எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Monday, 8 September 2008

தங்கச் சுரங்கம் குத்தகைக்கு !!

(இந்தோனேசியா – ஒரு அறிமுகம் - பகுதி 2)

இயற்கை வளமும் பொருளாதாரமும்

தென்கிழக்காசிய நாடுகளிலேயே மிகச்சிறந்த இயற்கை வளம் நிறைந்த நடாக இந்நாடு விளங்குகிறது. நிலக்கரி பெட்ரோல் தங்கம் ஆகியவை ஏராளமயாய் கிடைக்கின்றன. “என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்” என்ற பாட்டு இந்தியாவுக்கு பொருந்துதோ இல்லையோ இந்தோனேசியாவுக்கு நன்கு பொருந்தும். ஆனால் அரசியல்வாதிகள் புண்ணியத்தில் இன்னும் மற்ற நாடுகளிடம் கையேந்திக்கொண்டுதான் இருக்கிறார்கள். இங்கு இருக்கும் பெட்ரோலைக்கூட சிங்கப்பூர் அனுப்பி சுத்திகரிப்பு செய்கிறார்கள். அரசியல்வாதிகளை கேட்டால் வியாபார ஒப்பந்தம் என்கிறார்கள். ஐந்து வருடம் கழித்து இயற்கை எரிவாயு வழங்க சீனாவுடன் அப்போது இருந்த சொற்ப விலையில் ஒப்பந்தம் போட்டுவிட்டு போய்விட்டார் அப்போதைய அதிபர் மேகாவதி. இப்போது சீனாவிடம் விலையை கூட்டிக்கொடுக்கவேண்டும் என்று மாறி மாறி கருணை மனு போட்டுக்கொண்டிருக்கிறார்கள் இப்போதய அதிபரும் துணை அதிபரும். அவர்களும் முயற்சி செய்வதாய் பெரிய மனதுடன் ஒரு வருடமாய் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். எங்கே போய் முட்டுவது என்று மக்கள் புலம்புகிறார்கள். ஆனாலும் தேர்தல் வந்தால் இதையெல்லாம் மக்கள் மறந்துவிடுகிறார்கள். எதிர் வரும் தேர்தலில் அதே மேகாவதிக்குத்தான் வாய்ப்பு அதிகம் என்கிறார்கள். ஆமாம் நம்புங்கள்! தேசங்கள் மாறலாம் ஆனால் மக்களின் போக்கு மாறுவதில்லை போலும்!

உலகிலேயே அதிக கார்கள் உள்ள நகரம் என்று இந்நாட்டின் தலைநகரமான ஜகார்த்தாவை சமீபத்திய புள்ளி விவரம் ஒன்று தெரிவிக்கிறது. உலகின் அனைத்து பிரபலமான கார்களையும் சர்வ சாதாரணமாய் சாலையில் பார்க்கலாம். உலகின் விலையுயர்ந்த இரண்டு சக்கர வாகனமான ஹார்லி டேவிட்சன் வாகனங்களையும் நிறைய கான முடிகிறது. ஆனால் இந்நாட்டை ஏழை நாடு என்கிறார்கள். நம்புவது கடினம் என்றாலும் அதில் உண்மையும் இருக்கிறது. ஆம்! பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்குமான இடைவெளி மிகப்பெரியது. கிராமங்களில் வாழும் மக்கள் இன்னும் அடிப்படை வசதிகள் இன்றி இன்னும் அவதிப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

அனைத்து தொழில் துறைகளிலும் ஜப்பானியர்களும் சீன வம்சாவளியினரே கொடி கட்டிப்பறக்கிறார்கள். வாகனச் சந்தை இவ்வளவு பெரியது என்றாலும் முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில் நுட்பத்தை தாங்கிய வாகனங்கள் ஒன்று கூட இல்லை. இவ்வளவு பெரிய சந்தையின் முழுப்பலனையும் ஜப்பானியர்களும் ஐரோப்பியர்களும் மற்றும் அமரிக்கர்களும்தான் அனுபவிக்கிறார்கள். இம்மண்ணின் பூர்வக்குடிகள் இன்னும் உத்தியோக வர்க்கத்தினர்களாகவே இருக்கிறார்கள். மிகச்சில முன்னேறியவர்களும் அரசியல் பெரும்பான்மை உரிமையால் பதவிக்கு வந்து மேற்படி நாட்டினர்களுக்கு சலுகைகளை வாரித்தந்து அதில் வாரிச்சுரிட்டியவர்களேயன்றி தொழிளால் முன்னேறியவர்கள் அல்ல. இத்தகைய வேறுபாடுகள் சில சமயங்களில் பெரிய இன மோதல்களை உருவாக்கிவிடுகிறது. இது பொருளாதார உறுதிப்பாட்டையும் குலைத்துவிடுகிறது. கடந்த காலங்களில் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சிகளுக்கு பிறகு தற்பொழுது சற்று நிலையான பொருளாதார நிலை கானப்படுகிறது.

நம் தாத்தா காலத்தில் சொல்வார்களே பொன்னு விளைகிற பூமி என்று அதை நம்மூரில் இப்போது கான்பது அரிது. ஆனால் இங்கே இப்போதும் பார்க்கலாம். வருடத்தில் ஆறு மாத காலம் நல்ல மழையும் இருக்கிறது. ஆனால் அதில் விவசாயத்தைதான் கானமுடியவில்லை. இவ்வளவையும் வைத்துக் கொண்டு கவலையில்லாமல் அரிசியை தாய்லாந்திலிருந்தும் காய்கறிகளை ஆஸ்திரேலியாவிலிருந்தும் இறக்குமதி செய்கிறார்கள். கேட்டால் அரிசி பயிர் செய்வது கடினமான வேலையாம். அதனால் எண்ணெய்ப்பனை வளர்க்கிறார்கள் பயோ டீசல் தயார்செய்ய! இதனால் டாலர்களில் வருமானம் பார்க்கலாம் என்கிறார்கள். எதிர்காலத்தில் தட்டில் டாலரை போட்டுச் சாப்பிட முடியுமா? என்றால் அதை அப்போது பார்க்கலாம் என்கிறார்கள்.

அதுவும் சரிதான்! ஏன் என்றால் தங்கத்தை வெட்டி எடுக்க சோம்பேரித்தனப்பட்டு முழுத் தங்க சுரங்களையும் அமரிக்கர்களிடம் நூறு வருட குத்தகைக்கு விட்ட அரசியல் தலைவர்களின் பின் வந்தவர்கள் அயிற்றே! ஆமாம் நம்புங்கள்! இந்தோனேசியாவின் மிகப்பெரிய தங்க சுரங்கம் குத்தகை என்ற பெயரில் அமெரிக்க நிறுவனத்தின் வசம் உள்ளது. இன்றும் அமரிக்கர்கள் வெட்டும் இந்த சுரங்கத்திற்கு அதிகாரப்பூர்வமற்ற வகையில் ரானுவம் பாதுகாவல் வேலையும் செய்கிறது. சும்மாவா பின்னே? இரண்டு ஊதியம் கிடைக்கிறதே. அதிலும் அரசாங்க சம்பளத்தைவிட இவர்கள் தரும் சன்மானம் அதிகமாம். இதை நான் சொல்லவில்லை. அரசாங்கத்தின் கண் துடைப்பு விசாரணை கமிஷன் சொன்னது. இந்தியாவைப்போல் விசாரணை கமிஷன்கள் இங்கும் கண் துடைப்புக்குத்தான்.

(இன்னும் தொடரும்)

1 comment:

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

//அரசாங்கத்தின் கண் துடைப்பு விசாரணை கமிஷன் சொன்னது. இந்தியாவைப்போல் விசாரணை கமிஷன்கள் இங்கும் கண் துடைப்புக்குத்தான்//

இந்த விசாரணைக் குழுவின் தலைவர்; அங்கத்தவர் அனைவரும் ; நாட்டதிபர் உறவாக இருப்பார்களே!!
கண்துடைக்கத் தானே வேண்டும்.