எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday, 16 June 2010

ராகுல் இளைஞர்களின் விடிவெள்ளியா!


அண்மைக்காலமாக ராகுல் காந்தி பற்றியும் இந்திய இளைஞர்களுக்கான அவரது தீர்க்கதரிசன பார்வைகள் குறித்தும் டிவிட்டர் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் அதிகமாக பார்க்க முடிகிறது. ராகுலை முன்னிலைப் படுத்துவதற்கான வழக்கமான அரசியல் பிரச்சார உத்திகளில் இது ஒன்று என்றாலும், அவை பெரும்பாலும் நடுத்தர வர்க்க இளைஞர்களையே குறிவைத்து நடத்தப்படுவது நமக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறது. பல படித்த இளைஞர்களே கூட இவர்களின் மகுடிக்கு மயங்குவதை இந்த இளைஞர்கள் பரிமாறிக்கொள்ளும் கருத்துரைகளை படிக்கும் போது புரிந்துகொள்ள முடிகிறது.

அதேபோல அண்மையில் நடந்துமுடிந்த இளைஞர் காங்கிரசு தேர்தல்கள் பற்றிய செய்திகளும் பத்திரிக்கைகளில் பெருமளவு வெளிவந்தன. தமிழகத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலகளுக்குக் கூட பத்திரிக்கைகள் இந்த அளவு முக்கியத்துவம் கொடுத்ததாக தெரியவில்லை. இத்தேர்தலைகளை ராகுல்காந்தியே நேரில் கண்கானிப்பதாகவும் இந்த தேர்தல்களின் முடிவுகள் கட்சியில் பல மாறுதல்களை ஏற்படுத்தும் என்றும் காங்கிரசுக்காரர்கள் பேசிக்கொள்கிறார்கள். இந்த காரணத்தைச் சொல்லித்தான் பல இளைஞர்களை கட்சியில் சேர்த்ததாகவும் தெரிகிறது. (ஆனால் இந்த தேர்தல்களில் கூட பணநாயகம் கோலோச்சியதும் சனநாயகம் பல்லிளித்ததும் வேறு கதை).

ராகுலும் கல்லூரி கல்லூரியாக ஏறி இளைஞர்களை அரசியலுக்கு வரச்சொல்லி அழைப்பு விடுக்கிறார். (எந்த இந்திய அரசியலைப்பு சட்டம் ஒரு கட்சியின் பொது செயலாளர் கல்லூரிக்குச் சென்று ஆள்பிடிப்பதை அனுமதிக்கிறது என்று தெரியவில்லை. இந்தியாவில்தான் இதெல்லாம் சாத்தியம்). அது மட்டுமின்றி மேல்தட்டு அரசியல்வாதிகளின் அப்பட்டமான சந்தர்ப்பவாத கூத்துகளான தலித்துகள் வீட்டில் சப்பாத்தி சாப்பிடுவது தொழிலாளர்களுடன் சேர்ந்து கல் உடைப்பது மண் அள்ளுவது ரயிலில் போவது போன்ற கிளிஷேக்குகளையும் ராகுல் விட்டுவைப்பதில்லை.  

இது போன்ற நடவடிக்கைகள் காரணமாக சாமானிய மக்களிடையே அவர் குறித்த  ஒரு மாயையும் அதன் பயனால் ஒரு ஈர்ப்பும் ஏற்ப்பட்டுள்ளதை மறுக்கமுடியவில்லை. ராகுலும் அவர் ஏற்படுத்தும் மாயையும் காங்கிரசு கட்சிக்கு மிகவும் தேவைப்படுகிறது. இப்படி யாரையாவது காட்டி தனது பலவீனங்களை மறைத்துக்கொள்வதுதான் காலங்காலமாக காங்கிரசுக்கு வழக்கம். ஆனால் அவரை நம்பி அரசியலுக்கு போகும் இளைஞர்களுக்கும் அவரை நம்பி ஓட்டு போடுபவர்களுக்கும் அவர் அனுகூலமாக இருப்பாரா என்பது பெரிய கேள்வி குறிதான்.

அடுத்த உலகப்போரே நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையினால்தான் வரக்கூடும் என்று பல அறிவிலாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் அப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரே திட்டமான நதி நீர் இணைப்புத்திட்டத்தை உதவாக்கரை திட்டம் என்கிறார் ராகுல். அவரது இந்த கருத்துக்கான வலுவான ஆதாரத்தையோ அல்லது மாற்று திட்டத்தையோ கூட அவர் முன்வைக்கவில்லை. இன்று இந்தியாவில் நிலவும் எந்த முக்கிய பிரச்சினை குறித்தும் அவர் எந்த தெளிவான கருத்தும் தெரிவிப்பதில்லை. இந்த நிலையில் அவர்தான் இந்தியாவின் எதிர்காலம் என்று காங்கிரசுக்காரர்கள் சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. நடுத்தர வர்க்கத்து இளைஞர்கள் தயங்காமல் அரசியலுக்கு வர வேண்டும் என்கிறார். ஆனால் நடப்பு மக்களவையில் அடியெடுத்து வைத்துள்ள காங்கிரசு இளம் எம்பிக்களின் பட்டியலைப் பார்த்தால் காங்கிரசுக்கட்சி நடுத்தரவர்க்கத்தினர் முன்னேற வாய்ப்புள்ள கட்சி என்று தோன்றவில்லை. பட்டியலை நீங்களே பாருங்கள்.

ஜோதிர் ஆதித்ய சிந்தியா (காலஞ்சென்ற மாதராவ் சிந்தியாவின் மகன்)
சச்சின் பைலட் (காலஞ்சென்ற ராஜேஷ் பைலட்டின் மகன்)
மிலிந்த் தியோரா (முரளி தியோராவின் மகன்)
சந்தீப் தீக்சிட் (ஷீலா தீட்சித்தின் மகன்)
அசோக் தன்வார் (ராகுல்காந்தியின் நண்பர், டாக்டர் சங்கர்தயாள் சர்மாவின் பேத்தியின் கணவர்)
பன்வர் ஜித்தேந்திரசிங் (மார்வார் ராஜவம்ச வாரிசு)
தீப்பிந்தர் ஹோடா (முதலமைச்சர் ஹுப்பிந்தர்சிங் ஹூடாவின் மகன்)
நவீன் ஜிண்டால் ( ஜிண்டால் குழுமத்தலைவரின் மகன்)
சுருதி செளத்திரி (காலஞ்சென்ற பன்சிலாலின் பேத்தி)
மசூம் நூர் ( சூஜப்பூர் எம்.எல்.ஏ மகள்)
ஹமிதுல்லா சயீது (காலஞ்சென்ற பி எம் சயீதின் மகன்)
மாணிக் தாக்கூர் (ராகுலின் நண்பர்)

இவர்கள் யாரும் காங்கிரசுக்காக கொடி பிடித்தவர்களோ அல்லது சிறை சென்றவர்களோ அல்ல. இவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்கள் எல்லோரும் வெளிநாட்டில் படித்தவர்கள். சிலர் எம்பி சீட்டு கிடைத்த பிறகு அவசரமாக நாடு திரும்பியர்கள். இப்படிப் பட்டவர்களை கட்சியில் சேர்ப்பதற்கு ராகுல் கல்லூரி கல்லூரியாக ஏறி இறங்கவேண்டியதில்லை. நட்சத்திர விடுதிகளில் இரவு விருந்து வைத்தால் போதும். இன்னும் அதிகமாக் கூட்டம் சேர்க்கலாம். உண்மை நிலைமை இப்படியிருக்க நடுத்தரவர்க்க இளைஞர்களை இவர் அரசியலுக்கு கூவி கூவி அழைப்பது எதற்கு? இவரைப்போன்ற எசமானர்களுக்கு பல்லக்குத் தூக்கவும் வெற்றுக்கோழம் போடவும் இவர்கள் போடும் எச்சில் கறியை தூக்கிக்கொண்டு ஓடவும்தானா? நாட்டில் பல துடிப்பான லட்சியப் பிடிப்புள்ள சமூக சேவை செய்யும் பல இளைஞர்கள் இன்னும் இருக்கிறார்கள். அவர்களை முன்னிலைப்படுத்தாமல் அவர்களுக்கு கட்சியிலோ ஆட்சியிலோ வாய்ப்ப்போ தராமல் மாணவர்களுக்கு வெற்று அரசியல் அழைப்பு விடுப்பது எதற்கு?

இப்படி பகல் வேஷம் போடுபவர்களையும் அவர்களை முன்னிலைப்படுத்தும் வெற்றுக் கோஷங்களையும் கண்டு இளைஞர்கள் தங்கள் எதிர்காலத்தை நாசமாக்கிக்கொள்ளாமல் இருப்பது நல்லது !

8 comments:

வானம்பாடிகள் said...

பயம்மாத்தான் இருக்கு.:(

கக்கு - மாணிக்கம் said...

பதிவினை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து (இன்னும் சற்று காரத்துடன் )அந்த ராகுல் தம்பிக்கு அனுப்பி வையுங்கள்.
புண்ணியமாய் போகும்.

raja said...

இவன் ஒரு பெரிய டூபாக்கூர் ஸார்..

gumi said...

Supper.. wonderful..please translate in english and list it in digg.com , redditt.com please

தமிழ் நாடன் said...

வாங்க பாலாண்ணே!

தமிழ் நாடன் said...

வாங்க மாணிக்கம் ஐயா! அந்த தம்பிக்கு எல்லாம் தெரியும். நம்ம மக்களுக்குத்தான் அவர் பத்தி தெரியனும். செம்மறியாட்டு கூட்டம் மாதிரி கவர்ச்சிக்கு பின்னாடியே ஓடிகிட்டு இருக்காங்க! உட்கார்ந்து சிந்திக்க மாட்டேங்கிறாங்க!

தமிழ் நாடன் said...

வாங்க ராஜா! ஆமாங்க படிச்சவங்களே பக்கம் பக்கமா அவரப்பத்தி எழுதுறத பார்த்தா எரிச்சல்தான் வருது!

பரிதி நிலவன் said...

//அடுத்த உலகப்போரே நீர் ஆதாரங்களின் பற்றாக்குறையினால்தான் வரக்கூடும் என்று பல அறிவிலாளர்கள் புலம்பிக்கொண்டிருக்கும்போது, இந்தியாவில் அப்பிரச்சினையை தீர்க்கக்கூடிய ஒரே திட்டமான நதி நீர் இணைப்புத்திட்டத்தை உதவாக்கரை திட்டம் என்கிறார் ராகுல். அவரது இந்த கருத்துக்கான வலுவான ஆதாரத்தையோ அல்லது மாற்று திட்டத்தையோ கூட அவர் முன்வைக்கவில்லை. இன்று இந்தியாவில் நிலவும் எந்த முக்கிய பிரச்சினை குறித்தும் அவர் எந்த தெளிவான கருத்தும் தெரிவிப்பதில்லை. இந்த நிலையில் அவர்தான் இந்தியாவின் எதிர்காலம் என்று காங்கிரசுக்காரர்கள் சொல்லுவதை எப்படி எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை.//

நம் தலையெழுத்து இவனெல்லாம் அடுத்த பிரதமர்.. வேற வழி