
தவிர்க்க முடியாது சில சமயங்களில் பிற மொழியில் உள்ள சில வார்த்தைகளை கையாளும் போது கூட அவற்றை தன் மொழியின் ஒளியமைப்பிற்கு ஏற்ப மாற்றி கொள்வார்கள். ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களின் வேர் சொற்கள் இலத்தின் மொழியில் உள்ளவை. அதற்காக அவற்றை அவர்கள் அப்படியே பயன் ப்டுத்துவது இல்லை. பக்கத்திலிருக்கும் புதுச்சேரியை எட்டிப்பார்த்தால் இது உங்களுக்குத் தெரியவரும். இங்கே வந்த பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை பாண்டிச்சேரி என்றும் உருளையன்பேட்டை என்பதை ஒர்லயன்பெட் என்றும் தன் வாயில் நுழைந்தவாறுத்தான் பேசினார்கள் எழுதினார்கள். தமிழை ”டமில்” என்றுதான் ஆங்கிலேயர்கள் எழுதினார்கள். அய்யோ ”ழ்” க்கு இணையான ஆங்கில எழுத்து இல்லையே அதனால் ”ழ்” ழை அப்படியே ஆங்கிலத்துக்கு தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றா நினைத்தார்கள். இல்லையே! நாம்தான் சற்றுக்கூட கூச்ச நாச்சமே இல்லாமல் செத்துவிட்ட மொழிகளில் இருந்து கூட எழுத்துக்களை பொறுக்கி தமிழில் சேர்த்து தமிழை சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம். 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலம் உலகையாளும் போது 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியைக்கொண்டு நம்மால் இயல்பாக பேசக்கூடமுடியாதா?
மேலும் இந்த மொழிக்கொலையை சீரழிப்பை செய்வதில் முன்னனியில் இருப்பவர்கள் தாய்த்தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆகிய நாம்தான். ஈழத்தமிழர்களோ அல்ல பிற நாடுகளில் குடியேறிய பழந்தமிழர்களோ இந்த தவறை செய்வதில்லை. இந்தோனேசியாவில் வாழும் பூர்வீகத்தமிழர்களில் பெரும்பாலோனோர் தமிழை மறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் பலர் கூடியமட்டில் இல்லங்களில் தமிழை பேசுகின்றனர். அவர்களின் குழந்தைகள் பெற்றோரை அம்மா, அப்பா என்றுதான் விளிக்கிறார்கள். மம்மி டாடி என்று ஒரு போதும் அழைக்க கண்டதில்லை.அவர்களின் வீட்டுக்குச் சென்றால் முதலில் அவர்கள் கேட்பது என்ன தண்ணி குடிக்கிறிங்க? காபித்தண்ணியா டீத்தண்ணியா என்பதுதான். என்ன டிரிங்க் வேனும் என்று கேட்டதே இல்லை. அரிசி சோற்றை சோறு என்றுதான் சொல்வார்களெ தவிர சாதம் என்றுச்சொல்லி நான் கேட்டதே இல்லை. கோழிக்கறி என்று சொல்வார்களே தவிர சிக்கன் கறி என்று சொல்லுவதில்லை.
இந்த நாட்டில் பேசும் மலையக மொழி தமிழை விட பல ஆயிரம் ஆண்டுகள் பிந்தியதுதான். தமிழைப்பொன்று ஆழமான் இலக்கண வரம்போ சொல் வளமோ இல்லாத மொழிதான். அவ்வளவு ஏன்? சொந்த எழுத்துருக்கூட இல்லாமல் ஆங்கில எழுத்துருக்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் கூட தம் மொழியின் ஊடே மற்ற மொழிகளை கலந்து ஒருபோதும் பேசுவதில்லை. தம் மொழியில் இல்லாத சொற்களை பல மொழிகளில் இருந்து பெற்று பயன் படுத்தும் போதும் அவற்றை தம் மொழியின் ஒளியமைப்புக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக பெசிலிட்டி என்ற வார்த்தையை பெசிலிட்டாச் என்ற உச்சரிப்போடுதான் பயன்படுத்துகிறார்கள் எழுதுகிறார்கள். நன்றாக கவனியுங்கள்! தம் மொழியில் இல்லாத ஒரு வார்த்தைக்குத்தான் இந்த ஏற்பாடு. தம் மொழியில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு மாற்றாக இன்னொரு மொழியின் வார்த்தைகளை ஒரு போதும் பயன் படுத்துவதில்லை. எனக்கு சீனர்கள் சப்பானியர்கள் ஐரோப்பியர்கள் என்று பல நாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. அவர்கள் பேசுவதையும் நான் உண்ணிப்பாக கவனிப்பேன். அவர்களும் தப்பி தவறி கூட பிற மொழியை கலந்து பேசுவதில்லை. ஆனால் உலக நாகரீகங்களுக்கு எல்லாம் முதன்மையான நாகரீகத்தை சேர்ந்த நாம், உலகிலேயே தொன்மையான மொழிக்கு சொந்தக்காரர்களாகிய நாம் சற்று கூட சுய சிந்தனையில்லாமல் தொட்டதிற்கெல்லாம் ஆங்கிலத்தை கலந்து துப்புகிறோம். என்னால் பேசுகிறோம் என்று சொல்லமுடியவில்லை. ”ஐ யாம் கோயிங் டூ பள்ளி” என்று ஒரு ஆங்கிலேயரிடம் சொன்னால் அவர் வாயாலேயா சிரிப்பார்? சிந்தித்து பாருங்கள். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இன்றி நான் ச்கூலுக்கு போறேன், ஆபிசுல இருக்கேன், பைவ் அன்றட் இருக்கா, பேசா இருக்கேன் என்கிறோம். இந்த வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் தமிழில் இல்லையா? தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமா? நம் சொந்த தாய் மொழியை தேவையே இல்லாமல் கொல்வதுதான் நாகரீகமா? நாம் எல்லாம் படித்தவர்கள்தானா? நாம் சிந்திக்க வேண்டும். லண்டனில் இருந்தோ அல்லது மலையத்திலிருந்தோ வெளிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாவது “சீ யு நெக்ச்ட் வீக். டில் தென் பாய் பிறம் குரங்கு” என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஆனால் நம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளை பாருங்கள். ஏதொ அமரிக்காவில் நிகழ்ச்சி நடாத்துவதுபோல் தொட்டதுக்கெல்லாம் ஆங்கிலத்தில் பீற்றிக் கொள்கிறார்கள்.
சென்ற வாரம் இந்தோனேசியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் முக்கிய புள்ளி ஒருவரை அலுவல் விடயமாக சந்திக்க சென்றேன். அவர் ஒரு இந்தொனேசிய தமிழர். நான் மெதுவாக ஆங்கிலத்தில் உரையாடலை துவக்கினேன். உடனே அவர் “ஆர் யு பிரம் சென்னை” என்றார். நான் ஆமாம் என்றேன். அப்போ தமிழிலேயே பேசலாமே என்றார். பிறகு நாங்கள் உரையாடலை தமிழில் தொடர்ந்தோம். உரையாடல் முழுக்க அலுவல் சார்ந்தது என்ற போதும் அவர் ஒரு தடவை கூட ஆங்கிலத்தை துணைக்கு அழைக்கவில்லை. இயல்பான தமிழில் சாதாரணமாக பேசினார். ஆனால் என்னால் ஆங்கில பிரயோகங்களை பல் இடங்களில் தவிர்க்கவே இயலவில்லை. இது எனக்கு மிக்க அவமானமாக இருந்தது. தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் படித்து என்ன பயன்? தாய்த்தமிழை கொலை செய்யும் மகா பாதகர்களாகத்தானே இருக்கிறோம். நான் இவ்வாறு எழுதுவதால் நான் பிற மொழிகளை கற்பதற்கு எதிரானவன் அல்ல. பன்மொழி பேசும் திறன் என்பது குறிப்பாக இப்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் நம் சொந்த தாய் மொழியை கெடுத்து குட்டிச்சுவராக்கித்தான் பிறன் மொழியை பழக வேண்டும் என்பது அபத்தம் இல்லையா? சிந்திப்போமா? தமிழ் இனி மெல்லச் சாவதை தடுப்போமா?