பாலி நாட்டியப் பெண்
இந்தோனேசியா என்றால் தேவதைகளின் தேசம் என்று அர்த்தம் என்று என் நண்பர் ஒருவர் சொன்னார். அது உண்மையென்பதை இத்தேசத்தின் உட்பிரதேசங்களில் பயணப்பட்டபோது புரிந்தது. எங்கு பார்த்தாலும் கடலும் பசுமை போர்த்திய மலைகளும் பச்சை பசேலென்ற காடுகளும் நிறைந்த அழகிய தீவு தேசம் இது. சுமாராக முப்பது சதவீத காடுகளும் இயற்கை வளங்களும் பேராசைக்காரர்களால் அழிக்கப்பட்டுவிட்ட போதும் இன்னும் இளமையாகத்தான் இருக்கிறது இந்த தேசம்.
பச்சை தேசம்
ஒரு காலத்தில் முழுக்க முழுக்க இந்து சமயத்தை கொண்டிருந்த இந்த தேசம் இப்போது உலகத்தில் அதிக இசுலாம் மக்கள் தொகை கொண்ட தேசமாக மாறியிருக்கிறது. இப்போது இந்து சமயத்தை பின்பற்றுபர்களின் எண்ணிக்கை மொத்த மக்கள் தொகையில் மூன்று சதவீதம் மட்டுமே. அதுவும் பெரும்பான்மையான இந்துக்கள் பாலித்தீவுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் பின்பற்றும் இந்து மதம் இந்தியாவில் பின்பற்றப்படும் இந்து மதத்தில் இருந்து சற்றே வேறுபட்டது. அதைப்போல இந்நாட்டின் இசுலாம் மக்களின் கலாச்சாரமும் மற்ற நாடுகளில் இருந்து சற்றே வேறுபடுகிறது. அதைப்பற்றியெல்ல்லாம் தனிப்பதிவில் சொன்னால்தான் நன்றாயிருக்கும். இப்போது இந்த பதிவின் கருவுக்கு வருவோம்.
இவ்வாறு இந்து சமயம் தழைத்தோங்கியிருந்த ஒரு தேசத்தில் அவர்களின் கலாச்சார சின்னங்களும், வழிபாட்டு தலங்களும் இல்லாமல் இருந்திருக்குமா? என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்த கேள்விக்கு பதில் சொல்லும் விதத்தில் பண்டைய மத்திய சாவாத்தீவில் கட்டப்பட்ட இன்றைக்கும் நம் புருவங்களை சற்றே உயரச்செய்கிற ஒரு இந்து கோயில் பற்றித்தான் இந்த பதிவில் சொல்லவிருக்கிறேன்.
பெரம்பனான் ஆலயத்தின் வெளித்தோற்றம்
உலகிலேயே பெரிய இந்துக்கோவில் கம்ப்பொடியாவில் கட்டப்பட்ட அங்கோர்வாட் கோவில்தான் என்பது நமக்கு தெரியும். காக்கும் கடவுளான விஷ்னுவுக்காக சூரியவர்மனால் கட்டப்பட்ட இந்த கோயில் பிற்பாடு வந்த பௌத்த மன்னர்களால் புத்த விகாரமாக மாற்றப்பட்டுவிட்டது. ஆனால் சிவ பெருமானுக்காக கட்டப்பட்ட உலகின் மிகப்பெரிய சிவாலயம் இன்றளவும் இந்தோனேசியாவின் சாவா தீவில் பெரம்பனான் என்ற இடத்தில் இருக்கிறது. . இந்த கோவில் இந்தோனேசியாவின் பெயர்பெற்ற சுற்றுலா தளமான யோக்கியகர்த்தா நகருக்கு அருகில் 15 கிமீ தொலைவில் உள்ளது. இக்கோயிலின் பெரும்பகுதி இயற்கை சீற்றங்களை எதிர்கொண்டு அழிந்துவிட்டது. மீதமிருந்த எச்சங்களை அரும்பாடுபட்டு சீர்படுத்தி கோயிலின் முக்கிய பகுதிகளை மீட்டு அடுத்த சந்ததியிடம் சேர்த்திருக்கிறது இந்தோனேசிய அரசு. ஒரு இசுலாமிய அரசாக இருந்த போதும் தமது நாட்டின் கலைப்பொக்கிழங்களை அவை வேற்று மதத்தை சேர்ந்தவைகளாக இருந்த போதும் பாதுகாத்து உலகத்தின் பார்வைக்கு வைத்திருக்கும் இவர்களை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட இந்த கோவில் தென்கிழக்காசியாவின் பிரபலமான் கிமீர் பாணியில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் எப்போது யாரால் கட்டப்பட்டது எனபதற்கான போதுமான ஆதாரம் இல்லை. ஆனால் சாவா தீவின் மற்ற பகுதிகளில் கிடைத்த கல்வெட்டுக்களில் உள்ள குறிப்புகளை கொண்டு இக்கோயில் கிபி எட்டாம் மற்றும் ஒன்பதாம் நூற்றாண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள். இக்காலப்பகுதிகளில் இந்த பகுதியில் இருந்த மாத்தாராம் பேரரசை ஆண்ட இந்து மன்னன் ராக்கை பிகாதன் என்பராலோ அல்லது சஞ்சய பேரரசை ஆண்ட இன்னொரு இந்து மன்னன் பாலிதுங் மகா சம்பு என்பவராலோ இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம் எனத்தெரிய வருகிறது.
சாவா தீவில் கிடைத்திருக்கும் பல கல்வெட்டுகளிலும் இந்த கோவிலைப்பற்றி மிகச் சிறப்பாக பேசப்படுகிறது. ராக்கை பிகாத மன்னன் இறந்த பிறகு அவனது இறுதி ஊர்வத்தை சித்தரிக்கும் கல்வெட்டுகளிலும் அவன் கட்டிய இக்கோவிலைப்பற்றி சிறப்பாக தெரிவிக்கப்படுகிறது. இவையெல்லாம் அக்காலகட்டத்தில் இக்கோயில் சிறந்து விளங்கியதை நமக்கு உணர்த்துகிறது.
ஆனால் இக்கோயில் கட்டப்பட்ட நூறு ஆண்டுகளுக்குள்ளாகவே இந்த பேரரசுகள் வீழ்ச்சியை கண்டுவிட்டன. இதனால் இவர்களின் ஆட்சிகாலத்திற்கு பிறகு இக்கொவிலைச்சுற்றி வாழ்ந்த மக்கள் மற்ற இடங்களுக்கு பெயர்ந்திருக்கின்றனர். இதற்கு அங்கு ஏற்ப்பட்ட அடுத்தடுத்த இயற்கை பேரழிவுகள் கூட ஒரு காரணமாயிருக்கலாம் என அறியப்படுகிறது. அதற்கு பிறகு பல நூற்றாண்டுகள் இக்கோவில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்குள் மறைந்து இருந்திருக்கிறது.
புனரமைப்பு செய்வதற்கு முன் கோவிலின் நிலை
பதினேழாம் நூற்றாண்டில் டச்சுக்காரர்கள் இப்பகுதியில் காலடி எடுத்து வைத்தார்கள். 1733 ஆண்டு டச்சுக்காரர்களின் ஆட்சிகாலத்தில் இப்பகுதியை ஆராச்சி செய்ய வந்த சி ஏ லோன்ஸ் என்ற டச்சுக்காரர்தான் முற்றிலும் சிதிலமடைந்து புதர் மண்டியிருந்த இக்கோவில் பகுதியை கண்டு பிடித்து உலகின் கவனத்துக்கு கொண்டு வந்தார். அதன் பிறகு 1885 ஆம் ஆண்டு லைசர்மேன் என்பவர் இக்கோவிலை சீரமைக்க பல முயற்சிகள் மேற்கொண்டு இந்த இடத்தை சுத்தப்படுத்தினார். 1902 ஆம் ஆண்டு வாக்கில் புனரமைப்பு வேலைகள் வேன் எர்ப் என்பவரின் தலைமையில் தொடங்கியது. இதற்கிடையில் கோவிலின் பல பாகங்கள் மக்களால் விருப்பப்படி எடுத்து செல்லப்பட்டுவிட்டன. இருந்த போதிலும் இந்தோனேசிய அரசு மற்றும் யுனஸ்கோவின் அயராத முயற்சியினால் சீரமைக்கப்பட்ட முதல் பகுதி 1953 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அடுத்த பகுதி 1991 ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. அதன் பிறகும் தொடந்து சீரமைப்பு பணி நடந்து வருகிறது. 2004 மற்றும் 2006 ஆண்டுகளில் ஏற்பட்ட பூகம்பங்களினால் இக்கோயில் மீண்டும் பாதிக்கப்பட்டது.
கோவிலின் உள்பிரகாரங்கள்
மறுகட்டுமானம் அல்லது புணரமைப்பு செய்யப்பட்ட கோவிலாக இருந்தாலும் பாரப்பதற்கு அவ்வாறு தெரியவே இல்லை. புணரமைப்பு வேலைகளில் ஈடுபட்ட தொழிலாளர்கள் மற்றும் கட்டடக்கலை நிபுணர்களின் உழைப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும். அவ்வளவு நேர்த்தியாக வடிவமைத்திருக்கிறார்கள். 75% பாகங்கள் கிடைத்த கோவில் பகுதிகளே சீரமைக்கப்பட்டுள்ளன. முழுவதும் கிடைக்காத கோவிலின் எஞ்சிய பகுதிகள் பல கிலோமீட்டர் தொலைவுக்கு சிதறிக்கிடக்கின்றன. இவ்வளவு ஆர்ப்பாட்டங்களுக்கு பிறகு நாம் பார்க்கும் இந்த கோவிலின் எஞ்சிய பகுதிகளே இத்தனை பிரமாண்டமாக இருக்கிறது என்றால் இந்த கோவில் கட்டப்பட்டபோது எவ்வளவு பிரமாண்டமாக இருந்திருக்கும் என்று கற்பனைக்கூட செய்து பார்க்க முடியவில்லை. அத்தனை அழகாக பிரமாண்டமாக இருக்கிறது இந்த கோவில்.
அதெல்லாம் சரி………. கோயில் பற்றிய இந்த பதிவுக்கு ஏன் இப்படி ஒரு தலைப்பு என்று நீங்கள் கேட்பது எனக்கு புரிகிறது. உண்மையில் இது ஒரு சிவாலயமாக இருந்தாலும் இந்த கோவில் ”சண்டி லோரோ ஜோங்கரங்” என்றே இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறது. அதாவது சாவா மொழியில் ”மெல்லிய கன்னி” கோவில் என்று பொருள்படும். இவ்வாறு அழைக்கப்படுவதற்கு பின்னால் ஒரு சுவாரசியமான கதை இருக்கிறது. அதைப்பற்றியும் இக்கோயிலின் வடிமைப்பு பற்றியும் அடுத்த பதிவில் பார்ப்போம்.
.
6 comments:
Suspense at the end of the post, nice trick!
It was one of the most interesting travel posts, I had read in recent times.
மிக்க நன்றி ஜோ ஆனந்த்!
அருமை, நண்பரே
Nandri Nanbar Tamil Nadan
Mr Pithan was asking about this temple..
really your writing skills are very good.
pls continue.
மிக்க நன்றி திரு குடுகுடுப்பை.
ஊக்கப்படுத்தியமைக்கு நன்றி திரு மதிபாலா!
Post a Comment