எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday, 27 January 2009

சுதானமா இருங்கப்பு !

பொருளாதார நெருக்கடி வந்தாலும் வந்தது பெரிய நிறுவனம் சின்ன நிறுவனம் என்று வித்தியாசமில்லாமல் வேலை பார்ப்பவர்கள் தலைக்கு மேல் கத்தி தொங்கி நிலைமை எக்குத் தப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இந்த கோதாவில் என் நண்பர்கள் சிலர் வேலையை இழக்கவேண்டி வந்துவிட்டது. இவ்வாறு வேலையிழந்த எனது நண்பர் ஒருவர் ஒரு வேலைவாய்ப்பு இணையதளத்தின் மூலம் உலகின் முன்னனி நிறுவனம் ஒன்றுக்கு விண்ணப்பித்திருந்தார். இந்த இணையத்தளம் இந்தியாவில் மிகப்பிரபலமான ஒன்று. சிறிது நாட்களில் அந்நிறுவனத்திலிருந்து ஒரு வினாப்பட்டியலைக் மின்னஞ்சல் மூலம் அனுப்பி விரைவாக பதிலளிக்கும்படி கேட்டிருந்தார்கள். நண்பரும் அடித்து பிடித்து பதில் தயார் செய்து அனுப்பினார். ஒரு வாரத்திற்கு பிறகு இன்னொரு மின்னஞ்சல் வந்தது. அதாவது முதற் கட்ட தேர்வை நண்பர் கடந்துவிட்டதாகவும் அடுத்த கட்டத்தேர்வு நேரிலோ அல்லது தொலைபேசியிலோ நடைபெறும் என்றும் அதற்கு தயாராக இருக்கும்படியாகவும் தெரிவித்திருந்தார்கள். அடுத்து சில நாட்களில் லண்டனில் இருக்கும் அந்த நிறுவனத்தின் தலைமையகத்திலிருந்து அழைப்பதாகச் சொல்லி ஒரு துரை பேசினார். அப்புறம் தசு புசு என்று கேள்வி கேட்டு பின்னினார். நம் நன்பரும் அவரால் முடிந்தவரை பதில் சொல்லி அசத்தினார். துரை அவர் பதிலில் திருப்தி அடைந்ததாகவும் விரைவில் பதில் தருவதாகச் சொல்லி துண்டித்தார். நண்பனும் என்னிடம் சொல்லி பெருமைப் பட்டுக்கொண்டான். நானும் அவனை பார்த்து பெருமூச்சு விட்டேன். அப்புறம் சில நாட்களுக்கு பதிலே இல்லை. அதற்குள் நண்பர் இங்கேயே ஒரு நிறுவனத்தில் படாத பாடுபட்டு வேலை வாங்கிவிட்டார். இந்நிலையில் திடீரென்று ஒரு நாள் அவருக்கு அந்நிறுவனத்திலிருந்து மின்னஞ்சல் ஒன்று வந்தது. அதில் நன்பர் அந்த குறிப்பிட்ட பதவிக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுவிட்டதாகவும் அதற்கான கடிதத்தின் மென்படிமத்தையும் இணைத்திருந்தார்கள். அசல் படிமம் விரைவில் அவரின் அவரின் ஒப்புதலுக்குப்பின் அனுப்பப்படும் என்று எழுதியிருந்தார்கள். நண்பருக்கு கையும் புரியவில்லை காலும் புரியவில்லை. பிரயத்தனப்பட்டு வங்கிய வேலையை விட்டுவிடலாமா அல்லது புதியதாய் கிடைத்திருக்கும் இந்த வேலையை எடுத்துக்கொள்ளவேண்டாமா என்று ஒரே குழப்பம். இந்த வேலை லண்டனில் இருப்பதோ சகார்த்தாவில். அவருக்கு மேற்குப் பக்கத்திய வாய்ப்பை நழுவவிட விருப்பம் இல்லை. இறுதியாக என்னிடம் வந்தார். நான் அவரிடம் ஒவ்வொரு விபரத்தையும் பொறுமையாக கேட்டேன். சில விடயங்கள் சற்று எங்கோ இடிப்பதுபோல் உணர்ந்தேன். அவரிடம் பொறுமையாக இருக்கச் சொல்லிவிட்டு அவருக்கு வந்த மின்னஞ்சல்களை ஆராய்ந்தேன். அப்போதுதான் தெரிந்தது அது ஒரு ஏமாற்று வேலை என்பது தெரியவந்தது. முதல் காரணம் அந்த மின்னஞ்சல்கள் வந்த முகவரி அந்த நிறுவனத்திற்கு உரியதல்ல. இரண்டாவது அந்த கடிதம் தெரிவித்த சில விடயங்கள் அபத்தமானவை. நண்பருக்கு இவற்றை விளக்கி சொல்லிவிட்டு இருக்கும் வேலையை உருப்படியாக பார்க்கச்சொன்னேன். இருந்தாலும் அடுத்தது என்ன நடக்கிறது என்று பார்க்க அந்த வேலையை ஏற்றுக்கொள்வதாக சொல்லி பதில் அனுப்பச் சொன்னேன். அடுத்து வந்த மின்னஞ்சல் இவர்களின் சதியை வெளிச்சமிட்டுக்காட்டியது. அது அந்நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சட்ட அலோசகரிடமிருந்து அனுப்பபட்டிருந்தது. அதாவது அக்குறிப்பிட்ட நிறுவனம் விசாவை ஏற்பாடு செய்யச்சொல்லி இவர்களுக்கு கோப்புகளை அனுப்பி இருப்பதாகவும் அதற்காக ஏற்பாடுகளை செய்வதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அதற்கான செலவை முன்கூட்டியே அனுப்பவேண்டும் என்றும் விமான சீட்டை வேலை தரும் நிறுவனம் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மின்னஞ்சல் வந்த முகவரியும் முதல் மின்னஞ்சல் வந்த முகவரியும் ஒன்றுதான். இதிலிருந்தே இது ஒரு ஏமாற்றுவேலை என்பது தெள்ளத்தெளிவாகத் தெரியும். அதுவும் பணத்தை அவர்கள் சொல்லும் உள்ளூர் வங்கி கணக்கில் செலுத்தவேண்டுமாம். என்ன பித்தலாட்டம் பாருங்கள். மேலும் பலவிதங்களில் ஆராய்ந்து இது முழுக்க ஏமாற்றுவேலை என்று அறிந்து கொண்டோம். முதல் வேலையாக அனைத்து தகவல்களையும் உண்மையான நிறுவனத்துக்கு அனுப்பி மேல் நடவடிக்கை எடுக்கச்சொன்னோம். கடிதங்களைப் பார்த்தால் அச்சு அசலாக இருக்கிறது ( இங்கே இணைத்துள்ளேன்). இதை நம்பி இருக்கும் வேலையை விட்டிருந்தால் நண்பரின் நிலைமை பரிதாபமாக போயிருக்கும். நல்ல வேலை நாங்கள் கொஞ்சம் சுதாரித்துக்கொண்டோம். இதுவரை பரிசு விழுந்திருக்கிறது, கேட்பாரற்ற வங்கி பணம் இருக்கிறது என்று ஏமாற்றியவர்கள் இப்போது வேலை தேடுபவர்களை குறிவைத்திருக்கிறார்கள் போலும். இன்னும் எந்தந்த ரூபத்தில் வருவார்களோ! சுதானமா இருங்கப்பு!

3 comments:

நட்புடன் ஜமால் said...

நமக்கும் வந்திருக்குது இது.

அக்னி பார்வை said...

தகவலுக்கு நன்றி, இந்த ஏமாற்றூ முறையில் என் நண்பன் ஒருவன் சிக்கி 5000 அமெரிக்க டாலரை இழந்தான்..நல்ல வேளை உயிருக்கு ஒன்றும் ஆபதில்லை..

தமிழ் நாடன் said...

நன்றி ஜமால்
நன்றி அக்னிப்பார்வை.
அப்போ நிறைய பேர் இப்படி பாதிக்கப்பட்டிருப்பாங்க போல!