எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Thursday, 1 April 2010

பூமி நேரம், 60 வருட சனநாயகம் மற்றும் தமிழ்ப்பதிவர் குழுமம்!


சனிக்கிழமை 7 மணிக்கே பிபி-யில் குறுஞ்செய்தி அனுப்பிவிட்டாள் அலுவலகத்தோழி 8-30க்கு விளக்கை அணைக்கச்சொல்லி. நாமல்லாம் யாரு! வழக்கம் போல 10 மணிக்குத்தான் பிபி-யையே பார்த்தேன். மறுநாள் அலுவலகத்தில் லிப்டிலேயே பார்த்துவிட்டாள். ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க? நீங்க இந்தியாவிலேயே இப்படித்தானா? என்றாள். இந்தியாவில் எங்களுக்கு இந்த சிரமம் எல்லாம் இல்லை. எல்லாத்தையும் அரசே பார்த்துக்கும். ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் அவங்களே மின்சாரத்தை நிறுத்திடுவாங்க என்றேன் நான். நான் சொன்னது அவளுக்கு புரிந்தமாதிரிதான் இருந்தது. அவளோட சின்ன கண்களை அவ்வளவு அகலமா விரித்தாள். அதற்குள் என் தளம் வந்துவிட்டது. அவளிடம் இருந்து கழற்றிக்கொண்டேன்.

                        <<<<->>>>
அந்த துணி தட்டிகளை தினமும் போகும் போதும் வரும் போதும் பார்ப்பேன். நான் போகும் வழி முழுக்க அவை இருக்கும். சில நாட்களுக்கு ஒரு முறை அவை மாற்றப்படுவதும் உண்டு. அவற்றில் இருக்கும் கேலிச்சித்திரங்கள் இந்த நாட்டின் குடியரசு தலைவரையும் துணை குடியரசு தலைவரையும் குறிப்பவை என்பது மட்டும் புரியும். ஆனால் வாசகங்கள் சரியாகப் புரியவில்லை. ஒருநாள் உள்ளூர் நண்பருடன் செல்லும்போது அவற்றைப்பற்றி அவரிடம் கேட்டேன். அண்மையில் பரபரப்பாக பேசப்பட்ட செஞ்சுரி வங்கி பெயில் அவுட் பிரச்சினையில் அவர்கள் இருவரையும் தொடர்புபடுத்தி இந்த கேலிச்சித்திரங்களை மாணவர் அமைப்புகள் வைத்துள்ளன. அதில் உள்ள வாசகங்கள் அவர்களை கடுமையாக விமர்சித்து எழுதப்பட்டுள்ளன என்றார். நான் போகும் அதே வழியில்தான் தினமும் குடியரசு தலைவர் அலுவலகம் போவாராம். அதனால்தான் அந்த பாதையில் அவற்றை வைத்திருக்கிறார்கள். காவல்துறை எப்படி இவற்றையெல்லாம் இத்தனை நாள் விட்டார்கள்? எங்கள் ஊராக இருந்தால் இந்நேரம் பிரித்து மேய்ந்திருப்பார்கள் என்றேன். அப்படியா! ஏன்? என்றார் அப்பாவியாக. அறுபது ஆண்டுகளாக நாங்கள் கட்டிக்காக்கும் சனநாயகம் அப்படி என்றேன். வேறென்ன சொல்ல?

<<<<-->>>>
அண்மையில் தமிழ் வலைப்பதிவர்கள் குழுமம் குறித்த சர்ச்சைகளை பற்றி படிக்கும் போது வருத்தமாக இருந்தது. இதுக்குப்போய் இவ்வளவு ஆர்ப்பாட்டமா என்று தோன்றியது. வலைப்பூக்கள் போன்ற கட்டற்ற வெளிகளில் இயங்குபவர்கள் அனைவரையும் கருத்தொற்றுமை என்ற ஒரே நேர்க்கோட்டில் கொண்டுவருவது அவ்வளவு எளிதில்லை. அது தேவையும் இல்லை. இந்த முயற்சியை முன்னெடுப்பவர்கள் இந்த அமைப்பின் நோக்கங்களையும் கொள்கைகளையும் அறிவித்து விட்டு வலை பரப்பில் ஒரு குழுமத்தை ஆரம்பித்து விட்டு மற்றவர்களுக்கு தெரிவித்துவிட்டால் போதும். விருப்பப்பட்டவர்கள் இணைந்த பிறகு, அவர்களுக்கு இடையில் செயல்பாடுகள் மற்றும் விதிகள் குறித்த கருத்தொற்றுமையை ஏற்ப்படுத்தி அதை ஒரு சட்டப்பூர்வமான அமைப்பாக மாற்றி இருக்கலாம். நோக்கமும் செயல்பாடும் சரியாக இருந்தால் அனைவரும் தாமாக முன்வந்து இணைவார்கள். பங்களிப்பை செய்வார்கள். அதன் பின் அவர்களின் ஆலோசனைகளுக்கு ஏற்ப அமைப்பில் தேவையான மாற்றங்களை செய்து கொள்ளலாமே! விருப்பம் இல்லாதவர்களைப் பற்றி செயல் வீரர்கள் ஏன் கவலைப்பட வேண்டும். ஏன் தேவையில்லாத மன உளைச்சல் கொள்ளவேண்டும்? என்பது அடியேனின் கருத்து. மீண்டும் புத்துணர்ச்சியோடு செயல்வீரர்கள் பணியாற்ற வேண்டும் என்பதே எனது அவா!
ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று
போற்றினும் பொத்துப் படும்.

4 comments:

வானம்பாடிகள் said...

வாங்க ரொம்ப நாளாக் காணலையே.:). லேட்டஸ்டாத்தான் இருக்கீங்க. சங்கம் குறித்த நல்ல கருத்து தமிழ்நாடன்.

தமிழ் நாடன் said...

வணக்கம் பாலாண்ணே! வேலைப்பளு அதிகமாயிடுச்சி. அதனால எல்லாத்தையும் வாசிக்கறதோட சரி.பதிவு எழுத நேரமில்லை.அதோட நாமெல்லாம் எழுதலன்னு யார் அழுதா என்ற எண்ணமும் கூட!

mother's grace said...

எழுதுவது நம் மன திருப்திகாகத்தான்,யார் அழுதான்னு சொல்லாதீங்க,விவேகானந்தர் படம் போட்டு இருக்க்கீங்க!!நீங்க இப்படி பேசலாமா,இந்தோனேஷியா பத்தி எழுதுங்க,ஜமாயுங்க!!

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in