எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday, 28 July 2010

THE CAN DO LEADERSHIP - புத்தக வி்மர்சனம்பொதுவாகவே வெளிநாட்டில் வசிக்கும் நம்மவர்களுக்கு தமிழ் நாட்டு நடப்புகள் தெரிந்த அளவுக்கு உள்ளூர் நடப்புகள் பற்றி தெரிவதில்லை. அதற்கு முதல் காரணம் மொழி. இரண்டாவது காரணம் ஆர்வமின்மை. குறிப்பாக இந்தோனேசியாவில் மருந்துக்கு கூட ஒரு ஆங்கில தொலைக்காட்சி இல்லை. இருக்கின்ற ஒரே ஒரு ஆங்கில தினசரியைப் படித்துதான் கொஞ்ச நஞ்சம் செய்திகளை தெரிந்து கொள்ள முடியும். அதுவும் இந்த தினசரியின் நடுநிலைமை நம்ம தினமலரை மிஞ்சிவிடும். காசுமீருக்கு போகாமலேயே காசுமீர் பிரச்சினைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதுவார்கள். அதற்கு வேறு இங்குள்ள இந்தியர்களும் பாக்கிசுதானியர்களும் அடித்துக்கொள்வார்கள். இதல்லாம் நமக்கு ஒத்துவராது என்பதால் வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கிரமீடியா புத்தகக்கடையில் ஐக்கியம் ஆகிவிடுவேன். இறக்குமதியான சரக்கு என்பதால் பெரும்பாலான ஆங்கிலப்புத்தகங்களின் விலையை கேட்டால் மயக்கமே வந்துவிடும். உள்ளூர் ஆங்கில பதிப்புகள் கிடைப்பது அபூர்வம். இதனால் மணி கணக்கில் கடையையோ நோண்டிக்கொண்டிருப்பது வழக்கம்.

SBY இந்தோனேசியாவில் என்னை மிகவும் கவர்ந்த அரசியல்வாதி. அவரைப் பற்றி அவ்வப்போது படித்திருக்கிறேன் என்றாலும் அவரைப்பற்றி முழுமையான ஒரு புத்தகத்தை தேடிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் இந்த புத்தகம் என் கண்ணில் பட்டது. இப்போது திரு. SBY அவர்கள் பற்றிய சிறிய அறிமுகம்.

 SBY   என்கின்ற சுசிலோ பம்பாங் யூதயோனோ – இந்தோனேசியாவின் நடப்பு அதிபர். இந்தோனேசியாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அதிபர். அதற்கு முன் அதிபர்களை பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடித் தேர்ந்தெடுக்கும் முறையே இருந்தது. 2004 ம் ஆண்டு முதல் அதிபரை மக்கள் நேரடியாக தேர்ந்தெடுக்கும் நடைமுறை அமலுக்கு வந்தது. 2009-ல் தொடர்ந்து இரண்டாவது முறையாக அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இரானுவத்தில் கலோனல் பதவியை வகித்த இவர் பின்னர் முன்னால் அதிபர் மேகாவதி சுகர்னோ புத்திரி அமைச்சரவையில் ஒருங்கிணைப்பு அமைச்சராக பதவி வகித்தார். அதன் பிறகு மேகாவதியின் கட்சியிலிருந்து வெளியேறி தனது “சனநாயக கட்சி”யை ( Partai Democratic) ஆரம்பித்த ஒரு வருடத்திற்குள் அதிபர் பதவியை பிடித்தார்.  

THE CAN DO LEADERSHIP – Inspiring stories from SBY Presidency என்ற இந்த புத்தகத்தை எழுதியிருப்பவர் அதிபரின் அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளரான் திரு. தினோ பாத்தி சலால். பல வருடங்கள் வெளிநாடுகளில் தூதரகப்பணி ஆற்றியவர். சிறந்த பேச்சாளர். மேலாண்மை குறித்து பல புத்தகங்கள் எழுதியிருப்பவர். இந்தோனெசிய கல்வியாளர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். யூதயோனோ அவர்களின் முதல் ஆட்சிகாலம் முடியும் தருவாயில் எழுதப்பட்ட புத்தகம் இது.

இந்தோனேசிய மொழியில் எழுதப்பட்ட இந்த புத்தகத்தை ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்திருக்கிறார்கள். தெளிவான எளிய ஆங்கில நடையில் இருப்பதால் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது. மேலாண்மை சம்பந்தமான புத்தகமோ என்ற ஐயத்தோடுதான் படிக்க ஆரம்பித்தேன். ஆனால் புத்தகம் முழுக்க முழுக்க யூதோனோ அவர்களின் ஆளுமைப்பற்றியும் அவரது ஆட்சி குறித்துமே விவரிக்கப்படுவதால் ஒரு சுய சரிதை படிக்கின்ற உணர்வே ஏற்ப்படுகிறது. ஆரம்பம் முதல் இறுதி வரை ஆசிரியரின் எழுத்துநடை தோய்வில்லாமல் விறுவிறுப்பாக  செல்கிறது. இடையிடையே சுவையான பல சம்பவங்களை சேர்த்துள்ளதால் படிப்பவர்களுக்கு அலுப்பு தட்டாமல் செல்கிறது. 435 பக்கங்கள் கொண்ட முழு புத்தகத்தையும் ஒரே வாரத்தில் முடித்துவிட்டேன்.

இந்தோனேசிய போன்ற ரெண்டாம்கெட்டான் நாட்டுக்கு ஒருவர் அதிபராக இருப்பது எத்தனை சிரமம் என்பதை இந்த புத்தகத்தை படித்தால் புரிந்து கொள்ளலாம். அதே போன்று நாடுகள் மாறினாலும் அரசியல்வாதிகளின் குனங்கள் மட்டும் மாறுவதில்லை என்பதையும் அறிந்து கொள்ளலாம். தினமும் அதிபரின் பெயரில் செய்தித்தாள்களில் அறிக்கைகளை பார்க்கிறோம். தொலைக்காட்சிகளில் பொது நிகழ்ச்சிகளிலோ அல்லது பிற நாட்டு தலைவர்களை சந்திப்பதையோ பார்க்கிறோம். இது போன்ற அன்றாட சமாச்சாரங்களுக்கு கூட அதிபர் எவ்வளவு மெனக்கிட வேண்டியிருக்கிறது என்பதை அறிய வரும்போது அவர் மீது ஒரு வித அனுதாபம்தான் மிஞ்சுகிறது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் கூட்டணி அமைச்சரவையை கட்டிகாப்பது எவ்வளவு சிரமமான வேலை என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது. ஆசிரியருக்கு வெளிநாட்டு தூதரகங்களில் பணியாற்றிய அனுபவம் இருப்பதால் சர்வதேச அரசியல் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்த அவரது கருத்துக்களையும் ஆங்காங்கே பகிர்ந்து கொள்கிறார். ஒரு இசுலாமிய நாடாக இருந்த போதும் அமரிக்கா போன்ற வல்லரசுகளுடனும் அவர்களுக்கு முற்றிலும் எதிர்திசையில் இருக்கும் ஈரான் பாலத்தீனம் போன்ற நாடுகளுடனும் உறவுகளை சமன் செய்ய வேண்டிய நிலையையும் ஆசிரியர் நன்கு விளக்கியுள்ளார். உள்நாட்டு பிரிவினைவாத பிரச்சினைகள் குறித்தும் அண்டை நாடுகளுடனான பிரச்சினைகள் குறித்தும் நன்கு அலசியிருப்பதால் நம்மைப்போன்ற புதியவர்களுக்கு நிறைய புதிய தகவல்களை அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால் சமா இசுலாமிய போன்ற தீவிரவாத இயக்கங்களை கட்டுப்படுத்தியது குறித்த தகவல்கள் இல்லாதது ஏனோ தெரியவில்லை.

ஆச்சே பகுதி சுனாமியால் பாதிக்கப்பட்டபோது யூதயானோ ஆற்றிய பணிகள் குறித்து மீண்டும் மீண்டும் குறிப்பிடுவதை ஆசிரியர் தவிர்த்திருக்கலாம். புத்தகத்தின் பெயரை “Inspiring Stories from SBY Presidency” என்று மட்டும் வைத்திருக்கலாம். “THE CAN DO LEADERSHIP” என்று சொல்லும் போது மேலாண்மை அல்லது சுய முன்னேற்றம் குறித்த புத்தகமோ என்று பலர் ஒதுக்கிவிடும் வாய்ப்பு இருக்கிறது. அதிபருக்கு நெருங்கிய வட்டத்தில் உள்ள ஒருவர் இந்த புத்தகத்தை எழுதியிருப்பதால் அவரது ஆதரவு பிரச்சாரத்திற்காக எழுதப்பட்டது என்ற வாதம் பரவலாக இருக்கிறது. ஆனால் நம்மை போன்ற புதியவர்களுக்கு இது ஒன்றும் பெரிய குறையாக தெரியவில்லை. ஆர்வமுள்ளவர்கள் அறிந்து கொள்ளவேண்டிய கருத்துக்களே அதிகம் இருக்கின்றன. இந்தோனேசியாவில் வாழும் ஒவ்வொரு இந்தியரும் படிக்கவேண்டிய  புத்தகம் இது என்பது எனது கருத்து. அதேபோல இந்தோனேசிய அரசியல் குறித்து அறிய விரும்பும் எவரும் படிக்கவேண்டிய புத்தகமிது. 

.

4 comments:

rajesh said...

Puthagathai naangal padikavillai. Aanal ungal vimarsanam padivaka vendum enra aarvathai thoondum alavuku aazhamaga ullathu.

தமிழ் நாடன் said...

நன்றி திரு. ராஜேஷ்!

Arun said...

மிக்க நன்றி அண்ணா! தோ கிளம்பிட்டேன் புக் வாங்க

தமிழ் நாடன் said...

கடை விரித்தோம் கொள்வார் இல்லை என்ற குறையை போக்கிய அன்புத்தம்பியே! வாழ்க நீ!