எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Friday, 28 November 2008

ஐயாம் கோயிங் டூ சுடுகாடு - தமிழ்

சில நாட்களுக்கு முன் மக்கள் தொலைக்காட்சியில் தமிழ்த் தாத்தா திரு நன்னன் அவர்களின் தமிழ்ப் பண்ணை நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தேன். அதில் அய்யா அவர்கள் சொன்னக்கருத்து ஒன்றை கேட்டபோது சுருக்கென்று முள் தைப்பது போன்று உணர்ந்தேன். தன் சொந்த மொழியை சிதைப்பதில் தமிழனுக்கு நிகர் இந்த உலகத்தில் யாரும் இல்லை என்றார். இது எவ்வளவு உண்மை என்பதை நீங்கள் கண நேரம் சிந்தித்தாலே உங்களுக்கு புலப்படும். உலகத்தில் உள்ள எந்த ஒரு இனமும் தன் மொழியில் பிறன் மொழியை கலந்து பேசுவதில்லை. ஒன்று தன் மொழியில் பேசுவார்கள் அல்லது பிறன் மொழியில் பேசுவார்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து வாந்தி எடுப்பது போல் யாரும் பேசுவதில்லை.

 தவிர்க்க முடியாது சில சமயங்களில் பிற மொழியில் உள்ள சில வார்த்தைகளை கையாளும் போது கூட அவற்றை தன் மொழியின் ஒளியமைப்பிற்கு ஏற்ப மாற்றி கொள்வார்கள். ஆங்கிலத்தில் உள்ள பல சொற்களின் வேர் சொற்கள் இலத்தின் மொழியில் உள்ளவை. அதற்காக அவற்றை அவர்கள் அப்படியே பயன் ப்டுத்துவது இல்லை. பக்கத்திலிருக்கும் புதுச்சேரியை எட்டிப்பார்த்தால் இது உங்களுக்குத் தெரியவரும். இங்கே வந்த பிரஞ்சுக்காரர்கள் புதுச்சேரியை பாண்டிச்சேரி என்றும் உருளையன்பேட்டை என்பதை ஒர்லயன்பெட் என்றும் தன் வாயில் நுழைந்தவாறுத்தான் பேசினார்கள் எழுதினார்கள். தமிழை ”டமில்” என்றுதான் ஆங்கிலேயர்கள் எழுதினார்கள். அய்யோ ”ழ்” க்கு இணையான ஆங்கில எழுத்து இல்லையே அதனால் ”ழ்” ழை அப்படியே ஆங்கிலத்துக்கு தூக்கிக் கொண்டு போய்விடலாம் என்றா நினைத்தார்கள். இல்லையே! நாம்தான் சற்றுக்கூட கூச்ச நாச்சமே இல்லாமல் செத்துவிட்ட மொழிகளில் இருந்து கூட எழுத்துக்களை பொறுக்கி தமிழில் சேர்த்து தமிழை சாக்கடையாக்கிக் கொண்டிருக்கிறோம். 26 எழுத்துக்களை மட்டுமே கொண்ட ஆங்கிலம் உலகையாளும் போது 247 எழுத்துக்களைக் கொண்ட தமிழ் மொழியைக்கொண்டு நம்மால் இயல்பாக பேசக்கூடமுடியாதா?

மேலும் இந்த மொழிக்கொலையை சீரழிப்பை செய்வதில் முன்னனியில் இருப்பவர்கள் தாய்த்தமிழகத்தை சேர்ந்த தமிழர்கள் ஆகிய நாம்தான். ஈழத்தமிழர்களோ அல்ல பிற நாடுகளில் குடியேறிய பழந்தமிழர்களோ இந்த தவறை செய்வதில்லை. இந்தோனேசியாவில் வாழும் பூர்வீகத்தமிழர்களில் பெரும்பாலோனோர் தமிழை மறந்துவிட்டார்கள். ஆனால் இன்னும் பலர் கூடியமட்டில் இல்லங்களில் தமிழை பேசுகின்றனர். அவர்களின் குழந்தைகள் பெற்றோரை அம்மா, அப்பா என்றுதான் விளிக்கிறார்கள். மம்மி டாடி என்று ஒரு போதும் அழைக்க கண்டதில்லை.அவர்களின் வீட்டுக்குச் சென்றால் முதலில் அவர்கள் கேட்பது என்ன தண்ணி குடிக்கிறிங்க? காபித்தண்ணியா டீத்தண்ணியா என்பதுதான். என்ன டிரிங்க் வேனும் என்று கேட்டதே இல்லை. அரிசி சோற்றை சோறு என்றுதான் சொல்வார்களெ தவிர சாதம் என்றுச்சொல்லி நான் கேட்டதே இல்லை. கோழிக்கறி என்று சொல்வார்களே தவிர சிக்கன் கறி என்று சொல்லுவதில்லை.

 இந்த நாட்டில் பேசும் மலையக மொழி தமிழை விட பல ஆயிரம் ஆண்டுகள் பிந்தியதுதான். தமிழைப்பொன்று ஆழமான் இலக்கண வரம்போ சொல் வளமோ இல்லாத மொழிதான். அவ்வளவு ஏன்? சொந்த எழுத்துருக்கூட இல்லாமல் ஆங்கில எழுத்துருக்களைத்தான் பயன் படுத்துகிறார்கள். ஆனால் இவர்கள் கூட தம் மொழியின் ஊடே மற்ற மொழிகளை கலந்து ஒருபோதும் பேசுவதில்லை. தம் மொழியில் இல்லாத சொற்களை பல மொழிகளில் இருந்து பெற்று பயன் படுத்தும் போதும் அவற்றை தம் மொழியின் ஒளியமைப்புக்கு ஏற்ற முறையில் மாற்றித்தான் பயன்படுத்துகிறார்கள். எடுத்துக்காட்டாக பெசிலிட்டி என்ற வார்த்தையை பெசிலிட்டாச் என்ற உச்சரிப்போடுதான் பயன்படுத்துகிறார்கள் எழுதுகிறார்கள். நன்றாக கவனியுங்கள்! தம் மொழியில் இல்லாத ஒரு வார்த்தைக்குத்தான் இந்த ஏற்பாடு. தம் மொழியில் இருக்கும் ஒரு வார்த்தைக்கு மாற்றாக இன்னொரு மொழியின் வார்த்தைகளை ஒரு போதும் பயன் படுத்துவதில்லை. எனக்கு சீனர்கள் சப்பானியர்கள் ஐரோப்பியர்கள் என்று பல நாட்டவர்களுடன் பழகும் வாய்ப்பு பல நேரங்களில் கிடைத்திருக்கிறது. அவர்கள் பேசுவதையும் நான் உண்ணிப்பாக கவனிப்பேன். அவர்களும் தப்பி தவறி கூட பிற மொழியை கலந்து பேசுவதில்லை. ஆனால் உலக நாகரீகங்களுக்கு எல்லாம் முதன்மையான நாகரீகத்தை சேர்ந்த நாம், உலகிலேயே தொன்மையான மொழிக்கு சொந்தக்காரர்களாகிய நாம் சற்று கூட சுய சிந்தனையில்லாமல் தொட்டதிற்கெல்லாம் ஆங்கிலத்தை கலந்து துப்புகிறோம். என்னால் பேசுகிறோம் என்று சொல்லமுடியவில்லை. ”ஐ யாம் கோயிங் டூ பள்ளி” என்று ஒரு ஆங்கிலேயரிடம் சொன்னால் அவர் வாயாலேயா சிரிப்பார்? சிந்தித்து பாருங்கள். ஆனால் கொஞ்சம் கூட வெட்கமோ கூச்சமோ இன்றி நான் ச்கூலுக்கு போறேன், ஆபிசுல இருக்கேன், பைவ் அன்றட் இருக்கா, பேசா இருக்கேன் என்கிறோம். இந்த வார்த்தைகளுக்கு இணையான வார்த்தைகள் தமிழில் இல்லையா? தமிழில் வார்த்தைகளுக்கு பஞ்சமா? நம் சொந்த தாய் மொழியை தேவையே இல்லாமல் கொல்வதுதான் நாகரீகமா? நாம் எல்லாம் படித்தவர்கள்தானா? நாம் சிந்திக்க வேண்டும். லண்டனில் இருந்தோ அல்லது மலையத்திலிருந்தோ வெளிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாவது “சீ யு நெக்ச்ட் வீக். டில் தென் பாய் பிறம் குரங்கு” என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஆனால் நம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளை பாருங்கள். ஏதொ அமரிக்காவில் நிகழ்ச்சி நடாத்துவதுபோல் தொட்டதுக்கெல்லாம் ஆங்கிலத்தில் பீற்றிக் கொள்கிறார்கள்.

சென்ற வாரம் இந்தோனேசியாவின் மிகப்பெரிய நிறுவனம் ஒன்றின் முக்கிய புள்ளி ஒருவரை அலுவல் விடயமாக சந்திக்க சென்றேன். அவர் ஒரு இந்தொனேசிய தமிழர். நான் மெதுவாக ஆங்கிலத்தில் உரையாடலை துவக்கினேன். உடனே அவர் “ஆர் யு பிரம் சென்னை” என்றார். நான் ஆமாம் என்றேன். அப்போ தமிழிலேயே பேசலாமே என்றார். பிறகு நாங்கள் உரையாடலை தமிழில் தொடர்ந்தோம். உரையாடல் முழுக்க அலுவல் சார்ந்தது என்ற போதும் அவர் ஒரு தடவை கூட ஆங்கிலத்தை துணைக்கு அழைக்கவில்லை. இயல்பான தமிழில் சாதாரணமாக பேசினார். ஆனால் என்னால் ஆங்கில பிரயோகங்களை பல் இடங்களில் தவிர்க்கவே இயலவில்லை. இது எனக்கு மிக்க அவமானமாக இருந்தது. தமிழ் நாட்டில் பிறந்து தமிழில் படித்து என்ன பயன்? தாய்த்தமிழை கொலை செய்யும் மகா பாதகர்களாகத்தானே இருக்கிறோம். நான் இவ்வாறு எழுதுவதால் நான் பிற மொழிகளை கற்பதற்கு எதிரானவன் அல்ல. பன்மொழி பேசும் திறன் என்பது குறிப்பாக இப்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம் என்பதில் இரு வேறு கருத்து இல்லை. ஆனால் நம் சொந்த தாய் மொழியை கெடுத்து குட்டிச்சுவராக்கித்தான் பிறன் மொழியை பழக வேண்டும் என்பது அபத்தம் இல்லையா? சிந்திப்போமா? தமிழ் இனி மெல்லச் சாவதை தடுப்போமா?

26 comments:

astle123 said...

அருமையான கருத்துக்கள்!!

//உலகத்தில் உள்ள எந்த ஒரு இனமும் தன் மொழியில் பிறன் மொழியை கலந்து பேசுவதில்லை. ஒன்று தன் மொழியில் பேசுவார்கள் அல்லது பிறன் மொழியில் பேசுவார்கள். இரண்டையும் ஒன்றாகக் கலந்து வாந்தி எடுப்பது போல் யாரும் பேசுவதில்லை.

//பன்மொழி பேசும் திறன் என்பது குறிப்பாக இப்போதைய காலகட்டத்துக்கு மிகவும் அவசியம்

இதுவே என்னுடைய கருத்தும்.
இன்றைய மொழி போர் எனும் திராவிட இயக்க பித்தலாட்டம்

வாழ்த்துக்கள்!!

சரவணகுமரன் said...

தமிழனுக்கு மற்ற மொழிகளை ஏற்று கொள்வதில் உள்ள பெருந்தன்மை'ங்க இது. சும்மா தமாஷுக்கு சொன்னேன்.

வருத்தத்திற்குரிய செயல்கள்தான்.... :-(

Anonymous said...

நன்றி தோழர்

உமது கருத்துக்களை அப்படியே 100 % ஏற்றுகொள்கிறேன். இதை பலமுறை நண்பர்களிடம் சொல்லி சொல்லி நான் சிறுமைப்பட்டதுதான் மிச்சம்.தளரப்போவதில்லை
வாழ்க தமிழ்

Bee'morgan said...

அனைவரும் சிந்திக்க வேண்டிய கருத்து..

சிறப்பாக எழுதியிருக்கீங்க..

பரிசல்காரன் said...

ஒரு தொழிலதிபர் (இயகாகோ சுப்ரமணியம்) தனது அறையில் ‘உங்களுக்குத் தமிழ் தெரிந்தால் தமிழில் உரையாடவும் என்றூ தமிழிலும், 'If you know Tamil, Pls converse in Tamil' என்று ஆங்கிலத்திலும் எழுதிவைத்துள்ளார்.

எங்கே?

இந்தோனேசியா, லண்டன், அமெரிக்காவிலோ அல்ல..


தமிழகத்தில்...
கோவையில்...!!!!!!!!!!

Anonymous said...

தமிழை கொலை செய்வதில் தனியார் தொலை காட்சியினர் (இங்கு “க்” வருமா - இது தான் என் தமிழ் அறிவு - பல சமயங்களில் இது போன்ற சந்தேகங்கள் நிறைய வ்ருகின்றது) நிகர் யாருமே கிடையாது. சரி ஆங்கிலத்தையாவது சரியாக பேசுகின்றார்களா என்றால் அதுவும் இல்லை. இரண்டு மொழியையும் எந்த அளவு கொலை செய்ய முடியுமோ அந்த அளவு கொலை செய்து கொண்டு இருக்கின்றனர். மேலும் தமிழை செம்மொழியாக்கிவிட்டோம் என அரசாணை மட்டும் பிறப்பித்தால் மட்டும் போதாது, தமிழை வளர்பதற்கான வழி வகைகள் காணப்படவேண்டும். தூய தமிழ் வார்த்தைகளை உபயோகப்டுத்தபட வேண்டும். தமிழ் பெயர் வைப்பதற்காக மட்டும் வரிவிலக்கு அளிக்க கூடாது. அது தமிழை வளர்பதற்கு எந்த அளவு பயன்படுகின்றது என நோக்க வேண்டும். தமிழ் வாழ்க என கூறிக்கொண்டு இருந்தால் தமிழ் வளர்ந்து விடாது. இராகவன், நைஜிரியா

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி திரு வீரன், உங்கள் பதிவையும் படித்தேன். ஏற்றுக்கொள்ளக் கூடியவைதான்.

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி திரு சரவணகுமரன்.

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி திரு இராவணன், என்னைக் கூட பலர் ஏளனம் செய்வது உண்டு. அவர்களது புரிதல் அப்படி. ஆனால் நாம் நம் தாய் மொழியை உயர்த்திப்பிடிக்க யாருடைய ஆசியும் தேவையில்லை. சுயத்தை இழந்துவிட்டு சுதந்திரம் தேடுவதில் என்ன உரம் இருக்க முடியும். வாழ்த்துக்கள்.

தமிழ் நாடன் said...

வாருங்கள் பி மோர்கன், உங்கள் கருத்துக்கு நன்றி!

தமிழ் நாடன் said...

வாருங்கள் பரிசலாரே! நீர் சொல்வது உண்மைதான். ஒவ்வொரு தமிழனும் இதை உணரவேண்டும்.

தமிழ் நாடன் said...

நன்றி திரு ராகவன், தாங்கள் சுட்டி காட்டிய தவறை திருத்திவிட்டேன்.தவறுக்கு வருந்துகிறேன். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி. அரசாங்கம் கொண்டுவரும் திட்டங்கள் எல்லாம் ஓட்டு வங்கியை மனதில் கொண்டு செய்யப்படுவதால் அவை நான் எதிர்பார்க்கும் பலனை தருவதில்லை.

ஆட்காட்டி said...

உண்மை. ஒன்று செய்யலாம். நாம் நம்மிடையே தமிழிலேயே பேசலாமே? வீட்டில் இருந்து தொடங்குங்கள். நாங்க அப்படித் தான்.
(கணம். கனம் என்றால் வேறு அர்த்தம்)

Felix Raj said...

நல்ல ஒரு பதிவு நன்றிகள் பல சுத்த தமிழில் பேசுவதற்கு முயற்சி செய்கிறேன் நன்றி

kuppusamy said...

உங்கள் கருத்தை ஏற்றுக்கொளகிறேன். அவசியம் முழுமனதுடன் மற்ற மொழிகளைச் சேர்க்காமல் தமிழிலேயே பேச முயற்சிக்க வேண்டும். நானும் மூலிகைவளம் தமிழில் எழுதுகிறேன் ஆனால் தாவரப் பெயர், தாவரக்குடும்பம் ஆங்கிலத்தில் எழுதவேண்டிய நிர்பந்தம் எழுகிறது. மூலிகைகள் அழியாமல் இருக்க அதன் புகைப்படமும் சேர்த்துள்ளேன். ஒரு விழிற்புணர்வுக்காக.நன்றி.http://mooligaivazam-kuppusamy.blogspot.com/

Anonymous said...

மும்பையில இப்ப நடந்திட்டிருக்கிற ஷூட்டிங்ல கமாண்டோஸ் டெர்ரரிஸ்டுகள நெருங்கீட்டாங்க. கேட்வேக்கு ஆப்போசிட்ல்ச் இருக்க டாஜ் ஹோட்டல சரவுண்ட் பண்ணி இருக்க ஸ்ட்ரீட்கள்ல எல்லாம் பப்ளிக்க அல்லொவ் பண்றதில்ல. பார் செகண்ட் பை செகண்ட் அப்டேட் ஸ்டேய் டியூண்ட் வித் --- எப் எம்.

நம்ம நெக்ஸ்ட் காலர் யார்னு பாக்கிறதுக்கு முன்னல ஒரு ஸ்மால் கமர்சியல் பிரேக்.

டீவியிலயும் இந்தக் கொடுமைதான். அதிலும் தமிழை வச்சு 5 முறை முதலமைச்சரா ஆனவரு நடத்துற டீவீயும் விதிவிலக்கு இல்லாம இதே தேச சேவை செய்யுது. இதுல தமிழ செம்மொழியாக்கினதுக்கு அவருக்குப் பாராட்டு. வெட்கம்.

தமிழ் நாடன் said...

நன்றி ஆட்காட்டி அவர்களே! நானும் முடிந்தவரை வீட்டிலிருப்போருடனும் நண்பர்களுடனும் பிற மொழி கலக்காமல் பேச முயற்சித்து கொண்டுதான் இருக்கிறேன். வெகு விரைவில் இது முழுமையாக் சாத்தியப்படும் என்று நினைக்கிறேன். மேலும் தவரை சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

தமிழ் நாடன் said...

மன்னிக்கவும் தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி!

தமிழ் நாடன் said...

நன்றி திரு குப்புசாமி ஐயா! நானும் உங்கள் வலைப்பதிவை அடிக்கடி வாசிப்பது உண்டு. நல்ல தகவல்களை தருகிறீர்கள்.

தமிழ் நாடன் said...

வாருங்கள் வடகரை வேலன்!
இவர்களுக்கு மொழியானாலும் இனமானாலும் அனைத்தும் வாக்கு வங்கி அரசியலுக்குத்தான். படிக்கறது எல்லாம் ராமயணம் இடிக்கிறது எல்லாம் பெருமாள் கோவில் என்று நம் கிராமத்தில் ஒரு பழ மொழி கூறுவார்கள். அது இவர்களுக்குத்தான் பொருந்தும்.

கபீரன்பன் said...

மிகவும் சரியான கருத்துகள்.

ஹாங்காங்கில் ஒரு பொருட்காட்சியில் நான் சந்தித்த இந்தோனேசிய தமிழர் முழுவதும் தமிழில் உரையாடினார். ஒருவேளை தமிழ் மண்ணை விட்டு போனபின்தான் தமிழ் பாசம் பொங்குமோ என்னவோ !!

//லண்டனில் இருந்தோ அல்லது மலையத்திலிருந்தோ வெளிவரும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பாருங்கள். ஒரு நிகழ்ச்சி தொகுப்பாளினியாவது “சீ யு நெக்ச்ட் வீக். டில் தென் பாய் பிறம் குரங்கு” என்று சொல்வதை கேட்டிருக்கிறீர்களா? ஆனால் நம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகளை பாருங்கள். ஏதொ அமரிக்காவில் நிகழ்ச்சி நடாத்துவதுபோல் தொட்டதுக்கெல்லாம் ஆங்கிலத்தில் பீற்றிக் கொள்கிறார்கள். //

இது இளைய சமுதாயத்தைக் கவர்வதற்காகவாம் ?? :(( வெட்கக் கேடு

தமிழ் நாடன் said...

வருகைக்கும் உங்கள் கருத்துக்கும் நன்றி திரு கபீரன்பன்.

//ஒருவேளை தமிழ் மண்ணை விட்டு போனபின்தான் தமிழ் பாசம் பொங்குமோ என்னவோ !!//
இதை நீங்கள் கிண்டலாக சொன்னாலும் அதுதான் உண்மை. தமிழ் நாட்டை விட்டு வெளியே வந்து உங்களுக்கான முகவாண்மையை நிலைநிறுத்த முற்படும்போதுதான் நம் தாய்த்தமிழின் தமிழினத்தின் அருமை தெரிய வரும்.

கபீரன்பன் said...

//இதை நீங்கள் கிண்டலாக சொன்னாலும் அதுதான் உண்மை //

கிண்டலாகத் தோன்றியிருந்தால் மன்னிக்கவும். தமிழ் பேசிய அன்பரை கிண்டல் செய்வதா? மனதில் அறவே இல்லை. நாம் காணும் இந்த எதிர்பட்ட நிலை தரும் மன ஆற்றாமையால் தோன்றிய எண்ணம், அவ்வளவுதான்.

தமிழ் நாடன் said...

நன்றி திரு கபீரன்பன்! நானும் அதை எதார்த்தமாகத்தான் சொன்னேன். தவறாக புரிந்துகொண்டமைக்கு வருந்துகிறேன்.

Mahesh said...

நீங்க சொல்றது மிகச் சரி....

நம்மைப் போல தமிழ் பேசுபவர்களை (கொலை செய்பவர்களை !!) விடுங்கள். தமிழ் காவலர்கள் (?!) நடத்தும் தமிழ் தொலைக்கட்சியின் பெயரும், நிகழ்ச்சிகளின் பெயரும் கவனித்திருக்கிறீர்களா? அவர்களே மற்ற மொழிகளில் தொலைக்காட்சி ஓடைகள் தொடங்கும்போது வைக்கும் பெயர்களையும் கவனித்திருக்கிறீர்களா?

சாமானியர்களைச் சொல்லி பிரயோசனமில்லை. மேலிருந்து கீழ் வரை எண்ணம் மாற வேண்டும்.

Anonymous said...

TOZHA,INDONESIAVILEYE PIRENTHU,VALERNTHU,250 VARUDEKALEMAGHE TAMILIL EZHUTHE PADIKE TERIYATHE ENGGELIL SILER < MIGHE MIGHE ALEGHAGHE TAMILIL ORU SIRU KALEVEI ILLAMEL ENGGELAL UREIYADE MUDIYUM > INDIAVILEYE PIRENTHU,VALERNTHU,PADITTU,PADDEMPEDRU VANTHEVERGHELEI VIDE, ENGGELIL PALER TAMILIL ALEGHAGHE,MIGHE MIGHE ALEGHAGHE UREIYADE MUDIYUM ENBETHEI NAN ARINTHEN,PERUMAIPADUGIREN.ENEKU TAMILEI UYIRAKIE EN UYERNTHE ULLEM KONDE MATHAVE...NANDRI.