எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday, 27 February 2009

தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!

அன்புத்தமிழ் நெஞ்சங்களே! நம்முடைய சொந்த தொப்புள் கொடி உறவுகள் ஒரு சில மைல் தூரத்தில் தினம் தினம் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். நமது சொந்த இனம் பூண்டோடு சிரீலங்கா அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ அந்த நாட்டுக்கு இறையாண்மையுள்ள நாடு என்ற பட்டத்தை அனுதினம் வழங்கி பெருமை படுத்திக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் அங்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை அறியாமல் சிரீலங்கா அரசுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அரசியல் செய்ய பல களங்கள் இருந்தும் கொஞ்சம் கூட பிரஞ்ஞையே இல்லாமல் தினம் செத்து மடிந்துகொண்டிருக்கிற நமது சொந்தங்களின் பிரேதங்களின் மீது அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதுபோல் ஒருமாயயை உருவாக்குகிறார்கள். இதோ நம் ஈழ சகோதரனின் கூக்குரலை இந்த பாட்டில் கேளுங்கள். தான் வாழ்வை இழந்து நின்றபோதும் தான் வளர்த்த குருவியின் நாயின் மீது அவர்களுக்கு இருக்கும் வாஞ்சை கூட இந்த சகோதர சகோதரிகளின் மேல் நமக்கு இல்லையே! ஐயகோ பேய் மனது படைத்தோரே நீர் மனதிறங்க மாட்டீரோ! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! வெடிவிழுந்து எரிந்த பனை கரை உடைந்து காயந்த குடம் கூரை சரிந்த எமது இல்லம் குருதி வடிந்த சிறு முற்றம் இரவை கிழித்த பெண்ணின் கதறல் ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே புதைய சம்மதமா? தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ! ஊஞ்சலாடிய முயலை நீந்திப்பழகிய வாவி எல்லை என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ முற்றம் தெளித்திட விடியல் வருமோ! யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ! தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! மக்கள் தொலைக்காட்சியில் தினமும் ஒளிபரப்பாகும் ஈழம் - நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது. நன்றிகள் : ஒரே தமிழ் தொலைக்காட்சியாம் - மக்கள் தொலைக்காட்சிக்கும் - பாடலை உணர்ச்சி பெருக்கோடு பாடிய கலைஞர்களுக்கும்.

Wednesday, 25 February 2009

மறக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) ஆஸ்கார் !

நம்ம ஏ ஆர் ரகுமான் இரட்டை ஆஸ்கார் வென்ற ஆரவாரத்தில் இன்னொரு முக்கிய இந்திய ஆஸ்கார் வெற்றி உணரப்படாமல் விடு்பட்டுவிட்டது. ஸ்மைல் பிங்கி என்ற இந்திய ஆவண குறும்படம் பெற்ற ஆஸ்கார் பரிசை கொண்டாட நம்மவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இந்த குறும்படம் இன்று இந்திய குழந்தைகளில் பெருமளவு காணப்படும் உதட்டுப்பிளவு மற்றும் மேலன்னப் பிளவு என்ற குறைபாட்டுடன் பிறந்த ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை நிகழ்வுகளை படம்பிடித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆஹுரா மாவட்டத்தில் உள்ள டாபாய் என்ற சிற்றூரில் பிறந்த பிங்கி என்ற பெண்ணை சுற்றி செல்கிறது இந்த குறும்படம். அவளுக்கு இருக்கும் இந்த குறைபாட்டினால் சக குழந்தைகளால் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறாள். இதனால் மனம் வருந்தும் சிறுமி மற்ற குழந்தைகளிடமிருந்து தன்னை தனிமைப் படுத்திக்கொள்கிறாள். இந்நிலையில் மருத்துவர்கள் அவளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து அக்குறைபாட்டினை சரிசெய்கிறார்கள். அதன் பிறகு அவள் தன்னம்பிக்கையுடன் வாழக்கையை எதிர்கொள்கிறாள். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவளது வாழ்க்கையில் ஏற்படும் நேர்முறை மாற்றங்கள் பற்றியும் எடுத்துச்சொல்கிறது இப்படம். இப்படத்தை மேகன் மெயான் என்பவர் இயக்கியுள்ளார். இந்தியாவில் கானப்படும் ஒரு முக்கிய சமூக பிரச்சினையை முன்னெடுத்துச் சென்ற இப்படம் ஆஸ்கார் வென்றதால் நம்மில் பலருக்கும் இப்பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவது திண்ணம். Cleft lip மற்றும் palate என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதட்டுப்பிளவு மற்றும் மேலண்ணப் பிளவு குறைபாடு இந்தியா மற்றும் இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் பெருமளவு கானப்படுகிறது. இந்த் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மேல் உதடானது சற்று பிளவுபட்டுக் கானப்படும். இதனால் குழந்தையின் முக அழகு பாதிக்கப்படுவதுடன் பேச்சுக்குறைபாடும் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. சொந்தத்தில் திருமண உறவு செய்துகொள்ளும் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு அதிக அளவில் வருகிறது. மேலும் தாய் அல்லது தந்தைக்கு இக்குறைபாடு இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு இக்குறைபாடு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய பெற்றோர்கள் கருத்தரிப்பு காலத்தில் டிஎன்ஏ வரைபட சோதனைகள் செய்துகொண்டால் இக்குறைபாட்டை முன்கூட்டியே தெரிந்து கொண்டு களைய முடியும். இக்குறைபாட்டை சரி செய்வதற்கான சிறந்த அறுவை சிகிச்சை முறைகள் இந்தியாவில் உள்ளன. பிறந்த இரண்டாவது மாதத்திலேயே குழந்தைகளுக்கு இச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். தொடர்ந்து ஐந்து அல்லது ஆறுமுறை வெவ்வேறு கால இடைவெளிகளில் அறுவை சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் மேலுதடு சீராண தோற்றத்தை அடையும். பலர் ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. எளிய மக்களும் எடுத்துகொள்ளும் செலவில் இச்சிகிச்சைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவும் இதற்கென உள்ள முகச்சீரமைப்பு சிறப்பு மருத்துவர்களின் வழிகாட்டுதலில் இச்சிகிச்சைகள் மெற்கொள்ளப்பட வேண்டும். இக்குறைபாட்டைப் பற்றி கிராமப்புற மக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு இல்லை. பலர் இது சரி படுத்தமுடியாத ஒரு குறைபாடு என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற இந்த குறும்படமும் அதற்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் பரிசும் உதவும். அரசும் ஏழைக்குழந்தைகளுக்கு இச்சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறது. மக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி தம் குழந்தைகளை இப்பிரச்சினையிலிருந்து விடுவிக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.நண்பர்களே உங்கள் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.

Thursday, 19 February 2009

பிராபாகரனை பற்றிப்பேச சிதம்பரத்திற்கு யோக்கியதை உண்டா?

பிரபாகரன் ஒரு பதவி ஆசைப்பிடித்தவர் என்று சென்னையில் நடந்த பொதுக்கூட்டத்தில் சிதம்பரம் பேசியிருக்கிறார். கடந்த பல மாதங்களாக தமிழக மக்கள் ஈழத்து சொந்தங்களை காப்பாற்றச் சொல்லி கதறியபோதெல்லாம் காதில் பஞ்சை வைத்து அடைத்துக்கொண்டு ரத்த காட்டேரி ராசபக்சேவுடன் கைகோர்த்து ஆட்டம் போட்ட காங்கிரசு சாத்தான்கள் இன்று வேதம் ஓத வந்திருக்கின்றன். அதுவும் சூழ்ச்சிக்கார மாயாவி கருணாநிதி போட்டுக்கொடுத்த பாதையில். எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் எதையாவது பிடித்து தொங்கிக்கொண்டு அமைச்சர் பதவியை வாங்கிவிடும் சிதம்பரத்துக்கு பிரபாகரன் அவர்களைப்பற்றி பேச என்ன யோக்கியதை இருக்கிறது என்று தெரியவில்லை. இருக்கின்ற ஒரு உடைந்த நாற்காலிக்கே ஒன்பது கோஷ்டிகளாக பிரிந்து சண்டையிடும் காங்கிரசு காரர்களுக்கு கொள்கைக்காக தன் உயிரையே பணயம் வைத்து போராடும் ஒரு தலைவனை பார்த்து பதவி வெறி பிடித்தவன் என்று கூற எந்த தகுதியும் இல்லை. தன் சொந்த இனத்தின் விடுதலைக்காக தன் சொந்த மகனையே களத்தில் இறக்கி போராடுகிறார் பிராபாகரன் அவர்கள். இறையாண்மை தேசியம் என்று ஊரை ஏமாற்றும் காங்கிரசு கோஷ்டிகள் ஒருவராவது தனது வாரிசுகளை இந்திய ரானுவத்திற்கு அனுப்பியிருக்கிறார்களா? அவர் நினைத்திருந்தால் வடகிழக்கு மாகாணத்துக்கு முதல்வராகி இவர்களைப்போன்று கொள்ளையடித்து சுவிசு வங்கியில் போட்டிருக்க முடியும். சிதம்பரத்தை போன்று தன் மகனுக்கு பதினைந்து லட்டர் பேடு கம்பனிகளை வைத்துக்கொடுத்து நாட்டை கொள்ளையடித்திருக்க முடியும். ஆனால் தான் கொண்ட கொள்கைக்காக தன் சுக துக்கங்கள் அனைத்தையும் காவு கொடுத்து போராடும் ஒரு தலைவனை குறைத்துப் பேச தன் சொந்த நலனுக்காக நாட்டையே அடகுவைக்கும் காங்கிரசுக்காரர்களுக்கு எந்த தகுதியும் இல்லை. தன் இனத்துக்காகவே போராடி அவர்களுக்காகவே உயிர்விடத்துணியும் அவர் சர்வாதிகாரியா? தன் மகனை முன்னுக்கு கொண்டுவருவதற்காக தன் சொந்த கட்சியின் ஒரு தன்னலமற்ற தொண்டனை காவு வாங்கிய கருணாநிதி சர்வாதிகாரியா? தடி ஊன்றும் வயதிலும் மனைவி துணைவி அவர்களின் குழந்தைகள் பேரக்குழந்தைகள் என்று தன் குடும்பம் செழிக்க வேண்டும் எனபதற்காகவே பதவி நாற்காலியை பிடித்துக்கொண்டிருக்கும் கருணாநிதி பேராசைக்காரரா? தன் இயக்கம் ஒன்றையே குடும்பமாக கொண்டு போராடும் அவர் பேராசைக்காரரா? தன் வசதிக்கேற்றவாறு வராலாற்றை மாற்றிக்கொள்கிறார் சிதம்பரம். ராசீவ் செயவர்த்தனே ஒப்பந்ததை காலில் போட்டு மிதித்தவர்கள் சிங்களர்களா? அதை பூரணமாக அமுல் படுத்த வேண்டும் என்று உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்ட திலீபனின் இனமாகிய விடுதலைப்புலிகளா? கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நடத்தப்பட்ட அகிம்சை போராட்டத்த்தில எந்த முன்னற்றமும் இல்லாததால் ஈழப்போராட்டம் ஆயுத களத்திற்கு தள்ளப்பட்டது. ராசீவ் செயவர்த்தனே ஒப்பந்தத்திற்கு முன்பே அங்கு பல ஒப்பந்தங்கள் போடப்பட்டு அவை அனைத்தும் குப்பை தொட்டியில் வீசப்பட்டன. அவற்றில் கூறப்பட்ட ஒரு சரத்துக்கூட சிங்கள அரசால் செயல்படுத்தப்பட்டதில்லை. அதனால்தான் இந்த ஒப்பந்தமும் எந்த பலனும் தரப்போவதில்லை என்று விடுதலைப்புலிகள் அன்றே ராசீவ் காதில் ஓதினார்கள். ஆனால் அது எதையுமே காதில் வாங்காத ராசீவ் அரசு அந்த ஒப்பந்தத்தை ஏற்கச்சொல்லி விடுதலைப்புலிகளை கட்டாயப்படுத்தினார்கள். இந்தியா கேட்டுக்கொண்ட ஒரே காரணுத்துக்காக அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் விடுதலைப்புலிகள். ஆனால் ஒப்பந்தம் அமலுக்கு வந்த மறுகணமே அதை மீறி 17 நிராயுதபாணிகளை கைது செய்து ஒப்பந்தத்தை சீரழித்தது சிங்கள அரசு. வழக்கம்போல் இந்தியா இந்த விடயத்திலும் நீதி தவறி நடந்ததால்தான் அமைதிப்படைக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே பிரச்சினை ஆரம்பம் ஆனது. உண்மை இப்படி இருக்க ராசீவ் ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மதித்திருந்தால் ஈழத்தில் பாலும் தேனும் ஓடும் என்று சிதம்பரம் புலுகுவதை யாரும் நம்ப தயாரில்லை. அப்பாவி தமிழ் இனத்தை அழிக்க திட்டமிட்டு ஒரு இன அழிப்பை செய்து வரும் ராசபக்சேவுடன் கூட்டு சேர்ந்து தமிழினத்துக்கு துரோகம் செய்வது மட்டுமில்லாமல் நாகூசாமல் அந்த பழியை விடுதலைப்புலிகளின் மீது போடும் காங்கிரசின் தேர்தல் நாடகத்தை யாரும் நம்பமாட்டார்கள். இறையாண்மையுள்ள நாடு என்ன செய்ய வேண்டும் என்று இந்தியா சொல்லமுடியாது என்று நீட்டி முழங்குகிறார் பிரணாப். அப்படியென்றால் ராசீவ் ஒப்பந்தம் எப்படி போடப்பட்டது. அப்படிப் போடப்பட்ட ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் அப்படி செயல் படுத்தினால் அங்கு பாலாறும் தேனாறும் ஓடும் என்று பசப்புவது எதனால்? இந்தியா தெற்கு ஆசியாவிலே பெரியண்ணன் வேசம் கட்டவேண்டும் அதன் பயனால் தாங்கள் இங்கு கொள்ளை அடித்த பணத்தை அந்நிய முதலீடு என்ற பெயரில் இலங்கையின் தொழில்களை ஆக்கிரமிக்கவேண்டும் இதுதான் காங்கிரசு தலைவர்களின் ஆசை. இதற்காக நம் சொந்தங்களை காவு வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இந்த லட்சனத்தில் இவர்களை செய்வதை மேடை போட்டு நியாயப்படுத்தும் அளவிற்கு இவர்களை தமிழக மக்கள் விட்டு வைத்திருப்பது அதிகம். சு.சாமியை முட்டையால் அடித்த நண்பர்களே நீங்கள் முதலில் அடித்திருக்கவேண்டியது சிதம்பரத்தைதான்!

Saturday, 7 February 2009

அபாயம் ! எச்சரிக்கை !

மானமிகு தமிழக வாக்காளர் பெருமக்களே ! விழிப்பாக இருங்கள் ! உங்களை ஏமாற்றி வாக்குப்பிச்சை கேட்க ஒரு ஓட்டுப்பொறுக்கி கூட்டம் தயாராகிறது. எதற்கும் உங்கள் பிய்ந்த பாதணிகளையும் முற்றத்தில் சிதறிக்கிடக்கும் எருமைச்சாணியையும் சேகரித்து வையுங்கள் இவைகள் உங்களுக்கு உதவக்கூடும். கடந்த சில நாட்களாக காங்கிரசு சனாதினிகள் இலங்கை தமிழர்களைப் பற்றி (நன்கு கவனிக்கவும் ஈழத்தமிழர்களைப் பற்றியல்ல) தங்கள் திருவாய் மலர்ந்திருக்கிறார்கள். கொழும்பில் ராசபக்சேவுடன் விருந்துண்டு மகிழ்ந்திருந்த போது வாயை இறுக்கி மூடிக்கொண்டிருந்த பிரணாப் இப்போது சமாதான வழியை போதிக்கிறார். சிங்கள அரசாங்கமும் புலிகளும் ஆயுதங்களை போட்டுவிட்டு அரசியல் தீர்வு காண வேண்டுமாம். இந்த கருத்தை கொழும்புவில் இருந்தபோது சொல்ல அவருக்கு தைரியம் இருந்திருக்காது. அப்படி சொல்லியிருந்தால் சிங்களவன் காலில் கிடப்பதை கழட்டியிருப்பான். இனப்படுகொலைக்கு ஆயுதமும் கொடுத்துவிட்டு ரா மூலம் சகல சூழ்ச்சி திட்டங்களையும் வகுத்து கொடுத்துவிட்டு திடீரென்று அவற்றையெல்லாம் கைவிடச்சொல்லிக் கேட்க அவரால் எப்படி முடியும்? சாத்தான் எப்படி வேதம் ஓத முடியும்? இப்பொது இவர் பசப்புவது கூட ” நீ அடிக்கிறமாதிரி அடி நான் அழுவுவது மாதிரி அழுவுரேன்” கதைதான். தமிழக மக்கள் தொடர்ச்சியாக போராடிய போதும் தியாகி முத்துக்குமார் தீக்குளித்தபோதும் வாயை இறுக்கமாய் மூடிக்கொண்டிருந்த தமிழக காங்கிரசு பெருச்சாளிகள் கூட இப்போது மெதுவாக வாய் திறந்திருக்கின்றன. முட்டை முகத்தழகர் கூட ஒரு கையால் ஓசை எழுப்ப முடியுமா என்று தத்துவம் எல்லாம் உதிர்க்கிறார். மூப்பனாரின் பிள்ளை கூட தன் வாயில் எப்போது குதப்பிக்கொண்டிருக்கும் கொழுக்கட்டையை ஒரு வழியாக துப்பிவிட்டு சிங்களாவனால் என்றோ கிழித்து எறியப்பட்ட ராசீவ்-செயவர்த்தனே ஒப்பந்தத்தை நிறைவேற்ற கோரியிருக்கிறார். 18 வருடமாக ஆழ்ந்த உறக்கத்திற்கு பிறகு திடீரென்று இந்த ஒப்பந்தத்தைப்பற்றி ஞானோதயம் வந்துவிட்டது காங்கிரசுக்காரர்களுக்கு. இப்படி இவர்களின் திடீர் எழுச்சியையும் பசப்பல் வார்த்தைகளையும் கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இவர்களின் இந்த நாடகத்துக்கு பின்னால் இருக்கும் காரணங்களை தமிழக மக்கள் நன்கு சிந்திக்கவேண்டும். இன்று உலகெங்கும் உள்ள தமிழ் உடன்பிறப்புக்கள் சிங்களவனின் இன துவேசத்தை சர்வதேச சமூகத்தின் முன் வெளிச்சமிட்டு காட்டியதின் விளைவாக இன்று ஐக்கிய நாடுகள் சபை இது குறித்து பேச ஆரம்பித்து இருக்கிறது. அமரிக்காவும் இங்கிலாந்தும் மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பும் இதில் தலையிட ஆரம்பித்துள்ளன. நார்வேயின் எரிக் சோலங்கி நேரிலேயே வந்து இந்தியா இந்த விடயத்தில் வாய் திறக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இதற்கு மேலும் வாய்திறக்காவிட்டால் எங்கே நம்முடைய கோரமான சுயரூபம் வெளிச்சம் காட்டப்பட்டுவிடுமோ என்று பயந்துதான் இன்று ஆளும் காங்கிரசு அரசின் பெருச்சாளிகள் வாயைத்திறந்துள்ளன. கொழும்பு சென்று திரும்பிய பிரணாப் ஒரு இடத்தில் கூட போர் நிறுத்தம் என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை. தாம் போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்தியதாகவோ சிங்கள அரசின் அதற்கான நிலைப்பற்றியோ ஒரு இடத்தில் கூட வாய்த்திறக்கவில்லை. ஐநா சபையின் எச்சரிக்கைக்கு பிறகுதான் சிங்கள அரசு 48 மணிநேர போர் நிறுத்தத்தை அறிவித்தது. ஆனால் முட்டை முகத்தழகர் தங்கள் கோரிக்கையினால்தான் இந்த அறிவிப்பு வெளியானதாக ஒரு பச்சை பொய்யை புளுகிறார். புலிகள் இந்த போர் நிறுத்தததிற்கு சரியானபடி ஒத்துழைக்கவில்லை என்று புகார் வேறு கூறுகிறார். ஆனால் இதே போர் நிறுத்தத்தின் போது உடையார் பட்டு மருத்துவமனையை தாக்கி அப்பாவி பொதுமக்களை கொன்று குவித்த சிங்கள அரசின் தவறை கண்டிக்க இவருக்கு திராணியில்லை. இல்லை இந்த பாதக செயலுக்கான திட்டத்தையும் காங்கிரசு அரசுதான் திட்டமிட்டு கொடுத்ததா என்று சிதம்பரம் விளக்கவேண்டும். சிங்கள இனவெறி அரசு புலிகளுக்கு எதிரானப் போர் என்ற பொய்யைச் சொல்லி ஒரு அப்பட்டமான இன அழிப்பை செய்வதை கண்டும் காணமல் நடித்தவர்கள் காங்கிரசுகாரர்கள். நம் தமிழினம் சீரழிவதை தினம் தினம் கண்டு ரசித்துக்கொண்டிருந்தார் இவர்களின் தலைவி சோனியா. ஆனால் நம் மக்களுக்காக இன்று முதலைக்கண்ணீர் வடிக்கிறார். போரில் காயமடைந்த மக்களுக்கான நிவாரணப்பொருட்களைக் கூட அனுமதிக்க மனமில்லாத ஒரு அரசின் தலைவி இன்று அவர்களை பற்றி விசனப்படுகிறாராம். என்ன ஒரு பித்தலாட்டம் பாருங்கள். இதில் சோனிகாந்தியைவிடவும் அதிகம் கண்டிக்கவேண்டியவர்கள் நம் தமிழின தலைவர் என்று நம்மை ஏமாற்றும் கோஷ்டியனரும் தமிழக காங்கிரஸ் கோமாளிகளும்தான். ராசிவ் காந்தியை கொன்றவர்கள் விடுதலைப்புலிகள்தான் என்று உறுதியாக சோனியா நம்பினால் ஏன் நளினியையும் ரங்கநாத்தையும் பார்க்க பிரயத்தனப்படவேண்டும். சோனியாவின் குடும்பம் ராசிவ் கொலையை மறந்தாலும் நம் தமிழக காங்கிரஸ் ஓட்டுப்பொறிக்கிகள் அதை மறக்கவிடமாட்டார்கள். இவர்களுக்கு ஓட்டு வாங்க யாரையாவது காட்டி அனுதாபம் பெறவேண்டும். இவர்கள் சோனியா குடும்பத்தை பிடித்து இன்னும் தொங்கிக்கொண்டிக்கும் காரணமும் அதுதான். இவர்களுக்கு தம் கொள்கைகளையோ சாதனைகளையோ சொல்லி ஓட்டு கேட்க என்றுமே திராணி இருந்ததில்லை. இவர்களுக்கு தேர்தலை சந்திக்க ஏதாவது ஒரு கவர்ச்சி முகம் வேண்டும். இப்போது இருக்கும் காங்கிரஸ் தலைவர்களின் முகத்தைக்காட்டி ஓட்டுக் கேட்டால் ஒரு நாய் கூட சீண்டாது. இல்லையென்றால் நூறு வருட பாரம்பரியம் உள்ளது என்று பறைசாற்றிக்கொள்ளும் ஒரு கட்சி ஒரு வெளிநாட்டவரிடம் தலைமைப்பதவியை ஓப்படைத்துவிட்டு இப்படி மானம்கெட்டு கிடக்குமா? சோனியாவையும் ராசீவையும் இவர்கள் இந்த தாங்கு தாங்குவது அந்த குடும்பத்தின் மீது உள்ள பாசத்தினால் அல்ல.எல்லாம் இவர்களின் சுயலாபத்துக்காகத்தான். பிரியங்காவை இழுக்க என்னென்னவோ செய்தார்கள்.அந்தம்மா கல்யாணம் காட்சி குழந்தை குட்டி என்று செட்டிலாகிவிட்டது. இப்போது ராகுலை இழுக்கப்பார்க்கிரார்கள்.இன்று இவர்கள் புலிகளை எதிர்ப்பது ஏதோ ராசிவ் மீதி கொண்ட காதலலால் அல்ல. அதன் மூலமாக சோனியாவின் அருட்பார்வையை தம்மேல் இழுத்து அதன் மூலமாக பதவி சுகத்தை அடையத்தான். முத்துக்குமாரின் தியாகத்துக்குப் பின் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி இவர்களை மிரள வைத்துள்ளது. அதனால்தான் இந்த நாடகங்களை இவர்கள் அரங்கேற்றுகிறார்கள். ஈழத்தில் நம் சொந்தங்களுக்கு இறுதிக்கல்லரை கட்டிவிட்டு இன்று இவர்கள் கோரும் போர் நிறுத்தத்தால் என்ன நன்மை நடந்துவிடப்பொகிறது. அருமை மானமிகு தமிழக வாக்காள பெருங்குடி மக்களே! விரட்டி அடியுங்கள் இந்த துரோகி கூட்டத்தை!

Thursday, 5 February 2009

தமிழினத்துரோகி யார்? எதிரி யார்?

அண்மைக்காலமாக நம் சொந்தங்கள் ஈழ மண்ணிலே சொல்லொன்னா துன்பத்துக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் இந்த காலகட்டத்திலே அவற்றை காணச்சகியாமலும் அதை எதிர்த்து ஆக்கப்பூர்வமாக எதுவும் செய்யமுடியாத கையறு நிலையிலும் என்னைப்போன்றவர்கள் சற்று வன்மையாகவும் கரடு முரடாகவும் பல பதிவுகளை எழுதி வருகிறோம். இத்தகைய கட்டுரைகளில் அதிகம் விமர்சிக்கப்படுபவராக கருணாநிதி இருக்கிறார். ஆனால் பல நண்பர்கள் இந்தவிடயத்தில் கருணாநிதியை இந்த அளவுக்கு விமர்சிப்பது அர்த்தமற்றது என்றும் அவர் தன்னால் இயன்றதை செய்துள்ளார் என்று வக்காலத்து வாங்குகிறார்கள். அதுவும் அவர் ஆட்சியில் இருப்பதுதான் ஈழத்தமிழர்களுக்கு நாம் ஏதாவது ஆக்கப்பூர்வமாக செய்ய உதவும் என்று வாதிடுகிறார்கள். ஈழத்தந்தை செல்வா அவர்களின் புதல்வர் கூட கருணாநிதியின் நிலையை ஆதரித்து அறிக்கை வெளியிட்டதாக செய்தி கூட வெளிவந்தது. ஆனால் இதில் எந்த அளவுக்கு நியாமம் இருக்கிறது என்பதை இவர்களும் மற்ற தமிழின உணர்வாளர்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும். கருணாநிதி மேலான எங்கள் கோபத்தில் உள்ள நியாத்தை நண்பர்கள் புரிந்துகொள்ளவேண்டும். நான் எப்போதுமே கருணாநிதியை தமிழினத்தலைவர் என்று ஏற்றுக்கொண்டவன் இல்லை. தமிழ் தமிழினம் என்பவற்றை தன் அரசியல் சித்து வேலைகளுக்காக மட்டுமே பயன்படுத்தும் அவரது சாணக்கியத்தனத்தைக் என்னால் சகித்துக்கொள்ள முடிவதில்லை. அப்படிப்பட்ட நானே ஈழத்தமிழர் விடயத்தில் அண்மைக்காலங்களில் அவர் காட்டிய வேகத்தைப்பார்த்து அசந்து போனேன். இந்த முறை கண்டிப்பாக ஆக்கப்பூர்வமாக ஏதாவது நேரும் என்று எல்லோரையும் போல் நானும் ஆர்வமாக அவரது வாயையே பார்த்திருந்தேன். ஆனால் அவர் யார் என்பதை அவர் படிப்படியாக காட்டிவிட்டார். முதலில் நிவாரணப்பொருட்கள் அனுப்பலாம் என்றார். கடந்த ஒரு வருட காலமாக தாங்கள் சேகரித்தப் பொருட்களை அனுப்பவேண்டும் என்று பழ.நெடுமாறன் போன்றோர்கள் மன்றாடியபோதெல்லாம் வாளாயிருந்தவர் இப்போது அனுப்பலாம் என்பதில் இருந்த சூழ்ச்சியை யாரும் அறியவில்லை. அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டினார். எல்லோரும் ராசினாமா செய்வோம் என்று முழங்கினார். என்னமோ இவர்தான் மக்களவை சபாநாயகர் போல எல்லா எம்பிக்களிடமும் ராசினாமா கடிதம் வாங்கினார். அப்புறம் கெடுவை நிர்ணயித்தார். அப்புறம் அவரே அதை பல முறை நீட்டித்தார். அப்புறம் டெல்லிக்குச் சென்று மனு கொடுத்தார். பிரணாப் கொழும்பு செலவார் என்று போர் நிறுத்தம் செய்ய வலியுறுத்துவார் என்றார். இவரது நாடகத்துக்கு டெல்லி அசைந்து கொடுக்கவில்லை என்பதை பார்த்தவுடன் கண்ணீர் தீர்மானம் நிறைவேற்றினார். இப்படி இவர் தொடர்ச்சியாக ஆடிய நாடகங்களால் ஈழத்தமிழர்களுக்கு ஒரு இம்மியளவாவது நன்மை ஏற்ப்பட்டதா என்று நண்பர்கள் சிந்திக்கவேண்டும். இவரது திட்டமெல்லாம் ஒரு வேளை ஈழ மக்களுக்கு தமிழக மக்களின் உதவி அல்லது ஆதரவால் ஏதேனும் நன்மை விளைந்தால் அதனால் உண்டாகும் நல்லப் பெயர் சிந்தாமல் சிதறாமல் தனக்கு மட்டுமே கிடைக்கவேண்டும் என்பதுதான். அதற்கு தன்னை முன்னிறுத்திக் கொள்வதற்கான முயற்சிதான் இவர்காட்டிய படமெல்லாம். இவர்கள் முயற்சியால்தான் பிரணாப் இலங்கை சென்றார் என்று இதுவரை ஒரு இடத்தில் கூட மத்திய அரசு குறிப்பிடவில்லை. மாறாக தமிழகத்தின் கோரிக்கைக்கும் பிரணாப்பின் வருகைக்கும் எந்த தொடர்புமில்லை என்று கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்தது. அதே போல் பிரணாப்பும் நமது கோரிக்கை குறித்து பேசியதாக எதுவும் குறிப்பிடவில்லை. மாறாக போரால் சீரழிந்த பகுதிகளின் மறுசீரமைக்க இந்தியா உதவும் என்று சொன்னார். அதாவது ஆயுதங்களை கொடுத்து தமிழினத்தை அழித்ததோடு நில்லாமல் அவர்களுக்கு நிரந்தர சமாதி கட்ட உதவுவோம் என்றார். இதற்கெல்லாம் திமுக அரசு கட்டிய சப்பைகட்டு என்ன தெரியுமா? அண்டை நாட்டு விடயங்களில் ஒரு அளவுக்கு மேல் இந்தியா தலையிட முடியாதாம். என்ன ஒரு கண்டு பிடிப்பு! இது ஏன் இவர்களுக்கு இத்தனை நாள் தெரியவில்லை. இன்று மட்டும் இந்த ஞானோதயம் எங்கிருந்து வந்தது. இதுதான் கருணாநிதி ஆட்சியில் இருந்து தமிழர்களுக்காக சாதித்தது. இதற்கெல்லாம் மகுடம் வைத்தது போல் இன்னொரு பெரிய ஞானோதயம் இப்போது கருணாநிதிக்கு வந்துள்ளது. அதாவது விடுதலைப்புலிகள் ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளாம். அதனால் அவர்களை திமுக ஆதரிக்கவில்லையாம். ஆனால் பிரிகேடியர் தமிழ்ச்செல்வம் அவர்கள் மறைந்தபோது அவருக்காக கவிதை பாடியபோது அவர் ஒரு போராளி என்பது தெரியாமல் போயிற்றா? தமிழனுக்காக என் உயிரையும் அரசையும் இழக்கத்தயார் என்று முழங்கிய கருணாநிதி என்று எதற்காக யாரோ தம் ஆட்சியை கவிழ்க்க சதி செய்கிறார்கள் என்று புலம்புவது ஏன்? யாரை ஏமாற்ற நீங்கள் முன்னர் அவ்வாறு முழங்கினீர்? மேலும் ஈழத்தமிழர்கள் சுயாட்சி உரிமை பெறும் அரசியல் தீர்வுக்காக திமுக பாடுபடுமாம். அதாவது தனி ஈழக் கோரிக்கையை இவர்கள் ஆதரிக்கவில்லை என்பதைதான் மறைமுகமாக இவ்வாறு தெரிவித்திருக்கிறார். எல்லாம் தெரிந்த ஏகாம்பரமான கருணாநிதிக்கு ஈழத்தின் வரலாறு தெரியாமலிருக்க வாய்ப்பில்லை. ஈழத்தந்தை செல்வா பல பல ஆண்டு காலமாக சுயாட்சி உரிமைக்கும் பெடரல் உரிமைக்கும் அகிம்சை வழியில் போராடிப் பார்த்துவிட்டு வேறு வழியில்லாமல் வைத்ததுதான் தனி ஈழ கோரிக்கை. அகிம்சை போராட்டங்களை வன்முறையால் அழித்த சிங்கள இனவாத அரசை எதிர்க்க வேறு வழியினறி ஆயுதமேந்தி போராடுகிறார்கள் விடுதலைப்புலிகள். ஆகவே தனி ஈழம் என்பது தந்தை செல்வாவின் கோரிக்கை. விடுதலைப்புலிகளுடையது மட்டுமல்ல. இப்படி காலாவதியாகி போய்விட்ட கோரிக்கையை யாருக்காக கருணாநிதி முன்வைக்கிறார் என்று கருணாநிதியை ஆதரிக்கும் தியாகி செல்வாவின் மகன் விளக்கவேண்டும். இவர்களின் புண்ணாக்கு கோரிக்கைகளுக்காக பொது மக்களை திரட்டி போராடப் போகிறார்களாம். அதற்காக ஒரு இயக்கத்தையும் ஆரம்பித்து இருக்கிறார்கள். அதாவது போரட்டத்தில் குதித்த பிள்ளைகளை விடுதியை அடைத்து வீட்டுக்கு அனுப்பிவிட்டு இவர்கள் போராடப்போகிறார்களாம். அதே போல இந்திய அரசால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய முடியாது என்று இவர்களே சொல்லி விட்டு இப்பொது யாரை எதிர்த்து போராடப்போகிறார்கள். என்ன ஒரு நாடகம் பாருங்கள். திமுக ஆட்சி போய்விட்டால் இப்போதிருக்கிற நிலைகூட கிடைக்காது என்ற சொத்தை வாதத்தை வைத்து பூச்சாண்டி காட்டும் நண்பர்களே! ஒரு விடயத்தை சிந்தித்து பாருங்கள் ! செயலலிதாவுக்கும் கருணாநிதிக்கும் என்ன பெரிய வித்தியாசம். செயலலிதா எதிப்பை வெளிப்படையாக காட்டுவார். ஆனால் கருணாநிதி நம்பவைத்து கழுத்தறுப்பார். ஆக இருவராலும் நமக்கு பயனில்லை. மேலும் நமது போராட்டங்களாலும் அரசின் ஆதரவாலும் மத்திய அரசின் நிலையில் இது வரையில் ஒரு மில்லிமீட்டர் அளவாவது மாற்றம் இருக்கிறதா? இந்நிலையில் நம் போராட்டஙகளை அவர்கள் அனுமதித்து என்ன பயன்? நம் போராட்டங்களை காட்டி கூடுதல் தொகுதி பெறத்தான் கருணாநிதிக்கு அது உதவும். நாங்கள் கையெடுத்து கும்பிட்டு கருணாநிதியை மன்றாடி கேட்டுக்கொள்வது இதுதான். எங்களுக்காக உத்தமர்களாகிய நீங்கள் ஆட்சியை எல்லாம் இழக்கவேண்டாம். பேசாமல் வாயையும் ……த்தையும் மூடிக்கொண்டு இருங்கள். இத்தாலி அம்மையார் சோனியாவுடன் சம்பந்தம் பேசி பேரப்பிள்ளைகளுக்கு மேலும் எப்படி சொத்து சேர்க்கலாம் என்று யோசியுங்கள். அல்லது தமிழினத்தின் எதிரிகளான தமிழகத்தின் சாபக்கேடுகளான செயலலிதா, சுப்பிரமணியம்சாமி, தங்கபாலு இவர்களுடன் சேர்ந்து கொள்ளுங்கள். சிங்கள இனவெறியர்களோடு சேர்த்து இவர்களையும் எதிர்த்துதான் நாங்கள் போராடுகிறோம். அவர்களோடு உங்களையும் சேர்த்துக்கொள்கிறோம். இவர்கள் எங்கள் இனத்தின் எதிரி என்று எங்களுக்கு தெள்ளத்தெளிவாகத் தெரியும். அதனால் இவர்களால் எங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைவுதான். ஆனால் எங்கள் கூடாரத்தில் இருந்து கொண்டே நீங்கள் செய்யும் துரோகத்தால் எங்களுக்கு ஏற்படும் பாதிப்புதான் அதிகம். நீங்கள் நடத்தும் நாடகத்தால், நீங்கள் எடுக்கும் ஒன்றுக்கொன்று முரண்பாடான முடிவுகளால் உண்மை உணர்வாளர்களின் போராட்டங்களும் கோரிக்கைகளும் நீர்த்துப்போகின்றன. உங்களின் இத்தகைய நடவடிக்கைகள் நம்முடைய உள்ளப் பூர்வமான ஆதரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிற ஈழத்து உறவுகளை சோர்வடைய செய்கிறது. இந்த கோரிக்கை உங்களுக்கு மட்டுமல்ல எல்லா தமிழக அரசியல்வாதிகளுக்கும் பொருந்தும். உங்களின் கோமாளித்தனத்தினால் பன்னாட்டுச் சமுதாயமே ஒரு மானமிகு இனத்தை கேவலமாகப் பார்க்கிறது. நண்பர்களே எதிரிகளைகாட்டிலும் துரோகிகள் ஆபத்தானவர்கள்!