மனுவை பெற்றுக்கொள்ளும் அமைச்சர்
இலங்கையின் தடுப்பு முகாம்களில் இருந்து ஆவுஸ்திரேலியாவிற்கு படகு மூலம் தப்பி வந்த சுமார் 300 தமிழர்கள் இந்தோனேசிய கடல் எல்லையில் சென்ற மாதம் முதல் தடுத்து வைக்கப்பட்டுள்ள செய்தியை நீங்கள் அறிந்திருக்க கூடும். பல மாதங்கள் காடுகளிலும் கடலிலும் உயிரை பயணம் வைத்து அவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டனர். ஆனால் இந்தோனேசியா கடல் எல்லையை தாண்டும் முன் அவர்கள் இந்தோனேசியா கப்பற்படையினரால் தடுக்கப்பட்டுள்ளனர். அப்பாவி பொதுமக்களான அவர்கள் தங்களுக்கு அவுஸ்திரேலிய அரசு அரசியல் தஞ்சம் அளிக்கவேண்டும் என்று கோரினர். ஆனால் அவர்களுக்கு தஞ்சம் வழங்க அவுஸ்திரசு மறுத்தவிட்டது. அவர்களை தடுத்து வைத்துள்ள இந்தோனேசிய அரசும் அவர்களுக்கு தஞ்சம் வழங்க மறுத்துவிட்டது. ஐ.நா அமைப்புகளும் அவர்களை கைவிட்டு விட்டன. இந்த நிலையில் அந்த 266 பேரும் படகிலேயே கடந்த சில வாரகாலமாக காத்திருக்கின்றனர். அவர்களை இலங்கைக்கே திருப்பி அனுப்புவதென இந்தோனேசிய அரசு முடிவு செய்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அவர்களை திருப்பி அனுப்பினால் அவர்கள் நிலை என்ன ஆகுமோ என்ற கவலை உலகத்தமிழர்களை ஆட்கொண்டுள்ளது. பல தமிழ் அமைப்புகளும் அவர்களுக்கு அவுஸ்திரேலியா அரசு தஞ்சம் அளிக்க முன்வரவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளன.
தாம் வாழும் நாட்டில் தமிழர்களுக்கு ஏற்ப்பட்டுள்ள இத்தகைய நிலை இந்தோனேசியாவில் வாழும் தமிழர்களின் மனங்களையும் பாதிக்கத்தவறவில்லை. ஆனால் பிழைப்புக்காக புலம்பெயர்ந்துள்ள நாட்டில் எந்த வித சட்ட உரிமைகளும் இல்லாத நிலையில் அவர்கள் கையை மட்டுமே பிசைய முடிந்தது. இந்நிலையில் மத்திய ரசாயணம் மற்றும் உரத்துறை அமைச்சர் திரு மு.க. அழகிரி அவர்கள் இந்தோனேசியாவுக்கு இரண்டு நாள் அரசுமுறைப்பயணமாக நேற்று வந்திருந்தார். இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்ட இந்தோனேசியா வாழ் தமிழர்கள் அவரை மிகுந்த சிரமங்களுக்கிடையில் சந்தித்து பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்து மனு ஒன்றை அளித்தனர். இந்த பிரச்சினை குறித்த விவரங்களை சிரத்தையுடன் கேட்டுக் கொண்டபின் அவரும் தன்னால் இயன்றவரை உதவுவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்தோனேசியா, அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை சம்பந்தப்பட்ட இந்த நிகழ்வில் இந்தியா எந்த அளவுக்கு தலையிட முடியும் என்ற கேள்வி இருந்த போதும், இந்தோனேசியாவும், அவுஸ்திரேலியாவும் கைவிட்டு விட்ட நமது சொந்தங்களை இலங்கைக்கு திருப்பி அனுப்பாமல் தமிழகத்துக்கு அனுப்ப ஐ.நா மனித உரிமை கழகத்துக்கு தமிழக அரசு தாமாகவே முன்வந்து கோரிக்கை வைக்க வேண்டும் என்பதே நமது வேண்டுதலாக உள்ளது. தமிழக அரசு நமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் என்று நம்புகிறோம்.
பிழைக்க வந்த இடத்தில் இடைவிடாத வேலைப்பலுவின் இடையிலும் வார வேலை நாளான நேற்று பல கிலோ மீட்டர்கள் பயணித்து வந்து அமைச்சரை சந்தித்து சக தமிழனுக்காக குரல் கொடுத்த நமது சொந்தங்களை மனதார பாராட்டுகிறோம். தமிழன் என்ற உணர்வை நாடு கடந்து வந்தும் உயிர்ப்பித்து வைத்திருக்கும் அவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும். குறிப்பாக நேரில் வந்தும், நேரில் வராமல் இந்த நிகழ்விற்கான முன்னெடுப்பை செய்தும் உதவிய பின்வரும் நமது சொந்தங்களை நாம் பாராட்ட கடைமைப்பட்டுள்ளோம்.

திரு. கமல கிருஷ்ணன்,
சகார்த்தா
திரு. சந்திரசேகரன், சகார்த்தா
திரு. மாணிக்கம், போகூர்
திரு. ஆன்டோனியோ
டியோபில், போகூர்
திரு. யாசிர் முகம்மது, போகூர்
திரு. அருண், சுகபூமி
திரு. திருநாவுக்கரசு, சகார்த்தா
திரு. பத்மநாபன், போகூர்
திரு. பாலசுப்ரமணியன்,
பாண்டுங்
திரு. ஜெகதீசன் , பாண்டுங்
திரு. மகேஸ்வரன் , பாண்டுங்
திரு. பிரபு , பாண்டுங்
திரு. ரமேஷ் , பாண்டுங்
திரு. சுரேஷ் , பாண்டுங்
திரு. பத்மநாபன் , பாண்டுங்
திருமதி. விஜய காந்தி,
சகார்த்தா
.