எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!

Wednesday 25 February 2009

மறக்கப்பட்ட (மறைக்கப்பட்ட) ஆஸ்கார் !

நம்ம ஏ ஆர் ரகுமான் இரட்டை ஆஸ்கார் வென்ற ஆரவாரத்தில் இன்னொரு முக்கிய இந்திய ஆஸ்கார் வெற்றி உணரப்படாமல் விடு்பட்டுவிட்டது. ஸ்மைல் பிங்கி என்ற இந்திய ஆவண குறும்படம் பெற்ற ஆஸ்கார் பரிசை கொண்டாட நம்மவர்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை. இந்த குறும்படம் இன்று இந்திய குழந்தைகளில் பெருமளவு காணப்படும் உதட்டுப்பிளவு மற்றும் மேலன்னப் பிளவு என்ற குறைபாட்டுடன் பிறந்த ஒரு பெண் குழந்தையின் வாழ்க்கை நிகழ்வுகளை படம்பிடித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலம் ஆஹுரா மாவட்டத்தில் உள்ள டாபாய் என்ற சிற்றூரில் பிறந்த பிங்கி என்ற பெண்ணை சுற்றி செல்கிறது இந்த குறும்படம். அவளுக்கு இருக்கும் இந்த குறைபாட்டினால் சக குழந்தைகளால் கேலி கிண்டலுக்கு உள்ளாகிறாள். இதனால் மனம் வருந்தும் சிறுமி மற்ற குழந்தைகளிடமிருந்து தன்னை தனிமைப் படுத்திக்கொள்கிறாள். இந்நிலையில் மருத்துவர்கள் அவளுக்கு அறுவைச் சிகிச்சை செய்து அக்குறைபாட்டினை சரிசெய்கிறார்கள். அதன் பிறகு அவள் தன்னம்பிக்கையுடன் வாழக்கையை எதிர்கொள்கிறாள். அறுவை சிகிச்சைக்கு பிறகு அவளது வாழ்க்கையில் ஏற்படும் நேர்முறை மாற்றங்கள் பற்றியும் எடுத்துச்சொல்கிறது இப்படம். இப்படத்தை மேகன் மெயான் என்பவர் இயக்கியுள்ளார். இந்தியாவில் கானப்படும் ஒரு முக்கிய சமூக பிரச்சினையை முன்னெடுத்துச் சென்ற இப்படம் ஆஸ்கார் வென்றதால் நம்மில் பலருக்கும் இப்பிரச்சினை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுவது திண்ணம். Cleft lip மற்றும் palate என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதட்டுப்பிளவு மற்றும் மேலண்ணப் பிளவு குறைபாடு இந்தியா மற்றும் இலங்கையில் பிறக்கும் குழந்தைகளில் பெருமளவு கானப்படுகிறது. இந்த் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு மேல் உதடானது சற்று பிளவுபட்டுக் கானப்படும். இதனால் குழந்தையின் முக அழகு பாதிக்கப்படுவதுடன் பேச்சுக்குறைபாடும் ஏற்பட வாய்ப்பு உண்டாகிறது. சொந்தத்தில் திருமண உறவு செய்துகொள்ளும் பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு இந்த குறைபாடு அதிக அளவில் வருகிறது. மேலும் தாய் அல்லது தந்தைக்கு இக்குறைபாடு இருந்தால் அவர்களின் குழந்தைகளுக்கு இக்குறைபாடு வருவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். இத்தகைய பெற்றோர்கள் கருத்தரிப்பு காலத்தில் டிஎன்ஏ வரைபட சோதனைகள் செய்துகொண்டால் இக்குறைபாட்டை முன்கூட்டியே தெரிந்து கொண்டு களைய முடியும். இக்குறைபாட்டை சரி செய்வதற்கான சிறந்த அறுவை சிகிச்சை முறைகள் இந்தியாவில் உள்ளன. பிறந்த இரண்டாவது மாதத்திலேயே குழந்தைகளுக்கு இச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். தொடர்ந்து ஐந்து அல்லது ஆறுமுறை வெவ்வேறு கால இடைவெளிகளில் அறுவை சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்படவேண்டும். அப்போதுதான் மேலுதடு சீராண தோற்றத்தை அடையும். பலர் ஒன்று அல்லது இரண்டு முறை செய்தால் போதும் என்று எண்ணுகிறார்கள். அது மிகவும் தவறு. எளிய மக்களும் எடுத்துகொள்ளும் செலவில் இச்சிகிச்சைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். அதுவும் இதற்கென உள்ள முகச்சீரமைப்பு சிறப்பு மருத்துவர்களின் வழிகாட்டுதலில் இச்சிகிச்சைகள் மெற்கொள்ளப்பட வேண்டும். இக்குறைபாட்டைப் பற்றி கிராமப்புற மக்களுக்கு இன்னும் சரியான விழிப்புணர்வு இல்லை. பலர் இது சரி படுத்தமுடியாத ஒரு குறைபாடு என்று கருதிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலை மாற இந்த குறும்படமும் அதற்கு வழங்கப்பட்ட ஆஸ்கார் பரிசும் உதவும். அரசும் ஏழைக்குழந்தைகளுக்கு இச்சிகிச்சைகளை இலவசமாக வழங்குகிறது. மக்கள் இந்த வசதிகளை பயன்படுத்தி தம் குழந்தைகளை இப்பிரச்சினையிலிருந்து விடுவிக்க முயற்ச்சி செய்ய வேண்டும்.நண்பர்களே உங்கள் குடும்பத்தாருக்கும் உற்றார் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் தெரிவித்து இது குறித்த விழிப்புணர்வை உண்டாக்குங்கள்.

7 comments:

புருனோ Bruno said...

//உதட்டுப்பிளவு அல்லது மேலன்னப் பிளவு //

இரண்டும் வெவ்வெறு நோய்கள்.

அல்லது என்பதை விட ”மற்றும்” பொருத்தமான சொல்

//Cleft என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் உதட்டுப்பிளவு அல்லது மேலண்ணப் பிளவு //

உதட்டுப்பிளவு - Cleft Lip
மேலண்ணப் பிளவு - Palate

//இத்தகைய பெற்றோர்கள் கருத்தரிப்பு காலத்தில் டிஎன்ஏ வரைபட சோதனைகள் செய்துகொண்டால் இக்குறைபாட்டை முன்கூட்டியே தெரிந்து கொண்டு களைய முடியும்.//
அப்படியா ???

//பிறந்த இரண்டாவது மாதத்திலேயே குழந்தைகளுக்கு இச்சிகிச்சைகளை மேற்கொள்ளலாம். தொடர்ந்து ஐந்து அல்லது ஆறுமுறை வெவ்வேறு கால இடைவெளிகளில் அறுவை சிகிச்சைகள் மேற்க்கொள்ளப்படவேண்டும். //
Cleft Lip வேறு வைத்தியம்
Cleft Palate வேறு வைத்தியம்

நீங்கள் இரண்டையும் குழப்பிவிட்டீர்கள் என்று நினைக்கிறேன்

//எளிய மக்களும் எடுத்துகொள்ளும் செலவில் இச்சிகிச்சைகள் கிடைப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். //
தமிழகத்தில் இலவசமாகவே செய்யப்படுகிறது.

அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை அனுகவும்

//அரசும் ஏழைக்குழந்தைகளுக்கு இச்சிகிச்சைகளை இலவசமாக வழங்க முன்வரவேண்டும்.//
தமிழகத்தில் 2005ஆம் ஆண்டு பொது சுகாதார துறையால் வீடு வீடாக கணக்கு எடுக்கப்பட்டு (door to door survey) அனைத்து குழந்தைகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டது.

தற்பொழுதும் இந்த சிகிச்சை இலவசமாக செய்யப்படுகிறது

தமிழ் நாடன் said...

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி மருத்துவர் புருனோ! தங்கள் அறிவுரையின்படி கட்டுரையில் மாற்றங்களை செய்துள்ளேன். நான் மருத்துவத்துறையை சார்ந்தவன் அல்ல. அதனால் விவரங்களை சரியாக கிரகித்துக்கொள்ள முடியவில்லை. தவறுகளை திருத்தியதற்கு நன்றி.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இதை எப்படிப் பார்க்க முடியும்....
இதை இந்திய தொலைக்காட்சி வாங்கி மொழி மாற்றி எல்லா மொழியிலும் திரையிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடாதா??

மேலும்...வேகமான வாழ்க்கையில் , சில பல நல்ல தேவையானவை கூட மறக்கடிக்கப் பட்டுவிடுவது
வேதனையே!!
எனினும் இப்போ இணையம் அந்தக் குறையை ஓரளவு தீர்க்கிறது.

தமிழ் நாடன் said...

வாருங்கள் யோகன், ரொம்ப நாளாச்சு உங்கள் பின்னூட்டத்தைப்பார்த்து. நம்ப வலைப்பதிவின் முதல் பதிவிற்கு நீங்கள் பின்னூட்டமிட்டது இன்னும் நினைவில் இருக்குது.

Anonymous said...

Thanks Brother,
Very useful news

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com ல் தொடுத்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, அதை உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்ல இந்த வலைப்பூக்களிலும், வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்திலும் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
வலைப்பூக்கள்‌/தமிழ்ஜங்ஷன் குழுவிநர்

SurveySan said...

good one.

smile pinki' directory is a social worker. her interview here.
http://www.documentary.org/content/meet-filmmakers-megan-mylan-smile-pinki