எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday, 19 August 2009

எச்1என்1 நோய் தொற்றிலிருந்து காத்துக்கொள்ள எளிய வழிகள்!

எச்1என்1 காய்ச்சல் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள டெல்லி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக்கழக மருத்துவர் ஒருவர் அறியத்தந்துள்ள எளிய வழி முறைகள் கீழே தரப்பட்டுள்ளன. அனைவரும் பயன்படுத்திக்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறார்கள். இப்போது பரவலாக பலரும் முக கவசம் அணிவதால் மட்டும் இத்தொற்றை தவிர்க்கலாம் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது நடப்பிலுள்ள பச்சை மற்றும் நீல நிற முக கவசங்களால் இக்கிருமிகளை தடுத்துவிட முடியாது. ஏனெனில் இத்தகைய கவசங்கள் 0.3µ அளவுள்ள கிருமிகளை மட்டுமே தடுக்க முடியும். அதுவும் 95% கிருமிகள் மட்டுமே தடுக்க முடியும். ஆனால் எச்1என்1 கிருமியோ 0.1µ அளவே உள்ளது. ஆகவே முகமூடிகளை கொண்டு இக்கிருமிகளை தடுத்து நிறுத்த நினைப்பது கொசுவலையைக்கொண்டு மழையை தடுப்பது போலாகும். இதனால் முகமூடிகளுடன் சேர்த்து மற்ற வழிமுறைகளையும் கடைபிடிப்பது அவசியமாகிறது. வீட்டில் உபயோகப்படுத்தும் வெள்ளை நிற கைக்குட்டைகளையே முகமூடிகளாக உபயோகப்படுத்துவது இன்னும் சிறந்தது. எச்1என்1 காய்ச்சலுக்கு கொடுக்கப்படும் தாமிபுலு மாத்திரைகள் கூட இந்த கிருமிகளை அழிப்பதில்லை. அவை மேலும் பல்கி பெருகுவதைத்தான் தடை செய்கின்றன. இவ்வாறு அவைகள் பல்கி பெருகுவதை தடை செய்வதால் ஒரு குறிப்பிட்ட நாட்களுக்குள் (இரு வாரங்கள்) இந்த கிருமிகள் தாமாக ஆயுள் முடிந்து அழிந்துவிடுகின்றன. ஆகவே இக்கிருமிகளை அறவே தவிர்ப்பதற்கு தடுப்பூசிகள் ஒன்றே வழி. ஆனால் தடுப்பூசிகள் புழக்கத்தில் வரும்வரை உரிய வழிமுறைகளை கொண்டு நம்மை காத்துக்கொள்வது அவசியம். 1. கைகளை அடிக்கடி நல்ல சோப்பு கொண்டு கழுவுங்கள். 2. பொது இடங்களுக்கோ அல்லது வெளியில் செல்லும் போதோ அவசியமில்லாமல் கைகளை உபயோகித்து இடங்களை தொட வேண்டாம். 3. கைகளை முகத்தருகே கொண்டு செல்வதை அடியோடு தவிர்க்க வேண்டும். அப்படியே கொண்டு சென்றால் நன்கு கை கழுவிய பிறகே கொண்டு செல்ல வேண்டும். 4. ஒவ்வொரு முறை வெளியே சென்று வரும்போது கைகளை நன்கு கழுவிவிட்டு வரவும். 5. உப்பு கலந்த சுடு தண்ணீரில் குறைந்தது நாளுக்கு இருமுறை வாய் கொப்பளிக்கலாம். உப்பு தண்ணீரை நம்பாதவர்கள் லிஸ்டரின் உபயோகிக்கலாம். எச்1என்1 தொற்று ஏற்படும்போது கிருமியானது நாசி மற்றும் தொண்டைப்பகுதிகளில் குறைந்தது இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு தங்கி இருந்து பல்கிப்பெருகும். அதன் பின் தான் முழுமையான நோய் அறிகுறிகள் தோன்றும். இவ்வாறு உப்புத்தண்ணீரில் வாய்க்கொப்பளிக்கும்போது இக்கிருமிகள் பல்கிப்பெருகுவது தடுக்கப்படும். இதனால் நோய் தாக்கியவரின் உடலில் தாமிபுலு மருந்துகள் செய்யும் வேலையை ஆரோக்கியமானவரின் உடம்பில் இந்த உப்புத்தண்ணீர் செய்கிறது. ஆகவே உப்புத்தண்ணீரில் வாய்க்கொப்பளிப்பதை சாதாரணமாக எண்ணவேண்டாம். 6. இதேபோல உப்பு கலந்த சுடு தண்ணீரில் குறைந்தது நாளுக்கு ஒரு முறையாவது நாசிகளை சுத்தப்படுத்தலாம். 7. ஜல நேத்தி வகை யோகாசனம் தெரிந்தவர்கள் அவற்றை செய்து நாசிகளை சுத்தப்படுத்திக்கொள்ளலாம். அல்லது நாளுக்கு இருமுறை அழுத்தி மூக்குகளை சிந்தியபிறகு உப்பு கலந்த சுடு தண்ணீரில் நனைத்த பஞ்சினால் நாசிகளை சுத்தப்படுத்தலாம். இது கிருமி எண்ணிக்கைகளை வெகுவாக குறைக்கும். 8. வைட்டமின் சி செறிந்த பழங்களையும் உணவுகளையும் அதிக அளவில் உண்டு இயற்கையான எதிர்ப்பு சக்தியை உடலில் ஏற்படுத்தலாம். வைட்டமின் சி மாத்திரைகளை நேரடியாக எடுத்துக்கொள்பர்கள் அதில் சிங்க் கலந்திருப்பதை உறுதி செய்து கொள்ளவும் 9. மேலும் எவ்வளவு முடியுமோ அவ்வளவு சுடு தண்ணீரை குடிப்பது நல்லது. இது உப்பு தண்ணீரில் வாய் கொப்பளிப்பதற்கு ஈடான பலனைத்தரும். சுடு நீரைக்குடிக்கும்போது தொற்றுக்கிருமிகள் தொண்டையிலிருந்து வயிற்றுக்கு அடித்துகொண்டு போகப்படுகின்றன. இரைப்பையில் இக்கிருமிகள் வளரமுடியாததால் மாண்டுபோகின்றன. மருத்துவமனைகளில் சென்று அவதிப்படுவதைவிட வீட்டிலேயே இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றி நோய்த்தொற்றை தவிர்க்கலாம். மேலும் இஞ்சி, மஞ்சள் போன்றவற்றை அதிகம் உணவில் சேர்த்துக்கொள்வதாலும் சாம்பிராணி போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதாலும் இந்த நோய்த்தொற்றை தவிக்க முடியும் என்று பண்டிட் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்கள் கூறியுள்ளார்.

1 comment:

Unknown said...

மிகவும் பயனுள்ள குறிப்பு..