Tuesday, 27 October 2009
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே! (ஒரு மீள் பதிவு)
கீழே உள்ள பதிவு பிப்ரவரி மாதத்தில் எழுதியது. ஆயிற்று 8 மாதங்கள். ஆனால் நம் சொந்தங்களின் நிலை மாறியதா? இன்றும் செத்துப்போன நம் சொந்தங்களின் புதைகுழியின் மேல் நின்று தமது கேவலமான அரசியலை நடத்திக்கொண்டிருகிறார்கள் நம் தமிழக கோமாளிகள். இரத்தக்காட்டேரிகளுக்கு இரத்தின கம்பள வரவேற்பு கொடுக்கிறார்கள். பஞ்சமா பாதகனுக்கு பட்டாடை போர்த்தி அழகு பார்க்கிறார்கள் கோமாளி குஞ்சுகள். தமிழனின் இத்தகைய கேவலமான் இந்நிலைக்கு யார் காரணம். இந்நிலை என்று மாறும்?????
000000000000000000000000000000000000000000000000000000000000
அன்புத்தமிழ் நெஞ்சங்களே!
நம்முடைய சொந்த தொப்புள் கொடி உறவுகள் ஒரு சில மைல் தூரத்தில் தினம் தினம் செத்துமடிந்து கொண்டிருக்கிறார்கள். நமது சொந்த இனம் பூண்டோடு சிரீலங்கா அரசால் திட்டமிட்டு அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆனால் நாமோ அந்த நாட்டுக்கு இறையாண்மையுள்ள நாடு என்ற பட்டத்தை அனுதினம் வழங்கி பெருமை படுத்திக்கொண்டிருக்கிறோம். நம்மில் பலர் அங்கு நடப்பது ஒரு திட்டமிட்ட இனஅழிப்பு என்பதை அறியாமல் சிரீலங்கா அரசுக்கு வால் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் அரசியல் செய்ய பல களங்கள் இருந்தும் கொஞ்சம் கூட பிரஞ்ஞையே இல்லாமல் தினம் செத்து மடிந்துகொண்டிருக்கிற நமது சொந்தங்களின் பிரேதங்களின் மீது அரசியல் செய்துகொண்டிருக்கிறோம். இன்னும் சிலர் அவர்களுக்கு ஆதரவு தருவதே இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்பதுபோல் ஒருமாயயை உருவாக்குகிறார்கள்.
இதோ நம் ஈழ சகோதரனின் கூக்குரலை இந்த பாட்டில் கேளுங்கள். தான் வாழ்வை இழந்து நின்றபோதும் தான் வளர்த்த குருவியின் நாயின் மீது அவர்களுக்கு இருக்கும் வாஞ்சை கூட இந்த சகோதர சகோதரிகளின் மேல் நமக்கு இல்லையே! ஐயகோ பேய் மனது படைத்தோரே நீர் மனதிறங்க மாட்டீரோ!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
வெடிவிழுந்து எரிந்த பனை
கரை உடைந்து காயந்த குடம்
கூரை சரிந்த எமது இல்லம்
குருதி வடிந்த சிறு முற்றம்
இரவை கிழித்த பெண்ணின் கதறல்
ரத்தம் வடிந்த குழந்தை பொம்மை
என் தேசம் பதுங்கு குழியின் உள்ளே
புதைய சம்மதமா?
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
விளக்கேந்திய மாடமெல்லாம் விழுந்தே போனதோ!
ஊஞ்சலாடிய முயலை
நீந்திப்பழகிய வாவி எல்லை
என் தோப்பில் அடைந்த பூங்குருவிகள் எங்கு போனதோ
என் தோட்டத்தில் ஈன்ற தாய் பூனை என்ன ஆனதோ
முற்றம் தெளித்திட விடியல் வருமோ!
யுத்த யாமத்தில் வாழ்வு முடியுமோ!
தாயே என்ன பிழை செய்தோமடித்தாயே!
மக்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழம் - நேற்றும் இன்றும் தொடரின் தலைப்பு பாடல் இது. நன்றிகள் : மக்கள் தொலைக்காட்சிக்கும் - பாடலை உணர்ச்சி பெருக்கோடு பாடிய கலைஞர்களுக்கும்.
.
Monday, 26 October 2009
காடோ காடோ 02.09
அண்மைக் காலங்களில் இந்தோனேசிய ஊடகங்களில் அதுவம் மின்னனு ஊடகங்ளில் இரு பெண்களின் பெயர்கள் மிக பரபரப்பாக பேசப்பட்டன. அதுவும் வலைப்பக்கங்களில் இவர்கள் பற்றிய செய்திகள் அதிக அளவில் விவாதிக்கப்பட்டன. அந்த செய்தி நாயகிகளில் ஒருவர் பிரித்தா முல்யாசாரி. இரு குழந்தைகளுக்குத் தாயான இவர் சகார்த்தாவின் புறநகர் பகுதியான தங்கரங்கில் வசிக்கிறார். இவர் அனுப்பிய ஒரு மின்னஞ்சல்தான் இவரை இந்த அளவுக்கு பிரபலமாக(??!!) ஆக்கியது. பிரச்சனையிலும் மாட்டிவிட்டது! சிலமாதங்களுக்கு முன் தனக்கு ஏற்பட்ட டெங்கு காச்சலுக்கு சிகிச்சை பெற இங்குள்ள பிரபல மருத்துவமனை ஒன்றிற்குக்கு பிரித்தா சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் இவருக்கு அளிக்கப்பட்ட சேவை மிகவும் மோசமாக இருந்துள்ளது. பிரித்தா இதனால் கடும் அதிருப்தியும் மன உளைச்சலும் அடைந்துள்ளார். மருத்துவமனையை விட்டு வந்த பிறகும் தான் அங்கு நடத்தப்பட்ட விதம் குறித்து அவரால் மறக்க முடியவில்லை. ஆனால் அதை அப்படியே விட்டுவிட அவருக்கு மனம் வரவில்லை. தன் ஆற்றாமையை வெளிப்படுத்தும் விதமாக அந்த மருத்துவமனையில் தனக்கு ஏற்ப்பட்ட மோசமான அனுபவங்களை விவரித்து ஒரு மின்னஞ்சல் எழுதினார். அதை தான் உறுப்பினராக உள்ள ஒரு வலைக்குழுமம் மூலமாக அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் அனுப்பினார். அவரது ஆதங்கத்தில் உள்ள நியாத்தை உணர்ந்த உறுப்பினர்கள் தங்கள் நண்பர்கள் அனைவருக்கும் அவற்றை அனுப்பியுள்ளனர். இதனால் பிரித்தாவின் மின்னஞ்சல் இந்தோனேசியா முழுவதும் பரவியது. இது குறித்த செய்திகள் பல பத்திரிக்கைகளிலும் வெளியாயின. பதிவர்கள் பலரும் இது குறித்து பல இடுகைகள் எழுதினர்.
இதனால் அந்த மருத்துவமனையின் பெயர் மக்கள் மத்தியில் மிக மோசமாகியது. இதனால் மருத்துவமனை நிர்வாகம் கடும் எரிச்சல் அடைந்து பிரித்தா மீது மான நட்ட வழக்கு தொடுத்தது. இந்த வழக்கை விசாரித்த நீதி மன்றம் அவருக்கு ஆறு வருட சிறை தண்டனையும் நட்ட ஈடாக ஒரு லட்சம் அமரிக்க டாலர்களும் விதித்து தீர்பளித்தது. இதைக்கண்ட பொதுமக்களும், பெண்கள் அமைப்பினர்களும் மின்னனு ஊடகத்தை சேர்ந்தவர்களும் கடும் அதிர்ச்சி அடைந்து போராட்டத்தில் குதித்தனர். நீதிமன்ற முடிவை எதிர்த்து மின்னனு ஊடகங்களில் அனல் பறக்கும் விவாதங்கள் நடந்தன. பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் அவருக்கென்று தனி அரங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு அதில் கிட்டத்தட்ட முப்பது லட்சம் பேர் பிரித்தாவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். நிலைமை கைமீறிப்போவதை உணர்ந்த அரசு அவரது சிறைத்தண்டனை வீட்டுக்காவலாக மாற்றும்படி நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டது. மேலும் அவருக்கு அதிக பட்ச தண்டனை அளிக்க காரணமான அரசு தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காவல்துறையினர்கள் செயல் பாடுகள் குறித்த கேளிவிகளும் பல சட்ட வல்லுனர்களால் எழுப்பட்டது. இதனால் சட்டத்துறையும் காவல்துறையும் ஒன்றையொன்று பரஸ்பரம் சந்திக்கு வந்து குற்றம்சாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. நடந்து முடிந்த குடியரசு தலைவர் தேர்தல் பிரச்சாரத்தில் கூட பிரித்தாவின் விடயம் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டது. தற்போதைய குடியரசு தலைவரின் முக்கிய போட்டியாளராக விளங்கிய முன்னாள் குடியரசு தலைவர் மேகாவதி கூட பிரித்தாவை வீட்டிற்கு சென்று நேரில் சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார்.
இவ்வளவுக்கு பிறகும் பிரித்தா தற்போதும் வீட்டுக்காவலில்தான் உள்ளார். விரைவில் அவர் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வர இருக்கிறது. இதில் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்திருக்கின்றனர். இந்நிலையில் பிரித்தாவுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் அவர் தரப்பு நியாத்தை வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வகையிலும் இந்தோனேசிய வலைப்பதிவர் கூட்டமைப்பு ஒரு ஏற்பாட்டை செய்தது. ஆண்டுதோறும் நடைபெறும் “பெஸ்தா பிளாக்கர்” எனும் தேசிய அளவிலான ஒன்றுகூடல் நிகழ்ச்சியில் பிரித்தாவை சிறப்பு பேச்சாளாராக கலந்துகொள்ளும்படி அழைப்பு விடுத்தது. அதன்படி கடந்த அக்டோபர் 24 ந்தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பிரித்தா கலந்து கொண்டார். தொடக்கம் முதல் தனக்கு ஏற்பட்ட அநீதியை எதிர்ப்பதில் வலைப்பதிவர்கள் முன்னிலை வகித்ததை அவர் தனது உரையில் குறிப்பிட்டார்.
வலைப்பதிவுகள் பொழுது போக்கு என்ற இலக்கினைத் தாண்டி சமூக அக்கறையுடனும் செயல்பட முடியும் என்பதற்கு இதுவும் ஒரு சான்று.
000000000000000000000000000000000000000000000000000000000
பிரித்தாவுக்கு அடுத்த படியாக இந்தோனேசிய ஊடகங்களில் அண்மைக்காலங்களில் அதிகம் அடிபடும் பெயர் மரியா கோசோவா சுருக்கமாக ”மியாபி”. சப்பானில் இளசுகள் மத்தியில் மிகவும் பிரபலமான விளம்பர அழகி இவர். மியாபி இந்த அளவுக்கு பிரபலமாகக் காரணம் அவர் நடித்துள்ள ஆபாச படங்கள் தான் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தோனேசியாவில் உள்ள மேக்சிமா பிச்சர்ஸ் என்ற திரைப்பட தயாரிப்பு நிறுவனம் மியாபியை வைத்து ஒரு முழுநீள நகைச்சுவை படம் ஒன்றை தயாரிக்கத் திட்டமிட்டது. இந்தோனேசிய வாலிபர் ஒருவர் மியாவி மீது மய்யல் கொண்டு அவரை இந்தோனேசியாவுக்கு கடத்தி வருவதையும் அதைத் தொடர்ந்து அவர்கள் இடையில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் நகைச்சுவையாக சொல்லும் படமாம் இது. இந்த படத்தின் பட பிடிப்புக்காக மியாபி சென்ற மாதம் இந்தோனேசியா வர இருந்தார். ஆனால் அவரது வருகையை எதிர்த்து சில அமைப்பினர் சகார்த்தாவில் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆபாச படங்களில் நடித்த ஒருவர் இந்தோனேசியா வருவது இந்தோனேசிய மக்களின் ஒழுக்கத்தைப் பாதிக்கும் என்று வாதிட்டனர். அரசுக்கும் இது தொடர்பாக கடும் நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அரசு மியாபியின் புகல் உரிமைச் சீட்டை நிறுத்திவைத்தது. அரசின் இந்த முடிவு மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் பெண்கள் உரிமை அமைப்பினர் மத்தியில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அவர் ஆபாச படங்களில் நடித்துள்ளதைக் காரணமாக காட்டி அவர் இந்தோனேசியா வருவதை தடை செய்வது மனித உரிமை மீறல் என்று பலர் வாதிட்டனர். வழக்கம்போல் மின்னனு ஊடகங்களிலும் வலைப்பதிவுகளிலும் மியாபி பிரச்சினை கண்ணாபிண்ணா என்று விவாதிக்கப்பட்டது. ஊடகத்துறை அமைச்சரே தலையிட்டு விளக்கம் தர வேண்டிய அளவுக்கு இந்த விடயம் போனது.
விளைவு???? ஜப்பான் இளசுகளிடம் பிரபலமான “மியாபி” இப்போது இந்தோனேசியா இளசுகள் மத்தியிலும் மிகவும் பிரபலமாகிவிட்டார். அவர் நடித்த ஆபாசப்படங்கள் இந்தோனேசியாவில் பெரிய அளவுக்கு விற்பனையாகின்றனவாம். தொலைபேசி செய்தால் போதும் நேரில் பட்டுவாடா என்ற அளவுக்கு இணையத்தில் கூவி கூவி விற்கிறார்கள். தொலைபேசியில் மியாவி படம், கணணித்திரையில் மியாபி படம் நோட்டுப்புத்தகங்களில் மியாபி படம் என்று எங்கு நோக்கினும் இளசுகள் மத்தியில் மியாபி நீக்கமற நிறைந்துவிட்டார். அவரை எதிர்த்து போராட்டம் செய்தவர்கள் இதைத்தான் எதிர்ப்பார்த்தார்களா என்பது புரியவில்லை.
சும்மா இருந்த சங்கை ஊதிக்கெடுப்பது என்பது இப்படித்தானோ?
0000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசியாவின் கிழக்கு சாவா மாகாணத்தில் உள்ளது உங்காரன் என்னும் நகரம். இங்குள்ள ஒரு மத நிறுவனத்தின் தலைவர் புஜியோ சாயோ விடியாந்தோ சுருக்கமாக சேக் புஜி. நாற்பத்தி மூன்று வயதான புஜி பெரும்பணக்காரர். அவருக்கு ஏற்கனவே இரு மனைவிகள் உள்ளனர். இந்நிலையில் அவர் மூன்றாவதாக பனிரெண்டு வயது சிறுமி ஒருவரை அண்மையில் மணமுடித்துள்ளார். இது குறித்து செய்திகள் வெளியானதும் பல சமூக ஆர்வலர்கள் மற்றும் அமைப்பினர்கள் தங்களின் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர். அவர் மீது காவல் நிலையத்தில் பெண் குழந்தைகள் காப்புரிமை சட்டத்தின் வாயிலாக வழக்கும் தொடுக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து புஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த வாரம் இவர் மீதான வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது வாதாடிய புஜி தரப்பினர் இசுலாம் மதச்சட்டப்படி இத்திருமணம் செல்லும் என்றும் இதில் எந்த தவறும் இல்லையென்றும் வாதிடினர். ஆனால் இது நடப்பில் உள்ள குழந்தைகள் காப்புரிமை சட்டத்தின்படி தவறு என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் புஜி மீதான வழக்கு சரியான முறையில் தொடுக்கப்படவில்லை என்று கூறி புஜியை விடுதலை செய்து தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை பார்த்த பல பொதுமக்களும் ஊடகங்களும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளன. அரசு தரப்பும் மேல் முறையீடு செய்யப்போவதாக அறிவித்துள்ளது. பல பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த தீர்ப்பு வழங்கப்பட்ட போது நீதிமன்றத்தில் இருந்த புஜியின் இரு மனைவிகளும் ஆனந்தகண்ணீர் (????!!!!) விட்டது குறிப்பிடத்தக்கது.
மியாபியின் வருகையை எதிர்த்த அமைப்பினர் புஜிக்கு ஆதரவான இந்த நீதி மன்ற தீர்ப்பு குறித்து என்ன சொல்கிறார்கள் என்று தெரியவில்லை. இந்தியாவிலும் சரி இந்தோனேசியாவிலும் சரி நீதி மன்றங்கள் சர்ச்சைக்குரிய தீர்ப்புகளை வழங்குவது வாடிக்கையாகி வருகிறது.
கைப்புன்னுக்கு கண்ணாடி வேண்டுமா? நீதிமன்றங்கள்தான் பதில் சொல்லவேண்டும்.
.


Monday, 19 October 2009
காடோ காடோ!
நான் பார்த்து கேட்டு படித்து அறிந்து கொண்ட உள்ளூர் (இந்தோனேசிய) செய்திகளை ஒரு கலவையாக “காடோ காடோ” என்ற தலைப்பில் வாராவாரம் தரலாம் என்று இருக்கிறேன். காடோ காடோ என்பது இந்தோனேசியாவில் பிரபலமான் சைவ உணவு. கீரை, பல வகை காய்கறிகள், முளைகட்டிய பச்சை பயறு, தெம்பே ( சோயா), டோபு இவற்றையெல்லாம் மிதமாக வேகவைத்து நிலக்கடலை சாந்து சேர்த்து கலவையாக செய்யப்படும் ஒருவகை பக்க உணவு இது. ஏகப்பட்ட வேலைகளை ஒன்றாக எடுத்து போட்டுக்கொண்டு பேய் சொதப்பு சொதப்புவர்களிடம் ”என்ன காடோ காடோ பண்ணீட்டீங்களா?” என்று கேலியாக கேட்பது இங்குள்ளவர்களின் வழக்கம் (இந்த இடுகையை படித்துவிட்டு தயவு செய்து என்னை இப்படி கேட்டுவிடாதீர்கள்).
இனி இந்த வார காடோ காடோ!
000000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசிய அரசு இந்த வருடம் முதல் அக்டோபர் 2ம் தேதியை “பத்திக்” நாளாக கொண்டாட முடிவு செய்திருக்கிறது. இதில் என்ன விசேடம் என்கிறீர்களா? இந்த அறிவிப்பை விடவும் இந்த அறிவிப்புக்குப் பின்னால இருக்கும் நுண்ணரசியல் சற்று சுவரசியமானது. இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் எல்லை பிரச்ச்னையில் ஆரம்பித்த குமிடிப்பிடி சண்டை இப்போது மற்ற தளங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்மைக் காலமாக இந்தோனேசியாவின் பாரம்பரிய கலைவடிவங்களை ஒன்றன்பின் ஒன்றாக மலேசியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தோனேசியாவில் மிகப்பிரபலமான “நாசி கோரங்” (பிரைடு ரைசு) என்னும் உணவுப்பொருளுக்கான காப்புரிமையை மலேசியா பெற்றுவிட்டது. இது இந்தோனேசிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ”பத்திக்” தொழிற்நுட்பத்தையும் மலேசியா சொந்தம் கொண்டாட இரு நாட்டுக்கும் இடையேயான உரசல் உச்சத்தை அடைந்தது. பத்திக்” என்பது மெழுகையும் சாயத்தையும் கொண்டு கைகளால் துணிகளில் அழகிய அச்சு வார்ப்புகளை உருவாக்கும் ஒரு கலை சார்ந்த தொழிற்நுட்பம். இந்தியாவில் கூட இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அழகிய வண்ணத்துணிகளை சென்னையிலும் ஈரோட்டிலும் தயாரிக்கிறார்கள். மலேசியா மற்றும் சிங்கப்பூர் விமான நிறுவனப் பணிப்பெண்கள் கூட இந்த வகை துணிகளால் செய்த சீருடைகளை அணிந்திருப்பதை காணலாம். அந்த அளவுக்கு இந்த பத்திக் வடிவமைப்புகள் இங்கு மிகவும் பிரசித்தம். நல்ல வேளையாக அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் இக்கலையை இந்தோனேசியாவின் பாராம்பரிய சொத்தாக யுனசுகோ அறிவித்துள்ளது. இது இந்தோனேசியாவின் கலை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையொட்டி பத்திக் எங்களுடையது என்று உலகக்கு பறைசாற்றும் விதமாகவும் “பத்திக்” துணிகளை பிரபல படுத்தும் விதமாகவும் இந்தோனேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அன்று ஒருநாள் இந்தோனேசியர்கள் அனைவரும் பத்திக்கினால் ஆன உடைகளையே அணிய வேண்டும் என்று இந்நாட்டின் குடியரசு தலைவரே விசெடமாக கேட்டுக்கொண்டிருந்ததால் மக்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். அன்று எங்கு நோக்கினும் பத்திக் மயமாக இருந்தது.
உள்ளதை காப்பாத்திக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்க!
00000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசியர்கள் பொதுவாகவே அன்பானவர்கள். அவர்கள் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு (வயத்துக்கு கஞ்சி ஊத்தரவங்க மேல மரியாதை இல்லாமல் இருந்தா எப்படி??!!). ஆனால் போன வாரம் பிபிசியில் பார்த்த செய்தி ஒன்று என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அண்மையில் இங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்ப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலநடுக்கத்தால் இங்குள்ள படாங் என்ற பகுதி மிகுந்த சேதத்துக்கு உள்ளானது. பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளிலும் மண் சரிவிலும் உயிருடன் சிக்கிக்கொண்டார்கள். இப்பகுதி தலைநகர் சகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் வெளியில் இருந்து மீட்புக்குழுவினர் இப்பகுதியை அடைவதற்கு சற்று தாமதம் ஆனது. அதுவரையில் அங்கு உள்ளூரில் உள்ளவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட முசுலீம் அல்லாத சீன வம்சாவளியினருக்கு உதவ மறுத்துவிட்டார்களாம். அதையும் மீறி உதவ வேண்டுமெனில் முதலில் பணம் தர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்பகுதியில் முசுலீம் அல்லாத சீன வம்சாவளியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வசிக்கிறார்கள். சிறுபான்மையினராக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நிலையில் பல பெரிய வணிக நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இதனால் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பெரும்பான்மை மக்களுக்கு இவர்கள் மேல் ஒருவித காழ்ப்புணர்ச்சி நிலைவி உள்ளது. இது இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது. மனித இனம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை!
0000000000000000000000000000000000000000000000000
நாளை அக்டோபர் 20ம் தேதி இந்தோனேசியாவின் குடியரசு தலைவராக மீண்டும் பதவி ஏற்கிறார் திரு சுசிலோ பம்பாங் யுதயானோ சுருக்கமாக எஸ்.பி.ஒய். இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 60% மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார். இந்தோனேசியாவில் இரட்டை தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாகவும், குடியரசு தலைவர் தனியாகவும் நேரடியாக மக்களால் தெர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் எஸ்.பி.ஒய்யின் குடியரசுக்கட்சி 13% இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதனால் எஸ்.பி.ஒய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் அவர்களின் மிகத்தெளிவாக முடிவை தேர்தலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது தமது பகுதிகளில் சிறப்பான பணி புரிந்தவர்கள் யார் என்பதை பார்த்தும் அதே வேளை குடியரசுத்தலைவர் என்று வரும்போது யார் அதற்கு பொருத்தமானவர் என்பதைப்பார்த்தும் வாக்களித்துள்ளது பாராட்டத்தக்கது. முன்னாள் ரானுவ தளபதியான எஸ்.பி.ஒய் சற்று மென்மையான அனுகுமுறை கொண்டவர். அதே சமயம் நாட்டு வளர்ச்சிக்காக பல உறுதியான நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். ஊழலில் கொடிகட்டிப்பறந்த இந்தோனேசியாவில் அதற்கு முதலில் கடிவாளம் போட்டவர் எஸ்.பி.ஒய் ஆவார். ஊழல் முழுமையாக அகற்றப்படாவிட்டாலும் அதற்காக முதல் அடியை எடுத்துவைத்ததற்கு அவரை பாராட்டலாம். அண்மையில் இவர் கொண்டுவந்த பாலுணர்வு காட்சிகளை வெளியிடும் ஊடகங்களுக் எதிரான சட்டம் (ஆண்டி போர்னோ) பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியது, ஆனால் இறுதிவரை உறுதியாக இருந்து அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார். அதேபோல தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் மிக உறுதியான நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார். நீண்ட நாளாக தேடப்பட்டு வந்த பயங்கர தீவிரவாதி அண்மையில் சுட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவன்தான் பாலியிலும் சகார்த்தாவிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி. இன்றைய அரசியல் உலகில் தென்கிழக்காசியாவில் அதிகம் கவணிக்கப்படும் தலைவராக எஸ்.பி.ஒய் விளங்குகிறார். அண்மையில் நடைபெற்ற சி20 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இவர் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் இன்னொரு சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறை அறியணை ஏறும் எஸ்.பி.ஒய்யை வாழ்த்துவோம்!
.


Saturday, 10 October 2009
சேவை என்பது என்ன?

Saturday, 3 October 2009
ஆறு அது ஆழமில்லஅது! சேரும் கடலும் ஆழமில்ல!
சூரிய வெளிச்சம் சுள்ளென்று முகத்தில் அடிக்க கடினப்பட்டு கண்களை திறந்தான் பீட்டர். இரவு உள்ளே போன அந்நிய அரக்கன் இன்னும் இறங்கவில்லை போலும், தலை வின்னென்று வலித்தது. நான்சி என்ன சொல்லப்போகிறாளோ என்ற கவலை வேறு தலைவலியை கூட்டியது.
”இதெல்லாம் மட்டையாகிற அளவுக்கு குடிக்கிறதுக்கு முன்னாடி யோசிக்கனும்” மனசாட்சி சொன்னது.
சரி நடக்கிறது நடக்கட்டும் என்று நினைத்தவாறு சோம்பல் முறித்துக்கொண்டே எழுந்து உட்கார்ந்தான். அறை சுத்தமாய் இருந்தது. மேசையை பார்த்தான். இரவு உடுத்தியிருந்த உடைகள் துவைக்கப்பட்டு இஸ்திரி செய்யப்பட்டு வைக்கப்பட்டிருந்தது. பக்கத்திலேயே இரண்டு ஆஸ்பிரின் மாத்திரைகள். ஒரு டம்ளரில் தண்ணீர். ஒன்றும் புரியாதவனாய் முதலில் தலைவலியாவது போகட்டும் என்று மாத்திரைகளை எடுக்கப்போனான். பக்கத்திலேயே ஒரு காகிதத்தில் சிறு குறிப்பு இருந்தது. பதறிப்போய் அதை எடுத்தான். படிக்க படிக்க கண்கள் விரிந்தன.
“ ஹனி! வீட்டுக்கு நிறைய பொருட்கள் வாங்க வேண்டியிருக்கிறது. அதனால் காலையிலே ஷாப்பிங் போகிறேன். டைனிங் டேபிளில் டிபன் வைத்திருக்கிறேன். சாப்பிட்டுவிட்டு ஓய்வெடுக்கவும். சீக்கிரம் வந்துவிடுவேன். இப்படிக்கு நான்சி”
அதிர்ச்சியானவனாய் தன்னை கிள்ளி பார்க்கிறான். ஆமாம் நிஜம்தான். இதில் ஏதோ உள்குத்து இருக்குமோ என்று ஐயப்பட்டவாறே எழுந்து அறையை விட்டு வெளியே வருகிறான். வீடு பளிச்சென்று இருக்கிறது. சாப்பாட்டு மேசையில் இருக்கும் பாத்திரத்தை திறந்து பார்க்கிறான். உள்ளே சுடச்சுட இட்லி. பக்கத்தில் சாம்பாரும் கட்டி சட்னி வேறு. ஆச்சரியத்திற்கு மேல் ஆச்சரியம்.
அந்தப் பக்கம் சோபாவில் சாப்பிட்டுக்கொண்டே பாட்டு பார்த்துக்கொண்டிருக்கிறான் ஜான். பீட்டரின் ஒரே மகன். இவனை பார்த்ததும் முகத்தை திருப்பிக்கொண்டான்.
சங்கடப்பட்டவனாய் “ஜான் என்ன நடக்குது இங்க? ஒன்னுமே புரிய மாட்டேங்குது. நேத்திக்கு நைட் என்ன ஆச்சு?” என்றான் பீட்டர் ஒன்றும் தெரியாதவன்போல்.
“நேத்தைக்கு நீங்க தண்ணி அடிச்சிட்டு நைட்டு மூனு மணிக்குதான் வீட்டுக்கு வந்தீங்க, வந்த வேகத்தில் நாளஞ்சு தட்ட வேற ஒடச்சீங்க. நிதானம் தெரியாம கதவுல முட்டி அப்படியே விழுந்துட்டீங்க. பாவம் அம்மாதான் எல்லாத்தையும் கிளின் பண்ணாங்க. உங்களையும் கஷ்டப்பட்டு கட்டிலில் தூக்கிப்போய் போட்டாங்க” என்றான் ஜான் கோபமாய்.
”ஐயையோ அப்படியா?” என்றவன் அதெல்லாம் சரி இந்த கூத்துக்கு நான்சி என்னை ஒரு மாசத்துக்கு பட்டினி இல்ல போட்டிருப்பா? அதெப்படி சூடா இட்லி கட்டி சட்னி இதெல்லாம்? குழம்பியவாறே மெதுவாய் குளியல் அறைக்கு சென்றான்.
நேற்று இரவு நான்சி இவனது சட்டையை கழட்ட முயன்றபோது ”அய்யோ என்னை தனியா விடுங்கம்மா. எனக்கு கல்யாணம் ஆயிடுச்சு!” என்று திரும்ப திரும்ப உளறியது பீட்டருக்கு தெரிந்திருக்க நியாமில்லை.
”ஆறு அது ஆழமில்ல….. அது சேரும் கடலும் ஆழமில்ல… ஆழம் இது ஐயா ………………………………… இசையருவியில் பாடிக்கொண்டிருந்தார் இளையராஜா.
------------------------------------------------------------------
டிஸ்கி :
இது நம்ப சொந்த சரக்கு இல்லை. மின்னஞ்சலில் நண்பர் கமல கிருஷ்ணன் ஆங்கிலத்தில் அனுப்பியதை இங்கு தமிழாக்கி தந்திருக்கிறேன் சிறிய மாறுதல்களோடு. நன்றி அவருக்கு!
.

Subscribe to:
Posts (Atom)