பெருமாள் சன்னதி கோபுரம்
இது இந்தோனேசியாவிலுள்ள பெரம்பனான் என்னும் இடத்தில் உள்ள பழம் பெரும் சிவாலயம் ஒன்றைப்பற்றிய தொடர் பதிவின் மூன்றாம் பாகம். முதல் மற்றும் இரண்டாம் பாகங்களை படிக்க இங்கே செல்லவும
பகுதி 1 ,
பகுதி 2
பெரம்பனான் கோயிலானது அது கட்டப்பட்ட போது பல சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால் தொடர்ந்து இயற்கை சீரழிவுகளால் பாதிக்கப்பட்டதால் தற்போது சில சதுர கிலோமீட்டர் அளவுக்கே எஞ்சியுள்ளது. இக்கோவிலின் சிறப்புகளாக முக்கடவுளர்களுக்கும் தனித்தனி சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளதையும் சிவன் சன்னதியில் சிவ பெருமானுக்கு மனித உருவில் சிலை அமைக்கப்பட்டுள்ளதையும் சொல்லாம்.
வெளிச்சுற்று கோவில்கள்
இந்த கோயில் மொத்தம் மூன்று பிரகாரங்கள் அல்லது அடுக்குகள் கொண்டது. முதல் பிரகாரம் மடப்பள்ளிகள், வேத பாடசாலைகள், ஞானிகள் தங்குமிடம் மற்றும் கோவில் நிர்வாகப்பகுதிகள் என பரந்து விரிந்திருந்தது. ஆனால் தற்போது முதல் பிரகாரம் முற்றிலுமாக அழிந்துவிட்டது. இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரகாரங்களே எஞ்சியுள்ளன. இரண்டாம் பிரகாரம் மொத்தம் 246 கோவில்கள் கொண்டதாக இருந்தது. இதில் பெரும்பகுதி அழிந்து ஒரு சில கோயில்கள் மற்றுமே தற்போது சீரமைக்கப்பட்டுள்ளன.
மற்றும் ஒரு கோணம்
எனக்கு பிடித்த கோணத்தில்
மூன்றாவது பிரகாரமானது கோயிலின் மையப் பகுதியாகும். இந்தப்பகுதியில்தான் நாம் இப்போது பார்க்கும் எட்டு கோவில்கள் அமைந்துள்ளன். இந்த பகுதியின் மையமாக சிவன் சன்னிதி கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. சிவன் சன்னதியின் வடது திசையில் பெருமாள் சன்னதியும் தெற்குத் திசையில் பிரம்மாவின் சன்னதியும் அமைந்துள்ளது. இச்சன்னதிகளில் இம்மூவருக்கும் அழகிய சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மூவர்களின் சன்னதிகளின் வாயில்களை நோக்கியபடி இவர்களின் வாகனங்களுக்கான கோவில்கள் அமைந்துள்ளன. சிவன் சன்னதிக்கு முன் அவரது வாகனமான நந்திக்கும், பெருமாள் சன்னதிக்கு முன் கருடனுக்கும் பிரம்மனின் சன்னதிக்கு முன் அன்னத்திற்கும் கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மூலவரான சிவன் சன்னதியை ஒட்டி வலது புறம் அகத்திய மாமுனிக்கும் இடது புறம் மகிசாசுரமர்த்தினிக்கும் பின்புறம் வினாயகருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகிசாசுரமர்த்தினிதான் முன்பாகத்தில் நாம் சொன்ன “லோரோ ஜோங்கரங்” என்று அழைக்கப்படுகிறார். நாங்கள் இக்கோவிலுக்கு சென்றபோது சிவன் சன்னதியும் பிரம்மன் சன்னதியும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டிருந்த்து ஏமாற்றத்தை தந்தது. பல சன்னதிகளை தூரத்திலிருந்துதான் பார்க்க முடிந்தது. கோவில் சிறப்பாக பராமரிக்கப்பட்டிருந்தாலும் சன்னதிகளில் வழிபாடுகள் ஏதும் நடத்தப்படுவதாக தெரியவில்லை. சன்னதியில் உள்ள சிலைகளை நோக்கும் போது அதில் எண்ணை பூச்சு இருந்ததற்கான தடயங்கள் ஏதுமில்லை.
வெளிச்சுவர் சிற்பங்கள்
மூன்றாம் பிரகாரத்தை சுற்றி உயர்ந்த மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இச்சுவற்றில் பஞ்ச பூதங்களுக்கும் ஒன்பது நட்சத்திரங்களுக்கும் சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சிவன் சன்னதியின் வெளிப்புற சுவர்களில் இராமாயண காட்சிகள் தத்ரூபமாக சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. பெருமாள் சன்னதியின் சுவர்களில் கிருட்டின அவதாரத்தின் லீலைகள் செதுக்கப்பட்டுள்ளன. சிவனுக்காக அற்பணிக்கப்பட்ட கோவிலில் சிவபெருமான் சம்பந்தப்பட்ட காட்சிகள் எதுவும் செதுக்கப்படாதது வியப்பை அளிக்கிறது, இக்கோவிலை அரசும் மக்களும் பராமரிக்கும் விதம் பாரட்டத் தக்கது. நமது நாட்டில் செய்வது போல் இங்கு யாரும் தங்கள் தெய்வீக காதலை சுவற்றில் கிறுக்கியோ செதுக்கியோ சுவற்றை நாறடிப்பதில்லை. கண்ட இடத்தில் வாய்க்கழிவுகளை துப்பி வைப்பதில்லை. நாமெல்லாம் இவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியது ஏராளம் இருக்கிறது.
லோரோ ஜோங்கரங் (மகிசாசுரமர்த்தினி) மற்றும் வினாயகர் சிலைகள்ஒருபுறம் இக்கோவிலின் பிரமாண்டமும் கலை நுனுக்கங்களும் நமக்கு வியப்பை அளிக்கிறது. மறுபுறம் மனிதனால் உருவாக்கப்பட்ட அற்புதமான இந்த கோவில் சீரழிந்துவிட்டபோதும் அதை மீண்டும் மறுசீரமைப்பு செய்து நம்முன் நிறுத்தியுள்ள மனித உழைப்பு நம்மை மெய் சிலிர்க்கவைக்கிறது. இதைப் பார்த்தாவது நமது இந்திய மாநில அரசுகளும் மக்களும் அழியும் நிலையில் உள்ள நமது பல அரிய கோவில்களையும் புராதன சின்னங்களையும் காக்க முன்வரவேண்டும். இக்கோவிலை பாரம்பரிய நினைவுச் சின்னமாக யுனஸ்கோ அமைப்பு அறிவித்துள்ளது இங்கே குறிப்படத்தக்கது.
------இத்துடன் இத்தொடர் முற்றுபெறுகிறது -------
2 comments:
next week will be jakarta
try to see this place
yasavi
அய், நான் பாலித் தீவுல இருந்திருக்கனே.... அந்த நினைவுகளை மீட்டெடுத்த உமக்கு நன்றிகள்!
Post a Comment