எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Tuesday 20 July 2010

தமிழனும் யூதனும்!


”எப்பேர்பட்ட வனத்துல போய் மேஞ்சாலும், இனத்துல போயிதான் அடையனும்” இந்த வாசகத்தை நீங்கள் படித்திருக்கலாம். இது அண்ணன் பழமைபேசி அவர்களின் இடுகையில் இருக்கும் வாசகம். இதை விளக்க அவர் ஒரு கதையையும் சொல்லியிருப்பார். இந்த வாசகங்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையை உணர்வுப்பூர்வமாக உணர வேண்டுமானால் நீங்கள் சிறிது நாட்களாவது தமிழகத்தை விட்டு வெளியில் வந்து வாழவேண்டும்.

இந்த அண்ட சராசரத்தில் வாழும் ஒரு உயிர் அமீபாவிலிருந்து ஆறறிவு மனிதன் வரை வாழ்க்கை போராட்டத்தில் பங்கேற்பதற்கு அடிப்படையான காரணம் ஒன்று உண்டு. அது தன்னை இந்த உலகத்தில் நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற வேட்கை. அதாவது தனது அடையாளத்தை காத்துக்கொள்வது. சுயத்தை இழக்காமல் இருப்பது. ஆங்கிலத்தில் ”அயிடண்டிட்டி” என்று சொல்வார்கள். ஆனால் மனித இனத்தில் மட்டும் இன்று இந்த அடிப்படை விடயம் தகர்ந்து கொண்டு வருகிறது. தாராளமயமாக்கல், உலகச்சந்தை என்றெல்லாம் வந்த பிறகு ஒரு தனிப்பட்ட மொழி, இனம், நாடு சார்ந்த ஒரு சமுதாயம் சாத்தியம்தானா? என்ற கேள்வி இன்று நம் எல்லோருடைய மனத்திலும் இருக்கிறது. இது ஒரு ஆபத்தான நிலை என்பதை நாம் உணரவில்லை. நீங்கள் ஆழ்ந்து பார்த்தால் இந்த தாரளமயமாக்கல் என்பது கீழை நாட்டுமக்களின் சுயத்தை அழித்து மேலை நாட்டு பழக்கவழக்கங்களை அவர்களிடம் வளர்த்து அவர்களை தங்களின் பொருளாதார அடிமைகளாக மாற்றுவதுதானே தவிர கீழை கலாச்சாரத்தை மேற்குலத்துக்கு கொண்டு செல்வதல்ல. நீங்கள்தான் “சட்டி” அணியவேண்டுமே தவிர அவன் கோவனம் அணியப்போவதில்லை. அது தெரியாமல் நாமும் தாரளமயமாக்கலால் சர்வதேச சமத்துவ சமுதாயம் அமையப்பொகிறது என்று மயக்கம் கொண்டு அலைகின்றோம்.

இந்த நிலை நமது தமிழ் சமுதாயத்தையும் விட்டுவைக்கவில்லை. இன்று தமிழ் தமிழினம் தமிழர்கள் தமிழ் கலாச்சாரம் என்று பேசுபவர்களையும் எழுதுபவர்களையும் பழமைவாதிகள் என்றும் அடிப்படைவாதிகள் என்றும் நினைக்கின்ற போக்கு அதிகரித்து வருகிறது. சக தமிழனை தன் இனம் என்று பெருமையாக பார்க்கின்ற நிலை இன்று இல்லை. நான் சிங்கப்பூர் மலேசியா இந்தோனேசிய இலங்கை போன்ற நாடுகளில் பெருமளவு சுற்றியிருக்கிறேன். இந்த எல்லா நாடுகளிலும் இரு விதமான தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒரு சாரார் அந்தந்த நாடுகளை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள். இவர்கள் 18-19ம் நூற்றாண்டு வாக்கில் இங்கு வந்து குடியேறியவர்கள். மற்றவர்கள் தமிழ் நாட்டிலிருந்து அங்கு பணி நிமித்தமாக வந்து வாழும் தமிழர்கள். ஆனால் ஒரே நாட்டில் வாழும் இந்த இரு தமிழர்களிடையே இடையே ஒரு விதமான் இடைவெளி இருப்பதை வெளிப்படையாக காணலாம். பெரும்பாலும் இந்த இரு சாராரும் ஒருவருக்கொருவர் கலப்பு கொள்வதில்லை. இன்னும் சொல்லப்போனால் இரு சாராருக்குமே மற்றவர் மீது ஒருவித அவநம்பிக்கை உண்டு. சில இடங்களில் இருவருக்குமே தனித்தனியாக கோவில்கள் கூட உண்டு. அதேபோல அமெரிக்காவையோ கனடாவையோ எடுத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் பெரும்பாலும் கலப்பது இல்லை. தாய்த்தமிழகத்திலோ இதைவிட மோசமான ஒரு நிலைமை. நமக்கு சில கிலோமீட்டர் தொலைவில் தம் இனம் பூண்டோடு அழிக்கப்படும் நிலையைக்கூட ஒரு பார்வையாளர்கள் போல கண்டும் காணாமல் இருக்கின்ற நிலை. 

ஆனால் இந்த வேறுபாடுகளை அந்தந்த நாடுகளில் எல்லாம் வாழுகின்ற பிற இந்திய இனத்தினர்களிடம் குறிப்பாக சீக்கியர்கள் அல்லது சிந்திக்களிடம்  கானமுடிவதில்லை. அவர்கள் கலாச்சார ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஒருவருக்கொருவர் ஒத்தாசையாக ஒற்றுமையோடு வாழ்கின்றனர். அப்படியானால் நம்மினத்துக்கு மட்டும் ஏன் இந்த நிலை? நன்கு சிந்தித்துப் பார்த்தால் ஒரே ஒரு காரணம்தான் விளங்கக்கூடும். அது தன் சுயத்தை இழந்த நிலை. அதாவது தனது இனத்தின் பாரம்பரியத்தையும் கலாச்சாரத்தையும் அறியாமல் இருப்பது. அல்லது அவை தாழ்வானவை என்கின்ற தவறான மனப்பான்மை கொண்டிருப்பது. இதனால் இளம் தலைமுறையினரிடம் நமது கலாச்சாரம் குறித்த புரிதலோ மொழி குறித்த பெருமிதமோ இல்லை. இதனால் நம் தமிழினம் இருந்தும் இல்லாத இனமாக மாறிக்கொண்டு வருகிறது. நம் இனம் பூண்டோடு அழிவது தடுக்கப்படவேண்டுமென்றால் தமிழர்களின் இந்த மனநிலை மாறவேண்டும்.

எனக்கு யூதர்களை கானும்போது மிகவும் பிரமிப்பாக இருக்கும். அவர்கள் மேல் இருக்கும் பல குற்றச்சாட்டுகளுக்கு அப்பாலும் அவர்களின் இனப்பற்று என்னை சிந்திக்கவைக்கும் இன்று உலகில் இருக்கும் இரண்டு மிகப்பெரிய மதங்களின் தாய் வீடான யூத இனம் பல நூற்றாண்டுகள் இந்த உலகில் இருப்பையே தொலைத்துவிட்டிருந்தது. நாட்டை இழந்து மொழியை இழந்து மக்களை இழந்து யூத இனம் என்ற ஒன்று இருந்ததற்கான் தடயங்களே இல்லாமல் இருந்தது. உலக வரலாற்றிலேயே அதிக அளவுக்கு கொடுமைக்க்கு உள்ளாக்கப்பட்ட இனம் யூத இனம்தான். ஒரு காலத்தில் யூதர்களை தேடித்தேடி கொன்றார்கள். ஆனால் இன்று ஒரு பீனிக்சு பறவை போன்று சாம்பலில் இருந்து எழுந்து சரித்திரம் படைத்துக்கொண்டிருக்கிறது யூத இனம். உலகில் உள்ள மொழிகளில் எழுத்து வழக்கிலும் பேச்சு வழக்கிலும் ஒரே வகையில் பாவிக்கப்படும் மொழி யூதர்களின் ஈப்ரு மொழி மட்டுமே.  இட்லர் காலகட்டத்தில் செர்மனியில் ஒரு யூதர் மாட்டிக்கொண்டால் அவரை யூதர் என்று உறுதிப்படுத்திக்கொள்ள ஒரே ஒரு கேள்விதான் கேட்பார்களாம். நீ ஒரு யூதனா? என்பதுதான் அது. தான் யூதனில்லை என்று பொய் சொன்னால் தன் உயிர் பிழைக்கும் என்ற நிலையிலும் ஒரு போதும் தான் யூதன் என்பதை விட்டுக்கொடுக்க அவர்கள் முன்வர மாட்டர்களாம். அவர்களின் இந்த இனப்பற்றுதான் யூதர்களை இன்று  வெற்றி பெற்ற சமூகமாக வாழவைத்துக்கொண்டிருக்கிறது. இப்படிப்பட்ட இனம் மலை போன்ற தடைகளில் இருந்து மீண்டு வந்ததில் வியப்பேதும் இல்லைதானே? தமிழினம் இவர்களிடம் இருந்தவது பாடம் கற்றுக் கொள்ளவேண்டும்.  தன் சுயம் என்பது தன் உயிரைவிட மேலானது என்று உணரவேண்டும்.

4 comments:

vasu balaji said...

ஆமாங்க. ஏன் இப்படின்னு நானும் பலமுறை யோசித்திருக்கிறேன்.

தமிழ் நாடன் said...

வாங்க பாலா ஐயா!

பழமைபேசி said...

//அமெரிக்காவையோ கனடாவையோ எடுத்துக்கொண்டால் ஈழத்தமிழர்களும் தமிழகத்தமிழர்களும் பெரும்பாலும் கலப்பது இல்லை//

அப்பட்டமான உண்மை... தமிழகம் என்றாலே மருள்கிறார்கள்....

தமிழ் நாடன் said...

கருத்துக்கு நன்றி பழமை அண்ணே!