எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Thursday, 18 December 2008

வளர்ச்சியின் நிறம் சிவப்பு !

அண்மைக் காலங்களில் எழுத்துலகிலும் ஊடகங்களிலும் உலக பொருளாதார தேக்க நிலை குறித்தும் முக்கியமாக அதில் இந்தியா மற்றும் சீனாவின் பங்கு குறித்தும் பரவலாக பல விடயங்கள் அலசப்படுகின்றன. மேலும் மேற்கு தேய்கிறது கிழக்கு வளர்கிறது போனற முழக்கங்களும் தென்படுகின்றன. கூடவே முதலில் வல்லரசாகப் போவது யார்? என்ற கேள்வியும் இந்தியா சீனாவை முந்திவிடும் என்ற அனுமானங்களும் பலமாக வீசுகின்றன. ஆனால் இந்த கருத்துக்களில் எல்லாம் எந்த அளவு உண்மை உள்ளது என்பது பெரிய கேள்வி. என்னைப்போன்ற பாமரனின் பார்வையில் இவை அனைத்தும் வெற்றுக் முழக்கங்கள் என்றே தோன்றுகிறது. என்னை பொறுத்தவரை சீனா என்ற நாடு பல ஆண்டுகளுக்குமுன்னாலேயே வல்லரசு நிலையை அடைந்துவிட்டது. இன்றைய சிக்கலான பொருளாதார நிலையினால் பெருமளவு பாதிக்கப்பட்டிருக்கிற போதும் சாய்து கிடக்கிற வல்லரசுகளுக்கு முட்டு கொடுத்து நிறுத்தி இருப்பது சீனாதான். இன்றைக்கு வல்லரசு என்று தம்மை முன்னிறுத்திக் கொண்டிருக்கிற நாடுகளுக்கு இணையான ஆயத பலமும் பொருளாதார வளமும் பெற்றிருக்கும் ஒரே ஆசிய தேசம் சீனாதான். அண்மையில் நடந்து முடிந்த ஒலிம்பிக் போட்டிகள் இதை உலகுக்கு வெளிச்சமிட்டு காட்டியது. ஒலிம்பிக் போட்டியை கானவந்த மேற்கத்தியர்களே சீனாவின் வளர்ச்சியை கண்டு அசந்து போய் விட்டனர். சீனாவை பற்றி அவர்கள் கொண்டிருந்த தவறான அனுமானங்கள் முற்றிலும் தகர்ந்து போயின. இந்த போட்டிகள் சீனாவின் பிரமாண்டத்தையும் சீன மக்கள் தங்கள் நாட்டின் மீது கொண்டிருக்கும் அளவிலா பிணைப்பையும் அவர்களின் ஒற்றுமையையும் பறைசாற்றியது. இப்படி ஒரு ஒலிம்பிக் போட்டியை உலகம் இதுவரை கண்டதுமில்லை இனிக்கானப்போவதுமில்லை. மற்றொரு புறம் சிச்சுவான் மாகாணத்தில் நில நடுக்கம் ஏற்ப்பட்ட போது அவர்கள் அதிலிருந்து மீண்ட வேகம் குறிப்பிடத்தக்கது. இங்கு நடைபெற்ற புணரமைப்பு பணிக்காக ஆங்காங் பகுதியில் உள்ள ஒவ்வொரு பணியாளரும் தம் ஊதியத்திலிருந்து ஆயிரம் டாலர் அளவுக்கு வாரி வழங்கியது அந்நாட்டில் உள்ள குடிமக்களின் நாட்டுப்பற்றை பறை சாற்றுகிறது. ஒடுக்குவதாலோ கட்டாயப் ப்டுத்துவதாலோ இவற்றை பெறமுடியாது. உணர்வுப்பூர்வமான உந்துதலினால் மட்டுமே இது சாத்தியம். படம்: சீனாவின் சாலைகள் ஒவ்வொரு முறை சீனா செல்லும் போதும் அந்த தேசத்தின் உள் கட்டமைப்பு வசதிகளைப் பார்த்து நான் அசந்து போய்விடுவேன். வானுயுயர்ந்த கட்டிடங்கள் விசாலமான சாலைகள் விலையுயர்ந்த வாகனங்கள் என்று எல்லாமே பிரமாண்டம்தான். இவ்வளவு பெரிய தேசத்தில் அவர்கள் செய்திருக்கும் தரமான சாலை வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் அலாதியானவை. பல்வேறு நகரங்களை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலைகள் அபாரமானவை. தொழில் வாய்ப்புகள் உள்ளவை சின்னஞ்சிறு நகரமானாலும் அவைகளுக்கு உலகத்தரத்திலான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்பட்டிருக்கின்றன. ஒரு முறை யீவு எனும் சிறிய தொழில் நகரத்திலிருந்து 250 கிமீ தொலைவில் உள்ள ஆன்சாவ் எனும் நகரத்திற்கு சாலைவழியே பயணிக்க வேண்டியிருந்தது. நகரத்தை விட்டு வெளியில் வந்து நெடுஞ்சாலையில் இணைந்த பிறகு ஒரு இடத்தில் கூட குறுக்கிடும் சாலைகள் இல்லை. இந்த முழுத்தொலைவிலும் ஒரு இடத்தில் கூட மகிழுந்தின் நிறுத்துவிசையை பாவிக்கும் வாய்ப்பே வரவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். அந்த அளவுக்கு நேர்த்தியான சாலைகள் அங்கு இருக்கினறன. இடையிடையே மலையை குடைந்து சுரங்கப் பாதைகள் வேறு. அதுவும் போவதற்கும் வருவதற்கும். சொல்லப்போனால் யீவு என்பது ஒரு சிறிய தொழில் நகரம்தான். அப்படி என்றால் பெரிய தொழில் நகரங்களில் சாலைவசதிகள் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். படம்: ஆங்காங் – சென்சன் - கான்ச்சோவ் தொடர்வண்டி அதேபோல பொது போக்குவரத்து வசதிகள் மிகவும் சிறப்பாக செய்து தரப்பட்டிருக்கினறன. இந்த வசதிகள் அனைத்தும் சாதாரண குடிமக்களும் பயன் படுத்துவதற்கு ஏற்ற செலவில் கிடைப்பது இவற்றின் சிறப்பம்சம். இதற்கு எடுத்துக்காட்டாக ஆங்காங் – சென்சன் - கான்ச்சோவ் நகரங்களுக்கு இடையிலான தொடர்வண்டி சேவையை சொல்லலாம். கிட்டத்தட்ட 180 கிமீ வேகத்தில் செல்லும் அள்வுக்கு இந்த தொடர்வண்டியும் அதன் பாதைகளும் அமைந்துள்ளன. இந்த தொடர்வண்டி பயணம் விமான பயணத்தைவிட சிறப்பாக இருக்கும். அதேபோல பெரும்பாலான நகரங்களில் சிறப்பான வாடகை மகிழுந்து சேவைகள் கிடைக்கின்றன. அதேபோல சிறந்த பேருந்து வசதிகளும் இருக்கின்றன. இவ்வளவு மக்கள் தொகையை வைத்துக்கொண்டு எவற்றை எப்படி இவ்வள்வு சிறப்பாக பராமரிக்க முடிகிறது என்று நினைத்தால் வியப்பே மிஞ்சும். படம்: யீவு நகர சாலைகள் அதே போல தொழில் துறையினருக்கு சீன அரசு செய்து கொடுத்திருக்கும் உள் கட்டமைப்பு வசதிகள் சிறப்பானவை. சீனாவின் ஒவ்வொரு தொழில் துறையிலும் நவீன தொழிற் நுட்பங்களை கொண்ட இயந்திரங்களை பயன்ப்டுத்துகிறார்கள். மாறிவரும் காலத்திற்கேற்ப இயந்திரங்களும் தொழிற்நுட்பங்களும் மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அரசு தொழிற் துறையினருக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கிறது. ஒரு சிறிய பொருள் ஆனாலும் அவற்றை உற்பத்தி செய்வதற்கான தொழில் வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. எடுத்துக்காட்டாக கைக்கடிகாரத்தை எடுத்துக்கொண்டால் அதன் ஒவ்வொரு பாகத்தையும் தயாரிப்பதற்கு தனித்தனியாக ஏராளமான தொழிற்சாலைகள் உள்ளன. இவை அந்தந்த பாகத்தினை தயாரிப்பதற்கு ஏற்றவாறு பல நவீன இயந்திரங்களை கொண்டிருக்கினறன. எல்லா பாகத்தையும் ஒரே இடத்தில் தயாரிப்பதில்லை. அதனால் ஒவ்வொருவரும் சிறந்த இயந்திரங்களை வாங்கி பயன்படுத்த முடிகிறது. தரமும் சிறப்பாக இருக்கிறது. கைக்கடிகாரத்திற்கு தேவையான ஒவ்வொரு பாகத்தையும் இந்த தொழிற்சாலைகளிடமிருந்து வாங்கி ஒரு இடத்தில் இணைத்து விற்பனை செய்கிறார்கள். இதனால் உற்பத்தி அதிகரித்து செலவுக் குறைகிறது. ஒவ்வொரு பாகங்களை தயாரிக்கும் அனத்து நவீன இயந்திரங்களையும் ஒருவரே வாங்கி பயன்படுத்துவதால் ஏற்படும் பெரிய முதலீடு மற்றும் பராமரிப்பு செலவு தவிர்க்கப்படுகிறது. இதுதான் அவர்களின் குறைந்த விலையின் ரகசியம். மாறாக சீனாவில் தொழிலாளர்களின் கூலி குறைவு அதனால்தான் உற்பத்தி செலவு குறைவு என்பது சரியல்ல. ஏன் என்றால் இங்கு தொழிளாளர்களுக்கு சிறப்பான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. ஒவ்வொரு தொழிலாளிக்கும் ஊதியம் தவிர்த்து தங்குவதற்கு இடமும் உணவும் சீருடையும் தொழிற்சாலைகளால் வழங்கப்படுகின்றன. மொத்தமே ஐந்து பேர் கொண்ட அலுவலகங்களில் கூட இவை பின்பற்றப் படுகின்றன. மேலும் அரசு நிர்ணயித்த குறைந்த ஊதிய விகிதங்கள் கண்டிப்பாக பின்பற்றப்படுகின்றன. படம்: யீவு கமாடிட்டி மார்க்கெட் கழுகுப் பார்வையில் யீவு நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறு பொருள் மொத்த விற்பனை அங்காடி (யீவு கமாடிட்டி மார்க்கெட்) சீன அரசு சிறு தொழில் துறையினருக்கு செய்து தரும் கட்டமைப்பு வசதிகளுக்கு ஒரு சிறந்த உதாரணம். உலகிலேயே மிகப்பெரிய சிறு பொருள் அங்காடி இதுதான். கிட்டத்தட்ட 1.5 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவுடன் அமக்கப்பட்டுள்ள இந்த அங்காடியில் சீனா முழுவதும் உள்ள ஏற்றுமதியாளர்கள் தங்களின் நிரந்தர அரங்குகளை அமைத்துள்ளனர். எதில் அமைந்துள்ள மொத்த அரங்குகளின் எண்ணிக்கை 40000. இங்கு குண்டூசி முதல் மிதிவண்டி வரையிலான பொருட்கள் 200000 மேற்பட்ட வகைகளில் விற்பனை செய்ய படுகின்றன. ஒவ்வொரு பொருள் வகைக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட உற்பத்தியாளர்கள் உள்ளனர். இதனால் வெளிநாட்டு இறக்குமதியாளர்களுக்கு தமது வியாபார பொருட்களை தேர்ந்தெடுப்பது மிகவும் எளிதாக உள்ளது. மேலும் சரியான விலைக்கும் உத்திரவாதம் ஆகிறது. இங்கு நாள் தோறும் 20000 மேற்ப்பட்ட வெளிநாட்டினர் வருகின்றனர் என்பது கூடுதல் செய்தி. மொத்த அங்காடியையும் சுற்றிப்பார்க்க சில வாரங்கள் கூட ஆகும் என்றால் பாத்துக்கொள்ளுங்கள்.. படம்: யீவு கமாடிட்டி மார்க்கெட் முன்புறம் தொழில் துறையை ஆதரிக்கும் அதே நேரம் விவசாயத்திற்கும் சம பங்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. ஒரு முறை மகிழுந்தில் செல்லும் போது கிட்டத்தட்ட 50 கிமீ தூரம் சாலையின் இரு புறமும் பசுமைக்குடில் அமைத்து விவசாயம் செய்யப்பட்டிருப்பதை பார்த்தேன். உடன் வந்த சீன நன்பரிடம் இவ்வள்வு பெரிய விவசாயிகள் இங்கே இருக்கிறார்களா என்று அவற்றைக் காட்டிக் கேட்டேன். அதற்கு அவர் இவையெல்லாம் அரசால் அமைக்கப்பட்டு விவசாயிகளுக்கு மானிய விலையில் வாடகைக்கு விடப்பட்டிருக்கின்றன என்றார். அந்த அளவுக்கு அரசு விவசாயத்தை ஆதரிக்கிறது. இப்படி நாம் பலவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். படம் :சுரங்கப் பாதை இத்தகைய உள் கட்டமைப்புகளும் சாலை வசதிகளும் தொழிற்துறை வசதிகளும் இந்தியாவில் உருவாக இன்னும் பல பத்தாண்டுகள் ஆகும். இந்த நிலையில் நாம் சீனாவை இப்ப முந்துவோம் அப்ப முந்துவோம் என்பதெல்லாம் ஏட்டு சுரைக்காய்தான். சீனா என்பது ஒரு வளர்ந்துவிட்ட வல்லரசு. அவர்களின் நிலையை அடைய இந்தியர்களும் இந்தியாவும் இன்னும் தயாராகவில்லை என்றுதான் சொல்லவேண்டும். நான் இவ்வாறு சொல்வதால் நான் இந்தியாவை மட்டம் தட்டுகிறேன் என்று பொருளில்லை. வள்ளுவம் சொல்வது போல் எதிரியின் பலவீனங்களைவிட பலத்தை அறிந்து கொள்வதுதான் புத்திசாலித்தனம். அதை விட்டுவிட்டு வீன் கற்பனையில் உழல்வது நம் வளர்ச்சிக்கு உதவாது. சீனாவை நாம் முந்தவேண்டும் என்றால் இந்தியர்கள் இன்னும் அதிகமாக உழைக்கவும் திட்டமிடவும் வேண்டும். உண்மையில் எனக்கு பொதுவுடமை சித்தாந்தம் குறித்தோ அவற்றின் அடிப்படை கோட்பாடுகள் குறித்தோ எனக்கு சிறிதும் புரிதல் இல்லை. என் சிற்றறிவுக்கு எட்டிய வரை சனநாயகத்திற்கும் பொதுவுடமைக்கும் பெரிய வேறுபாடு இருப்பதாக தெரியவில்லை. என்னை பொறுத்தவரை எந்த ஒரு ஆட்சி முறையையும் நல்லது கெட்டது என்று வெளியில் இருப்பவர்கள் கணிப்பதைவிட அதை ஏற்றுக்கொண்டிருக்கும் மக்கள் அதை உறுதிப்படுத்துவதுதான் சரியாக இருக்கும் என்று கருதுகிறேன். எந்த ஆட்சிமுறை அதன் மக்களுக்கு தேவையான சுதந்திரத்தையும் நல் வாழ்க்கையையும் அளிக்கிறதோ அதுவே சிறந்த ஆட்சிமுறை என்று நான் சொல்வேன். அது பொதுவுடைமை ஆட்சியா அல்லது சனநாயக ஆட்சியா என்பதெல்லாம் அடுத்ததுதான். ஒரு வேலை நம்மூரில் இருக்கும் பொதுவுடமைவாதிகள் என்று தம்மை கூறிக்கொள்பவர்கள் பொதுவுடமை சித்தாந்தம் குறித்து நமக்கு தவறான புரிதலை ஏற்படுத்தி விட்டார்களோ என்று கூட சில நேரம் எனக்குத் தோன்றும். இதை நான் முக்கியமாக இங்கே குறிப்பிடுவதற்கான காரணம் இக்கட்டுரையை படிப்பவர்கள் என்னையும் அவர்களின் பட்டியலில் சேர்த்துவிடும் ஆபத்து இருக்கிறது என்பதால்தான்.

5 comments:

ஆ.ஞானசேகரன் said...

நன்றாக உள்ளது. உங்களின் பல கருத்துக்களை ஒப்புகொள்ள வேண்டும்

தமிழ் நாடன் said...

நன்றி ஞான சேகரன் ஐயா!

Anonymous said...

இந்தியாவில் ஊழல் ஒழியாதவரை..பணம் பண்காரர்களிடமே குவியும், ஏழை எழையாகவெயிருப்பான்..உள் கட்டமைப்பு...வேண்டாம்விடுங்கள்

baski said...

communists in india should read and answer why it is not possible in india?!!!

An said...

பொதுவுடமை சீனா அரசு என்பது ஒரு வளர்ந்துவிட்ட வல்லரசு. ஆயத பலமும் பொருளாதார வளமும் பெற்றிருக்கும் ஒரே ஆசிய தேசம் பொதுவுடமை அரசு சீனா தான்.

இந்தியா அரசு பண்காரர்களிடமே வசதிகள் செய்து கொடுத்திருக்கும்
பண்காரர்களின் அரசு

வீன் கற்பனையில் உழல்வது நம் வளர்ச்சிக்கு உதவாது

சொல்லப்போனால்
பொதுவுடமை ஆட்சிமுறை
பொதுவுடமை சித்தாந்தம் குறித்தோ
புரிதல் இல்லை
அவர்களின் ரகசியம்
பொதுவுடமை அரசு