எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Saturday, 10 October 2009

சேவை என்பது என்ன?

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பல வார்த்தைகளை அவற்றின் உண்மையான பொருளோடுதான் நாம் பயன்படுத்துகிறோமா என்ற ஐயம் எனக்கு அடிக்கடி வருவதுண்டு. அதுவும் “சேவை” என்ற வார்த்தையை நம்முடைய வர்த்தக நிறுவனங்கள் பயன்படுத்துவதை கானும் போது பல நேரங்களில் நமக்கு எரிச்சல்தான் வரும். குறிப்பாக நமது வங்கிகளுக்கு செல்லும் போது அவர்களின் சேவையை பார்த்து எனக்கு அந்த வார்த்தையின் உண்மையான பொருள் மீதே சந்தேகம் வந்துவிடும். வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைவதில் ஆரம்பித்து வேலையை முடித்துவிட்டு வெளியே வரும்வரை நாம் சந்திக்கும் வங்கி பணியாளர்களின் உடல் மொழிகளும் வாய் மொழிகளும் நாம் அவர்களுக்கு வாடிக்கையாளரா அல்லது எதிரியா என்ற ஐயத்தை ஏற்படுத்திவிடும். அதுவும் அரசு வங்கிகள் என்றால் நிலைமை இன்னும் மோசம். வாசலில் காந்திமகானின் வாடிக்கையாளர் குறித்த பொன்மொழிகளை மட்டும் பெரியதாக பலைகையில் எழுதி வைப்பதோடு சரி. அந்த வார்த்தைகளை அங்கு உள்ள ஒரு பணியாளராவது அதன் உண்மையான பொருள்பட படித்திருப்பாரா என்பது சந்தேகமே. வங்கிக்கு செல்வது என்பது படித்தவர்களுக்கு மட்டுமே சாத்தியமாக இருக்கிறது. அவர்களும் பழக்கம் இல்லாதாவர்களாக இருந்தால் கட்டாயம் சிரமப்பட வேண்டி இருக்கும். எதற்கு எடுத்தாலும் சிடுசிடுக்கும் பணியாளர்கள் ஆள் இருந்தாலும் சந்தித்து பேசவே முடியாத மேலாளர்கள் என்று எல்லோரும் ஏதோ வேற்றுகிரகத்துவாசிகள் போல் நடந்து கொள்வார்கள். எந்த படிவம் எங்கே இருக்கிறது என்று யாருக்கும் தெரியாது அதை அவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வதே பெரிய வேலையாக இருக்கும். “விசாரணைகள்” என்று இருக்கும் கவுண்டர்களில் எப்போது பணியாட்கள் இருப்பதில்லை. படிவங்களை நிரப்பும்போது ஏதும் தவறுகள் செய்துவிட்டால் அவ்வளவுதான் அவர்கள் படும் எரிச்சலுக்கு அளவிருக்காது. தாராளமயமாக்கல் தனியார்மயம் என்று வங்கித்துறை மாறினாலும் அவைகள் வாடிக்கையாளர்களிடம் நடந்து கொள்ளும் விதத்தில் மட்டும் எந்த மாற்றமும் வரவில்லை. இவற்றையெல்லாம் பார்த்து எனக்கு வங்கிகளுக்கு போவதென்றாலே ஒவ்வாமை வந்துவிடும். நான் இந்தோனேசியா வந்த புதிதில் எனது பயன்பாட்டுக்காக இங்குள்ள வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருந்தது. மொழி தெரிந்த நம் ஊரிலேயே ஒரு வங்கி கணக்கு ஆரம்பிப்பது என்பது எத்தனை சிரமம் என்பது எனக்குத் தெரியும். மொழி தெரியாத இந்த ஊரில் எப்படி ஆரம்பிப்பது என்று அந்த வேலையை தள்ளிப்போட்டுகொண்டே வந்தேன். ஆனால் வேறு வழியின்றி இறுதியாக ஒருநாள் தேவையான ஆவணங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு பக்கத்திலிருக்கும் வங்கிக்கு சென்றேன். வாசலிலேயே பாதுகாவலர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். நான் உள்ளே செல்ல எத்தனிக்க அவர் “வணக்கம் ஐயா. நான் உங்களுக்கு உதவலாமா” என்றார் அவரது மொழியில். எனக்கு புரிந்தாலும் பதில் சொல்லத்தெரியவில்லை. ”புதிதாக கணக்கு ஆரம்பிக்க வேண்டும்” என்றேன் ஆங்கிலத்தில். நான் சொன்னது அவருக்கு புரியவில்லை. நாங்கள் இருவரும் விழிப்பதை கண்ட அங்கிருந்த ஒரு அலுவலர் உடனடியாக எங்களிடம் வந்தார். அவரும் “வணக்கம் ஐயா. நான் உங்களுக்கு உதவலாமா” என்றார். நான் சொன்னேன். அவர் என்னை அங்கிருந்த ஒரு இயந்திரத்திடம் அழைத்து சென்றார். அது நமக்கான வரிசை எண்ணை அச்சிடும் இயந்திரம். அதில் ஒரு பொத்தானை அழுத்தினார். ஒரு சீட்டில் எனக்கான வரிசை எண் அச்சடித்து வந்தது. அதை எடுத்து எண் கையில் கொடுத்தார். என்னை அழைத்து சென்று வாடிக்கையாளர் சேவை அதிகாரிகளின் முன்னுள்ள வரிசையான இருக்கையில் அமரவைத்தார். உங்கள் எண் அழைக்கப்படும்போது செல்லுங்கள் என்றார். நான் மிக்க நன்றி என்றேன். அவர் புன்னகையுடன் முன்பக்கமாக் சிறிது குனிந்து அவரது வலது கையை மார்பில் வைத்து “நன்றி” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து அகன்றார். நான் அங்கு நடப்பவைகள் அனைத்தையும் பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தேன். ஒரு வயதான அம்மாள் தளர்வான நடையுடன் வந்தார். அவரிடமும் அந்த பாதுகாவலர் “ வணக்கம் அம்மா. நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார். அவர் தனக்கு வேண்டியதை சொல்ல அவரை மெதுவாக அழைத்துக்கொண்டு படிவங்கள் இருந்த இடத்துக்கு அழைத்து சென்றார். அவருக்கு தேவையான படிவத்தை எடுத்து கொடுத்து அதை நிரப்புவதற்காக போடப்பட்ட மேசை அருகில் அவரை நிறுத்திவிட்டு மீண்டும் வாசலுக்கு சென்றுவிட்டார். அவரும் அங்கிருக்கும் பேனாவால் அதை நிரப்பி எடுத்துக்கொண்டு காசாளர் முன் இருக்கும் வரிசையில் நின்றார். ஆனால் அவரால் தொடர்ந்து நிற்க முடியாமல் சிரமப்பட்டார். இதை கவணித்த ஒரு பணியாளர் விரைவாக அவரிடம் சென்று “வணக்கம் அம்மா. நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார். அவர் சொன்னவுடன் அவரை தனியாக அழைத்துக்கொண்டு அதே வரிசையில் முதலில் இருந்தவரிடம் “ வணக்கம் ஐயா. அம்மாவால் வரிசையில் நிற்க முடியவில்லை. அவரை உங்களுக்கு முன் செல்ல அனுமதிக்க முடியுமா? தொந்தரவுக்கு மன்னிக்கவும்” என்று கேட்டார். அவரும் சம்மதிக்கவே அவரை நேரடியாக காசாளர் முன் நிறுத்திவிட்டு சென்றார். காசாளர் இருக்கையில் இருந்து எழுந்து” வணக்கம் அம்மா ! நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார் புன்னகையுடன். அம்மா படிவத்தை அவரிடம் கொடுத்தார். அதில் பல இடங்களை அந்த அம்மா நிரப்பாமல் இருந்தார்கள். அதைக்கண்ட அந்த காசாளர் அந்த விவரங்களை அம்மாவிடமே பொறுமையாக கேட்டு நிரப்பினார். அதன் பிறகு அதற்கான பணத்தை எடுத்துகொடுத்தார். வேலை முடிந்தவுடன் அந்த அம்மாள் கிளம்ப எத்தனித்த போது மீண்டும் அந்த காசாளர் “ நன்றி அம்மா. நான் வேறு உதவிகள் ஏதாவது செய்யவேண்டுமா?” என்றார். அதற்கு அந்த அம்மாள் “ நன்றியம்மா! போதும்மா” என்று சொல்லி கிளம்பினார். அவர் சிரமப்பட்டு நடந்து வருவதை பார்த்த அதே பாதுகாவலர் அவரிடம் வந்து அவரது கையை பிடித்து சென்று வெளியில் விட்டார். அதோடு நிற்கவில்லை. “நன்றியம்மா! மீண்டும் வாருங்கள்” என்று வேறு சொல்லிவிட்டு வந்து வாசலில் நின்று கொண்டார். அதற்குள் எனது வரிசை எண் அங்கிருந்த மின்னனு பலகையில் மின்னியது. நான் எழுந்து முதல் வாடிக்கையாளர் சேவை முகவரிடம் சென்றேன். நான் சென்றவுடன் அவர் எழுந்து கைகளை கூப்பியவாறு அதே “ வணக்கம் ஐயா ! நான் உங்களுக்கு உதவுலாமா?” என்றார். நானும் வணக்கம் சொல்லிவிட்டு நான் வந்த வேலைப்பற்றி ஆங்கிலத்தில் சொன்னேன். அவருக்கு புரிந்தது ஆனால் மேற்கொண்டு என்னுடன் ஆங்கிலத்தில் கதைக்க அவரால் முடியவில்லை. நான் ஊருக்கு புதியவன் என்பதை புரிந்துகொண்ட அவர் சிரித்துக்கொண்டே “ மன்னிக்கவும். சிறிது நேரம் காத்திருக்க முடியுமா?” என்றார். நான் தலையாட்டினேன். அவர் உள்ளே சென்று அவரது மேற்பார்வையாளரை அழைத்து வந்தார். அவர் வந்து முன்னவருடைய இருக்கையில் அமர்ந்துகொண்டார். அமர்ந்தவர் “ வணக்கம் ஐயா! உங்கள் புது கணக்கை ஆரம்பிக்க நான் உதவட்டுமா” என்றார் ஆங்கிலத்தில். நான் சரி என்றேன். அவர் அங்கிருந்த விண்ணப்பம் ஒன்றை எடுத்தார். அது அவர்கள் மொழியில் இருந்தது. ஒவ்வொரு விவரத்தையும் விரைவாக அதே சமயம் கொஞ்சம் கூட முக சுளிப்பு இல்லாமல் கேட்டு பூர்த்தி செய்துகொண்டார். அதில் எனக்கு தெரிய வேண்டிய விவரங்களை விளக்கினார். என்னை வேண்டிய இடங்களில் கையெழுத்திட சொன்னார். ஆவணங்களை கேட்டு பெற்றுக்கொண்டார். சடசடவென்று கண்ணியில் தட்டினார். ஒரு புது வங்கி புத்தகத்தை எடுத்தார். அங்கிருந்த அதற்கான அச்சேர்த்தியில் விவரங்களை அச்சடித்து எடுத்தார். என்னிடம் கொடுத்தார். அவ்வளவுதான் ஐந்தே நிமிடங்கள்தான் வேலை முடிந்தது. மீண்டும் எழுந்தார் கைகூப்பினார் “நன்றி ஐயா! உங்களுக்கு வேறு ஏதேனும் உதவிகள் தேவைப்படுகிறதா?” என்றார். நான்” இல்லை. நன்றி” என்று சொல்லிவிட்டு வெளியில் வந்தேன். அந்த பாதுகாவலர் என்னிடமும் “நன்றி ஐயா! மீண்டும் வாருங்கள்” என்றார். எனக்கு வியப்பு தாளவில்லை. அவர்கள் என்னை நடத்திய விதம் நான் ஏதோ ஐந்து நட்சத்திர விடுதிக்கு சென்று வந்ததைப்போல இருந்தது. இத்தனைக்கும் அது ஒன்றும் மிகப்பெரிய கிளை இல்லை. அங்கு மொத்தம் பத்து ஊழியர்களே இருப்பார்கள். இந்த மாதிரியான வரவேற்பு ஒரு வெளிநாட்டுக்காரன் என்பதால் எனக்கு மட்டும் கிடைக்கவில்லை. அங்கு வரும் ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் அவர் ஏழை பணக்காரர் படித்தவர் படிக்காதவர் என எந்த வேறுபாடும் இன்றி இதே மாதிரியான வரவேற்பும் சேவையும் கிடைக்கிறது. அதுமட்டுமல்ல விவரம் தெரியாதவர்களாக இருந்தால் அவர்களுக்குத்தான் கூடுதல் கவனம் கிடைக்கிறது. ஒவ்வொரு முறை நமக்கு வணக்கம் சொல்லும் போதும் அதில் ஊழியர்கள் காட்டும் ஈடுபாடும் கண்ணியமும் அந்த வங்கி மீது எனக்கு இருந்த மரியாதையை பன்மடங்கு அதிகரித்து. ஏதோ சம்பிரதாயத்துக்காக அவர்கள் இந்த வார்த்தைகளை சொல்வதில்லை. அவர்கள் சொல்லும் ஒவ்வொரு சொல்லுக்கான உண்மை பொருளை அவர்கள் கண்களில் காணலாம். வாடிக்கையாளர் சேவை என்ற பதத்தின் உண்மையான பொருளை நான் இங்குதான் கண்டுகொண்டேன். இவ்வகையான் நடைமுறை வங்களில் மட்டுமன்றி வண்டிகள் நிறுத்துக் கட்டணம் வசூலிக்குமிடம் முதற்க் கொண்டு மருத்துவமனைகள் வரை எல்லா பொது இடங்களிலும் கடைபிடிக்கப் படுகிறது. எங்கு சென்றாலும் புன்னகையோடும் மரியாதையோடும் நடந்து கொள்கிறார்கள். காவல் துறையினர் கூட மிகவும் கண்ணியமாக நடந்து கொள்கிறார்கள். பொது இடங்களில் ஒரு தடவை கூட காவலர்கள் லத்தியை சுழற்றியோ அநாகரீக வார்த்தைகளை பிரயோகித்தோ நான் பார்த்ததே இல்லை. நாகரீகத்தின் தொட்டில் என்று பெருமையாக சொல்லிக்க்கொள்கின்ற நமது நாட்டில் வாடிக்கையாளர்களை நாகரீகமாக நடத்தும் நிலை வர இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் ஆகுமோ?!!! இந்த நாட்டு மக்களிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் இன்னும் ஏராளமாக இருக்கின்றன. அவற்றைப்பற்றி இன்னொரு இடுகையில் பார்ப்போம். ------------------------------------------------------------------------------------ உங்களுக்கு இந்தக் கட்டுரை பிடித்திருந்தால் உங்கள் வாக்குகளை கீழே உள்ள தமிழீழ் வாக்கு சேகரிப்பானில் பதிவு செய்யவும். இது மற்றவர்களுக்கும் இக்கட்டுரையை கொண்டு செல்ல உதவும். .

9 comments:

vasu balaji said...

அருமையான இடுகை. ஒரு சின்னக் கூடுதல் செயல்பாடு எத்தனை மரியாதையையும் மகிழ்ச்சியையும் தருகிறது என்பதைப் புரிந்துக் கொண்டால் மட்டுமே இது சாத்தியம்.

தமிழ் நாடன் said...

நன்றி பாலா அண்ணே!

mvalarpirai said...

அப்படி இருந்தா நல்லாதான் இருக்கும் !
ஆனால் நம்மூரு மக்கள் தொகை தெரியுமா உங்களுக்கு ! காலம் மாறும் கூடிய விரைவில் நம்மூரிலும் அப்படி வரப்போவது காலத்தின் கட்டாயம் !

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி வளர்பிறை!

1. இந்தோனேசியா உலகின் மூன்றாவது வளரும் மக்கள் தொகை கொண்ட நாடு!
2. உலகிலேயே அதிக இசுலாம் மக்கள் வாழும் முதல் நாடு!
3.இந்தியாவை விட பல விடயங்களிலும் பிந்தங்கிய நாடு.
4. வளரும் ஏழை நாடுகளில் ஒன்று.

இங்கு பிரச்சினை மக்கள்தொகை அல்ல. கலாச்சாரம் மற்றும் மக்களின் மன விசாலம்தான் பிரச்சினை என்பது என்னுடைய தாழ்மையான கருத்து.

இன்றைய கவிதை said...

அய்யா!
கலக்கிட்டீங்க!
நெஞ்சைத் தொட்டதால்
வந்த பதிவென்றாலும்
என் நெஞ்சையும்
தொட்டுவிட்டது!

யாழினி said...

ஆமாம் உண்மையிலேயே சிந்திக்க வைக்கிறது இக் கட்டுரை!

தமிழ் நாடன் said...

மிக்க நன்றி இன்றைய கவிதை!
மிக்க நன்றி யாழினி!

ARIVUMANI, LISBON said...

amazing!!

தமிழ் நாடன் said...

உங்கள் வருகைக்கு நன்றி அறிவுமணி!