மொழிகளை கலந்து ஒருபோதும் பேசுவதில்லை. தம் மொழியில் இல்லாத சொற்களை பல மொழிகளில் இருந்து பெற்று பயன் படுத்தும் போதும் அவற்றை தம் மொழியின் ஒளியமைப்புக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக பெசிலிட்டி என்ற வார்த்தையை பெசிலிட்டாச் என்ற உச்சரிப்போடுதான் பயன்படுத்துகிறார்கள் எழுதுகிறார்கள். நன்றாக கவனியுங்கள்! தம் மொழியில் இல்லாத ஒரு வார்த்தைக்குத்தான் இந்த ஏற்பாடு. தம் மொழியில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு மாற்றாக இன்னொரு மொழியின் வார்த்தைகளை ஒரு போதும் பயன் படுத்துவதில்லை. எனக்கு சீனர்கள் சப்பானியர்கள் ஐரோப்பியர்கள் என்று பல நாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. அவர்கள் பேசுவதையும் நான் உண்ணிப்பாக கவனிப்பேன். அவர்களும் தப்பி தவறி கூட பிற மொழியை கலந்து பேசுவதில்லை. ஆனால் உலக நாகரீகங்களுக்கு எல்லாம் முதன்மையான நாகரீகத்தை சேர்ந்த நாம், உலகிலேயே தொன்மையான மொழிக்கு சொந்தக்காரர்களாகிய நாம் சற்று கூட சுய சிந்தனையில்லாமல் தொட்டதிற்கெல்லாம் ஆங்கிலத்தை கலந்து துப்புகிறோம். என்னால் பேசுகிறோம் என்று சொல்லமுடியவில்லை. ”ஐ யாம் கோயிங் டூ பள்ளி” என்று ஒரு ஆங்கிலேயரிடம் சொன்னால் அவர் வாயாலேயா சிரிப்பார்? சிந்தித்து பாருங்கள். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இன்றி நான் ச்கூலுக்கு போறேன், ஆபிசுல இருக்கேன், பைவ் அன்றட் இருக்கா, பேசா இருக்கேன் என்கிறோம். இந்த வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் தமிழில் இல்லையா? தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமா? நம் சொந்த தாய் மொழியை தேவையே இல்லாமல் கொல்வதுதான் நாகரீகமா? நாம் எல்லாம் படித்தவர்கள்தானா? நாம் சிந்திக்க வேண்டும். லண்டனில் இருந்தோ அல்லது மலையத்திலிருந்தோ வெளிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாவது “சீ யு நெக்ச்ட் வீக். டில் தென் பாய் பிறம் குரங்கு” என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஆனால் நம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளை பாருங்கள். ஏதொ அமரிக்காவில் நிகழ்ச்சி நடாத்துவதுபோல் தொட்டதுக்கெல்லாம் ஆங்கிலத்தில் பீற்றிக் கொள்கிறார்கள்.

சென்ற வாரம் இந்தோனேசியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் முக்கிய புள்ளி ஒருவரை அலுவல் விடயமாக சந்திக்க சென்றேன். அவர் ஒரு இந்தொனேசிய தமிழர். நான் மெதுவாக ஆங்கிலத்தில் உரையாடலை துவக்கினேன். உடனே அவர் “ஆர் யு பிரம் சென்னை” என்றார். நான் ஆமாம் என்றேன். அப்போ தமிழிலேயே பேசலாமே என்றார். பிறகு நாங்கள் உரையாடலை தமிழில் தொடர்ந்தோம். உரையாடல் முழுக்க அலுவல் சார்ந்தது என்ற போதும் அவர் ஒரு தடவை கூட ஆங்கிலத்தை துணைக்கு அழைக்கவில்லை. இயல்பான தமிழில் சாதாரணமாக பேசினார். ஆனால் என்னால் ஆங்கில பிரயோகங்களை பல் இடங்களில் தவிர்க்கவே இயலவில்லை. இது எனக்கு மிக்க அவமானமாக இருந்தது. தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் படித்து என்ன பயன்? தாய்த்தமிழை கொலை செய்யும் மகா பாதகர்களாகத்தானே இருக்கிறோம். நான் இவ்வாறு எழுதுவதால் நான் பிற மொழிகளை கற்பதற்கு எதிரானவன் அல்ல. பன்மொழி பேசும் திறன் என்பது குறிப்பாக இப்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் நம் சொந்த தாய் மொழியை கெடுத்து குட்டிச்சுவராக்கித்தான் பிறன் மொழியை பழக வேண்டும் என்பது அபத்தம் இல்லையா? சிந்திப்போமா? தமிழ் இனி மெல்லச் சாவதை தடுப்போமா?

Sunday, 16 November 2008

இதுதான் இந்தியாவின் பெருமையா?

ஒரு சில மாதங்களுக்கு முன் எனது நன்பர் ஒருவரிடமிருந்து “பாகிசுதானிய எழுத்தாளர் ஒருவரின் எழுச்சிமிகு எழுத்துகள்” என்ற தலைப்பிட்டு மின்னஞ்சல் ஒன்று வந்தது. உங்களுக்கும் கூட வந்திருக்கலாம். ஆங்கிலத்தில் வந்த அந்த மின்னஞ்சலை என்னால் இயன்றவரை தமிழ்ப்ப்டுத்தியுள்ளேன். முதலில் இதைப்படியுங்கள் பின்னர் விவாதத்திற்கு வரலாம். அந்த மின்னஞ்சல் இப்படி தொடங்குகிறது.............. இரண்டு அம்பானி சகோதரர்கள் இணைந்தால் கராச்சி பங்கு சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் பங்குகளையும் முழுமையாக வாங்க முடியும். அதற்கு பிறகும் அவர்களிடம் முப்பது பில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்கள் சேர்ந்தால் 17 கோடி பாகிஸ்தானியர்கள் உற்பத்தி செய்யும் அனைத்து பொருட்களையும் வாங்கி விட முடியும். அதற்கு மேலும் அவர்களிடம் 60 பில்லியன் டாலர்கள் மிச்சமிருக்கும். இந்தியாவின் முதல் நான்கு பணக்காரர்களின் சொத்து மதிப்பு சீனாவின் முதல் நாற்பது பணக்காரர்களின் சொத்து மதிப்பை விட அதிகம். கடந்த ஆண்டு நவம்பரில் மும்பை பங்கு வர்த்தக குறீயீட்டு எண் இருபதாயிரத்தை தொட்டதின் விளைவாக முகேசு அம்பானியின் ரிலையன்சு நிறுவன மதிப்பு 100 பில்லியன் டாலர்களாக உயர்ந்தது. (கராச்சி பங்கு சந்தையில் நிறுவனங்களின் மொத்த மதிப்பே 65 பில்லியன் டாலர்கள்தான்). முகேசு அம்பானி இந்த நிறுவனத்தின் 48 சதவீத பங்குகளை வைத்துள்ளார். சென்ற நவம்பரோடு நீத்தாவிற்கு நாற்ப்பத்தி நான்கு வயது முடிந்தது. அவரின் கணவர் அவருக்கு அளித்த பிறந்த நாள் பரிசு என்ன தெரியுமா? 60மில்லியன் டாலர் மதிப்புள்ள செட் விமானம். இதில் சொகுசு படுக்கை அறை, குளியல் அறை, மது அருந்தும் இடம், செயற்கைகோள் தொலைக்காட்சி, கம்பியில்லா தொடர்பு, விளையாடும் இடம் என அனைத்து சொர்க்கலோக வசதிகளும் உண்டு. நீத்தா வேறு யாரும் இல்லை இந்தியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் முகேசு அம்பானியின் மனைவி. முகேசு அம்பானி தற்போது தனது அந்த்தில்லா என்ற புதிய வீட்டை கட்டிக்கொண்டிருக்கிறார். ஒரு பில்லியன் டாலர்கள் செலவழித்து கட்டும் இந்த வீடுதான் பூலோகத்திலேயே விலையுயர்ந்த வீடு என்று சொல்லமுடியும். ஆறு பேர் கொண்ட குடும்பத்திற்கு 60 தளங்கள் கொண்ட இந்த வீடு 173 மீட்டர் உயரத்தில் கட்டப்படுகிறது. முதல் ஆறு தளங்கள் மகிழுந்துகள் நிறுத்துவதற்கும் ஏழாவது தளம் மகிழுந்துகளின் பராமரிப்பதற்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. எட்டாவது தளத்தில் ஒரு சிறிய திரையரங்கமும் உடற்பயிற்சி கூடம் மற்றும் நீச்சல் குளமும் அமைக்கபட உள்ளது. அடுத்த இரண்டு தள்ங்கள் விருந்தினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதற்கு மேலுள்ள நான்கு தளங்கள் இவரின் குடும்பத்தினருக்காக அட்டகாசமான அரபிக்கடலின் அழகை ரசிக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. இவைகளுக்கு எல்லாம் மேலே மூன்று எலிகாப்டர் தள்ங்கள் அமைக்க பட உள்ளன. இவர்களின் வீட்டை பராமரிப்பதற்கும் குடும்பத்தினருக்கு சேவை செய்யவும் 600 பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். (என்ன கண்ணை கட்டுதா?! மேலே படியுங்க) கடந்த 2004 நான்காம் வருடத்தில் உலகத்தில் அன்னிய நேரடி முதலீடுகளை கவரக்கூடிய நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தை பிடித்தது. ஆனால் பாகிசுதானோ முதல் 25 இடங்கள் வரை கூட இடம் பெற இயலவில்லை. 192 நாடுகளை கொண்ட ஐக்கிய நாடுகள் சபை ஆப்கானிசுதானிலும் ஈராக்கிலும் தேர்தல்கள் நடத்த எத்தனித்த போது அதற்கு உதவ யாரை அழைத்தார்கள் தெரியுமா? இந்திய தேர்தல் ஆணையத்தை! காபூலுக்கு மிக அருகில் இருந்தபோதும் பாகிசுதானை அவர்கள் அழைக்கவில்லையே ஏன்? சற்றே சிந்தித்து பாருங்கள்! 12 சதவீத அமரிக்க விஞ்ஞானிகள் இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். 38 சதவீத அமரிக்க மருத்துவர்கள் இந்தியர்கள். 36 சதவீத நாசா விஞ்ஞானிகள் இந்தியர்கள். மைக்ரோசாப்ட் நிறுவன ஊழியர்களில் 34 சதவீதம் பேர் இந்தியர்கள். மேலும் இபிஎம் ஊழியர்களில் 28 சதவீதம் பேர் இந்தியர்கள். இப்படி இந்த பட்டியல் நீளுகிறது. உங்கள் சிந்தனைக்கு இன்னும் சில தகவல்கள்...... ஆட் மெயிலை உருவாக்கிய சபீர் பாட்டியா ஒரு இந்தியர். சன் மைக்ரோ சிசுடம்சுவை உருவாக்கப்பட்டதும் வினோத் கோசுலா எனும் இந்தியரால்தான். இன்று 90 சதவீதம் கணணிகளை இயக்கிக்கொண்டிருக்கும் இண்ட்டெல் பிராசசர் செயலியின் தந்தை வினோத் தாம் ஒரு இந்தியர். ஆவ்லெட் பாக்கர்டுவின் ஈ பேச்சு திட்டத்தின் இணை கண்டுபிடிப்பாளர் ராசீவ் குப்தா ஒரு இந்தியர். இப்படியாக பத்தில் நான்கு பங்கு கணணி நிறுவனங்களை இந்தியர்கள் நிறுவகிக்கிறார்கள். கலைத்துறையை எடுத்துக்கொள்ளுங்கள்! இந்தி படவுலகம் ஆண்டொன்றுக்கு 800 படங்களை வெளியிடுகிறது. ஆறு இந்திய பெண்கள் இதுவரை உலக அழகி அலலது பிரபஞ்ச அழகிப்பட்டம் வென்றுள்ளனர். ஆசிசு பிரேம்சி- இந்திய விப்ரோ நிறுவனத்தின் தலைவர். இவர்தான் உலகின் மிக பணக்கார இசுலாமிய தொழில் முனைவர் ஆவார். இவர் மும்பையில் பிறந்து பெங்களூருவில் வசிக்கிறார். இப்போது இந்தியாவில் கிட்டத்தட்ட 36 க்கும் மேற்ப்பட்ட பில்லியனர்கள் வசிக்கிறார்கள். ஆனால் பாகிசுதானில் ஒரு பில்லியனர் கூட இல்லை. அண்மை காலங்களில் செல்வம் சேர்ப்பதில் இந்தியர்களின் அசுர வேகம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 2002 ஆம் ஆண்டில் திருபாய் அம்பானி அவர்கள் தம் பிள்ளைகளுக்கு விட்டுச்சென்ற சொத்துகளின் மொத்த மதிப்பு சுமார் 2.8 பில்லியன் டாலர்கள்தான். ஆனால் ஐந்து ஆண்டுகளுக்குப்பின் இரு அம்பானி சகோதரர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா? சுமார் 94 பில்லியன் டாலர்கள். கடந்த 2007ல் பங்கு சந்தையின் மதிப்பும் இந்திய ரூபாயின் மதிப்பும் எகிறிய போது முகேசு அம்பானி உலகிலேயே முதல் பணக்காரர் ஆனார். அப்போது அவரின் சொத்து மதிப்பு 63.2 பில்லியன் அமரிக்க டாலர்கள். அமரிக்காவின் பில்கேட்சு 56 பில்லியன் டாலர்கலோடு அப்போது அவரின் பின்னால் நின்றார். இவ்வளவுக்கும் இந்தியருக்கும் பாகிசுதானியர்களுக்கும் அடிப்படையில் அப்படியொன்றும் அதிக வேறுபாடுகள் இல்லை. நாம் ஒரே ஒய் குரோமோசோம் ஆப்ளோ தொகுதியை சேர்ந்தவர்கள்தான். ஒரே மாதிரியான பாரம்பரிய சீன் அடுக்கையும் எம்124 எனும் சீன் குறியீட்டையும் கொண்டவர்கள். ஒரே மாதிரியான் டி.என்.ஏ மூலக்கூறுகளையும் டி.என்.ஏ அடுக்கையும் கொண்டவர்கள். நமது கலாச்சாரம் பாரம்பரியம் உண்வு பழக்க வழக்கம் இவை அனைத்துமே ஒரே மாதிரியானது. அப்படியானால் பாகிசுதானியர்கள் இந்தியர்களிடமிருந்து எங்கே வேறுபடுகிறார்கள்? ”அவர்களது தலைவர்களை அவர்களே தேர்ந்தெடுக்கிறார்கள்”. இவ்வாறு அந்த மின்னஞ்சல் முற்றுப்பெற்றது. படிக்க ஆரப்பித்தபோது எனக்கு கூட மிகவும் பெருமையாகத்தான் இருந்தது. இறுதிப்பகுதிக்கு வந்தபோது எனக்கு சப்பென்று ஆகிவிட்டது. நாம் தேர்ந்தெடுக்கிற அரசியல் வாதிகளின் லட்சணம் நமக்குத்தான் தெரியுமே. பாரளுமன்ற கூட்டம் நடக்கிற லட்சணத்தை தூர்தர்சனில் பார்த்தால் அனைவருக்கும் புரியும். இவ்வளவும் தெரிந்த பாகிசுதானிய எழுத்தாளருக்கு நம் அரசியல்வாதிகளின் சுயரூபம் தெரியாதது வியப்புதான். இதைவிட பல முக்கிய காரணங்களை அவரால் வெளிப்படுத்தியிருக்க முடியும். அனால் நிதர்சனத்தை வெளிப்படையாக காட்டமுடியாத வழமையான இயலாமை ஒரு காரணமாக இருக்கக்கூடும். ஒரு கோர்வைக்காகக் கூட அவர் அவ்வாறு எழுதி இருக்ககூடும். சரி எழுதிய அவரையும் விட்டுவிடுவோம். அரசியல்வாதிகளையும் விட்டுவிடுவோம். இந்தியர்கள் என்ற முறையில் நாம் முன்னெடுத்து செல்லக்கூடிய அளவிற்கு இவைகள் உண்மையிலெயே நமக்கு பெருமையா? இந்த கட்டுரையில் உள்ள இந்தியர்களின் அறிவுசார் ஆளுமை குறித்த விடயங்கள் உண்மையிலேயே ஏற்புடையவைதான். இதில் யாருக்கும் இருவேறு கருத்துகள் இருக்க முடியாது. அனால் மற்றவை? குறிப்பாக பணக்காரர்களான இந்த அம்பானி சகோதர்கள் குறித்த கருத்துகள் நமது பெருமையின் சின்னமா? இவர்களின் பணக்கார டாம்பீகங்கள் நம் நாட்டுக்கு உண்மையிலேயே பெருமையா? ஏன் என்றால் இந்த குறிப்பிட்ட நிறுவனங்கள் தங்களை நிலை நிறுத்திக்கொள்ள கையாண்ட மோசமான வழிமுறைகளை ஒரு குழந்தை கூட அறியும். மேலும் தொழிலில் இவர்கள் காட்டும் ஒழுக்கத்தையும் நாம் அறிவோம். இவர்களின் கோரப்பற்களில் சிக்குண்டு அழிந்த சிறு வணிகர்கள் ஏராளம். சில மாதங்களுக்கு முன் ஒரு செய்தி ஊடகங்களில் வெளியானது. அது மேற்படி கட்டுரையில் வந்த சொகுசு விமானம் பற்றிய செய்தி. அதாவது இந்த விமானத்தை அரசு பறிமுதல் செய்து விட்டதாக. காரணம் இந்த விமானத்தை இறக்குமதி செய்தபோது இந்த நிறுவனம் செய்த ஏமாற்றுவேலை. என்ன அது? தனது மனைவின் அந்தப்புறத்தின் தனி உபயோகத்திற்காக வாங்கிய இந்த விமானததை பொது உபயோகத்திற்காக வாங்கியதாக பொய் சொல்லி வரியேய்ப்பு செய்துவிட்டார் முகேசு. ஆனால் இதற்கெல்லாம் அஞ்சுபவரா இவர். சரி சரி வரிக்கட்டுகிறோம் என்று சொல்லி எழுதித் தந்துவிட்டு பறந்துவிட்டார் அதே விமானத்தில். வரி ஏய்ப்பு செய்வது என்பது இவர்களுக்கு ஒன்றும் புதிதில்லை. முன்பு கைப்பேசி நிறுவனத்தின் மூலமாக பல ஆயிரம் கோடி வரியை ஏப்பம் விட்டவர்கள். பிரச்சினை வந்தால் சில கோடிகளை தூக்கிப் போட்டுவிட்டு அலட்டிகொள்ளாமல் போய்விடுவார்கள். தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில் சகத்தினை அழித்திடுவோம் என்றார் பாரதியார். இவர்கள் சகத்தினை அழித்து ஒருவன் வாயில் போட்டுகொண்டவர்கள். இவர்கள் நமது அவமானச்சின்னங்கள் !

Tuesday, 11 November 2008

மார்பகப்புற்று நோய் பெண்களுக்கு மட்டும்தான் வருமா?

மார்பகப்புற்று நோய் பெண்களுக்கு மட்டும்தான் வரும் என்பது தவறு. 1:100 என்ற விகிதத்தில் ஆண்களுக்கும் இது வருகிறது என்பதுதான் புதிய செய்தி. வருடந்தோறும் அக்டோபர் மாதம் மார்பகப்புற்று நோய் மாதமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் இந்த நோய் குறித்த விழிப்புணர்வு பெண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தேவை என்பதே இப்பதிவின் நோக்கம். சென்ற நூற்றாண்டுகளில் மேற்க்கத்திய நாடுகளில் மட்டுமே பெண்கள் இந்த நோயால் அதிக அளவில் பாதிக்கப்பட்டார்கள். ஆனால் தற்போது ஆசிய நாடுகளிலும் குறிப்பாக இந்தியாவில் பெண்கள் இந்த நோய் அதிக அளவில் பாதிக்கப்படுகிறார்கள். மேற்க்கத்திய கலாச்சார கழிசடைகளை கூச்சமின்றி நாம் ஏற்றுக்கொண்டதுதான் இதற்கும் காரணம். இந்த நோய் வருவதற்கான காரணங்கள் இன்றுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. உலகமெங்கும் இதற்கான ஆராச்சிகள் நடைப்பெற்று வருகின்றன. ஆனால் நோய் பாதிப்புகளுக்கான வாய்ப்புகள் பற்றி மட்டுமே இதுவரை அறியப்பட்டிருக்கிறது. இந்நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து அதற்கான சிகிச்சைகள் அளிக்கப்பட்டால் இந்நோயை கட்டுப்படுத்தி வாழமுடியும். இவற்றைப்பற்றி வலையுலகில் சிறப்பான தகவல்கள் உள்ளன். கீழே உள்ள சுட்டிகளை சுட்டினால் இவற்றை அறியலாம். ஆகவே அவற்றை பற்றி இங்கே நான் அதிகம் விவரிக்கவிரும்பவில்லை தமிழில் http://www.thamilworld.com/forum/index.php?showtopic=4843 http://reallogic.org/thenthuli/?p=238 ஆங்கிலத்தில் http://en.wikipedia.org/wiki/Breast_cancer http://ww5.komen.org/breastcancer/aboutbreastcancer.html இது பெண்கள் சம்பந்தப்பட்ட நோய் என்பதாக அனேக ஆண்கள் இந்த நோயைப்பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமல்ல குடும்பத்தில் உள்ள அனைவரும் இந்த நோயைப்பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியம். பெரும்பாலான் நம் தாய்மார்கள் திருமணமானவுடன் தமது முழுக்கவனத்தையும் தமது குடும்பத்தை பராமதிப்பதிலேயே செலவிடுகிறார்கள். கணவண் மற்றும் குழந்தைகளின் உடல்நிலை மீது செலுத்தும் அக்கறையை தன்னுடைய உடல் நலத்தின் மீது அவர்கள் செலுத்துவதில்லை. அபபடியே ஏதாவது நோய் வந்தாலும் கைமருந்தோ அல்லது கடையிலிருந்தோ மருந்து வாங்கி சாப்பிட்டு காலத்தை ஓட்டிவிடுவார்கள். ஆனால் இதுபோன்ற நோய்கள் இவர்களை தாக்கி கடைசி கந்தாயத்தில் தெரிய வரும்போது இவர்களுடன் சேர்ந்து இவர்கள் பேணிக்காத்த குடும்பத்தின் நிலையும் பரிதாபமாகிவிடுகிறது. ஆகவே இத்தகைய தாய்மார்களின் உடல் நலத்தில் கவணம் செலுத்த வேண்டியது கணவன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினர் அனைவரின் கடமை ஆகும். நாற்பது வயதிற்கு மேற்ப்பட்ட அனைத்து பெண்களையும் குறிப்பிட்ட இடைவெளிகளில் இந்நோயிக்கான சோதனைகளை மேற்கொள்ள செய்யவேண்டும். தம் குடும்ப மருத்துவரை கண்டு சுய பரிசோதனை முறைகளை அறிந்துகொள்ள அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். நோய் தாக்கத்தை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்து முறையான சிகிச்சை அளித்து அவர்களை காக்கவேண்டும். மேலும் மனரீதியாக அவர்களுக்கு மிகவும் அதரவாக இருந்தால் இந்நோயுடனேயே பல ஆண்டுகள் இயல்பாக வாழ முடியும். மேலும் இந்நோயைப்பற்றி நாளும் புதிய தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நீண்ட நாள்கள் தாய்பபால் புகட்டும் தாய்மார்களுக்கு இந்நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தகவல்கள் தெறிவிக்கின்றன. தற்போது பெண்கள் மட்டுமன்றி ஆண்களையும் இந்த நோய் தாக்குவதாக சொல்கிறார்கள். 1:100 என்ற விகிதத்தில் இந்நோய் ஆண்களையும் தாக்குவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் வியர்வை கட்டுபடுத்திகள் ( ஆண்ட்டி பெரிஸ்பெரண்ஸ்) உபயோகிப்பதும் இந்நோயிக்கான வாய்ப்புகளை அதிகரிப்பதாக அண்மையில் செய்திகள் வெளியாயின. நம்மூரில் குளித்தவுடன் அக்குளில் வாரிவாரிப்பூசும் டால்கம் பவுடர் என்னும் வாசனைப்பொடிகளும் இவற்றில் அடக்கம். இவற்றில் உள்ள பல வேதிப்பொருள்கள் நம் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் நம் வியர்வை வழியே வெளியேறுவதை தடுத்துவிடுவதாக இச்செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் இவற்றை தயாரிக்கும் நிறுவனங்கள் இது தவறு என்று சாதிக்கின்றன. இது எந்த ஆராய்ச்சிகளாலும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று இவர்கள் வாதிடுகிறார்கள். எது எப்படியோ நாம்தான் எச்சரிக்கயாக இருக்க வேண்டும். நம் இல்லத்து தாய்மார்களை இந்நோயிலிருந்து காக்க வேண்டும். மறந்துவிடாதீர்கள் “பெண்கள் நமது வீட்டுக் கண்கள்”.