Monday, 19 October 2009
காடோ காடோ!
நான் பார்த்து கேட்டு படித்து அறிந்து கொண்ட உள்ளூர் (இந்தோனேசிய) செய்திகளை ஒரு கலவையாக “காடோ காடோ” என்ற தலைப்பில் வாராவாரம் தரலாம் என்று இருக்கிறேன். காடோ காடோ என்பது இந்தோனேசியாவில் பிரபலமான் சைவ உணவு. கீரை, பல வகை காய்கறிகள், முளைகட்டிய பச்சை பயறு, தெம்பே ( சோயா), டோபு இவற்றையெல்லாம் மிதமாக வேகவைத்து நிலக்கடலை சாந்து சேர்த்து கலவையாக செய்யப்படும் ஒருவகை பக்க உணவு இது. ஏகப்பட்ட வேலைகளை ஒன்றாக எடுத்து போட்டுக்கொண்டு பேய் சொதப்பு சொதப்புவர்களிடம் ”என்ன காடோ காடோ பண்ணீட்டீங்களா?” என்று கேலியாக கேட்பது இங்குள்ளவர்களின் வழக்கம் (இந்த இடுகையை படித்துவிட்டு தயவு செய்து என்னை இப்படி கேட்டுவிடாதீர்கள்).
இனி இந்த வார காடோ காடோ!
000000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசிய அரசு இந்த வருடம் முதல் அக்டோபர் 2ம் தேதியை “பத்திக்” நாளாக கொண்டாட முடிவு செய்திருக்கிறது. இதில் என்ன விசேடம் என்கிறீர்களா? இந்த அறிவிப்பை விடவும் இந்த அறிவிப்புக்குப் பின்னால இருக்கும் நுண்ணரசியல் சற்று சுவரசியமானது. இந்தோனேசியாவுக்கும் மலேசியாவுக்கும் எல்லை பிரச்ச்னையில் ஆரம்பித்த குமிடிப்பிடி சண்டை இப்போது மற்ற தளங்களிலும் எதிரொலிக்க ஆரம்பித்திருக்கிறது. அண்மைக் காலமாக இந்தோனேசியாவின் பாரம்பரிய கலைவடிவங்களை ஒன்றன்பின் ஒன்றாக மலேசியா சொந்தம் கொண்டாடி வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தோனேசியாவில் மிகப்பிரபலமான “நாசி கோரங்” (பிரைடு ரைசு) என்னும் உணவுப்பொருளுக்கான காப்புரிமையை மலேசியா பெற்றுவிட்டது. இது இந்தோனேசிய மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில் ”பத்திக்” தொழிற்நுட்பத்தையும் மலேசியா சொந்தம் கொண்டாட இரு நாட்டுக்கும் இடையேயான உரசல் உச்சத்தை அடைந்தது. பத்திக்” என்பது மெழுகையும் சாயத்தையும் கொண்டு கைகளால் துணிகளில் அழகிய அச்சு வார்ப்புகளை உருவாக்கும் ஒரு கலை சார்ந்த தொழிற்நுட்பம். இந்தியாவில் கூட இந்த தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி அழகிய வண்ணத்துணிகளை சென்னையிலும் ஈரோட்டிலும் தயாரிக்கிறார்கள். மலேசியா மற்றும் சிங்கப்பூர் விமான நிறுவனப் பணிப்பெண்கள் கூட இந்த வகை துணிகளால் செய்த சீருடைகளை அணிந்திருப்பதை காணலாம். அந்த அளவுக்கு இந்த பத்திக் வடிவமைப்புகள் இங்கு மிகவும் பிரசித்தம். நல்ல வேளையாக அண்மையில் அபுதாபியில் நடைபெற்ற மாநாட்டில் இக்கலையை இந்தோனேசியாவின் பாராம்பரிய சொத்தாக யுனசுகோ அறிவித்துள்ளது. இது இந்தோனேசியாவின் கலை ஆர்வலர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதையொட்டி பத்திக் எங்களுடையது என்று உலகக்கு பறைசாற்றும் விதமாகவும் “பத்திக்” துணிகளை பிரபல படுத்தும் விதமாகவும் இந்தோனேசிய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அன்று ஒருநாள் இந்தோனேசியர்கள் அனைவரும் பத்திக்கினால் ஆன உடைகளையே அணிய வேண்டும் என்று இந்நாட்டின் குடியரசு தலைவரே விசெடமாக கேட்டுக்கொண்டிருந்ததால் மக்களும் தங்களுடைய பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருந்தனர். அன்று எங்கு நோக்கினும் பத்திக் மயமாக இருந்தது.
உள்ளதை காப்பாத்திக்க என்னவெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது பாருங்க!
00000000000000000000000000000000000000000000000000000000
இந்தோனேசியர்கள் பொதுவாகவே அன்பானவர்கள். அவர்கள் மீது எனக்கு எப்போதுமே மரியாதை உண்டு (வயத்துக்கு கஞ்சி ஊத்தரவங்க மேல மரியாதை இல்லாமல் இருந்தா எப்படி??!!). ஆனால் போன வாரம் பிபிசியில் பார்த்த செய்தி ஒன்று என்னை மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அண்மையில் இங்கு மிகப்பெரிய நிலநடுக்கம் ஒன்று ஏற்ப்பட்டது உங்களுக்கு நினைவிருக்கலாம். இந்த நிலநடுக்கத்தால் இங்குள்ள படாங் என்ற பகுதி மிகுந்த சேதத்துக்கு உள்ளானது. பல ஆயிரம் பேர் கட்டட இடிபாடுகளிலும் மண் சரிவிலும் உயிருடன் சிக்கிக்கொண்டார்கள். இப்பகுதி தலைநகர் சகார்த்தாவிலிருந்து வெகு தொலைவில் உள்ளதால் வெளியில் இருந்து மீட்புக்குழுவினர் இப்பகுதியை அடைவதற்கு சற்று தாமதம் ஆனது. அதுவரையில் அங்கு உள்ளூரில் உள்ளவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்படி ஈடுபட்டவர்கள் அங்கு பாதிக்கப்பட்ட முசுலீம் அல்லாத சீன வம்சாவளியினருக்கு உதவ மறுத்துவிட்டார்களாம். அதையும் மீறி உதவ வேண்டுமெனில் முதலில் பணம் தர வேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்கள். இப்பகுதியில் முசுலீம் அல்லாத சீன வம்சாவளியை சேர்ந்தவர்களும் அதிக அளவில் வசிக்கிறார்கள். சிறுபான்மையினராக இருந்தாலும் பொருளாதார ரீதியாக மிகவும் முன்னேறிய நிலையில் பல பெரிய வணிக நிறுவனங்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். இதனால் பொருளாதார நிலையில் பின் தங்கியுள்ள பெரும்பான்மை மக்களுக்கு இவர்கள் மேல் ஒருவித காழ்ப்புணர்ச்சி நிலைவி உள்ளது. இது இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் வெளிப்பட்டுள்ளது மிகவும் கொடுமையானது. மனித இனம் எதை நோக்கி போய்க்கொண்டிருக்கிறதோ தெரியவில்லை!
0000000000000000000000000000000000000000000000000
நாளை அக்டோபர் 20ம் தேதி இந்தோனேசியாவின் குடியரசு தலைவராக மீண்டும் பதவி ஏற்கிறார் திரு சுசிலோ பம்பாங் யுதயானோ சுருக்கமாக எஸ்.பி.ஒய். இவர் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் 60% மேல் வாக்குகள் பெற்று இரண்டாம் முறையாக வெற்றி பெற்றார். இந்தோனேசியாவில் இரட்டை தேர்தல் முறை பின்பற்றப்படுகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தனியாகவும், குடியரசு தலைவர் தனியாகவும் நேரடியாக மக்களால் தெர்ந்தெடுக்கப்படுகின்றனர். பாராளுமன்ற தேர்தலில் எஸ்.பி.ஒய்யின் குடியரசுக்கட்சி 13% இடங்களிலேயே வெற்றி பெற்றது. அதனால் எஸ்.பி.ஒய் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவாரா என்ற கேள்வி அரசியல் அரங்கில் தீவிரமாக விவாதிக்கப்பட்டது. ஆனால் மக்கள் அவர்களின் மிகத்தெளிவாக முடிவை தேர்தலில் வெளிப்படுத்தியிருக்கிறார்கள். பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும்போது தமது பகுதிகளில் சிறப்பான பணி புரிந்தவர்கள் யார் என்பதை பார்த்தும் அதே வேளை குடியரசுத்தலைவர் என்று வரும்போது யார் அதற்கு பொருத்தமானவர் என்பதைப்பார்த்தும் வாக்களித்துள்ளது பாராட்டத்தக்கது. முன்னாள் ரானுவ தளபதியான எஸ்.பி.ஒய் சற்று மென்மையான அனுகுமுறை கொண்டவர். அதே சமயம் நாட்டு வளர்ச்சிக்காக பல உறுதியான நடவடிக்கைகளையும் அவர் எடுத்துள்ளார். ஊழலில் கொடிகட்டிப்பறந்த இந்தோனேசியாவில் அதற்கு முதலில் கடிவாளம் போட்டவர் எஸ்.பி.ஒய் ஆவார். ஊழல் முழுமையாக அகற்றப்படாவிட்டாலும் அதற்காக முதல் அடியை எடுத்துவைத்ததற்கு அவரை பாராட்டலாம். அண்மையில் இவர் கொண்டுவந்த பாலுணர்வு காட்சிகளை வெளியிடும் ஊடகங்களுக் எதிரான சட்டம் (ஆண்டி போர்னோ) பரவலான சர்ச்சைகளை ஏற்படுத்தியது, ஆனால் இறுதிவரை உறுதியாக இருந்து அந்த சட்டத்தை நடைமுறைக்கு கொண்டுவந்தார். அதேபோல தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதிலும் மிக உறுதியான நடவடிக்கைகளை இவர் எடுத்துள்ளார். நீண்ட நாளாக தேடப்பட்டு வந்த பயங்கர தீவிரவாதி அண்மையில் சுட்டுக்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. இவன்தான் பாலியிலும் சகார்த்தாவிலும் நடைபெற்ற குண்டு வெடிப்புகளின் சூத்திரதாரி. இன்றைய அரசியல் உலகில் தென்கிழக்காசியாவில் அதிகம் கவணிக்கப்படும் தலைவராக எஸ்.பி.ஒய் விளங்குகிறார். அண்மையில் நடைபெற்ற சி20 உச்சி மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக இவர் கலந்து கொண்டார். இதே மாநாட்டில் இன்னொரு சிறப்பு அழைப்பாளாராக கலந்து கொண்டவர் மன்மோகன்சிங் என்பது குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது முறை அறியணை ஏறும் எஸ்.பி.ஒய்யை வாழ்த்துவோம்!
.
Subscribe to:
Post Comments (Atom)
16 comments:
காடோ காடோ சுவையோ சுவை. பகிர்ந்தமைக்கு நன்றி
நன்றி பாலாண்ணே!
அருமையான துவக்கம்!
தினத்தாளை வாசிப்பது போன்ற சுகம்!
மேன்மேலும் சுவை பெருக வாழ்த்துக்கள்!
நன்றி இன்றைய கவிதை!
" என்ன இப்படி காடோ காடோ பண்ணீட்டீங்க?”
just for fun
nice collection.
Try to meet u in Jakarta. Will be there next week.
:))
நன்றி யாசவி!
கண்டிப்பா வாங்க சந்திக்கலாம். மின்னஞ்சம் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். கைப்பேசி எண் அனுப்பறேன்.
வரவேற்க பட வேண்டிய ஒரு பதிவு...தொடருங்கள்
மிக்க நன்றி அக்னிப்பார்வை! எப்படி இருக்கீங்க?
ரொம்ப நாளா கடைப்பக்கம் கானோம்?!!
அருமையான பகிர்வு.....
நன்றி நண்பர் புலிகேசி!
தமிழ்நாடானுக்கு வாழ்த்துக்கள்........
தொடருங்கள் நண்பரே..............
முதன் முதலா வந்திருக்கேன் தமிழ்.அழகாய் இருக்கு உங்க வீடு.
காடா கோடா எங்கேயோ கேள்விப்பட்டதுமாதிரி இருக்கு.
வாங்க ஊடகன்! எப்படி இருக்கீங்க? ரொம்ப நாளா கானோம்.
வாங்க கவிஞர் ஹேமா! வருகைக்கு நன்றி!
காடோ , காடோ ரொம்பவே பிரமாதம்...
நேத்து சாப்பிட்டதை விட.
கலக்குங்க.....
ரொம்ப நன்றிங்க பாலா!
Post a Comment