எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 30 September 2009

வரம் கொடு தேவதையே ! தொடர்பதிவு !

எல்லா வரமும் ஒன்றாய்!
ஒரு கோடை விடுமுறை நாளில் அம்மாவும் நானும் பரணையில் வெகுநாட்களாக தூங்கிக்கொண்டிருந்த நோட்டு புத்தகங்களையும் செய்தித்தாள்களையும் சுத்தம் செய்யலாம் என்று களத்தில் இறங்கினோம். அம்மா ஒரு துண்டு சீட்டைக்கூட விடமாட்டார்கள். எதையும் தூக்கித் தூரப்போட அம்மாவுக்கு மனசு வராது. அப்படியே சேர்த்து சேர்த்து அன்று வரை முழு பரணையும் வெறும் காகித மேடாக நிறைந்து கிடந்தது. எதையும் அப்படியே தூக்கி போடாது ஒவ்வொன்றையும் படித்துக் காட்டிய பிறகே அம்மா தூக்கிப்போட சம்மதித்தார்கள். அதுவும் அரைகுறை மனதோடு. அப்போது 1976 ஆம் ஆண்டு நாட்குறிப்பு ஒன்று கையில் கிடைத்து. அது என் பெரிய அக்காவுடையது. முழுக்க முழுக்க பாரதியார் பாடல்கள் சீவக சிந்தாமணி என்று எதை எதையோ எழுதியிருந்தது. இடையிடையே ஒன்று இரண்டு மூன்று என்று பட்டியலிட்டு எனது மற்ற அக்காக்கள் பெயருக்கு கீழே ஏதோ எழுதியிருந்தது. ஆர்வம் மேலிட மேலே படித்தேன். அது அவர்களுக்கான அன்றாட வேலைகள். அந்த வருடங்களில் அப்பாவுக்கு சுகமில்லாமல் போனதால் அடிக்கடி வைத்தியம் பார்க்க அம்மா அவரை கூட்டிக்கொண்டு சென்னைக்கு போய்விடுவார்களாம். அப்போதெல்லாம் எங்கள் பெரிய அக்காதான் எங்கள் ஐவரையும் பார்த்துகொள்ளுமாம் ஒரு வகுப்பு தலைவி மாதிரி. ஒவ்வொரு நாளும் யார் யார் என்னென்ன வேலை செய்ய வேண்டும் என்று அந்த நாட்குறிப்பில் எழுதிவைக்கும். அதன்படிதான் எல்லோரும் நடக்கவேண்டுமாம். எல்லா அக்காவுக்கும் ஒவ்வொருநாளும் வேறு வேறு வேலைகள் எழுதியிருந்தது. ஆனால் ஒரு அக்காவுக்கு மட்டும் தினமும் ஒரே வேலை எழுதியிருந்தது இவ்வாறு.
”5. அம்பிகா – தம்பியை அழுவாமல் பார்த்துக்கொள்வது”
ஆம். அம்பிகா எனக்கு முன் பிறந்த சகோதரி. அம்பிகா அக்காவுக்கு என் மீது கொள்ளைப்பாசம். அதனால்தான் அதற்கு தினமும் என்னை பார்த்துக்கொள்ளும் வேலை. எனக்கும் அம்பிகா அக்காவைத்தான் ரொம்ப பிடிக்கும். என்ன செஞ்சாலும் திட்டாது. பள்ளியில் ஒரு சின்ன சாகலெட் கிடைத்தாலும் தம்பிக்காக எடுத்து வந்துவிடும். என் எல்லா அக்காக்களை விட அம்பிகா அக்கா தான் ரொம்ப அழகு. எங்கள் எல்லோரையும் விட சிவப்பு வேறு. நடிகை அம்பிகா போலவே லட்சணமாய் இருக்கும். இடது கன்னத்தில் மூக்குக்கு அருகில் பெரிய மச்சம் அழகாய் இருக்கும். ஐந்தாம் வகுப்பு வரை ரெண்டுபேரும் ஒரே பள்ளிதான். அக்கா எப்போதும் என்னை பொத்தி பொத்தி பள்ளிக்கு கூட்டிப்போகும். ஒரே தம்பியாச்சே! அம்பிகா அக்காதான் எங்கள் வீட்டு சரோஜ்நாரயண்சாமி. ஒவ்வொரு நாளும் இரவில் அன்றைய செய்தி தாள்களை அக்காவை சத்தம்போட்டு வாசிக்கச்சொல்லி கேட்பது அப்பாவின் வழக்கம். எங்கள் வீட்டில் அப்பாவிடம் வக்கீல் மாதிரி ”லா பாயிண்ட்” பேசும் தைரியம் அம்பிகா அக்காவுக்கு மட்டுமே உண்டு. அம்பிகா அக்கா எப்போதுமே நேர்த்தியாக உடை உடுத்தும். எப்போதுமே சிரித்துக்கொண்டே வளையவரும். நான் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும்போதே நானும் அக்காவும் ஒன்றாய் போனால் பார்ப்பவர்கள் என்ன உன் அண்ணனா? என்பார்கள். அதனால் அதற்குப்பிறகு அக்கா போடுவதையெல்லாம் நிறுத்திவிட்டேன். வெறும் அம்பிகாதான். ஒரு வழியாக எல்லா அக்காவுக்கும் திருமணம் முடிந்துவிட்டது. கடைசி அம்பிகாதான். அதற்கும் நல்ல இடத்தில் பார்த்து முடித்து வைத்தார்கள். அதன் கல்யாணத்திற்கு பிறகு நான் வேலைக் காரணமாக கோவைக்கும் சென்னைக்குமாக அலைந்து கொண்டிருந்தேன். அதனால் திருமணத்திற்கு பிறகு அம்பிகா அக்காவை நான் அதிகம் பார்க்க வாய்த்ததில்லை. திடீரென்று ஒரு நாள் அம்மா சொன்னார்கள் அம்பிகா குழந்தை பெற்றிருப்பதாய். ஆண் குழந்தை. எங்கள் வீட்டில் எல்லா அக்காவுக்கும் பெண் பிள்ளைகள்தான். இவள்தான் இறுதியாய் ஆண் குழந்தை பெற்றெடுத்தாள். எல்லோருக்கும் ரொம்ப சந்தோசம். அம்பிகா அக்காவும் சந்தோசமாய் இருந்தாள். ஆனால் யார் கண் பட்டதோ தெரியவில்லை பிரசவித்து மூன்று மாதங்கள் ஆகியும் அக்காவால் பழைய நிலைக்கு வரமுடியவில்லை. ஏதோ ஒரு நோய் அவளை உள்ளிருந்து படுத்திக்கொண்டிருந்தது. கேள்விப்பட்டு ஓடி வந்தேன். சென்னையில் எம் எம் சிக்கும் விஜயா மருத்துவமனைக்கும் அப்பலோ மருத்துவமனைக்குமாய் தூக்கிக்கொண்டு அலைந்தேன். யாராலேயும் அவளுக்கு என்ன நோய் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஏதோதோ வாயில் நுழைய முடியாத பெயரையெல்லாம் சொன்னார்கள். கிட்டத்தட்ட ஆறு மாதம் எங்களால் இயன்றவரை செலவு செய்து போராடினோம். கடவுளுக்கு எங்களுக்குமான போராட்டத்தில் இறுதியில் அம்பிகா அக்கா கடவுள் பக்கம் சாய்ந்துவிட்டாள். நான் முதன்முதலில் வாழ்க்கையில் வலி துக்கம் வெறுப்பு அவநம்பிக்கை இவை அனைத்தையும் ஒரு சேர உணர்ந்தது அப்போதுதான். இதோ ஓடிற்று பனிரெண்டு வருடங்கள். அம்மா அடிக்கடி கேட்பார்கள் ”எங்கே தம்பி அம்பிகா படம்? பெரிதாக்க சொன்னேனே?” என்று. ”உம் பார்க்கிறேன்” என்று சொல்வேனே தவிர இதுவரை செய்ததில்லை. அந்த அழகிய முகத்தை புகைப்படத்தில் மட்டும் பார்க்க எனக்கு மனவலிமை இல்லை. இதோ பா.ரா அனுப்பிய தேவதை என் வீட்டு வாசலில்! நான் கேட்க போகும் ஒரே வரம் ”எங்கள் வீட்டு தேவதையை திருப்பித்தா” என்றுதான்!
------------------------------------------------------------------------------------
இந்த தொடர்பதிவுக்கு அழைத்த அண்ணன்பா.ரா அவர்களுக்கு நன்றி! நான் தேவதைகளை அனுப்புவது மதிபாலா ,"[ஞானப்]-[பி]-[த்]-[த]-[ன்]" , யாசவி ,சுப்பு - இவர்கள் வீட்டு வாசலுக்கு! .

16 comments:

யாசவி said...

சீக்கிரம் எழுதுகிறேன் நண்பரே

அழைப்புக்கு நன்றி.

அம்பிகா அக்காவை நினைக்கையில் வருத்தமாக இருக்கிறது

:(

தமிழ் நாடன் said...

நன்றி யாசவி!

க.பாலாசி said...

//இதோ பா.ரா அனுப்பிய தேவதை என் வீட்டு வாசலில்! நான் கேட்க போகும் ஒரே வரம் ”எங்கள் வீட்டு தேவதையை திருப்பித்தா” என்றுதான்!//

மிக வலி மிகுந்த அனுபவ இடுகை....எல்லாம் படித்து முடிக்கையில் கண்களில் முட்டும் நீரினை கட்டுப்படுத்த முடியவில்லை. அனுபவங்களை பகிரும்போது நம் பாரங்கள் கொஞ்சமாவது குறையும். உங்களுக்கும் அதேபோல் குறைந்திருக்கும் என்றே எண்ணுகிறேன்.

நீங்கள் கேட்ட வரம் கிடைக்க பிரார்த்திக்கிறேன்..

தமிழ் நாடன் said...

ஆமாம் பாலாஜி!

நான் திரும்பவும் நினைத்துக்கூட பார்க்க முடியாத வலி அது.

வருகைக்கு நன்றி!

மதிபாலா said...

படித்து முடித்ததும் நெஞ்சில் ஏற்பட்ட வலி அளப்பரியது தோழரே. உங்கள் சொந்த அனுபவத்தை நாங்களும் உணர்கிற , உங்களின் இடத்தில் எம்மை வைத்துப் பார்க்கிற சூழலைத் தந்தது உங்கள் அம்பிகா அக்காவின் சோகக் கதை.

அம்பிகா அக்காவை இயற்கை திருப்பித் தராது என்றாலும் கூட அவரது நினைவுகளை யாரும் உங்களிடமிருந்து பறித்துவிட இயலாது.

என்னையும் இந்தப் பதிவிற்கு அழைத்ததற்கு நன்றி.

கடுமையான பணியாலும் , வேலை நிமித்தமும் அழுத்திக்கொண்டிருப்பதால் வலையிலும் கூட தொடர்ச்சியாக எழுத முடிவதில்லை. இருந்தாலும் அன்பு நண்பரின் பாசமான அழைப்பிற்கு மிகுந்த நன்றிகளைச் சொல்லிக்கொண்டு இந்தப் பதிவினை எழுதப்போகிறேன்.

தாமதமானால் மன்னிக்கவும்.


:)))


நன்றி , நன்றி , நன்றி...!

தமிழ் நாடன் said...

என் வலியை பகிர்ந்து கொண்டமைக்கு மிக்க நன்றி நண்பர் மதிபாலா!

உங்களால் எப்போது முடியுமோ அப்பொழுது எழுதுங்கள். என் அழைப்பை அன்போடு ஏற்றதற்கு நன்றி!

Anonymous said...

படித்து முடிக்கையில் கண்ணில் வழியும் நீரை கட்டுப்படுத்த முடியவில்லை. கடவுள் மீதான கோபம் தவிர ஏதுமில்லை என்னிடம்.

தமிழ் நாடன் said...

வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி அமிர்தம் !

பழமைபேசி said...

தொடர் இடுகை!

தமிழ் நாடன் said...

//பழமைபேசி said...
தொடர் இடுகை!//

திருத்திக்கொள்கிறேன் அண்ணே!

vasu balaji said...

கலங்க வைத்துவிட்டீர்கள்.

தமிழ் நாடன் said...

வருகைக்கு நன்றி வானம்பாடிகள் !

பா.ராஜாராம் said...

வேலையாக வெளியூர் வந்திருக்கேன் தமிழ்நாடன்.அதான் தாமதம் இங்கு வர.மனசுகனத்து,கண்கள் நிறைந்து போகிறேன் மக்கா.அக்கா,ஆத்மா சாந்தி அடையட்டும்.

தமிழ் நாடன் said...

நன்றி பா.ரா அண்ணே!

நீங்க எப்ப வந்தாலும் ஓ.கே தான்.

PonKarthik said...

அருமை நண்பரே அருமை!
உங்களை போன்ற நண்பரை பார்க்கும் பொழுது பொறாமையாக இருக்கிறது.எனக்கு இது போல் எழுத வரவில்லையே என்று!
தொடருங்கள் உங்கள் படைப்பை!

தமிழ் நாடன் said...

மிக்க நன்றி பொன்கார்த்திக்! நெசமாவா சொல்றீங்க!

இன்னுமா இந்த உலகம் நம்மள நம்புது??!!! ))):-